'ரிட்ஜ்' (The Ridge) பகுதியை மீட்டெடுப்பதற்காக டெல்லி அரசு வகுத்துள்ள திட்டங்கள் ஏன் கவலையை ஏற்படுத்துகின்றன? -பிரதீப் கிரிஷன்

ஒரு வனப்பகுதியைச் சரியாக மீட்டெடுப்பதற்கு, அங்கு நடுவதற்கு ஏற்ற சரியான மர வகைகளைத் தேர்ந்தெடுப்பதே மிக முக்கியமான முதல் படியாகும். டெல்லி 'ரிட்ஜ்' பகுதியில் காடுகளை மறுவளர்ச்சி செய்வதில் உள்ள மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று, அந்த மண்ணிற்கே உரிய 'பூர்வீக' மரங்கள் (Native trees) எவை என்பது குறித்த போதிய புரிதல் இல்லாததே ஆகும்.


தலைநகர் டெல்லியின் மிக முக்கியமான சூழலியல் பகுதிகளில் ஒன்றான மத்திய ரிட்ஜ் (Central Ridge) பகுதியில் உள்ள சுமார் 670 ஹெக்டேர் நிலப்பரப்பை, டெல்லி அரசு "பாதுகாக்கப்பட்ட காடு" (Reserved Forest) என்று அறிவித்துள்ளது. மேலும், அங்கு "சிறப்பு காடுகளை" (Vans) உருவாக்கவும், அந்த மண்ணிற்கே உரிய பூர்வீக மர வகைகளை நட்டு வளர்க்கவும் அதிகாரப்பூர்வமாகத் திட்டங்களை அறிவித்துள்ளனர்.


சுமார் 864 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட மத்திய ரிட்ஜ் (Central Ridge) பகுதி, பழமையான ஆரவல்லி மலைத்தொடரின் நீட்சியான டெல்லி ரிட்ஜ் அமைப்பின் ஒரு முக்கியப் பகுதியாகும். 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த டெல்லி ரிட்ஜ், நகரம் முழுவதும் ஆங்காங்கே பரவியிருக்கும் வனப்பகுதியாகும். இது டெல்லியின் "பசுமை நுரையீரல்" (Green lungs) போலச் செயல்பட்டு, நகரின் காற்றுத் தரத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


இருந்தபோதிலும், மத்திய ரிட்ஜ் (Central Ridge) பகுதி ஏற்கனவே ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக (Reserved forest) இருந்து வருகிறது. இது முதன்முதலில் 1927-ஆம் ஆண்டின் இந்திய வனச் சட்டத்தின் பிரிவு 4-ன்கீழ், 1994-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குப் பின்பற்றப்படும் அதே நடைமுறையைப் போலவே, முதல் அறிவிப்பைத் தொடர்ந்து அந்த நிலத்தின் மீதான உரிமைகளைத் தீர்க்கும் பணிகள் நடைபெறும். இந்தப் பணிகள் முடிந்த பிறகு, 1927-ஆம் ஆண்டின் இந்திய வனச் சட்டத்தின் பிரிவு 20-ன்கீழ் வெளியிடப்படும் இரண்டாவது அறிவிப்பு, அந்தப் பகுதிக்கு 'பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி' என்ற இறுதி அங்கீகாரத்தை வழங்குகிறது.


இதற்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, இருப்பினும் இந்த இரண்டாவது அறிவிப்பாணை, நீண்டகாலமாக நடந்திருக்க வேண்டிய ஒரு செயல்முறையை முழுமையடையச் செய்கிறது.


இருப்பினும், டெல்லி ரிட்ஜ் (The Ridge) பகுதியை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் வைத்துள்ள மற்ற சில திட்டங்களும், அவை செயல்படுத்தப்பட உள்ள விதங்களுமே தற்போதைய கவலைக்குரிய விஷயமாக உள்ளன.


கறையான் தடுப்புத் திட்டம்


வனத்துறை சமீபத்தில் ஒரு ஒப்பந்தப்புள்ளியை (Tender) வெளியிட்டுள்ளது. அதில், மரக்கன்றுகளை நடும்போது கறையான் தடுப்புச் சிகிச்சையை மேற்கொள்ளுமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


ஆனால், கறையான்களை அழிக்க நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவது, கரையான்களை மட்டும் கொல்லாமல், "உயிர் வளமுள்ள மண்" (Living soil) உருவாகக் காரணமான நுண்ணுயிரிகளையும் மற்றும் பூஞ்சைகளையும் சேர்த்தே அழித்துவிடும். டெல்லி மத்திய ரிட்ஜ் (Central Ridge) பகுதி தற்போது குறிப்பிடத்தக்க சேதத்திற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், அங்கிருக்கும் மண் இன்னும் வளமாக இருப்பதுதான் அதன் மிகப்பெரிய பலமாகும்.


கறையான்களை முற்றிலும் ஒழிப்பதே ஒரே தீர்வா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. கறையான்கள் வீடுகளில் உள்ள மரம், புத்தகங்கள், உடைகள் மற்றும் மின்சாரக் கம்பிகளைக்கூட கடுமையாக சேதப்படுத்தும் என்பது உண்மைதான். இருப்பினும், இயற்கைச் சூழலில் கறையான்கள் ஒரு பயனுள்ள பங்கினை வகிப்பதாக விஞ்ஞானிகளும் சூழலியல் வல்லுநர்களும் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். அவை காய்ந்த மரங்களை அழித்து கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்வது மட்டுமல்லாமல், "சுற்றுச்சூழல் பொறியாளர்களாக" (Ecosystem engineers) செயல்படுகின்றன. இவை வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தவும், மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தவும் உதவுகின்றன. குறிப்பாக வறண்ட நிலங்களில், மண்ணில் நைட்ரஜன் சத்தை நிலைப்படுத்தவும், மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தி அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன.


வனத்துறை தனது ஒப்பந்தப்புள்ளியில் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாக அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு எழுந்த விமர்சனங்களை அடுத்து, அவர்கள் உடனடியாகவும் பாராட்டுக்குரிய வகையிலும் செயல்பட்டு, அந்தத் ஒப்பந்தப்புள்ளியில் திருத்தம் செய்து நச்சுப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை ரத்து செய்தனர். 


சிறப்பு காடுகள் மற்றும் பூர்வீக மரங்கள்


டெல்லி வனத்துறை, ரிட்ஜ் (The Ridge) பகுதியில் தீர்த்தங்கர வனம், ரிது வனம், ராசி வனம் மற்றும் பஞ்சவடி வனம் போன்ற பெயர்களில் சிறப்பு வனங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.


இந்தத் திட்டத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும், ரிட்ஜ் பகுதியில் இத்தகைய கருப்பொருள் சார்ந்த காடுகளை (Themed forests) உருவாக்குவது 'வனப் பாதுகாப்புச் சட்டத்தை' (Forest Conservation Act) மீறும் செயலாக அமையக்கூடும் என்கின்றனர்.  குறிப்பாக, சிமெண்ட் அல்லது செங்கல் கட்டுமானங்கள் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தால் அது சட்டவிரோதமானது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


ஆனால், வனத்துறையினர் இந்த வனப்பகுதிகளுக்குள் எந்த வகையான மரங்களை நடப்போகிறார்கள் என்பதுதான் இப்போது மிக முக்கியமான கவலையாக உள்ளது.

மத்திய ரிட்ஜ் (Central Ridge) பகுதியில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட காடு வளர்ப்பு முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தியவுடனேயே அவை காய்ந்து இறந்துவிடுகின்றன. இந்த முயற்சிகளில் "வெற்றி" பெற்றது என்றால் அது தென்அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட விலாயதி கீகர் (Vilayati Keekar) மரம் மட்டும்தான். ஆனால், அந்த முயற்சியின் வெற்றியே இன்று பெரிய சிக்கலாக மாறியுள்ளது. ஏனெனில், ரிட்ஜ் பகுதியின் வறண்ட மற்றும் பாறைகள் நிறைந்த சூழலுக்கு ஏற்ப இயற்கையாக வளரக்கூடிய பிற மரங்களையும் புதர்களையும் அழித்துவிட்டு, இந்த வகை மரம் மட்டுமே தழைத்து வளர்ந்துவிட்டது.


டெல்லி ரிட்ஜ் (The Ridge) பகுதியில் மீண்டும் மீண்டும் ஏற்படும் தோல்விகளைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. ஏனெனில், அங்கு நடுவதற்கு ஏற்ற மரங்களின் பட்டியலைத் தயாரிப்பது என்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல என்கின்றனர்.


டெல்லி ரிட்ஜ் (The Ridge) பகுதியில் மரங்கள் செழித்து வளர வேண்டுமானால், அந்த நிலப்பரப்பில் நிலவும் துல்லியமான சூழலுக்கு முழுமையாகப் பொருந்தக்கூடிய மரங்களை மட்டுமே தேர்வு செய்யவேண்டும். அதாவது, வடக்கு ஆரவல்லி மலைத்தொடரின் ‘குவார்ட்சைடிக்’ (Quartzitic) மண் வகைகளில் இயற்கையாக வளரக்கூடிய தாவரங்களை மட்டுமே கண்டெடுத்து நடவேண்டும். இதில் மரங்கள் மட்டுமின்றி புதர்கள், கொடிகள், மூலிகைகள் மற்றும் புற்கள் என அனைத்தும் அடங்கும். இவைதான் உண்மையான 'பூர்வீக' தாவரங்கள். ஆனால், சிக்கல் என்னவென்றால், "பூர்வீகத் தாவரங்கள்" என்ற சொல் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது அல்லது பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது.


Quartzitic soils (குவார்ட்சைடிக் மண்): இது ஒரு வகை கடினமான பாறை மண். ஆரவல்லி மலைத்தொடரில் இத்தகைய மண் அமைப்பு அதிகம் காணப்படும்.


டெல்லி அரசாங்கம், 'ரிட்ஜ்' (The Ridge) பகுதியில் அந்த மண்ணிற்கே உரிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பூர்வீக மர வகைகளான வேம்பு, அரச மரம், ஈட்டி மரம் (Shisham), நாவல், புளி மற்றும் மா போன்ற மரங்கள் நடப்படும் என்று அறிவித்துள்ளது.


மாமரம் ஒரு "பூர்வீக" மரமா? நாட்டின் அரசியல் எல்லைகளுக்குள் (அதாவது இந்தியாவிற்குள்) காணப்படுகிறது என்று நீங்கள் கருதினால், அது பூர்வீக மரம் தான். ஆனால், டெல்லி ரிட்ஜ் (The Ridge) எனப்படும் மலைப்பகுதியின் சூழலியல் மண்டலத்திற்கு அது பூர்வீகமானது அல்ல. ரிட்ஜ் பகுதியில் ஒரு மாமரத்தை வளர்க்க வேண்டுமென்றால், அது உயிர்வாழும் காலம் முழுவதும் அதற்குத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.


டெல்லி அரசாங்கம் வெளியிட்டுள்ள மரங்களின் பட்டியல், இந்தப் பிரச்சனையை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. அந்தப் பட்டியலில் உள்ளவை அனைத்தும் இந்திய மரங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 'அரச மரம்' (Peepal) ஒன்றைத் தவிர, மற்ற எந்த மரமும் டெல்லி ரிட்ஜ் (The Ridge) பகுதியின் மெல்லிய மண் படலத்தைக் கொண்ட, பாறைகள் நிறைந்த மற்றும் வறண்ட சூழலியல் அமைப்பில் இயற்கையாக வளரக்கூடியவை அல்ல.


வேப்ப மரம் மிகவும் உறுதியானது என்பதால், அந்தச் சூழலில் அது உயிர் பிழைக்கக்கூடும். ஆனால், ஈட்டி மரம் (Shisham), மரம் இமயமலை அடிவாரப் பகுதியைச் சேர்ந்தது; மலைகளிலிருந்து வேகமாக வரும் ஆறுகள் வேகம் குறைந்து வண்டல் மண்ணைப் படியவைக்கும் இடங்களில் மட்டுமே இவை வளரும், எனவே இவற்றுக்கு அதிக ஈரப்பதமும், ஆழமான, நீர் ஊடுருவக்கூடிய மண்ணும் தேவை. நாவல் மரங்கள் (Jamuns) அதிக நீர் தேவையுள்ள காடுகளைச் சேர்ந்தவை. இவை ஈரப்பதம் மிக்க காடுகளில் வளரக்கூடியவை, வறண்ட காடுகளில் வற்றாத நீரோடைகள் ஓடும் இடங்களில் மட்டுமே இவை உயிர்வாழும். புளிய மரம் உறைபனி மற்றும் கடும் குளிரைத் தாங்கும் திறன் அற்றது, மேலும் மாமரத்திற்கு மிக அதிக அளவிலான தண்ணீர் தேவைப்படும்.


இந்த மரங்களில் எதுவுமே 'ரிட்ஜ்' (The Ridge) போன்ற மலைப்பாங்கான மற்றும் வறண்ட நிலப்பரப்பில் செழித்து வளராது.


எனவே, "பூர்வீகம்" என்ற சொல் ஒரு நாட்டின் எல்லையைக் குறிக்கும் அடையாளமாக இருக்கக்கூடாது. மாறாக, அது ஒரு குறிப்பிட்ட சூழலியல் மண்டலத்தின் தனித்தன்மையைப் பொறுத்தே அமைய வேண்டும்.


வனப்பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் வழக்கமாக ஏற்படும் தோல்விகளுக்கான காரணங்கள் என்ன?


வன ஆராய்ச்சி நிறுவனம் (Forest Research Institute (FRI)), 2026-27-ஆம் ஆண்டில் தொடங்கும் அடுத்த பத்தாண்டுகளுக்கான டெல்லியின் காடுகள் குறித்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரித்துள்ளது. டெல்லி வனத்துறையின் பணிகளுக்கு வழிகாட்டியாக அமையவேண்டிய இந்தத் திட்டத்தில், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சூழலியல் மீட்பு ஆகியவற்றிற்காக மரம் நடுவது குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் திட்டம் 'ரிட்ஜ்' வனப்பகுதியை ஒரு மரத் தோட்டம் போலக் கருதுவதாகத் தெரிகிறது. சூழலியலை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்த தெளிவான வழிமுறைகளை விளக்குவதற்குப் பதிலாக, மரங்களின் வருடாந்திர வளர்ச்சியை மதிப்பிடுவது போன்ற வணிகரீதியான அம்சங்களிலேயே இந்தத் திட்டம் அதிக கவனம் செலுத்துவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.


டெல்லி ரிட்ஜ் (The Ridge) பகுதியில் நடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பூர்வீக மர வகைகளின் பட்டியலில், சில குறைபாடுகளும் சிக்கல்களும் உள்ளன.


அதிகாரிகள் சரியான மர வகைகளைத் தேர்வு செய்தாலும்கூட, நடைமுறையில் அவர்கள் வேறு சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி வனத்துறை அந்தப் பகுதிக்கு ஏற்ற 42 வகையான மரங்களைக் கொண்ட ஒரு தெளிவான பட்டியலைத் தயாரித்தது. ஆனால், ரிட்ஜ் (The Ridge) பகுதியில் உண்மையான நடவுப் பணிகள் தொடங்கியபோது, பயன்படுத்தப்பட்ட 11 இனங்களில் 4 வகை மரங்கள் மட்டுமே வனத்துறை தயாரித்த அந்தப் பட்டியலில் இருந்தன. மீதமுள்ளவற்றில் மூன்று இனங்கள், அந்த மண்ணிற்குச் சம்பந்தமில்லாத அந்நிய நாட்டு வகை மரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அப்படியானால், எங்கு தவறு நடந்தது? வனத்துறையானது, பல அரசு நிறுவனங்களைப் போலவே ஒப்பந்ததாரர்கள் மூலமாகவே பணிகளை மேற்கொள்கிறது. இந்த ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலும் செலவைக் குறைக்க மலிவான செடிகளை வாங்குகின்றனர். அவை எப்போதும் அங்கீகரிக்கப்பட்ட மர வகைகளின் பட்டியலோடு ஒத்துப்போவதில்லை. உண்மையில், புதிதாக மீட்டெடுக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் பரவலாக நடப்பட்டுள்ள மரம் ஒரு தென்அமெரிக்கத் தாவரமாகும். அதன் பழம் ஜிலேபி போல சுருண்டு இருப்பதால் இந்தியாவில் இது 'Jungle Jalebi' (சீனிப்புளிய மரம் அல்லது கொடுக்காய்ப்புளி) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஒரு இந்திப் பெயர் (moniker) இருப்பதால், இது இந்த மண்ணிற்குரிய பூர்வீக மரம் என்று தவறாக நினைத்து, அனுபவமில்லாத ஒப்பந்ததாரர்கள் இதனைப் பட்டியலில் சேர்த்துவிடுகின்றனர்.


ஒரு வனப்பகுதியைச் சரியாக மீட்டெடுப்பதற்கு, அந்த மண்ணிற்கு ஏற்ற மர வகைகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான தொடக்கப்புள்ளி என்றாலும், அதைத் தாண்டி இன்னும் பல நுணுக்கமான நடைமுறைகள் உள்ளன. தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய வனப்பகுதிகள் மற்றும் மியாவாக்கி (Miyawaki) எனும் அடர்வனக் காடுகள் வளர்ப்புத் திட்டங்களுக்கும், சூழலியல் மீட்டெடுப்பிற்கும் (Ecological restoration) எந்தத் தொடர்பும் இல்லை. டெல்லி ரிட்ஜ் பகுதியில் செழிப்பான ஒரு இயற்கை வறண்ட காட்டுப்பகுதியை மீண்டும் உருவாக்குவதற்கு நமக்குக் கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு இதுவாகும். எனவே, தவறான முறைகளைப் பின்பற்றி அந்த வாய்ப்பைச் சிதைத்துவிடாமல் இருப்பது மிகவும் அவசியமாகிறது.      

                 



Original Link: Why the Delhi government’s plans to restore the Ridge raise concerns.


Share: