‘குருதி வைரம்’ வர்த்தகத்தைத் தடுப்பதற்காக கிம்பர்லி செயல்முறையின் இடைக்காலக் கூட்டம் மும்பையில் நடைபெற்றுவரும் நிலையில், வைரங்கள், இந்தியாவில் உள்ள சுரங்கங்கள் மற்றும் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்கள் பற்றிப் புரிந்துகொள்வோம்.
தற்போதைய செய்தி :
2026-ஆம் ஆண்டு மே 11 அன்று கிம்பர்லி செயல்முறை (Kimberley Process (KP)) இடைக்காலக் கூட்டம் இந்தியாவால் தொடங்கி வைக்கப்பட்டது. மாறிவரும் சர்வதேச சவால்களுக்கு இடையில், உலகளாவிய இயற்கை வைர மதிப்புச் சங்கிலியில் கண்காணிப்பு, இணக்கம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, நான்கு நாள் கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான 'கிம்பர்லி செயல்முறையின்' தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
1. 2026-ஆம் ஆண்டு இந்தியாவின் கிம்பர்லி செயல்முறை தலைமைப் பொறுப்பானது, இயற்கை வைரத் துறையில் நம்பகத்தன்மை, இணக்கம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கை ஆகிய 3C-க்களால் வழிநடத்தப்படுகிறது. பொறுப்புடன் பெறப்பட்ட இயற்கை வைரங்களின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்கு, ஆக்கபூர்வமான உரையாடலும், சர்வதேச ஒத்துழைப்பும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வலியுறுத்துகிறது.
2. கிம்பர்லி செயல்முறைச் சான்றிதழ் திட்டத்தை (Kimberley Process Certification Scheme (KPCS)) செயல்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் இணக்க வழிமுறைகள், பாரம்பரிய மற்றும் வண்டல் வைர உற்பத்தி, புள்ளிவிவரங்கள் மற்றும் இயற்கை வைர மதிப்புச் சங்கிலியில் நம்பிக்கையை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றுவருகிறது.
3. போரால் பாதிக்கப்பட்ட வைரங்களின் (conflict diamonds) வர்த்தகத்தைத் தடுப்பதற்காக கிம்பர்லி செயல்முறையை பயன்படுத்தும் வழிமுறையே கிம்பர்லி செயல்முறைச் சான்றிதழ் திட்ட வழிமுறையாகும். 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், சட்டபூர்வமான செயல்முறையின் மூலம் மோதல் வைரங்கள் கிம்பர்லி செயல்முறை விதிமுறைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்காக, கிம்பர்லி செயல்முறையில் பங்கேற்ற நாடுகளால் தனித்தனியாக செயல்படுத்தப்படுகிறது.
4. தற்போது, கிம்பர்லி செயல்முறையில் 60 பங்கேற்பாளர்கள் உள்ளனர். இவர்கள் மொத்தமாக 86 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இதில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்புநாடுகள் ஒரே கூட்டணியாக பங்கேற்கின்றன.
5. ‘மோதல் வைரங்கள்’ (Conflict diamonds) அல்லது ‘இரத்த வைரங்கள்’ என அறியப்படும் செதுக்கப்படாத வைரங்கள் என்பவை, சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பலவீனப்படுத்தும் நோக்கில் நடைபெறும் ஆயுத மோதல்களுக்கு நிதியளிப்பதற்காக, கிளர்ச்சி இயக்கங்களாலோ அல்லது அந்த நாடுகளின் கூட்டாளிகளாலோ வெட்டி எடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் பட்டை தீட்டப்படாத வைரங்கள் ஆகும்.
6. அங்கோலா, சியரா லியோன், ருவாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் வன்முறைக்கு நிதியளிப்பதில் வைரங்களின் பங்கு குறித்து 1990-களில் சர்வதேச கவனம் திரும்பியபோது, இந்தச் சொற்கள் உலகளாவிய விவாதப் பொருளாகின.
7. வண்டல் வைரங்களை (alluvial diamonds) எளிதாக வெட்டியெடுப்பது, குறைந்த அளவிலான கண்காணிப்பு மற்றும் எல்லை தாண்டிய கடத்தல் ஆகியவை இணைந்து, இந்தக் கற்கள் சட்டப்பூர்வமான விநியோகச் சங்கிலிகளுக்குள் செல்வதற்கு முக்கிய காரணியாக அமைந்தன.
8. இரத்த வைரங்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், தென்னாப்பிரிக்க அரசாங்கம் 2000-ஆம் ஆண்டில் கிம்பர்லியில் ஒரு கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டம் உலக வைர மன்றம், வைரம் உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்தது.
உலக வைர கவுன்சில் (World Diamond Council (WDC))
பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் நடைபெற்ற உலக வைர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் வாயிலாக, உலக வைரச் சந்தை கூட்டமைப்பு (World Federation of Diamond Bourses (WFDB)) மற்றும் சர்வதேச வைர உற்பத்தியாளர்கள் சங்கம் (International Diamond Manufacturers Association (IDMA)) ஆகியவற்றால் இது 2000-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கிம்பர்லி செயல்முறைக்குள், வைர மற்றும் ஆபரணத் துறையின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாக இது செயல்படுகிறது. 2002-ஆம் ஆண்டில், கிம்பர்லி செயல்முறைக்குத் ஆதரவாக செயல்படும் வகையில், தொழில்துறை சார்ந்த சுய-ஒழுங்குமுறை அமைப்பான தனது 'உத்தரவாத முறைமையை' (System of Warranties (SoW)) உலக வைரச் சந்தை கூட்டமைப்பு அறிமுகப்படுத்தியது.
9. கிம்பர்லி செயல்முறை என்பது, மோதல்களற்ற வைரங்களின் வர்த்தகத்திற்கு பொதுவான தரத்தை உறுதி செய்யும் நோக்கில், பங்கேற்கும் நாடுகளால் செயல்படுத்தப்பட வேண்டிய குறைந்தபட்ச தேவைகளின் தொகுப்பை வழங்கும் ஒரு தன்னார்வ ஒப்பந்தமாகும்.
10. இந்த ஒப்பந்தத்தின்படி, பங்கேற்கும் நாடுகளுக்கு இடையேயான ஒவ்வொரு பட்டை தீட்டப்படாத வைரங்களின் ஏற்றுமதியுடனும், வைரங்கள் மோதல் அற்றவை என்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் கிம்பர்லி செயல்முறை சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உலகளாவிய விநியோகச் சங்கிலியிலிருந்து மோதல்கள் மூலம் பெறபட்ட வைரங்களை அகற்றுவதற்கான ஒரு உறுதிப்பாடே கிம்பர்லி செயல்முறை ஆகும். கிம்பர்லி செயல்முறையின்படி, இன்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் உலகளாவிய வர்த்தகத்தில் 99.8 சதவீதத்தை தடுக்கின்றனர்.
வைரம் (Diamond)
1. வைரம் தூய கார்பனால் ஆனது. வைரங்களில், ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் இணைந்து, ஒரு திடமான முப்பரிமாண அமைப்பை உருவாக்குகிறது. இது அறியப்பட்டதிலேயே மிகவும் கடினமான இயற்கை பொருளாகும். மேலும், வைரம் மிக அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளது.
2. இது உயர்ந்த ஒளிவிலகல் எண், அதிக ஒளிச்சிதறல் மற்றும் பளபளப்பு போன்ற சிறப்பான ஒளியியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்தப்பண்புகளே வைரத்தை உலகின் மிகவும் பிரபலமான இரத்தினக்கல்லாக ஆக்குகின்றன.
இரத்த வைரங்கள், இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் பட்டை தீட்டப்படாத வைரங்களுக்கான உலகளாவிய போட்டித் தன்மை கொண்டுள்ளன.
இரத்த வைரங்கள் என்றால் என்ன?
வரையறை: சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பலவீனப்படுத்தும் நோக்கில் நடைபெறும் ஆயுத மோதல்களுக்கு நிதியளிப்பதற்காக, கிளர்ச்சி இயக்கங்களாலோ அல்லது அந்த நாடுகளின் கூட்டாளிகளாலோ வெட்டி எடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் பட்டைத் தீட்டப்படாத வைரங்கள் இரத்த வைரங்கள் ஆகும்.
1990-களின் நெருக்கடி: அங்கோலா, சியரா லியோன், ருவாண்டா மற்றும் லைபீரியாவில் வைரங்கள் வழியாக நடைபெறும் மோதல் நிதியுதவிமீது சர்வதேச கவனம் திரும்பியது.
குறைபாடு: வண்டல் வைரங்களை எளிதாக வெட்டியெடுப்பது, குறைந்த அளவிலான கண்காணிப்பு மற்றும் எல்லை தாண்டிய கடத்தல் ஆகியவை, கற்கள் சட்டப்பூர்வமான விநியோகச் சங்கிலிகளில் நுழைய வழிவகுத்தன.
2000-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா, உலக வைர மன்றம், வைரம் உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் குடிமைச் சமூகத்தை ஒன்றிணைத்து கிம்பர்லி கூட்டத்தைக் கூட்டியது.
2003-ஆம் ஆண்டில் கிம்பர்லி செயல்முறைச் சான்றிதழ் திட்டம் (Kimberley Process Certification Scheme (KPCS)) தொடங்கப்பட்டது. கிம்பர்லி செயல்முறை சான்றிதழ் திட்டம், ஒவ்வொரு பட்டை தீட்டப்படாத வைர ஏற்றுமதியும், மோதல் இல்லாத தோற்றத்தை உறுதிசெய்யும் ஒரு சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும். இன்று, உலகளாவிய வர்த்தகத்தில் 99.8% கிம்பர்லி செயல்முறைக்கு ஏற்றதாக உள்ளது.
3. வைரம் இரண்டு வகையான படிவுகளில் காணப்படுகிறது: முதலாவதாக அடிப்படை அல்லது அதி அடிப்படை (ultrabasic) இயைபு கொண்ட தீப்பாறைகளிலும், இரண்டாவதாக முக்கிய மூலங்களிலிருந்து உருவான வண்டல் படிவுகளிலும் காணப்படுகிறது.
4. இந்திய கனிமங்கள் ஆண்டுப்புத்தகம் 2022-ன் படி, இந்தியாவின் வைர வயல்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
(i) அனந்தபூர், கடப்பா, குண்டூர், கிருஷ்ணா, மகபூப்நகர் மற்றும் கர்னூல் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசத்தின் தென்னிந்தியப் பகுதி;
(ii) பன்னா மண்டலத்தை உள்ளடக்கிய மத்தியப் பிரதேசத்தின் மத்திய இந்தியப் பகுதி;
(iii) சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பெஹ்ராதின்-கோடாவலி பகுதி மற்றும் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள டோகாபால், துகாபால், முதலிய பகுதிகள்; மற்றும்
(iv) மகாநதி மற்றும் கோதாவரி பள்ளத்தாக்குகளுக்கு இடையில் அமைந்துள்ள மற்றும் ஒடிசாவை உள்ளடக்கிய கிழக்கிந்தியப் பகுதி.
5. ரஷ்யா (46%) மிகப்பெரிய தொழில்துறை வைர இருப்பைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து போட்ஸ்வானா (23%), காங்கோ (கின்ஷாசா) (12%), தென்னாப்பிரிக்கா (9%) மற்றும் ஆஸ்திரேலியா (1%) ஆகியவை உள்ளன. இந்திய கனிமங்கள் ஆண்டுப் புத்தகத்தின்படி, தொழில்துறை வைரத்தின் உலக இருப்பு 130 கோடி காரட்டுகளாகும்.
ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்கள்
1. 2023-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்கள் மீது கவனம் செலுத்துவதற்கான அரசின் நடவடிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
2. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்கள் என்பவை, இயற்கையான வைரங்கள் வளரும் புவியியல் செயல்முறைகளைப் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் வைரங்கள் ஆகும். அவை "செயற்கை வைரங்கள்" (diamond simulants) போன்றவையல்ல, ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்கள் வேதியியல், இயற்பியல் மற்றும் ஒளியியல்ரீதியாக வைரங்கள் ஆகும். எனவே அவற்றை "ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டவை" என்று அடையாளம் காண்பது கடினம்.
3. மொய்சானைட், கியூபிக் சிர்கோனியா (Cubic Zirconia (CZ)), வெள்ளை நீலக்கல், YAG போன்ற பொருட்கள், வைரத்தைப் போலவே தோற்றமளிக்க முயற்சிக்கும் "போலி வைரங்கள்" என்றாலும், அவற்றுக்கு வைரத்தின் பளபளப்பும் நீடித்து இருக்கும் தன்மையும் இல்லை. எனவே, அவற்றை எளிதில் அடையாளம் காணலாம்.
4. பெயரே காட்டுவது போல, இந்த முறையில் மிக அதிக அழுத்தத்தை உருவாக்கக்கூடிய கனரக அழுத்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை 730,000 psi அளவிலான அழுத்தத்தையும் குறைந்தது 1500° செல்சியஸ் வெப்பநிலையையும் உருவாக்குகின்றன. பொதுவாக கிராஃபைட் “வைர விதை” (diamond seed) ஆக பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, குறைந்த செலவுடைய கார்பன் வடிவமான கிராஃபைட், மிகவும் மதிப்புமிக்க கார்பன் வடிவமான வைரமாக மாறுகிறது.
5. மற்ற செயல்முறைகளில் “வேதி ஆவிப் படிவு” (Chemical Vapor Deposition (CVD)) மற்றும் “வெடிப்பு நானோவைரங்கள்” (detonation nanodiamonds) என அறியப்படுவதை உருவாக்கும் வெடிபொருள் உருவாக்கம் ஆகியவை அடங்கும்.
6. செயற்கை வைரங்களை உற்பத்தி செய்வதற்கு வேதி ஆவிப் படிவு முறைக்கு ஒப்பீட்டளவில் குறைந்த அழுத்தமே தேவைப்படுகிறது. இந்தச் செயல்முறையில், வைரத்தின் மிகச்சிறிய படிகங்கள் ஒரு படலத்தின்மீது படியவைக்கப்படுகின்றன. இந்தப் படலத்தைச் சிக்கலான வடிவங்களில் உருவாக்கி, இயந்திரப் பாகம், நுண் சுற்றுகளில் உள்ள வெப்பக் கடத்திகள், குறுகிய அலை புற ஊதா, நுண்ணலை மூலங்கள் மற்றும் கதிர்வீச்சுக் கண்டறிவான்கள் போன்ற விரும்பிய இடங்களிலோ அல்லது கருவிகளிலோ பயன்படுத்தலாம்.
7. பூமியில் உள்ள இயற்கை வைரங்களின் இருப்பு குறைந்து வருவதால், நகைத்தொழிலில் மதிப்புமிக்க அந்த இரத்தினக்கல்லுக்குப் பதிலாக ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்கள்கள் (Lab-grown diamonds (LGDs)) மெதுவாக இயற்கை வைரங்களின் இடம்பிடித்து வருகின்றன. முக்கியமாக, இயற்கை வைரங்களைப் போலவே, வைரங்களுக்கு அவற்றின் தனித்துவமான பளபளப்பை வழங்குவதற்குத் தேவையான மெருகூட்டுதல் மற்றும் வெட்டுதல் போன்ற செயல்முறைகளுக்கு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்களும் உட்படுகின்றன.
Original Link: What are ‘blood diamonds’ and why does the Kimberley Process matter?