இந்திய நீதிமன்றங்களில் வழக்குகள் முடிவடைவதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், தொழில்முறை நீதிமன்ற மேலாளர்களைக் கொண்டு நீதிமன்ற நிர்வாகத்தை மேம்படுத்துமாறு மாநில அரசுகளுக்கும், உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய நீதிமன்றங்களில் ஏற்படும் இந்தத் தாமதங்கள், அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் ஒரு பொதுவான மற்றும் அடிக்கடி விவாதிக்கப்படும் பிரச்சனையாகும். இதனால் மக்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட இழப்புகளுடன், இது நாட்டின் பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்தத் தாமதங்கள் முதலீட்டுப் பணத்தை முடக்குகின்றன, வணிகச் செலவுகளை அதிகரிக்கின்றன, புதிய முதலீடுகளை முடக்குகின்றன மற்றும் பொது வளங்களின் மீது தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இந்த விளைவுகளை துல்லியமாக அளவிடும் ஆய்வுகள் குறைவாகவே இருந்தாலும், சில மதிப்பீடுகளின்படி, இந்தத் தாமதங்களால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) சுமார் 1.5 முதல் 2 சதவீதம் வரை இழப்பு ஏற்படக்கூடும் என்கின்றனர்.
இந்திய நீதித்துறை அமைப்பு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்தப் பிரச்சனையின் வீரியம் தெளிவாகத் புரிகிறது. மேலும், இது காலப்போக்கில் மோசமடைந்து வருவதாகத் தோன்றுகிறது. வழக்குகள் நீதிமன்றத்திற்குள் வரும் விதம், அவை கையாளப்படும் முறை மற்றும் அது சார்ந்த பிற நிறுவனங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல ஒன்றோடொன்று தொடர்புடைய காரணங்களால் இந்தத் தாமதங்கள் ஏற்படுகின்றன. தெளிவற்ற முறையில் இயற்றப்படும் சட்டங்கள், ஊழியர்கள் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை மற்றும் திறமையற்ற நடைமுறைகள் போன்ற பல காரணிகளே இந்தப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம் என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தச் செயல்முறையில் உள்ள ஒரு முக்கியப் பிரச்சனை என்னவென்றால், நீதிமன்றங்களுக்குத் தேவையான தொழில்முறை நிர்வாக ஆதரவு தொடர்ந்து தட்டுப்பாடாகவே இருப்பதுதான். நீதிமன்றங்கள் என்பது வெறும் தீர்ப்புகளை வழங்கும் இடங்கள் மட்டுமல்ல, அவை முறையான நிர்வாகம் தேவைப்படும் பெரிய மற்றும் சிக்கலான அமைப்புகளாகும். நீண்டகாலமாக இந்த நிர்வாகப் பணிகளில் பெரும்பாலானவற்றை நீதிபதிகளே கவனித்து வருகின்றனர். ஒரு நிர்வாக ஆதரவு கிடைத்தால், அது நீதிபதிகள் சிறந்த முடிவுகளை எடுக்கவும், அவர்களின் நேரத்தைச் சேமிக்கவும், ஒட்டுமொத்த நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும் பெரிதும் உதவும் என்கின்றனர்.
இந்தத் துறைசார்ந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் 13-வது நிதி ஆணைய (13th Finance Commission) 2010–2015 காலத்திலிருந்தே தொடங்கின. நீதிபதிகள் தங்களின் நீதித்துறை சாராத பிற வேலைகளால் பெரும் பணிச்சுமைக்கு ஆளாகியிருப்பதை இந்த ஆணையம் சுட்டிக்காட்டியது. எனவே, மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்குப் பயிற்சி பெற்ற தொழில்முறை நீதிமன்ற மேலாளர்களைக், குறிப்பாக, வணிக மேலாண்மை முதுகலை (Master of Business Administration (MBA)) பட்டதாரிகளைக் கொண்ட ஒரு தனிப்பிரிவை உருவாக்க இந்த ஆணையம் பரிந்துரைத்தது. மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.300 கோடி நிதியையும் ஒருமுறைக்கான மானியமாக வழங்கியது.
இந்தத் திட்டத்தின் நோக்கம் மிகவும் எளிமையானது: நீதிமன்ற மேலாளர்கள் வழக்குகளை நிர்வகித்தல், மனித வளம், உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளைக் கண்காணித்தல் போன்ற பணிகளைக் கவனித்துக் கொள்வர். இதன் மூலம் நீதிபதிகள் தங்களின் முக்கியக் கடமையான வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்குவதில் முழு கவனம் செலுத்த முடியும். இருப்பினும், நடைமுறையில் இந்தத் திட்டத்தின் செயலாக்கமானது அனைத்து இடங்களிலும் சீராக இல்லாமலும், மிகவும் வரம்புக்குட்பட்டதாகவுமே இருந்தது.
ஐந்தாண்டு கால நிதியுதவி காலத்தில், ஒதுக்கப்பட்ட நிதியில் மிகக் குறைந்த பகுதியே பயன்படுத்தப்பட்டது. சில ஆதாரங்களின்படி இது வெறும் 13 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாக இருந்தது. ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் 'நீதிமன்ற மேலாளர்களை' நியமித்தன, ஆனால், அவர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் அல்லது தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டனர். 13-வது நிதி ஆணையத்தின் காலம் மார்ச் மாதம் 2015-ஆம் ஆண்டில் முடிவடைந்தபோது, நாடு முழுவதும் இது போன்ற பதவிகளில் சுமார் 128 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தன.
ஒன்றிய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டு, அதன் நிதிச்சுமை மாநில அரசுகளின்மீது சுமத்தப்பட்ட பிறகு நிலைமை மேலும் மோசமடைந்தது. இந்தத் திட்டத்தைத் தொடரலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அந்தந்த உயர்நீதிமன்றங்களின் பொறுப்பில் விடப்பட்டது. பல இடங்களில், இதற்கெனத் தனியாக நிதி ஒதுக்கப்படாததால், இந்தப் பதவிகள் முற்றிலும் கைவிடப்பட்டன.
இருப்பினும், இந்தத் திட்டத்தின் தோல்விக்கு நிதிப்பற்றாக்குறை மட்டுமே காரணம் அல்ல, அதற்குப் பல காரணங்கள் இருந்தன. கட்டமைப்புரீதியாக, இந்தத் திட்டம் ஒரு நிரந்தர அமைப்பாக மாற்றப்படவே இல்லை. இதனால், ஒன்றிய அரசின் நிதியுதவி ஆதரவு நிறுத்தபட்டதும் இந்தத் திட்டம் பலவீனமடைந்தது. நிறுவனரீதியாக, இதற்கு எதிர்ப்புகளும் நீடித்தன: நீண்டகாலமாகத் தங்களின் அதிகார வரம்பிற்குள் இருந்த நிர்வாகப் பொறுப்புகளை விட்டுக்கொடுக்க பல நீதிபதிகள் விரும்பவில்லை. மேலும், நீதிமன்றப் பணியாளர்களால்கூட இந்த நீதிமன்ற மேலாளர்கள் பெரும்பாலும் ஒரு வெளிநபராகவே நடத்தப்பட்டனர்.
தெளிவற்ற பொறுப்புகள் மற்றும் தரப்படுத்தப்பட்ட செயல்திறன் அளவீடுகள் இல்லாதது போன்ற வடிவமைப்பு குறைபாடுகளால் இந்தப் பிரச்சனைகள் மேலும் மோசமடைந்தன. தொழில்முறைப் பயிற்சிக்கும் நிறுவனத் தேவைகளுக்கும் இடையே இருந்த இடைவெளி மற்றொரு சவாலாக இருந்தது. நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுவான மேலாண்மைப் பின்னணியைக் கொண்டிருந்தார்களே தவிர, நீதிமன்றங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது பற்றிய புரிதல் அவர்களுக்குக் குறைவாகவே இருந்தது. இதனால், நீதித்துறைப் பணிகளுக்கு அவர்களால் திறம்பட ஆதரவளிக்க முடியாமல் போனது. இத்தகைய காரணங்கள் அனைத்தும் சேர்ந்து, இந்த சீர்திருத்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்குத் தேவையான நிறுவன ஆதரவு கிடைக்காமல் போனதால், இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதன் விளைவாக, நீதிபதிகள் தங்களது கணிசமான நேரத்தை நிர்வாகப் பணிகளிலேயே தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளது. இது வழக்குகள் முடிவுக்கு வருவதை தாமதப்படுத்துவதோடு, தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. ஆகஸ்ட் மாதம் 2018-ஆம் ஆண்டில் நீதிமன்ற மேலாளர்கள் குறித்து முதன்முதலில் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கிய இந்திய உச்சநீதிமன்றம், தற்போது இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது. மே மாதம் 2025-ஆம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவில், முந்தைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது குறித்து நீதிமன்றம் தனது கவலையைத் தெரிவித்தது. மேலும், அனைத்து உயர்நீதிமன்றங்களும் மூன்று மாதங்களுக்குள் தங்களது சேவை விதிகளை உருவாக்க வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும் என்றும், மாநில அரசுகள் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க அடுத்த மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் தொடர்ந்து நிர்வாகப் பணிகளையும் சேர்த்து கவனித்து வரும் வரை, டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பிற சீர்திருத்தங்களின் பலன்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். நீதிமன்ற நிர்வாகப் பணிகளுக்கென்று ஒரு வலுவான மற்றும் நிரந்தரமான நீதிமன்ற மேலாளர்கள் குழுவை உருவாக்குவதும், நீதித்துறைப் பணியை நிர்வாகப் பணியிலிருந்து தெளிவாகப் பிரிப்பதும் மிக எளிமையான மற்றும் மிகவும் பயனுள்ள சீர்திருத்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், இது நீதித்துறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கான கட்டமைப்பு மற்றும் காலக்கெடுவை உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ளது. மாநிலங்களும் உயர்நீதிமன்றங்களும் இந்த மாற்றங்களை நிரந்தரமாக்கி, நீதிமன்ற நிர்வாகத்தை ஒரு தற்காலிக அமைப்பிலிருந்து ஒரு தொழில்முறை அமைப்பாக மாற்றியமைக்குமா என்பதுதான் தற்போதுள்ள உண்மையான சிக்கல் ஆகும்.
லவீஷ் பண்டாரி, புது தில்லியில் உள்ள சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையம் (CSEP) என்ற கொள்கை ஆராய்ச்சி அமைப்பின் தலைவராகவும், மூத்த ஆய்வாளராகவும் உள்ளார். ஷாகுன் சூர்யாம், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையம் (CSEP) அமைப்பின் தலைவர் அலுவலகத்தில் ஆராய்ச்சி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
Original Link: Why India’s courts are slow: the need for court managers.