பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)) என்பது ஒரு வருட கால ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். 18 முதல் 50 வயதுக்குட்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது 2 லட்சம் வரையிலான ஆயுள் பாதுகாப்புக் காப்பீட்டை வழங்குகிறது.
வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகள் ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைக் குறிக்கும் முக்கிய அடையாளங்களாகும். சேமிப்பு கணக்கு வைத்திருப்பது, குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (Economically Weaker Sections (EWS)) பெரும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. காப்பீடு அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. இந்தியா தனது நிதி உள்ளடக்கிய திட்டத்தை தீவிரமாகத் தொடங்கியபோது, முறையான பொருளாதாரக் கட்டமைப்பிற்கு வெளியே இருந்த கோடிக்கணக்கான குடிமக்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தின் இரண்டு முக்கியத் தூண்களாக இவை மாறின.
2015-ஆம் ஆண்டில் இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டபோது, இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே ஏதேனும் ஒரு வகையான காப்பீட்டுப் பாதுகாப்பு இருந்தது. இந்த இடைவெளிக்குக் காரணம் மக்களுக்குக் காப்பீடு மீது விருப்பம் இல்லாதது அல்ல. மாறாக, ஏழை எளிய மக்களையும் சென்றடையக்கூடிய வகையிலும், அவர்களுக்குப் பரிச்சயமான வழிகளிலும், குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய காப்பீட்டுத் திட்டங்கள் அப்போது இல்லாததே முக்கியக் காரணமாக இருந்தது.
இந்திய அரசின் நிதிசார் பாதுகாப்புத் திட்டங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவின் அனைவருக்குமான நிதிச் சேவைப் பயணம் 2014-ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நோக்கம், குறிப்பாக கிராமப்புற ஏழைகள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் வங்கிக் கணக்கு வசதியை உறுதி செய்வதாகும். இந்த வங்கிக் கணக்கே மற்ற திட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த அடித்தளத்தின் மீது நிதி பாதுகாப்பை உருவாக்கும் வகையில், 2015-ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி பிரதமர் மூன்று முக்கியத் திட்டங்களை ஒன்றாகத் தொடங்கினார். ஆயுள் காப்பீட்டிற்காக பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana), விபத்து மற்றும் ஊனத்திற்கான காப்பீட்டிற்காக பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana), மற்றும் முறைசாராத் தொழிலாளர்களின் ஓய்வூதியப் பாதுகாப்பிற்காக அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) ஆகிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் வெவ்வேறு விதமான அபாயங்களைக் கையாளும் இந்த மூன்று திட்டங்களும் இணைந்து 'ஜன சுரக்ஷா மும்மை' (Jan Suraksha trinity) என்று அழைக்கப்படுகின்றன.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது 18 முதல் 50 வயது வரை உள்ள வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்காக வழங்கப்படக்கூடிய ஓர் ஓராண்டு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். ஏதேனும் ஒரு காரணத்தினால் சந்தாதாரர் உயிரிழக்க நேரிட்டால், அது இயற்கையான மரணமாக இருந்தாலும் அல்லது விபத்தினால் ஏற்பட்ட மரணமாக இருந்தாலும், அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு முன் அவருக்கு இருந்த உடல்நலக் குறைபாடுகள் ஒரு தடையாக இருக்காது. இத்திட்டத்தில் சேர, கணக்கு வைத்திருப்பவர் ஒரு சம்மதப் படிவத்தை (Consent form) மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது. இதற்கு எந்தவித மருத்துவப் பரிசோதனையும் தேவையில்லை. மேலும், சந்தாதாரரின் அடையாளம், வயது மற்றும் வங்கி விவரங்கள் ஏற்கனவே வங்கிக் கணக்கில் உள்ளதால், இதற்காகத் தனியாக KYC (Know Your Customer) ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் குறைந்த செலவாகும். இதற்கான ஆண்டு பிரீமியம் (Yearly Premium) ₹436 மட்டுமே, அதாவது ஒரு நாளைக்கு சுமார் 1.20 ரூபாய் மட்டுமே செலவாகும். இதற்கு ஈடாக, பாலிசி காலத்திற்குள் சந்தாதாரர் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், அவருடைய குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் ஒரு தினசரி கூலித் தொழிலாளிக்கு, இந்த 2 லட்சம் ரூபாய் என்பது ஒரு மிகப்பெரிய நிதி உதவியாகும். இந்தப் பணம் ஒரு குழந்தையின் சில ஆண்டு கால கல்விச் செலவிற்கோ, ஒரு சிறிய விவசாயக் கடனை அடைப்பதற்கோ அல்லது கணவரை இழந்த ஒரு பெண் உடனடியாக வறுமையில் வாடாமல் தன் வாழ்க்கையை மேலாண்மை செய்வதற்கோ பெரிதும் உதவும்.
இந்தத் திட்டத்தில் பாலிசி ஆண்டின் இடையில் சேருபவர்களுக்கு, அவர்கள் சேரும் மாதத்தைப் பொறுத்து பிரீமியம் தொகை (Pro-rata basis) கணக்கிடப்படுகிறது. இதன்படி, ஜூன், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் சேருபவர்கள் முழுத் தொகையான 436 ரூபாயை செலுத்த வேண்டும். செப்டம்பர், அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் இணைந்தால் 342 ரூபாய் செலுத்தினால் போதுமானது. அதேபோல், டிசம்பர், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் சேருபவர்களுக்கு 228 ரூபாயும், மார்ச், ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சேருபவர்களுக்கு 114 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தில் இணைவதை ஊக்குவிக்கவும், தாமதமாகச் சேருபவர்கள் கூடுதல் சுமையை உணராமல் இருக்கவும் இந்த முறையானது பின்பற்றப்படுகிறது.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான நிபந்தனை உள்ளது. நீங்கள் திட்டத்தில் சேர்ந்த முதல் 30 நாட்கள் ஒரு 'காத்திருப்பு காலமாக' (Waiting Period) கருதப்படுகிறது. இந்த ஆரம்ப 30 நாட்களில், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும்; மற்ற காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்குக் காப்பீடு கிடைக்காது. இந்த விதிமுறை புதிதாக இணைபவர்களுக்கும், இடையில் சந்தா செலுத்தாமல் விட்டுவிட்டு மீண்டும் இணைபவர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், விபத்தினால் ஏற்படும் மரணங்களுக்குத் திட்டத்தில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
குறைந்த வருமானம் கொண்ட சந்தாதாரர்கள் சந்தா தொகையைச் செலுத்த மறந்துவிடுவதே அவர்களின் காப்பீடு இடையில் நின்றுபோவதற்கு மிக முக்கியமான காரணமாகும். இதைத் தவிர்ப்பதற்காகவே இந்தத் தானியங்கி புதுப்பித்தல் முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி அன்று சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து 436 ரூபாய் தானாகவே எடுத்துக்கொள்ளப்படும். வங்கிக் கணக்கில் போதிய இருப்புத் தொகை இருந்தால் மட்டும் போதும், சந்தாதாரர் இதற்காகத் தனியாக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. இதன் மூலம் காப்பீடு எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். இத்திட்டத்தில் 50-வயது வரை மட்டுமே புதிய உறுப்பினராகச் சேர முடியும் என்றாலும், ஏற்கெனவே இணைந்து தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள் 55 வயது வரை இந்தக் காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணையும் ஒவ்வொரு வங்கியும் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின்கீழ், வங்கி ஒரு மாஸ்டர் பாலிசியை வைத்திருக்கும், அதன் மூலமே அந்த வங்கியில் பதிவு செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காப்பீடு வழங்கப்படும். வாடிக்கையாளரின் விவரங்கள் மற்றும் அவர்கள் செலுத்தும் சந்தாத் தொகையின் அடிப்படையில் இந்தக் காப்பீடு அமையும். இழப்பீடு பெறும் முறையும் வங்கியின் மூலமாகவே நடைபெறுகிறது. ஒருவேளை காப்பீடு செய்தவர் இறந்துவிட்டால், அவருடைய வாரிசுதாரர் (Nominee) முறையான படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி அந்த விவரங்களைச் சரிபார்த்து காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும். ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை நேரடியாக வாரிசுதாரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதுவரை, இந்தத் திட்டத்தின்கீழ் 27.43 கோடி மக்கள் இணைந்துள்ளனர். இதில் உயிரிழந்த சந்தாதாரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 8.8 லட்சம் இழப்பீட்டுக் கோரிக்கைகள் மூலம் மொத்தம் 17,600 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றுள்ள காப்பீட்டு நிறுவனங்களின் தகவல்படி, இதன் இழப்பீட்டுக் கோரிக்கைகள் தீர்வு விகிதம் (Claim settlement ratio) 99.95 சதவீதமாக உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஒரு குடும்பத்தினர் வங்கிக்குச் சென்று இறப்புச் சான்றிதழ் மற்றும் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் போது, ஏறக்குறைய அனைத்து சூழல்களிலும் அவர்களுக்குரிய பணம் முறையாகக் கிடைத்துவிடுகிறது என்பதாகும்.
இந்த அமைப்பில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India (LIC)) மிக முக்கியப் பங்காற்றுகிறது. கூட்டாண்மை வங்கிகளின் மூலமாக பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தை வழங்கும் பதிமூன்று ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமும் (LIC) ஒன்றாகும். இந்தியா முழுவதும் 808 வங்கிகளுடன் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நேரடித் தொடர்பில் உள்ளது. ஜூன் மாதம் 2025-ஆம் ஆண்டு முதல் மே மாதம் 2026-ஆம் ஆண்டு வரையிலான தற்போதைய பாலிசி ஆண்டில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் இணைக்கப்பட்ட வங்கிகள் மூலம் 3.61 கோடி வங்கிச் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மொத்தம் 21.49 கோடி சந்தாதாரர்களைப் பதிவு செய்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சுமார் 9,414 கோடி ரூபாய் மதிப்பிலான 4.70 லட்சம் இழப்பீட்டுத் தொகைகளை வழங்கியுள்ளது. இந்தத் தரவுகளுக்குப் பின்னால், கடினமான காலகட்டத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் உதவியைப் பெற்ற பல தனிப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்காலம் (Covid-19), இந்தத் திட்டத்தின் அவசியத்தையும் அதேநேரத்தில் இதில் காணப்படும் பலவீனங்களையும் ஒருசேர நமக்கு உணர்த்தியது. உயிரிழப்புகள் மற்றும் காப்பீடு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்ததால், காப்பீடு கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்தது; இக்கட்டான சூழலில் இருந்த குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டம் ஒரு மிகச்சிறந்த நிதி உதவியாக அமைந்தது. இருப்பினும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு இன்னும் முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை என்பதையும் இந்தப் பெருந்தொற்று சுட்டிக்காட்டியது. குறிப்பாக, தங்கள் குடும்பத்தில் இறந்தவருக்கு இப்படி ஒரு காப்பீடு இருந்தது அல்லது அதற்கான காப்பீட்டுத் தொகை ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது என்பது பல குடும்பங்களுக்குத் தெரியாமலேயே இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு எனத் தனியாகக் காகித வடிவிலான கொள்கை ஆவணங்கள் வழங்கப்படுவதில்லை என்பது ஒரு முக்கியக் காரணமாகும். மேலும், வங்கிக் கணக்கில் வாரிசுதாரர் (Nominee) பெயர் இணைக்கப்படாவிட்டால், காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு அந்தக் குடும்பத்தினர் நீண்ட சட்டப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, கிராமப்புறங்களில் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வங்கிகள், வணிகத் தொடர்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது 2047-ஆம் ஆண்டிற்குள் "அனைவருக்கும் காப்பீடு" என்ற அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கான ஒரு முக்கிய அங்கமாகும். இதற்காக, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) வங்கிகளுடனான தனது கூட்டமைப்பை விரிவுபடுத்தி, இந்தத் திட்டத்தை அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு புதிய பதிவும் ஒரு குடும்பத்திற்கு முறையான நிதி பாதுகாப்பை வழங்குகிறது. எதிர்பாராத விதமாக ஒரு குடும்பத்தில் இழப்பு ஏற்படும்போது, எந்தவித தாமதமும் அல்லது சட்டச் சிக்கலும் இன்றி அந்தத் தொகை வாரிசுதாரரைச் சென்றடையும் போதுதான், இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதற்கான உண்மையான நோக்கம் முழுமையடைகிறது.
ஆர் துரைசாமி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைவர் ஆவார்.
Original Link: PMJJBY: The silent social security revolution.