பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு விடுத்துள்ள ஆலோசனைகள், ஒரு தீவிரமான பொருளாதாரத் தாக்கத்தை உணர்த்துகின்றன.
இந்தியக் குடிமக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள ஏழு அம்சம் தொடர்பான அழைப்பு, மேற்கு ஆசிய நெருக்கடியின் தாக்கத்தின் தீவிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேலும், இதன் மறைமுகத் தாக்கங்களைத் தவிர, நரேந்திர மோடியின் இச்செய்தி வேறு இரண்டு முக்கியக் காரணங்களுக்காகவும், சிக்கலானதாக உள்ளது. அவை அதன் நேரம் மற்றும் உள்ளடக்கம் பொறுத்து அமைகிறது. மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது அவரது செய்தியின் முக்கியப் பகுதியாக அமைந்திருந்தது. இதை முன்மாதிரியாக எடுத்துச் செயல்பட்டிருந்தால் அது ஒரு சிறந்த அணுகுமுறையாக இருந்திருக்கும். ஆனால், நரேந்திர மோடியின் இச்செய்தி, அவரும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களுக்காகப் பிரச்சாரம் செய்ய, நாடு முழுவதும் விமானங்களில் பறந்து சென்று 'ரோட் ஷோ'க்களை (சாலைப் பேரணிகளை) நடத்திய சில நாட்களுக்குப் பின்னரே வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முந்தைய அவரது உரைகள் எதிலுமே, இத்தகைய சிக்கல்கள் குறித்து அவர் குறிப்பிடவில்லை. மேலும், கவலைப்பட ஏதுமில்லை என்று அவரது அரசாங்க அதிகாரிகள் தினமும் அளித்து வந்த நம்பிக்கையூட்டும் உறுதிமொழிகளுக்கு முரணாகவே, பிரதமரின் இச்செய்தி தற்போது வந்துள்ளது. தெளிவாக குறிப்பிடுவோமேயானால், கவலைப்பட வேண்டிய சூழல் நிச்சயமாக உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாததற்காகப் பிரதமரைப் புகழ்ந்து தள்ளிய பல்வேறு அமைச்சர்களின் முயற்சிகளுக்குப் பின்னரே, பிரதமரின் இச்செய்தியும் வெளியாகியுள்ளது. சாமானிய மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தாத இந்த முடிவு வரவேற்கத்தக்கதே. ஆனால், அதன் மறுபக்கம் என்னவென்றால், நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அம்மக்களுக்கு உணர்த்துவதில் அத்தீர்மானம் தவறிவிடுகிறது. தேர்தலுக்கு முன்பாக அரசாங்கம் அந்த உத்திசார் முடிவை எடுத்தது. இப்போது அது அந்த நிலைப்பாட்டைத் தளர்த்த அல்லது நீர்த்துப்போகச் செய்ய முயற்சிக்கிறது. ஒருவேளை, விரைவில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. பிரதமரின் இந்த உரை வெளியான அதே சமயத்தில்தான், இந்தியத் தொழில் கூட்டமைப்பும் (Confederation of Indian Industry(CII)) இந்திய நிறுவனங்களுக்கு இதேபோன்றதொரு செயல் அழைப்பை விடுத்திருந்தது. இத்தகைய ஒருங்கிணைந்த செய்திகள், ஒரு மிக மோசமான சூழல் நிலவுவதையே சுட்டிக்காட்டுகின்றன. பிரதமரின் ஆலோசனைகள் பலவும், அவை தீர்க்க முயலும் சிக்கல்களை விட தீவிரமான பிற எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். மற்ற சில பரிந்துரைகள் அவர் எதிர்பார்த்த அளவுக்குப் பயனுள்ளதாக இல்லாமல் போகலாம்.
பிரதமர் வலியுறுத்தியுள்ளபடி, விவசாயிகள் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தினால், பயிர் விளைச்சல் உடனடியாகப் பாதிக்கப்படும். எல்-நினோவால் விவசாய உற்பத்தி குறையும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்படுவதால், இது குறிப்பாகக் கவலையளிக்கிறது. மேற்கு ஆசிய நெருக்கடியால் ஏற்படும் பொருளாதார சேதத்தை அதிக-அதிர்வெண் குறிகாட்டிகள் (High-frequency indicators) ஏற்கனவே வெளிப்படுத்தி வருகின்றன. இது இந்த நிலைமையை மேலும் மோசமாக்கும். வெளிநாட்டுப் பயணங்களை நிறுத்துவதற்கான பரிந்துரை, அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க உதவக்கூடும். ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பிப்ரவரி 2026 வரையிலான தரவுகளின்படி, 2025-26-ஆம் ஆண்டில் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணச்செலவு ஏற்கனவே 3% குறைந்துள்ளது. ஈரான் போர் தொடங்கிய பிறகு வந்த முதல் மாதமான மார்ச் மாதத்தில், இன்னும் கடுமையான சரிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ரூபாய் மற்றும் இந்தியாவின் அந்நியச் செலாவணி மீதான உண்மையான அழுத்தம், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறி வருவதாலும், இந்திய ரிசர்வ் வங்கி வீழ்ச்சியடைந்து வரும் நாணயத்தை நிலைநிறுத்த மதிப்புமிக்க டாலர்களைப் பயன்படுத்துவதாலும்தான் ஏற்படுகிறது. உள்ளூர் பொருட்களை வாங்குமாறு இந்தியர்களை வலியுறுத்துவது, அவர்களைக் குறைவான அளவில் நுகர்வு பொருள் வாங்க வைப்பதற்கான மற்றொரு வழியாகும். ஏனெனில், தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக உள்நாட்டு விநியோகம் இல்லை. அவர்களைக் குறைவாகத் தங்கம் வாங்கச் சொல்வதும் பயனற்றதாகவே இருக்கும். இவையெல்லாம், அடுத்த சில மாதங்களில் பொருளாதாரம் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளக்கூடும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. தேர்தல் நடந்தாலும் சரி, நடக்கவில்லை என்றாலும் சரி, இந்த எச்சரிக்கையைப் பிரதமர் மிக முன்னரே விடுத்திருக்க வேண்டும்.
Original Link: Belated warning: On the Prime Minister’s austerity appeal