இரு தரப்புகளிலும் சிறந்தது: கருக்கலைப்பு விதிகள் பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கக்கூடாது - ஸ்னேகா பானர்ஜி

விரும்பாத கர்ப்பத்தினால் (unwanted pregnancy) ஏற்படும் உளவியல் பாதிப்பை உணர்வுப்பூர்வமாக அங்கீகரிக்கும் வகையிலும், பாதுகாப்பான கருக்கலைப்புக்கான அணுகலை எளிதாக்கும் வகையிலும் சட்டவிதிகள் விரிவுபடுத்தப்படுவது முக்கியமான நடவடிக்கையாகும்.


1971-ஆம் ஆண்டின் மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டம் (Medical Termination of Pregnancy (MTP)), 2021-ல் திருத்தப்பட்டு, கருக்கலைப்புக்கான காலவரம்பை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்கள் வரை விரிவுபடுத்தியது. இந்த வரம்பைத் தாண்டி, மனுதாரர்கள் அனுமதி கோரி நீதிமன்றங்களை அணுகியுள்ளனர். மேலும், பல சமயங்களில் மருத்துவ வாரியங்களும் மருத்துவர்களும் இந்தக் கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிதுள்ளனர். இந்த ஆண்டு இரண்டு முக்கிய வழக்குகளில், உச்சநீதிமன்றம், பெண்களின் கருவுறுதல் சார்ந்த தன்னுரிமையை (reproductive autonomy) நிலைநிறுத்தும் தெளிவான கருத்துக்களுடன், 24 வாரங்களுக்குப் பிறகான கருக்கலைப்புக்கு அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றத் தலையீடுகள் அடிக்கடி தேவைப்படுவதால், பிற்காலக் கர்ப்பக்கலைப்புகளுக்கான இனப்பெருக்க கருவுறுதல் சார்ந்த தன்னாட்சி உரிமையை உறுதிசெய்யும் சட்டரீதியான பாதுகாப்புகளை விரிவுபடுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது.


சில நாட்களுக்கு முன்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த   வழக்கில், 17 வயது இளைஞருடன் முழுமையான  சம்மதத்துடன் கொண்ட உறவின் மூலம் கருவுற்ற 15 வயது சிறுமிக்குத் தெரியாமல் கருத்தரித்திருந்தார். அந்தச் சிறுமியின் தாயின் முயற்சியால், மேற்கொள்ளபட்ட ஒரு மருத்துவ சோதனையில் 27 வார கர்ப்பம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகிய பிறகு கருக்கலைப்பு செய்வதற்கான போராட்டம் தொடர்ந்தது. இறுதியில், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (All India Institute of Medical Sciences (AIIMS)) மருத்துவக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்தது. அந்த மருத்துவக் குழுவின் பரிந்துரைக்கான காரணங்களில் ஒன்று, அந்தச் சிறுமிக்கு மனநலக் கோளாறு எதுவும் இல்லை என்பதுதான். இருப்பினும், அந்த சிறுமியின் "உளவியல் மற்றும் உணர்ச்சிரீதியான நல்வாழ்வு" (psychological and emotional well-being) மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால், அந்தச் சிறுமி பலமுறை தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளுக்குத் தள்ளப்பட்டாள் என்ற உண்மை புறக்கணிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், இந்த முக்கியமான அம்சத்தை  சரியாக கணக்கில் எடுத்துக்கொண்டது. நீதிமன்றத்திற்கு வரும் ஒவ்வொரு வழக்கிலும் பெண்களின் வேதனையை இந்த அளவிற்குத்  ஆழமாக ஆராய வேண்டிய அவசியமில்லை. விரும்பாத கர்ப்பம் (unwanted pregnancy) ஏற்படுத்தும் மன உளைச்சலை உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டு, பாதுகாப்பான கருக்கலைப்புக்கான வசதிகளை எளிதாக்கும் வகையில் சட்டவிதிகளை விரிவுபடுத்துவது  முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.


இந்த வழக்கு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையால் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்ய வழிவகுத்தது. பெண்கள் விரும்பாத கர்ப்பத்தை முழுமையாகச் சுமக்க அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்ற தனது நிலைப்பாட்டில் உச்சநீதிமன்றம் உறுதியாக இருந்தது. அவர்களின் கருவுறுதல் சார்ந்த தன்னாட்சி உரிமை (reproductive autonomy), "தாயைவிட அதிக கவனம் பெறும்" பிறக்காத சிசுவின் உரிமைக்கு எதிராக நிறுத்த முடியாது. "மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை முறைகள்" மூலம் "கர்ப்பத்தைக் கலைப்பதற்கான" விதிமுறைகளை உருவாக்குவதன் மூலம், இந்தியச் சட்டம் சுகாதாரப் பாதுகாப்பு மேற்பார்வையின் முக்கியதுவத்தை அங்கீகரிக்கிறது. இருப்பினும், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை "மருத்துவ சேவையை மட்டுமே வழங்க வேண்டும்" என்றும், "தகவலின் அடிப்படையில்  முடிவை எடுக்க" வாய்ப்பளிக்கப்பட வேண்டிய "குடிமக்களுக்காக அவ்வாறு தேர்வு செய்ய முடியாது" என்றும் உச்சநீதிமன்றம் நினைவுபடுத்தியது.


கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் செய்யப்படும் கருக்கலைப்பு வழக்குகளில், குறைப்பிரசவத்தை உள்ளடக்கிய கருக்கலைப்பு முறை ஒரு சர்ச்சைக்குரிய விவாகரமாக மாறுகிறது. இது, அந்தக் கருவின் "உயிர்வாழும் திறன்" குறித்த  கவலைகளுக்கும், "கருக்கொலை" (foeticide) நிகழக்கூடும் என்ற அச்சங்களுக்கும் வழிவகுக்கிறது. இதற்கு எதிரான வாதம், கர்ப்பத்தை முழுமையாகக் கொண்டு, குழந்தையைத் தாய் கைவிட்டு, தத்தெடுப்பிற்காக ஒப்படைக்க வேண்டும் என்பதாகும். கர்ப்பிணிப் பெண்ணை, "இன்னும் பிறக்காத குழந்தைக்காக சமரசம் செய்து கொள்ளும்" அணுகுமுறை, "சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. "உயிர்வாழும் சாத்தியக்கூறு" (viability) இருப்பதாகக் கருதப்படும் இது போன்ற சூழல்களில், குழந்தை பிறந்தவுடன் அதற்கு உயிர்கொடுக்க, தீவிர மருத்துவத் தலையீடு தேவைப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு வழக்கிலும், மருத்துவக் குழு இந்த உண்மையையே சுட்டிக்காட்டியிருந்தது.


விரும்பாத கர்ப்பத்தின்போது உயிரூட்டத்தை மறுப்பதை, மருத்துவ வாரியங்கள் "கருக்கொலைக்கு" (foeticide) சமமாகக் கருதும் அரசியலமைப்பு அடிப்படைகளைக் கேள்விபடுத்துவது முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். தேவையற்ற கர்ப்பத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம், குழந்தையைப் பெற்றெடுத்து அதைத் தத்தெடுப்புக்குக் கொடுக்குமாறு கேட்பது, அந்த பெண்ணின்  மன உளைச்சலை  மேலும் அதிகப்படுத்தும். முதலாவதாக, இந்தியாவில் தத்தெடுப்பு விகிதங்கள் மிகவும் குறைவாக உள்ளன. அரசின் பராமரிப்பில் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளில், மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே தத்தெடுக்கப்படுகின்றனர். இந்தக் சூழலில், ஒருவர் தனது குழந்தையைத் தத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்ற ஒரு செயலாகும். இரண்டாவதாக, தத்தெடுப்பு சுமுகமாக நடைபெற்றாலும், ஒரு பெண் தான் விரும்பாத கர்ப்பத்தின் மூலம் பிறந்த குழந்தையைக் கைவிட்டோம் என்ற மனநிலையுடன் வாழ விரும்பாமல் இருக்கலாம். தாமதமான கருக்கலைப்பை நாடுபவர்கள், தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால், அனுமதிக்கப்பட்ட காலவரையறைக்குள் கருக்கலைப்பு செய்துகொள்ள இயலாத நிலையில், ஒரு விரும்பாத கர்ப்பத்தினால் ஏற்பட்ட மிகுந்த மனவேதனையின் காரணமாகவே அவ்வாறு செய்கிறார்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்னர் தொடுக்கபட்ட இரண்டு வழக்குகளில், அந்தச் சிறுமிகள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை முதலில் அறிந்திருக்கவில்லை.


கருத்தடை முறை தவறுதல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய எதிர்பாரா சூழல்களில், ‘மனவேதனை’ மற்றும் ‘கருவுற்ற பெண்ணின் மனநலத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்பு’ ஆகியவற்றை அங்கீகரிக்க கருக்கலைப்புச் சட்டம் (Medical Termination of Pregnancy (MTP)) சட்டம் முற்படுகிறது.  கருவில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டால், கர்ப்பத்தின் எந்தக் ஒரு நிலையிலும் கருக்கலைப்பு செய்வதற்கு கர்ப்பத்தின் காலம் ஒரு தடையாக இருக்காது. மேலும், கருவுறுதல் சார்ந்த தன்னாட்சி உரிமையை (reproductive autonomy),  ஒரு அடிப்படை உரிமையாக நிலைநிறுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டு, இதற்கேற்ப சட்டரீதியான உத்தரவாதங்கள் நிலைநிறுத்தப்படுவது  முக்கியமான நடவடிக்கையாகும். எனவே, விரும்பத்தகாத கர்ப்பங்களால் பெண்களுக்கு ஏற்படும் வேதனையை, கர்ப்பகால வரம்புகளை ஒதுக்கி வைப்பதற்குப் போதுமான காரணமாகக் கருதக்கூடிய ஒரு சட்ட அணுகுமுறையை வலுப்படுத்துவது  முக்கியமானதாகும்


கட்டுரையாளர், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.




Original Link: Best of Both Sides: Abortion rules should not override fundamental rights of women


Share: