அக்ரி ஸ்டாக் இணையதள புரட்சி. -தேவேஷ் சதுர்வேதி

வேளாண் தொழிலாளர்களின் நலனுக்கான டிஜிட்டல் சேவைகளை வழங்கும் முறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துதல்.


தரப்படுத்தப்பட்ட வேளாண் தொழிலாளர்களின் தரவுத்தளம் தேவையென்பதை உணர்ந்த அரசாங்கம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்புடன் 2024-ஆம் ஆண்டில் டிஜிட்டல் வேளாண் தொழிலாளர் இயக்கம் (Digital Agriculture Mission) என்ற திட்டத்தைத் தொடங்கியது. இந்த இயக்கத்தின் முக்கியமான மற்றும் அமைதியான உந்து சக்தியாக அக்ரி ஸ்டாக் இணையதளம் (Agri Stack) உருவெடுத்து வருகிறது. இதில் பண்ணை, வேளாண் தொழிலாளர் மற்றும் பயிரிடப்பட்ட பயிர் என மூன்று முக்கியப் பதிவேடுகள் உள்ளன. இந்தியாவின் வேளாண்மை துறையில் 'அக்ரி ஸ்டாக் இணையதளம்' ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.


பண்ணைப் பதிவேடு (Farm Registry) என்பது புவிசார் குறியீடு இடப்பட்ட வேளாண் நிலங்களின் தரவுத்தளத்தைக் கொண்டுள்ளது. இதன் இரண்டாவது அடுக்கில், நிலம் வைத்துள்ள ஒவ்வொரு வேளாண் தொழிலாளருக்கும் ஒரு தனித்துவமான 'வேளாண் தொழிலாளர் அடையாள எண்' வழங்கப்படுகிறது. இதில் அவர்கள் வைத்துள்ள அனைத்து நிலங்களின் விவரங்களும், கூட்டு உரிமையாளராக இருந்தால் அவர்களின் பங்கு எவ்வளவு என்ற விவரமும் அடங்கும். இந்தத் தரவுகள் நில உரிமை ஆவணங்களுடன் (Record of Rights (RoR)) நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், வாரிசுரிமை அல்லது விற்பனை மூலம் உரிமையாளர் மாறினால், அது பண்ணைப் பதிவேட்டில் தானாகவே புதுப்பிக்கப்படும். மூன்றாவது அடுக்கில், ஒவ்வொரு நிலத்திலும் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் விவரங்கள் இருக்கும். இவை ஒவ்வொரு பயிர் பருவத்திலும் விதைப்பு முடிந்த பிறகு, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பயிர் கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்படுகின்றன.



அக்ரி ஸ்டாக் இணையதளம் (Agri Stack) என்பது ஒரு ஒருங்கிணைந்த தரவுத்தளமாகும். இது தனிநபர் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைச் சற்றும் மீறாமல், மிகவும் கண்டிப்புடன் பின்பற்றிச் செயல்படுகிறது. இத்திட்டம் பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் வெவ்வேறு பிராந்தியங்களுக்கு இடையேயான சேவைகளை, விதிகள் மற்றும் தானியங்கி முறையின் அடிப்படையில் முறையாக வழங்குவதை உறுதி செய்கிறது.


உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பு


நாடெங்கிலும் உள்ள நில நிர்வாக முறைகளில் நிலவும் வேறுபாடுகளை அங்கீகரிக்கும் வகையில், இந்த அமைப்பு அந்தந்த உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய நெகிழ்வுத்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.


பல ஆண்டுகளாக நில ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல், இன்னும் முன்னோர்களின் பெயரிலேயே நிலம் இருக்கும் மாநிலங்களில், அந்த நிலத்தைச் சாகுபடி செய்யும் வாரிசுகள், வருவாய்த்துறையின் சரிபார்ப்பிற்குப் பிறகு தங்களுக்கான வேளாண் தொழிலாளர் அடையாள அட்டையைப் (Farmer ID) பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். சட்டங்கள் அனுமதிக்கும் இடங்களிலும் மற்றும் மாநில அரசுகள் சம்மதிக்கும் இடங்களிலும், உரிமையாளரின் முறையான அங்கீகாரத்துடன், நிலத்தைப் பகிர்ந்து சாகுபடி செய்பவர்கள் மற்றும் குத்தகை தொழிலாளர்கள் குறிப்பிட்ட திட்டப்பலன்களைப் பெறச் சேர்க்கப்படலாம். சமூக நில உரிமைப் பழக்கம் பரவலாக உள்ள வடகிழக்கு மாநிலங்களில், 'புவிசார் குறியீடு' அடிப்படையிலான சான்றிதழ் முறை மூலம், அந்தந்த ஊர் பாரம்பரிய வழக்கங்கள் பாதிக்கப்படாமல் தகுதியுள்ள நபர்களைத் திட்டங்களில் இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இந்தச் செயல்பாட்டில் ஒரு முக்கிய சாதனையாக இதுவரை 9.40 கோடிக்கும் அதிகமான வேளாண் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டைகள் (Farmer IDs) உருவாக்கப்பட்டுள்ளன. 2025-26-ஆம் ஆண்டில், 24-மாநிலங்கள் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 30 கோடி நிலப்பரப்புகளில் டிஜிட்டல் பயிர் ஆய்வுகளை மேற்கொண்டன. இந்த ஆய்வுகள் மொபைல் கருவிகள், புவிசார் குறியீடு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப உதவியுடன் துல்லியமாக நடத்தப்பட்டன.


இது பாரம்பரிய ஆய்வு முறைகளிலிருந்து ஒரு முக்கியமான மாற்றமாகும். வழக்கமான பழைய முறைகள் பெரும்பாலும் மெதுவாக இருப்பதோடு, சீரற்றத் தன்மை மற்றும் பிழைகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகளையும் கொண்டிருந்தன.


வேளாண் தொழிலாளர்களுக்குப் பயனளித்தல்


இது காகித வடிவிலான ஆவணங்களிலிருந்து மின்னணு முறைக்கு மாறும் ஒரு செயலாகும். இது "ஒற்றை உண்மைத் தரவு ஆதாரமாக" (Single source of truth) செயல்படுகிறது. இதன்மூலம் வேளாண் தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டிய அவசியமின்றி பல சேவைகளைப் பெற முடியும், இதனால் பரிவர்த்தனை செலவுகளும் குறைகின்றன. தகுதியுள்ள பயனாளிகளைத் துல்லியமாக அடையாளம் காணவும், அரசாங்கப் பலன்கள் இடைத்தரகர்கள் இன்றிச் சரியான நபர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் உதவுகிறது.


நிலம் தொடர்பான தரவுகளைப் பயிர் மற்றும் மண்ணின் ஆரோக்கியம் குறித்த தகவல்களுடன் ஒருங்கிணைப்பது, வேளாண் விரிவாக்க சேவைகளில் (Agricultural Extension Services) ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன்மூலம், ஒவ்வொரு வேளாண் தொழிலாளிக்கும் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளை மிகக் குறைந்த செலவில் உருவாக்கி பகிர்ந்து கொள்ள முடியும். உள்ளூர் தட்பவெப்ப நிலைகளைக் கணக்கில் கொண்டு, பயிர் விதைப்பதற்கான சிறந்த நேரம், நீர் பாசன அட்டவணைகள், உரப்பயன்பாடு மற்றும் பூச்சக்கொல்லி மருந்து மேலாண்மை போன்ற விஷயங்களில் வேளாண் தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்ற தனிப்பட்ட வழிகாட்டுதல்களைப் பெற முடியும்.


அக்ரி ஸ்டாக் இணையதளமானது (Agri Stack) துல்லியமான மற்றும் உடனுக்குடனான தரவுகளைக் கொண்டு, வேளாண் சாகுபடி சார்ந்த கொள்கைகளைத் வகுக்க உதவுகிறது. பயிரிடும் முறைகளைக் கண்காணிப்பதற்கும், சந்தையில் பொருட்களின் வரத்து மற்றும் தேவைக்கு இடையே உள்ள இடைவெளியைக் கணிப்பதற்கும் பயன்படுகிறது. இதன் மூலம், விலையேற்றம் அல்லது விலை வீழ்ச்சி போன்றவற்றைத் தடுக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு இத்திட்டம் வழிவகை செய்கிறது.


ஒன்றிய மற்றும் மாநில அமைச்சகங்கள் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தங்களுக்கெனத் தனித்தனியான வேளாண் தரவுத்தளங்களை உருவாக்கியுள்ளன. அக்ரி ஸ்டாக் இணையதளம் (Agri Stack) என்பது இந்தத் தனித்தனி அமைப்புகளை நீக்கிவிட்டு, ஒரு பொதுவான டிஜிட்டல் தளத்தை உருவாக்குகிறது. இதன் மூலம், சரிபார்க்கப்பட்ட ஒரே விதமான தகவல்களைப் பல்வேறு அரசு அமைப்புகளும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.


ஏற்கனவே பல மாநிலங்கள் அக்ரி ஸ்டாக் (Agri Stack) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றன. உத்தரப் பிரதேசம் இதனை குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) அடிப்படையிலான கொள்முதல் பணிகளுக்குப் பயன்படுத்துகிறது. கடந்த குறுவை (Kharif) சாகுபடி காலத்தில், நெல் கொள்முதலுக்காக வேளாண் தொழிலாளர்களை எளிதாகப் பதிவு செய்ய சத்தீஸ்கர் மாநிலம், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. மத்தியப் பிரதேசம், (Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan (PM-ASHA) திட்டத்தின்கீழ் சோயாபீன் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சிக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க இந்தத் தரவுத்தளத்தைப் பயன்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அனைத்து நேரடிப் பயன் பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)) சார்ந்த சலுகைகளுக்கும் அக்ரி ஸ்டாக் (Agri Stack) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் மேலும் வளர்ச்சியடையும்போது, பயிர் விவரங்கள், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் சந்தை விலைகளை ஒருங்கிணைத்து வேளாண் தொழிலாளர்களுக்குப் பயனுள்ள செயலிகளை புத்தொழில் நிறுவனங்கள் உருவாக்க முடியும்.


தன்னுடைய சமீபத்திய பொதுக் கூட்ட உரைகளில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், Agri Stack (அக்ரி ஸ்டாக்) திட்டமானது "இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய மைல்கல்" என்றும், இது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்ட "அடுத்த ‘UPI’ போன்றதொரு புரட்சி" என்றும் குறிப்பிட்டுள்ளார்.


அக்ரி ஸ்டாக் (Agri Stack) என்பது எதிர்காலத்தை நோக்கிய ஒரு சீர்திருத்தமாகும், இது பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பின் மூலம் வேளாண் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், அரசு நிர்வாகத்தையும் மேம்படுத்துகிறது.


தேவேஷ் சதுர்வேதி, இந்திய அரசின் முன்னாள் வேளாண்துறை செயலாளர் ஆவார்.




Original Link: The agri stack revolution.


Share: