மேம்பட்ட குறைமின்கடத்திகளைத் தயாரிக்கத் தேவையான, அதி-புற ஊதாக் (extreme ultraviolet (EUV)) அச்சுக்கலை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் உலகின் ஒரே நிறுவனம் ASML ஆகும்.
பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததற்குக் காரணம், அது வெறும் ராஜதந்திரரீதியான அடையாளமாக இருந்தது மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்நுட்ப இலக்குகளுக்கும் குறைமின்கடத்திச் சூழலமைப்பில் டச்சு ஆதிக்கத்திற்கும் இடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்புமே ஆகும். குறைக்கடத்திகள், பொருளாதாரப் போட்டித்திறன், இராணுவத் திறன், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் இறையாண்மை ஆகியவற்றை வடிவமைக்கும் புதிய புவிசார் அரசியல் அதிகார மையமாக மாறியுள்ள ஒரு காலகட்டத்தில் இந்தப் பயணம் அமைந்தது.
உருவாகிவரும் இந்தக் கூட்டாண்மையில், உலகளாவிய சிப் சூழலமைப்பில் ஏறக்குறைய நிலை வகிக்கும் டச்சுத் தொழில்நுட்ப நிறுவனமாக ASML திகழ்கிறது. அதிநவீன குறைக்கடத்திகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும், மிகவும் நுட்பமான அமைப்புகளான 'அதி-புற ஊதாக் கதிர் அச்சுக்கலை இயந்திரங்களை' (lithography machines) உற்பத்தி செய்யும் உலகின் ஒரே நிறுவனம் ASML ஆகும். அதன் இயந்திரங்கள் இல்லையேல், அதிநவீன சிப்களின் உற்பத்தி என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகிவிடும். இது, ஒப்பீட்டளவில் ஒரு சாதாரண ஐரோப்பிய சக்தியாகத் திகழ்ந்த நெதர்லாந்தை, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உலகளாவிய தொழில்நுட்பப் போட்டியில் ஒரு முக்கிய நாடாக உருமாற்றியுள்ளது.
இந்தியா இந்த ராஜதந்திரத்தைப் புரிந்துகொண்டுள்ளது. 'மேக் இன் இந்தியா', 'டிஜிட்டல் இந்தியா' மற்றும் 'இந்தியா குறைமின்கடத்தி திட்டம்' போன்ற முன்முயற்சிகளின்கீழ், நாட்டின் பரந்த தொழில்நுட்பத் தன்னிறைவுக்கான வளர்ச்சிக்கு குறைக்கடத்திகள் முக்கியமானவை என்பதை இந்தியா அடையாளம் கண்டுள்ளது. உற்பத்தி ஆலைகள், பொதிப்படுத்தும் வசதிகள், சிப் வடிவமைப்பு மையங்கள் மற்றும் குறைமின்கடத்தி ஆராய்ச்சி உள்கட்டமைப்பு உள்ளிட்ட ஒரு உள்நாட்டு குறைமின்கடத்தி சூழலமைப்பை உருவாக்குவதற்காக, இந்தியா பில்லியன் கணக்கான டாலர்களை மானியங்களாகவும் சலுகைகளாகவும் ஒதுக்கியுள்ளது. உதாரணமாக, குஜராத்தின் தோலேராவில் முன்மொழியப்பட்டுள்ள, $11 பில்லியன் முதலீட்டில் உருவாக்கபடவுள்ள டாடா குறைமின்கடத்தி உற்பத்தி ஆலை, உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியின் மேம்பட்ட உற்பத்தித் துறையில் நுழைவதற்கான இந்தியாவின் இதுவரை இல்லாத மிகவும் முக்கியமான முயற்சியாக இருந்து வருகிறது.
அமெரிக்க-சீன தொழில்நுட்பப் போட்டி, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் பெருந்தொற்றின் போது ஏற்பட்ட விநியோகச் சங்கிலிப் பாதிப்புகள் போன்றவற்றின் காரணமாக, உலகளாவிய குறைமின்கடத்தித் தொழில் ஒரு ஆழமான மறுசீரமைப்பு பணியை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக, ASML உள்ளிட்ட டச்சு நிறுவனங்கள் தற்போது சீனாவுக்கான ஏற்றுமதியில் அதிகரித்து வரும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றன. இதன் விளைவாக, பரந்த "சீனா மற்றும் மற்ற நாடுகள்” (China-plus-one) என்ற கட்டமைப்பிற்குள், ஜனநாயக, அரசியல்ரீதியாக நிலையான மற்றும் ராஜதந்திரரீதியாக இணைந்த ஒரு மாற்று உற்பத்தி மையமாக இந்தியா இருக்கிறது. டச்சு குறைமின்கடத்தி நிறுவனங்கள் சீனாவிற்கு வெளியே பல்வகையான வாய்ப்புகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், அதேநேரத்தில் இந்திய அதிகாரிகள், இந்தியாவை ஒரு நீண்டகால உற்பத்தி மற்றும் புத்தாக்கத் தளமாகக் (innovation base) கருதுமாறு நெதர்லாந்தை ஊக்குவிப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தற்போது முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வெல்ட்ஹோவனில் உள்ள ASML தலைமையகத்திற்கு வருகை தந்தார். அங்கு, லித்தோகிராபி தொழில்நுட்பங்கள் (lithography technologies) மற்றும் இந்தியாவின் குறைக்கடத்தி இலக்குகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. பிரதமர் மோடியின் பயணத்தின் போது, தோலேராவில் அமையவிருக்கும் தனது 300 மிமீ (12-அங்குல) குறைக்கடத்தி உற்பத்தி ஆலையை அமைப்பதற்கும், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில், Tata Electronics நிறுவனம் ASML உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது இந்தியாவின் குறைமின்கடத்தி உற்பத்தி இலக்குகளில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்தக் கூட்டாண்மையின் முக்கியத்துவம் வன்பொருள் மற்றும் உற்பத்திக்கு அப்பாற்பட்டது. ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள், ஒளியியல் தொகுப்புகள், துல்லியப் பொறியியல் நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட வடிவமைப்புத் திறன்களை உள்ளடக்கிய குறைக்கடத்திப் புத்தாக்கத்தின் ஒரு முழுமையான சூழலமைப்பை நெதர்லாந்து இந்தியாவிற்கு வழங்குகிறது. இது போன்ற ஒத்துழைப்பு, இந்தியா குறைந்த விலை ஒருங்கிணைப்புத் தளமாக மாறும் தவறைத் தவிர்க்க உதவும். மாறாக, சிப் வடிவமைப்பு, குறைமின்கடத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மேம்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைந்த உற்பத்தி அமைப்புகள் ஆகியவற்றை நோக்கி மதிப்புச் சங்கிலியில் முன்னேறுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, பிரதமர் மோடியின் இந்தப் பயணம், வர்த்தகம் மற்றும் அரசியலை மையமாகக் கொண்ட பாரம்பரிய ராஜதந்திரத்திலிருந்து, “தொழில்நுட்ப ராஜதந்திரம்” (technology diplomacy) என்று அழைக்கப்படக்கூடிய ஒன்றை நோக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கையின் வளர்ச்சியை வெளிக் காட்டுகிறது.
எச்சரிக்கையாக இருப்பதற்கு காரணங்கள் உள்ளன. குறைமின்கடத்தி உற்பத்தி என்பது உலகின் மிகவும் மூலதனம் தேவைப்படும் மற்றும் தொழில்நுட்பரீதியாக சிக்கலான தொழில்களில் ஒன்றாகும். மானியங்கள் மற்றும் அரசியல் ஆதரவு இருந்தபோதிலும், உள்கட்டமைப்பு இடைவெளிகள், மின்சார நம்பகத்தன்மை சிக்கல்கள், உயர் சிறப்பு வாய்ந்த உற்பத்தித் திறமையாளர்களின் பற்றாக்குறை மற்றும் இறக்குமதி செய்யப்படும் குறைக்கடத்தி தரப் பொருட்களைச் சார்ந்திருத்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சவால்களை இந்தியா இன்னும் எதிர்கொள்கிறது. மேலும், மேம்பட்ட தொழில்நுட்பங்களைச் சுற்றியுள்ள ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அரசியல், ஆழமான தொழில்நுட்பப் பரிமாற்றங்களைச் சிக்கலாக்கக்கூடும். குறைக்கடத்திக் கட்டுப்பாடுகள் தொடர்பான அமெரிக்காவின் ராஜதந்திர விருப்பங்களுடன் நெதர்லாந்து நெருக்கமாக இருந்து வருகிறது.
இருப்பினும், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவை ஆழமாக உள்ள இந்தக் காலகட்டத்தில், இந்தியாவும் நெதர்லாந்தும் ஒன்றைஒன்று சார்ந்த இருக்கும் நாடுகளாக கருதுகின்றன. பிரதமர் மோடியின் பயணம், மேம்பட்ட தொழில்நுட்பங்களின் முதன்மை நுகர்வோராக இருப்பதிலிருந்து, உலகளாவிய குறைமின்கடத்திச் சூழலமைப்பை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கேற்பாளராக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தை வேகப்படுத்தக்கூடும்.
கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர், ஐரோப்பிய ஆய்வுகள் மையம், சர்வதேச ஆய்வுகள் பள்ளி, ஜே.என்.யு.
Original Link: The semiconductor push behind PM Modi’s Netherlands visit.