நீட் தேர்வு ஏன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது? நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகளை ஏன் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது? தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency (NTA)) பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தபோதிலும், வினாத்தாள் கசிவு குறித்த கவலைகள் ஏன் தொடர்ந்து நீடிக்கின்றன? 2024-ம் ஆண்டு ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து எத்தகைய சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன? நீட் தேர்வை கணினி அடிப்படையிலான வடிவத்திற்கு மாற்ற முடியுமா?
தற்போது வரையிலான நிகழ்வு :
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (National Eligibility cum Entrance Test (NEET)) சுமார் 22 லட்சம் மருத்துவ மாணவர்கள் எழுதிய ஒன்பது நாட்களுக்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மே 12 அன்று, தேசிய தேர்வு முகமை (NTA), தேர்வில் முறைகேடு நடந்துவிட்டதாகவும், மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தது.
இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of All India Medical Association (FAIMA)), தேசிய தேர்வு முகமையை (NTA) மாற்றுமாறு அல்லது பெரிய அளவிலான மறுசீரமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
நீட் தேர்வு கடந்த பல ஆண்டுகளாக என்னென்ன சர்ச்சைகளைச் சந்தித்துள்ளது?
சுமார் 22 லட்சம் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதற்கான முடிவு நீட் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும். இருப்பினும், வினாத்தாள் கசிவு குறித்த கவலைகள் ஒன்றும் புதிதல்ல. 2024-ல், நீட்-யுஜி (NEET-UG) தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட அதேநேரத்தில் தேசிய தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டில், முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 67 மாணவர்கள், வரலாற்றிலேயே முதன்முறையாக முழு மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். இதை ஒப்பிடுகையில், 2023-ல் இரண்டு மாணவர்கள் மட்டுமே முழு மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். அதேநேரத்தில் 2022-ல் எவருமே முழு மதிப்பெண் பெறவில்லை. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முழு மதிப்பெண்களைப் பெற்றதால், தரவரிசை பெருமளவில் உயர்ந்ததுள்ளது. இதன் விளைவாக, புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் ஒரே ஒரு இடத்திற்காக அதிக மதிப்பெண் பெற்ற பல விண்ணப்பதாரர்கள் போட்டியிட்டனர்.
2024-ம் ஆண்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஏறத்தாழ 1.1 லட்சம் மருத்துவ (MBBS) இடங்களுக்கு 13 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்று போட்டியிட்டனர். பின்னர், வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன. விசாரணையில், கசிந்த வினாத்தாள்கள் மூலம் 155 மாணவர்கள் பயனடைந்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாணவர்கள் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்; ஆனால், அவர்களின் அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
தேசிய தேர்வு முகமையின் (NTA) ‘பிழையின்மை’ (Zero Error) வாக்குறுதி ஏன் நிறைவேறவில்லை?
ஆண்டுதோறும் வினாத்தாள் கசிவு வழக்குகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) தனது கடந்த காலச் சிக்கல்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. தேசிய தேர்வு முகமையின் (NTA) சீரமைப்பு என்பது வெறும் வாய் வார்த்தையாகவே இருந்தது. 2024-ம் ஆண்டு ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, அப்போதைய தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைமை இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சுபோத் குமார் சிங், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, எஃகு அமைச்சகத்திற்கு கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டார். அவர் தற்போது சத்தீஸ்கர் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
அவரது இடமாற்றத்தைத் தொடர்ந்து, ஒரு வருடத்திற்கும் மேலாக தேசிய தேர்வு முகமை (NTA) முழுநேரத் தலைவர் இல்லாமல் இருந்தது. அப்போது, 1985-ம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சிங் கரோலா ‘கூடுதல் இடைக்காலப் பொறுப்பை’ வகித்து வந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியாஏஐ திட்டத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் சிங் தேசிய தேர்வு முகமையின் (NTA) பொறுப்பை ஏற்று, ‘பிழையில்லா, சகிப்புத்தன்மையில்லா’ கொள்கை (Zero Error, Zero Tolerance policy) பின்பற்றப்படும் என்று அறிவித்தார்.
மே 3 அன்று நீட்-யுஜி 2026 தேர்வு நடத்தப்பட்ட பிறகு, 5,432 மையங்களில் 22.79 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற இத்தேர்வு, 'எந்தவித சிக்கலும் இன்றி' நடத்தப்பட்டதாக தேசிய தேர்வு முகமை (NTA) சமூக ஊடகங்களில் குறிப்பிட்டது. மேலும், இத்தேர்வை நடத்துவதில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்ததாக இந்த முகமை தெரிவித்தது.
முத்திரையிடப்பட்ட நெறிமுறைகளின்கீழ் இரகசிய ஆவணங்கள் முழுமையாகவும் பாதுகாப்பாகவும் கையாளப்படுவது, தேர்வுப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காகக் காவல்துறை பாதுகாப்புடன் கூடிய ஜிபிஎஸ் வசதி கொண்ட வாகனங்கள், மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட்ட காட்சிகளுடன் அனைத்து தேர்வு மையங்களிலும் (1,50,000 வரை) சிசிடிவி கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்குள் நுழைவதற்கு முன், அதிக உணர்திறன் கொண்ட உலோகக் கண்டறியும் கருவிகள் (metal detectors) மூலம் கட்டாய சோதனை, ஒவ்வொரு மையத்திலும் பலப்படுத்தப்பட்ட மனிதவளம் மற்றும் உபகரணங்கள், ஆள்மாறாட்டத்தைத் தடுக்க ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் நேரடிக் கண்காணிப்பு ஆகியவை இருப்பதாகவும் இந்த முகமை மேலும் கூறியது.
தேர்வர்களை ஏமாற்றும் நோக்கில், போலி வினாத்தாள்களையும் வதந்திகளையும் பரப்பியதற்காக 120 டெலிகிராம் சேனல்களை தேசிய தேர்வு முகமை (NTA) முடக்கியுள்ளதாக அபிஷேக் சிங் 'தி இந்து' பத்திரிகையிடம் தெரிவித்தார்.
இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், இறுதித் தேர்வில் இடம்பெற்ற 410 கேள்விகளில் 120 கேள்விகளைக் கொண்ட ஒரு “மாதிரி வினாத்தாள்”, தேர்வுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே பரவி வந்ததாக ராஜஸ்தான் காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தேசிய தேர்வு முகமையின் (NTA) ஒரு மிகப்பெரிய கவனக்குறைவு ஆகும்.
இராதாகிருஷ்ணன் குழு என்ன பரிந்துரைத்தது?
நீட்-யுஜி 2024 தேர்வு தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சகம் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தது. இக்குழுவிற்கு, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இருப்பினும், இக்குழு அளித்த பரிந்துரைகள் எதையும், தேசியத் தேர்வு முகமையோ (NTA) அல்லது கல்வி அமைச்சகமோ முழுமையாகச் செயல்படுத்தவில்லை.
அக்டோபர் 2024-ல் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, பேனா-காகிதத் தேர்வு (pen-and-paper testing (PPT)) முறையை 'ஒரு பெரிய பாதுகாப்பு அபாயம்' (a major security risk) எனச் சுட்டிக்காட்டியது. தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படும் கூட்டு நுழைவுத் தேர்வின் (JEE) முதன்மைத் தேர்வைப் போன்ற கணினி அடிப்படையிலான தேர்வு (Computer-Based Testing (CBT)) வடிவத்திற்கு மாறுமாறு அது பரிந்துரைத்தது. ஜேஇஇ (JEE) முதன்மைத் தேர்வில் ஆண்டுதோறும் 13 முதல் 15 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இது நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை நடத்தப்படுகிறது.
தேர்வு மையங்களுக்கு, மறைகுறியாக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்கள் (encrypted question papers) டிஜிட்டல் முறையில் அனுப்பப்பட்டு, தேர்வுக்குச் சற்று முன்பு உள்ளூரிலேயே அச்சிடப்படும் நிலையில், கணினி உதவியுடன் கூடிய பாதுகாப்பான காகிதத் தேர்வு (PPT) முறையையும் அக்குழு பரிந்துரைத்தது. இது, எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய அச்சிடுதல் மற்றும் கொண்டுசெல்லும் செயல்முறையை நீக்குகிறது. தேசிய தேர்வு முகமை (NTA) இதைச் செயல்படுத்துவதாக எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. மாறாக, அது ஜிபிஎஸ் வாகனங்களையும், காவல்துறைப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நம்பியிருந்தது.
ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே கணினி வழித் தேர்வுகளை (CBT) நடத்தும் திறன் தேசிய தேர்வு முகமையிடன் (NTA) உள்ளது என்று அபிஷேக் சிங் கூறினார். மேலும், நீட் தேர்வை கணினி வழித் தேர்வு முறைக்கு மாற்றுவது என்பது, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்ட ஒரு 'உயர்மட்ட அமைச்சக முடிவு' என்றும் அவர் குறிப்பிட்டார்.
2024-ல், தேசிய தேர்வு முகமை (NTA) தனது கணினி ஆய்வகங்களின் திறனை அதிகரிப்பதற்காக ஒரு டெண்டரை வெளியிட்டது. இருப்பினும், இந்த செயல்முறையை இறுதி செய்ய முடியவில்லை. 2026-ல், தேசிய தேர்வு முகமையிடம் (NTA) சுமார் 552 கணினி வழித் தேர்வு (CBT) மையங்கள் உள்ளன. அவை முதன்மையாக ஜேஇஇ (JEE) மற்றும் கியூட் (CUET) தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. 2024-ல் இராதாகிருஷ்ணன் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரும் கூட, கூடுதலாக தேர்வு மையங்களைச் சேர்ப்பதற்காக தேசிய தேர்வு முகமை (NTA) தனது உள்கட்டமைப்பை விரிவுபடுத்த முடியவில்லை.
நீட்-யுஜி தேர்வுகளை இணையவழியில் நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சகத்திற்கு பல முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. ஆனால், அவை பலனளிக்கவில்லை என தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் 'தி இந்து' பத்திரிகையிடம் தெரிவித்தனர். "நீட்-யுஜி தேர்வுகளை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் குறைந்தது ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடந்த வினாத்தாள் கசிவு விவகாரம், தேர்வு முறையை மாற்றுவதற்கு ஒரு எச்சரிக்கை நிலையாக அமைய வேண்டும்," என்று ஓர் அதிகாரி கூறினார்.
2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் செய்தது போலவே, கல்வி அமைச்சகம் இந்த முறையும் விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவுடன் (CBI) ஒப்படைத்துள்ளது. நீட் 2024 வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையில் என்ன தெரியவந்தது?
நீட்-யுஜி 2024 வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 45 பேருக்கு எதிராக, மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) ஆகஸ்ட் முதல் நவம்பர் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில் பாட்னாவில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தது. வினாத்தாள் கசிவின் மூலம் பயனடைந்ததாகக் கூறப்படும் தேர்வர்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்த தகவல்கள் கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமையுடன் (NTA) பகிரப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவித்தன. இருப்பினும், நவம்பர் 2024-ல் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை.
நீட்-யுஜி 2026 தேர்வு கசிவு குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) விசாரித்து வரும் நிலையில், 2024 வழக்கு தொடர்பான கடைசி அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
சுமார் 22.79 லட்சம் தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இவ்வளவு பெரிய அளவில் மறுதேர்வு நடத்துவதால் ஏற்படும் மனித இழப்பு என்ன?
நீட்-யுஜி தேர்வு ரத்து செய்யப்பட்டதும், புதிய தேர்வு தேதிகள் குறித்த நிச்சயமற்ற தன்மையும் இந்தியா முழுவதும் உள்ள தேர்வர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும் என்று பல மாணவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இத்தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டிருந்த பல மாணவர்கள், தற்போது ஏற்பட்டுள்ள புதிய திருப்பங்களால் மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த மாணவியான வாமிகா, தனது உத்தேச மதிப்பெண் நன்றாக இருந்தபோதிலும், மறுதேர்வில் தனது செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தார். "தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பதும், அதனால் ஏற்படும் அழுத்தமும் இறுதியில் நம்மைப் பெரிதும் பாதித்துவிடுகின்றன," என்று அவர் கூறினார்.
Original Link: Why did NTA’s ‘Zero Error’ policy fail?