இந்தியாவின் தொழிலாளர் சந்தை முன்னேற்றம் கண்டாலும், சவால்கள் நீடிக்கின்றன. -பலாஷா நாக்பால்

காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு-2025 (PLFS) அறிக்கையானது, திறன்கள் மற்றும் பங்கேற்பு சார்ந்த கட்டமைப்புக் குறைபாடுகளையும் இது வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், வேலைவாய்ப்புப் போக்குகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது.


ஒவ்வொரு ஆண்டும், சுமார் 7 முதல் 10 மில்லியன் இளம் இந்தியர்கள் தொழிலாளர் சந்தையில் (labour market) நுழைகின்றனர். இவர்களுக்கு முந்தைய எந்தத் தலைமுறையினரையும் விடவும், இவர்கள் சிறந்த கல்வித் தகுதியைப் பெற்றுள்ளனர். தேசிய அளவில், சராசரியாக 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரின் முறையான பள்ளிப் படிப்புக்காலம் 10 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. மேலும், சிறந்த கல்வியுடன் சேர்த்து, இந்த இளைஞர்கள் உயர்ந்த நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டுள்ளனர். இது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட, தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த புதிய தொழிலாளர்களை இந்தியப் பொருளாதாரத்தால் ஆக்கப்பூர்வமாக உள்வாங்கிக்கொள்ள முடியுமா? எத்தகைய சூழல்களில் இது சாத்தியமாகும்? மேலும், இந்தியாவின் மக்கள்தொகை வலிமையானது அர்த்தமுள்ள வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதை இந்தியா எவ்வாறு உறுதிசெய்ய முடியும்?


சமீபத்தில் வெளியிடப்பட்ட, காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு-2025 (PLFS) அறிக்கையானது சில முக்கிய விவரங்களை வழங்குகிறது. இது பல பரிமாணங்களில் அளவிடக்கூடிய முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டுவதோடு, இந்தியாவின் 'மக்கள்தொகை ஈவுத்தொகையை' (Demographic Dividend) முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தீர்க்கப்பட வேண்டிய சில சவால்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


வேலைவாய்ப்பில் ஊக்கமளிக்கும் போக்குகள்


தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate(LFPR)) 59% ஆகவும், பணியாளர் பங்கேற்பு விகிதம் (Workforce Participation Rate) 57% ஆகவும், வேலையின்மை விகிதம் (unemployment rate) 3% ஆகவும் உள்ளது. இவை வேலைவாய்ப்புத் துறையின் வலுவான முதன்மை குறிகாட்டிகளாகும். 2024-ம் ஆண்டிலிருந்து இளைஞர்களிடையேயான வேலையின்மை குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரண்டிலும் உள்ள இளைஞர்களிடையே முன்னேற்றம் காணப்படுகிறது. 2025-ம் ஆண்டு வரையிலான மாதாந்திர காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) அறிக்கைகளும் பெண்களின் பங்கேற்பில் மேம்படும் போக்குகளைச் சுட்டிக்காட்டுகின்றன. கிராமப்புறங்களில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) 2025 செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்து வந்த மாதங்களில் அதிகரித்துடன், மே மாதத்திற்குப் பிறகு அதன் மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. இந்தப் போக்குகள், பல சுற்று கணக்கெடுப்புகளிலும் நிலையான மற்றும் சீரான முன்னேற்றம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.


வேலைவாய்ப்பின் தரமும் மேம்பட்டுள்ளது. நிலையான ஊதியம் மற்றும் சம்பளம் பெறும் வேலைவாய்ப்புகளின் பங்கு 22%-லிருந்து 24%-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் முன்னேற்றம் பதிவாகியுள்ளது. அதற்கேற்ப, சுயவேலைவாய்ப்பின் பங்கு 58%-லிருந்து 56%-ஆகக் குறைந்துள்ளது. முறைசார்ந்த சம்பள வேலைவாய்ப்புகள் பொதுவாக அதிக வருமானம் மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு போன்ற சமூகப் பாதுகாப்புக்கான அணுகலுடன் தொடர்புடையது என்பதால், வேலைவாய்ப்பின் தன்மையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் 2025-ம் ஆண்டின் தரவுகளில் உள்ள மிக முக்கியமான அறிக்கைகளில் ஒன்றாகும்.


ஊதியப் போக்குகளும், குறிப்பாகப் பெண்களைப் பொறுத்தவரை இந்த நிலையையே வலுப்படுத்துகின்றன. நிலையான சம்பள வேலைவாய்ப்புகளில், ஆண்களின் வருமானம் 6%-ஆக இருந்த நிலையில், பெண்களின் வருமானம் 7%-ஆக வளர்ந்துள்ளது. சுயதொழிலை பொறுத்தவரை, ஆண்களின் வருவாய் 8% உயர்ந்திருந்த நிலையில் பெண்களின் வருவாய் 9% உயர்ந்ததுள்ளது. அதேவேளையில், தற்காலிகத் தொழில்துறையில் ஆண்களின் ஊதியம் பெரும்பாலும் மாற்றமின்றி இருந்தபோதிலும், பெண்களின் ஊதியம் 5% அதிகரித்துள்ளது.


அதேநேரத்தில், மொத்த வருமானத்தில் உள்ள பாலின இடைவெளிகளை மேலும் குறைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இத்தரவுகளின் பகுப்பாய்வின்படி, பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தில் சுமார் 76%-ம், தற்காலிகப் பணிகளில் சுமார் 69%-ம், சுயதொழிலில் வெறும் 36%-ம் வருவாய் ஈட்டுகின்றனர். இந்த வேறுபாடுகள் இன்றும் கணிசமான அளவிலேயே நீடித்தாலும், ஊதியம் அடிப்படையிலான வேலைவாய்ப்பை நோக்கிய மாற்றம் பெண்களுக்கு மேலும் உறுதியான பொருளாதாரரீதியாகப் பெரிதும் தெளிவான நன்மைகளை அளிக்கத் தொடங்கியுள்ளது.



கட்டமைப்புரீதியான மாற்றங்கள் சிறந்த வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றன. மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத் துறையின் பங்கு 43 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் பங்களிப்பு முறையே சுமார் 12% மற்றும் 13%-ஆக வளர்ந்துள்ளன. இளைஞர்கள், குறிப்பாக இளம் பெண்கள், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் அதிகளவில் நுழைகின்றனர். இளைய தலைமுறையினரிடையே சாதி மற்றும் பாலின அடிப்படையிலான தொழில் பிரிவினை, மூத்த தலைமுறையினரைவிட கணிசமாகக் குறைவாக உள்ளது. இது, கல்விக்கான விரிவான அணுகல் மற்றும் அதிகரித்து வரும் சமூக நகர்வு ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைவுகள் ஆகும். இம்மாற்றங்கள் தற்போது தொழிலாளர் சந்தையில், அனைவரையும் உள்ளடக்கிய விளைவுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன.


திறன் இடைவெளிகளும் வேலைவாய்ப்பு உருவாக்கமும்


கல்வி நிலையிலிருந்து வேலைவாய்ப்புச் சூழலுக்கு மாறுவதே இங்குள்ள முதல் சவாலாகும். இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவோரின் எண்ணிக்கை பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வருமானப் பிரிவினரும் உயர்கல்வியை எளிதில் அணுக முடிகிறது. இருப்பினும், இதில் இன்னும் சில முக்கிய இடைவெளிகள் நீடிக்கவே செய்கின்றன. உதாரணமாக, 2004 மற்றும் 2023-க்கு இடையில், ஆண்டுதோறும் சுமார் 5 மில்லியன் பட்டதாரிகள் தொழிலாளர் சந்தையில் நுழைந்தனர். ஆனால், அவர்களில் சுமார் 2.8 மில்லியன் பேர் மட்டுமே ஏதேனும் ஒரு வகையிலான வேலைவாய்ப்பைப் பெற முடிந்தது.


முறையான திறன் பயிற்சி பெறுவதற்கான வரையறுக்கப்பட்ட அணுகலும் ஒரு சவாலாக உள்ளது. 15-59 வயதுக்குட்பட்டவர்களில் 4% பேர் மட்டுமே முறையான தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். இருப்பினும், பயிற்சி பெற்றவர்களில், பணியிடப் பங்கேற்பு கணிசமாக அதிகமாக உள்ளது. இது ஆண்களுக்கு 83% மற்றும் பெண்களுக்கு 51%-ஆகவும் உள்ளது. இது திறன் பயிற்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையிலான வலுவான தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், இந்தியா இந்தத் தொடர்பை திறம்படப் பயன்படுத்தி, பயிற்சி வாய்ப்புகளைப் பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டும்.


பெண்களின் தொடர்ச்சியான பணியிடப் பங்கேற்பில் மற்றொரு சவால் உள்ளது. தொழிலாளர் சக்திக்கு வெளியே உள்ள பெரும்பாலான ஆண்கள் கல்வியை முதன்மைக் காரணமாகக் குறிப்பிட்டாலும், பெண்கள் குழந்தைப் பராமரிப்பு மற்றும் வீட்டுப் பொறுப்புகளைச் சுட்டிக்காட்டினர். இது, ஊதியம் பெறாத வேலைகளைச் சமமற்ற முறையில் பகிர்வதால் ஏற்படும் கட்டமைப்புத் தடைகளை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, நகர்ப்புறங்களில் சுயதொழில் செய்யும் ஆண்கள், பெண்களைவிட வாரத்திற்குச் சுமார் 17.5 மணிநேரம் அதிகமாக வேலை செய்கிறார்கள். மேலும், வழக்கமான சம்பளப் பணியில் இந்த இடைவெளி வாரத்திற்குச் சுமார் 7.9 மணிநேரமாக உள்ளது. இது, பெண்கள் சமமற்ற விகிதத்தில் அனுபவிக்கும் ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத உழைப்பு எனும் தொடர்ச்சியான இரட்டைச் சுமையைப் பிரதிபலிக்கிறது. மாதாந்திர காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) தரவுகள் சில மேம்பாடுகளைச் சுட்டிக்காட்டினாலும், தொழிலாளர் பங்கேற்பில் உலகிலேயே மிகப்பெரிய பாலின இடைவெளிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்னும் திகழ்கிறது.


நான்காவது சவால் நீட் (NEET) குழுவினர். 15-29 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 25% பேர் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். மேலும், இவர்கள் தீவிரமாக வேலை தேடுவதை நிறுத்திவிட்டதால், வேலையின்மை புள்ளிவிவரங்களில் இவர்கள் கணக்கிடப்படுவதில்லை. இதன் விளைவாக, முழுமையாகப் பயன்படுத்தப்படாத உழைப்பின் உண்மையான அளவு முழுமையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. சரியான நேரத்தில் தலையீடு செய்யப்படாவிட்டால், இந்த ஈடுபாடின்மை நீண்டகாலத்திற்கு இளைஞர்கள் தொழிலாளர் சக்தியிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும். இதன் விளைவாக வருமான இழப்பு, குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் மெதுவான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிக்கு வழிவகுக்கும்.


எதிர்காலத்தில், இந்தியா தனது மக்கள்தொகை ஈவுத்தொகையின் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 2030-க்குப் பிறகு உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையின் பங்கு குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சத்தை அடைய நாம் ஒரே ஒரு கொள்கைச் சுழற்சி மட்டுமே உள்ளது. இது, கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சவால்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட கொள்கைரீதியான பதிலளிப்பின் அவசரத்தை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், நிலைமை முன்னெப்போதையும்விட அதிக சவாலாக மாறி வருகிறது. செயற்கை நுண்ணறிவுத் திறன் தேவைகளை மறுவடிவமைக்கிறது, பசுமை மாற்றம் துறைசார் வேலைவாய்ப்பு முறைகளை மாற்றுகிறது மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை மீண்டும் வரையறுக்கின்றன.


முன்னோக்கிய பாதை


இந்த மாற்றங்கள் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகின்றன. இருப்பினும், இந்தியாவின் தொழிலாளர் வர்க்கம் சரியான திறன்களைப் பெற்று, இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தக்கூடிய உற்பத்தி சார்ந்த வேலைகளில் பணியமர்த்தப்பட்டால் மட்டுமே, இந்தியா இவற்றிலிருந்து பயனடைய முடியும். காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) 2025 தரவுகள், தொழிலாளர் சந்தை மெதுவாக ஒரு நேர்மறையான திசையில் நகர்வதைக் காட்டுகின்றன. அது படிப்படியாக முறைப்படுத்தப்பட்டு, ஊதிய உயர்வுகளை உருவாக்கி, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது.


இருப்பினும், இந்த ஆதாயங்களை அர்த்தமுள்ள மற்றும் உற்பத்தித்திறன் சார்ந்த பொருளாதார வளர்ச்சியாக மாற்றுவதற்கு, மேலும் இலக்கு சார்ந்த தலையீடுகள் தேவைப்படும். தொழில்துறைக்குத் தேவையான திறன் பயிற்சிகளை விரிவுபடுத்துதல், பாலினப் பாகுபாடு இல்லாத தலையீடுகள் மூலம் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை உறுதி செய்தல் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நிலையான வேலைவாய்ப்பிற்கான பாதைகளை வலுப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். நீட் (NEET) இளைஞர்களைப் பொருளாதாரத்தில் தீவிரப் பங்களிப்பாளர்களாக மீண்டும் ஈடுபடுத்துவதற்கு, தொழிற்பயிற்சிகள் போன்ற இலக்கு சார்ந்த திட்டங்களும் முக்கியமானதாக இருக்கும்.


ஃபலாஷா நாக்பால், ஆக்ஸ்போர்டு கொள்கை மேலாண்மை அமைப்பின் வாழ்வாதாரம் மற்றும் பாலினத் துறையின் தலைவர்.


Original Link: India’s labour market shows gains, but challenges persist.


Share: