தொகுதி வரையறை மற்றும் சமத்துவமான அரசியல் பிரதிநிதித்துவத்தின் அரசியலமைப்பு நோக்கம். - திலீப் பி சந்திரன்

சமத்துவமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகள், தொகுதி மறுவரையறை (Delimitation) மூலமாகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைப்பதில் உள்ள அரசியல் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த சவால்கள் யாவை?


குறிப்பிடத்தக்க மக்கள்தொகை வளர்ச்சியைச் சந்திக்கும் தொகுதிகளுக்கு நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், நாடாளுமன்றத் தொகுதிகளின் காலமுறைத் தொகுதி வரையறை (Periodic delimitation) மற்றும் மறுஒதுக்கீடுகள் பெரும்பாலும் 'ஒரு நபருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு' எனும் ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகின்றன.


ஆனால், பிரதிநிதித்துவ ஏற்றத்தாழ்வைச் (representational imbalance) சரிசெய்வதற்கான இந்த முயற்சி, கூட்டாட்சிச் சமநிலையின்மீது எப்படிபட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது? ஒவ்வொரு கூட்டாட்சி அலகிற்கும் சமமான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் அரசியலமைப்பு நோக்கத்துடன் இது ஏதேனும் முரண்பாட்டைக் கொண்டுள்ளதா?ஆனால் அதற்கு முன், 'தொகுதி வரையறை' (Delimitation) என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்?


'தொகுதி வரையறை' (Delimitation) என்றால் என்ன, அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?


தொகுதி வரையறை என்பது, ஒரு நாட்டில் அல்லது சட்டமன்றம் உள்ள ஒரு பகுதியில் உள்ள தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் செயல்முறையைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்பின் 81-வது பிரிவு, ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள்தொகைக்கு விகிதாசாரமாக இடங்களைப் பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறது. மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்களை வெளிக் காட்டும் வகையிலும், சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையிலும்,   பத்தாண்டுகளுக்கு ஒரு முறை  மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு, இடங்கள் மறுஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பிரிவு 82 குறிப்பிடுகிறது.


தொகுதி வரையறை ஆணையச் சட்டவிதிகளின்கீழ்  குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஒரு தொகுதி மறுவரையறை ஆணையம் அல்லது தொகுதி மறுவரையறை ஆணையத்தால் எல்லை வரையறை மேற்கொள்ளப்படுகிறது.  ஆணையம் பொதுவாக மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்: தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆகியோர்  உறுப்பினர்களாக இருப்பார்கள்.


இதுவரை நான்கு தொகுதி மறுவரையறை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன: அவை,


1952-ஆம் ஆண்டில், 1952-ஆம் ஆண்டின் “தொகுதி மறுவரையறை ஆணையச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.


1963-ல், 1962-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை ஆணையச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.


1973-ல், 1972-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.


2002-ஆம் ஆண்டில், 2002-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.


1951, 1961 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் மூன்று தொகுதி மறுவரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், கடைசியாக  தொகுதி மறுவரையறைப் பணி 1976-ல் நிறைவு செய்யப்பட்டது. 1976-ஆம் ஆண்டில், 42-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், 1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 25 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டது.


இருப்பினும், 2001-ஆம் ஆண்டின் 84-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2026-ஆம் ஆண்டிற்கு பிறகான காலகட்டதின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வெளியிடப்படும் வரை இந்த முடக்கத்தை நீட்டித்தது. 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து தீர்மானித்து வந்தபோதிலும், 1991-ஆம் ஆண்டின் தொகுதிப் பிரிவினைக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையாக கருத்தில் கொள்ளப்பட்டது .


அதன்பிறகு, 2003-ஆம் ஆண்டின் 87-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், மக்களவை அல்லது சட்டமன்றங்களில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களின் எண்ணிக்கையைப் பாதிக்காமல், 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களில் உள்ள  தொகுதிகளை மறுசீரமைக்க வழிவகை செய்தது.


இதன் பின்னணியில், 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று மக்களவையில் மூன்று மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன: அவை,


(i) அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026.


(ii) யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026.


(iii) தொகுதி மறுவரையறை மசோதா, 2026 ஆகும்.


இந்த மசோதாக்கள், முக்கியயாக தொகுதி வரையறை தொடர்பான 82-வது சட்டப்பிரிவைத் திருத்துவதன் மூலம், மக்களவை இடங்களை (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில்) 543-லிருந்து 850-ஆக விரிவுபடுத்தவும், இந்த தொகுதி வரையறையின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை வழங்கவும் முயன்றன.


தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதற்காக, ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைக்குமாறு 2026-ஆம் ஆண்டின் தொகுதி மறுவரையறை மசோதா முன்மொழிந்தது. இருப்பினும், 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவின்  மூலமாக  மக்களவையை விரிவுபடுத்தவும், மாநிலங்களுக்கான இடப் பங்கீட்டை மறுஒதுக்கீடு செய்யவும் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, மக்களவையில் நிறைவேறவில்லை.


அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி  தொடர்பான கேள்விகள்


இந்தத் தோல்வி, பின்வரும் முக்கியமான அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது: தொகுதி மறுவரையறை செயல்முறைக்கு, சட்டப்பிரிவின் 368-வது பிரிவின் கீழ் அரசியலமைப்புத் திருத்தம் ஏன் தேவைப்படுகிறது? மக்களவை மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களின் இடங்களை விரிவுபடுத்துவதில் உள்ள அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சவால்கள் யாவை? முன்மொழியப்பட்ட இந்த தொகுதி மறுவரையறை, ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான கூட்டாட்சி உறவை (federal relationship) எவ்வாறு வடிவமைக்கும்?


முன்னர் குறிப்பிட்டபடி, அரசியலமைப்பின் 81-வது பிரிவின்படி, ஒவ்வொரு மாநிலமும் பிராந்தியத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். அவ்வாறு பிரிக்கப்படும்போது, ​​ஒவ்வொரு தொகுதியின் மக்கள் தொகைக்கும் அதற்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம், முடிந்தவரை, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மேலும், மக்களவையில் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையையும் இந்த பிரிவு  குறிப்பிடுகிறது.


பிரிவு 81(3), இட மறுஒதுக்கீட்டின் நோக்கத்திற்காக 'மக்கள்தொகையை' நிர்ணயிப்பதற்கான முடக்கும் ஆண்டை  வரையறுக்கிறது. அரசியலமைப்பின்  பிரிவு 82, ("ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகான மறுசீரமைப்பு") மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் இடங்களை “மறுசீரமைப்பதை” (readjustment) கட்டாயமாக்குகிறது.


மாநில சட்டமன்றங்களின் அமைப்பு மற்றும் அவற்றின் தொகுதிகளின் மறுவரையறை ஆகியவை சட்டப்பிரிவின் 170-வது பிரிவின்படி மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு முடக்கத்தின் காரணமாக, 2026-ஆம் ஆண்டிற்குப்  பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பே அதிகமாக மறுசீரமைப்புக்கான ஒரு குறிப்பாகச் செயல்படுகிறது.


எனவே, எல்லை நிர்ணயம் மற்றும் இட ஒதுக்கீடு மறுஒதுக்கீடு தொடர்பான  அனைத்து செயல்முறைகளுக்கும், 368-வது பிரிவின்கீழ் வகுக்கப்பட்டுள்ள நடைமுறையின் மூலம், இந்த அரசியலமைப்பு விதிகளைத் திருத்துவது  முக்கியதுத்வம் பெறுகிறது. நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மாற்றியமைக்கும் எந்தவொரு திருத்தத்திற்கும், சபையில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் (2/3) குறையாத உறுப்பினார்கள்  வாக்களிக்க வேண்டும். மேலும், சட்டம் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பின் பிரிவு 368(2) வலியுறுத்துகிறது.


மக்கள்தொகைக் குறியீடுகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள், மக்களவையில் நியாயமான இடப் பங்கீட்டில் தேவையற்ற சிரமங்கள் எதிர்கொள்ளமல் இருப்பதை உறுதிசெய்வதே, ஒரு குறிப்பு ஆண்டின் (reference year) அடிப்படையில் தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைப்பதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாகும்.


இருப்பினும், சில மாநிலங்கள், குறிப்பாக இந்தியாவின் தென் மாநிலங்கள், வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியில் அரசியலமைப்பு முடக்கம் நீக்கப்படுவது, குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதை உறுதி செய்வதில் தங்களுக்குப் பாதகமாக அமையும் என்று  கருதுகின்றன.





மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம், தங்களின் மக்களவை  இடங்கள் கணிசமாகக் குறையக்கூடும் என்று சில மாநிலங்கள் கருதுகின்றன. அதே நேரத்தில், மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக உள்ள, வட மாநிலங்கள், விகிதாச்சாரத்திற்கு அதிகமாக இடங்களைப் பெறக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது,


குறிப்பாக, குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதமானது, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக, பொருளாதார மேம்பாட்டின் பிற துறைகளில் செய்யப்பட்ட வெற்றிகரமான முதலீடுகளின் விளைவாகவே ஏற்பட்டது. எனவே, சில தென்  மாநிலங்கள், தொகுதி மறுவரையறையானது மக்கள்தொகையின் அளவை மட்டுமே சார்ந்திருக்காமல், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product (GSDP)) மற்றும் பொருளாதார மேம்பாட்டின் பிற குறிகாட்டிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றன.


முன்னோக்கிச் செல்வதற்கான வழி என்னவாக இருக்கலாம்?


முன்னர் குறிப்பிட்டபடி, கணிசமான மக்கள்தொகை வளர்ச்சியை அனுபவிக்கும் தொகுதிகளுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், 'ஒரு நபருக்கு ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற ஜனநாயகக் கொள்கையின் அடிப்படையில் அவ்வப்போது தொகுதி மறுவரையறை மற்றும் இட மறுஒதுக்கீடு செய்வது நியாயப்படுத்தப்படுகிறது.


எனவே, தொகுதி மறுவரையறைப் பணியை நீண்டகாலமாக நிறுத்தி வைத்திருப்பது, கூட்டாட்சிக்கு சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு நோக்கத்திற்கு முரணாகத் தோன்றுகிறது. தொகுதி மறுவரையறைக்கான ஒரு சுதந்திரமான மற்றும் நிரந்தரமான அரசியலமைப்பு அமைப்பு, ஒன்றியத்திற்கும் கூட்டாட்சிக்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்துவதன் மூலம் உதவக்கூடும்.


மாநிலங்களுக்கு இடங்களை மறுஒதுக்கீடு செய்வதில் உள்ள சிக்கல்களைத் தவிர, விரிவான தொகுதி மறுவரையறைத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள நிர்வாகச் செலவுகள் மற்றும் நிதி நெருக்கடிகளையும் அரசாங்கம் கவனதில் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், தொகுதி மறுவரையறை விவகாரங்களில் நீதிமன்றத் தலையீட்டைத் தவிர்ப்பது, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான கேள்விகள் எழும்போது, ஒரு சிறந்த கூட்டாட்சித் தத்துவத்துடன் (Ideal Federalism) முழுமையாகப் பொருந்தாது.


சட்டப்பிரிவு 329(a), தொகுதிகளின் எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றுக்கான இடஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதைத் தடைசெய்தாலும், 2024-ஆம் ஆண்டு கிஷோர்சந்திர சங்கன்லால் ரத்தோட் (Kishorchandra Chhanganlal Rathod Case) வழக்கில், தொகுதி மறுவரையறை ஆணையத்தின் ஓர் உத்தரவு தெளிவாகத் தன்னிச்சையானதாகவும் அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவதாகவும் இருந்தால், அதனை மறுஆய்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


Original Link: Delimitation and constitutional objective of equitable political representation.


Share: