மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கவனித்து வருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்று இந்திய ராணுவம் கருதுகிறது. குறிப்பாக, ராணுவம் சார்ந்த முக்கியமான பிரிவுகளில் அந்நியத் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
• இந்தியாவிற்கென பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை உருவாக்கியுள்ள ‘SarvamAI’ மற்றும் ‘BharatGen’ போன்ற இந்திய நிறுவனங்களுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தற்போது ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவின் தற்போதைய பாதுகாப்பு அமைப்புகளுடன் எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்பது குறித்தே இந்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் ராணுவக் கட்டமைப்பில் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் பங்களிப்பை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
• ‘Palantir Technologies’ போன்ற ஒரு மென்பொருளை, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உருவாக்குவதே எங்களது நோக்கம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ள மற்றொரு அதிகாரி கூறுகையில், தற்போது இந்தியா செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருந்தாலும், நமக்கென சொந்தமான ஒரு அடிப்படை செயற்கை நுண்ணறிவு மாதிரியில் முதலீடு செய்வது வியூகரீதியாக மிக அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
• ஈரான் மற்றும் உக்ரைன் மோதல்களில், பாதுகாப்புப் படைகள் செயல்பாட்டு முடிவுகளை எடுக்க செயற்கை நுண்ணறிவை பயனுள்ள முறையில் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதை இந்த நிகழ்வுகள் இந்தியாவிற்கு உணர்த்தியுள்ளன. அமெரிக்காவில், 'Palantir Technologies' போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் ஈரான் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டன. மேலும், டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்தவும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
• உதாரணமாக, சீனா தனது இராணுவ நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவை மிக வேகமாக ஒருங்கிணைத்து வருகிறது. இது அந்நாட்டின் மக்கள் விடுதலை இராணுவம் (People’s Liberation Army (PLA)) முன்னெடுத்துள்ள 'நுண்ணறிவுப் போர்முறை' (Intelligentised Warfare) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
• சீன ராணுவத் திட்டமிடுபவர்கள், போர்க்களத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும், தானாகவே இயங்கும் ட்ரோன் கூட்டங்களை (drone swarms) வழிநடத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். கண்காணிப்பு, இலக்குகளைக் கண்டறிதல் மற்றும் போர்க்களத் தரவுகளை சில நொடிகளில் ஆய்வுசெய்து கட்டளைகளைப் பிறப்பிக்கும் முறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. சீன ராணுவத்தின் சமீபத்திய ஆயுதக் கொள்முதல் ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவர்கள் உளவு பார்ப்பது மற்றும் போரைத் திட்டமிடும் முறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கபட்டதாகத் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தின் பலத்தைக் குறைத்து, மின்னல் வேகத்தில் தாக்குதல்களை நடத்த சீனா திட்டமிடுகிறது. மேலும், "wolf pack" எனப்படும் தானாக இயங்கும் ரோபோடிக் போர் அமைப்புகளையும், அதிநவீன ட்ரோன் தளங்களையும் சீனா காட்சிப்படுத்தியுள்ளது.
• இருப்பினும், இந்தியா போர்க்காலத் தேவைகளுக்காக தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவு தீர்வுகளையே சார்ந்திருக்க வேண்டுமா என்கிற முக்கியமான கேள்வி எழுகிறது. அதேவேளையில், நாட்டின் பாதுகாப்பு போன்ற வியூகரீதியிலான முக்கியத் துறைகளுக்கு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களே சிறந்தது என அரசாங்கமும் ராணுவமும் கருதுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
• ராணுவத்தில் உளவுத் தகவல் ஒருங்கிணைப்பு (Intelligence Fusion) என்பது சிக்னல்கள், புகைப்படங்கள் மற்றும் மனித உளவுத் தகவல்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து தரவுகளைச் சேகரித்து, அவற்றை ஆய்வு செய்து ஒருங்கிணைப்பதைக் குறிக்கிறது. இதன் மூலம் எதிரிகளின் அச்சுறுத்தல்கள் குறித்த துல்லியமான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். தற்போது இந்தத் தொழில்நுட்பம் உளவுத் தகவல் ஒருங்கிணைப்பு அமைப்பாக (Intelligence Fusion Systems) வளர்ச்சி பெற்றுள்ளது. இவை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (Machine Learning) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தரவுகளை மிக வேகமாகப் பகுப்பாய்வு செய்கின்றன. இதன் விளைவாக, தகவல்களைச் சேகரிப்பதற்கும், அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதற்கும் இடைப்பட்ட நேரம் பெருமளவு குறைக்கப்படுகிறது.
• இதற்கு ஒரு முக்கியக் காரணம், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதற்கு ஆகும் மிகப்பெரிய செலவாகும். ‘OpenAI’ மற்றும் ‘Anthropic’ போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்படும் பொதுவான பயன்பாட்டிற்கான பெரிய மொழி மாதிரிகளுக்கு (Large Language Models) அதிக முதலீடு தேவைப்படுகிறது. கணினி செயல்பாடுகளுக்கு மட்டுமே ஏறக்குறைய 200 மில்லியன் டாலர் (சுமார் ₹1,650 கோடி) செலவாகும். இது தவிர, தரவுகளைப் பயிற்சி அளிப்பதற்கும் மற்றும் அவற்றை வகைப்படுத்துவதற்கும் ஆகும் செலவுகளைச் சேர்த்தால், மொத்தத் தொகை சுமார் 500 மில்லியன் டாலர் முதல் 600 மில்லியன் டாலர் (சுமார் ₹4,100 கோடி முதல் ₹5,000 கோடி) வரை உயரக்கூடும் என்று கணக்கிடப்படுகிறது.
• குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட சிறியரக மாதிரிகளை உருவாக்குவது ஒப்பீட்டளவில் செலவு குறைந்ததாக இருக்கலாம். மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கும் அளவிலான கணினித் திறன் இந்திய நிறுவனங்களுக்குக் கிடைப்பதில் சவால்கள் இருக்கலாம். இருப்பினும், இந்தத் தடையை நீக்க இந்திய அரசு இந்தியா செயற்கை நுண்ணறிவு திட்டத்தின்கீழ் (IndiaAI Mission), மானிய விலையில் கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளை (Graphics Processing Units (GPUs)) வழங்கி வருகிறது.
• அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட சில கருத்துக்கள் இந்தியாவை அதிருப்தி அடையச் செய்துள்ளன. இந்தியா உள்ளிட்ட தனது நட்பு நாடுகள், தங்களுடைய செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை அமெரிக்க தொழில்நுட்பக் கட்டமைப்பைக் கொண்டே உருவாக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.