ஆன்லைன் கேமிங் மீதான பின்னோக்கிய வரிவிதிப்பு (Retrospective) சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் அரசியலமைப்புச் சட்ட செல்லுபடித்தன்மையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இருப்பினும், பின்னோக்கிய வரிவிதிப்பு (Retrospective Taxation) என்றால் என்ன? இந்தியாவில் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் ஒழுங்குமுறை கட்டமைப்பு எது? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.
தற்போதைய செய்தி?
மே 27-ஆம் தேதியன்று, இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் மீது அரசு பிறப்பித்த, பின்னோக்கிய வரிவிதிப்பு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை (Goods and Services Tax (GST)) விதிக்கும் நடவடிக்கையின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பானது, விளையாட்டு நிறுவனங்கள், கற்பனை விளையாட்டுத் தளங்கள் மற்றும் சூதாட்ட விளையாட்டு மீது நிலுவையில் உள்ள 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வரி கோரிக்கைகளை மீண்டும் வெளிக் கொண்டுவருகிறது. மேலும், 2025-ஆம் ஆண்டில் அரசு விதித்த தடையின் காரணமாக ஏற்கனவே கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இணையவழி விளையாட்டுத் துறைக்கு இது இறுதி முடிவாக அமையக்கூடும்.
முக்கிய அம்சங்கள்:
1. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு மற்றும் அதிகாரிகளால் வழங்கப்பட்ட முன்தேதியிட்ட வரி அறிவிப்புகளை எதிர்த்து பல்வேறு சூதாட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்தது.
2. சரக்கு மற்றும் சேவை வரி குழுவால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு, இணையவழி விளையாட்கள் மீதான 28% சரக்கு மற்றும் சேவை வரி , 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் மட்டுமே வருங்கால அடிப்படையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற இணையவழி விளையாட்டு நிறுவனங்களின் வாதத்தை தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது.
3. இருப்பினும், உச்சநீதிமன்றம் அரசாங்கத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, 2023-ஆம் ஆண்டின் சரக்கு மற்றும் சேவை வரியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதியது. இதன் மூலம், அக்டோபர் 1, 2023-க்கு முந்தைய காலங்களுக்கும் இந்தத் திருத்தங்களை பின்னோக்கிய வரிவிதிப்பதன் மூலம் பயன்படுத்திக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
பின்னோக்கிய வரிவிதிப்பு (Retrospective taxation) என்றால் என்ன?
1. பின்னோக்கிய வரிவிதிப்பு என்பது, புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு நடைபெற்ற செயல்பாடுகளைப் பாதிக்கும் வகையில் வரிச் சட்டங்களை மாற்றுவதாகும். எளிமையாக, பின்னோக்கிய வரிவிதிப்பு ஒரு நாடு, சில பொருட்கள், சரக்குகள் அல்லது சேவைகள் மற்றும் ஒப்பந்தங்களுக்கு வரி விதிப்பது குறித்த ஒரு விதியை இயற்றவும், சட்டம் நிறைவேற்றப்பட்ட தேதிக்கு முந்தைய காலத்திலிருந்து நிறுவனங்களிடம் கட்டணம் வசூலிக்கவும் அனுமதிக்கிறது.
2. நிறுவனங்கள் கடந்தகாலங்களில் வரி சட்டங்களில் உள்ள இடைவெளிகளை (loopholes) பயன்படுத்தி தேவையற்ற வரிச்சலுகைகளைப் பெற்றிருக்கின்றன. அது போன்ற வரிவிதிப்பு கொள்கைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் முரண்பாடுகளைச் சரிசெய்வதற்காக நாடுகள் இந்த வழிமுறையைப் பயன்படுத்துகின்றன.
2025-ஆம் ஆண்டு இணையவழி விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம், என்றால் என்ன மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் யாவை?
பணமோசடி மற்றும் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்களுக்கு டிஜிட்டல் பணப்பைகள் மற்றும் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட தேசியப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளைக் காரணம் சுட்டிக்காட்டி, இந்தியாவில் செயல்படும் இணையவழி விளையாட்டு நிறுவனங்களுக்குக் கடந்த ஆண்டு அரசாங்கம் கடுமையான தடைவிதித்தது. இதன் விளைவாக, இந்தியாவின் இணையவழி விளையாட்டுத்துறைக்கு ஒரு விரிவான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக, 2025-ஆம் ஆண்டு இணையவழி விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
முக்கிய அம்சங்கள்
1. இணைய வழியில் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளுக்கு தடை: இந்தச் சட்டம், Dream11, Mobile Premier League, WinZO போன்ற செயலிகள் உட்பட, அனைத்து வகையான இணைய வழியில் பணம் வைத்து விளையாடும் (Real Money) விளையாட்டுகளையும் தடை செய்கிறது. மேலும், இணைய வழியில் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களும் தடைசெய்யப்படுகின்றன. அதனுடன், எந்த ஒரு நபரும் இணைய வழியில் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை அல்லது அவற்றுடன் தொடர்புடைய சேவைகளை வழங்குதல், உதவுதல், தூண்டுதல், ஊக்குவித்தல், உடந்தையாகச் செயல்படுதல் அல்லது வேறு எந்த வகையிலும் ஈடுபடுதல் கூடாது என்று இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது.
இணையவழிப் பண விளையாட்டுகளால், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய குழுக்களிடையே ஏற்படும் “கடுமையான சமூக, நிதி, உளவியல் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளே” இந்தத் தடைக்கான முக்கிய காரணமாகும்.
இந்த விளையாட்டுகள் மனிதர்களை கவர்ந்து ஈர்க்கும் வகையிலான வடிவமைப்பு அம்சங்கள் (manipulative design features), அடிமைப்படுத்தும் அல்கோரிதம்கள் (addictive algorithms), போட்கள் மற்றும் வெளிப்படுத்தப்படாத முகவர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. இதனால் நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பயனர் பாதுகாப்பு பாதிக்கப்படுகின்றன. மேலும், இவை கட்டுப்பாடற்ற மற்றும் கட்டாயமான விளையாட்டுப் பழக்கத்தை ஊக்குவித்து, இறுதியில் நிதி சீர்குலைவிற்கு வழிவகுப்பதாக சட்டம் கூறுகிறது.
2. சட்டத்தை மீறுவதற்கான தண்டனைகள்: இணைய வழியில் பணம் வைத்து விளையாடும் (Online Money Gaming) சேவையை வழங்கினால், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம். மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.2 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
சமூக ஊடகத்தில் செல்வாக்குள்ளவர்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட எந்த ஒரு நபரும், இதுபோன்ற விளையாட்டுகளை விளம்பரப்படுத்தினாலோ அல்லது ஊக்குவித்தாலோ, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம்.
அடிக்கடி குற்றம் செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள், இணைய வழியில் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளுக்கு சேவைகளுக்கான எந்தவொரு பரிவர்த்தனையையும் எளிதாக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
3. மின்னணு விளையாட்டுப் போட்டிகளை (Electronic Sports) ஒரு விளையாட்டாக அங்கீகரித்தல்: மின்னணு விளையாட்டுப் போட்டிகள் என்பது பல்துறை விளையாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக விளையாடப்படும் இணையவழி விளையாட்டாக வரையறுக்கப்படுகிறது. இது தனிநபர்கள் அல்லது அணிகளுக்கு இடையிலான ஒழுங்கமைக்கப்பட்ட போட்டி நிகழ்வுகளை உள்ளடக்கியதுடன், தேசிய விளையாட்டு நிர்வாகச் (National Sports Governance Act) சட்டத்தின் கீழ் முறையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
உடல்திறன், மனத்திறன், வியூகச் சிந்தனை போன்ற காரணிகளின் அடிப்படையில் முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், பங்கேற்பாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பந்தயம், சூதாட்டம் அல்லது வேறு எந்த வகையான பணயம் வைப்பதும், அதன்மூலம் வெற்றி தொகை பெறுவதும் இடம்பெறாது. மேலும், இதர தொடர்புடைய செயல்பாடுகளும் இதில் அடங்காது.
2026-ஆம் ஆண்டு சர்வதேச மின்னணு விளையாட்டு கோப்பை (Esports Nations Cup (ENC))
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு முக்கிய சர்வதேச நாடுகள் அடிப்படையிலான போட்டியான தேசிய மின்னணு விளையாட்டு போட்டியின் முதல் பதிப்பு, சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் 2026 நவம்பர் 2 முதல் 29-ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் அணிகள் போட்டியிடும் வழக்கமான போட்டிகளைப் போல இல்லாமல், தேசிய மின்னணு விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தங்கள் சொந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்கிறது. சர்வதேச மின்னணு விளையாட்டு துறைக்கு ஒரு கட்டமைப்பை வழங்குவதற்காகவே ENC உருவாக்கப்பட்டுள்ளது.
4. ஒரு மைய அதிகார அமைப்பை உருவாக்குதல்: மின்னணு விளையாட்டு போட்டிகளை ஊக்குவிப்பதற்கும், அதே நேரத்தில் சட்டத்திதின் படி முழுமையாக செயல்பாடுகளை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கிய அதிகார அமைப்பை உருவாக்க இந்தச் சட்டம் வழிவகை செய்தது. இந்த மையம், "இணையவழி சமூக விளையாட்டுகளை" அந்த அதிகார அமைப்பில் அங்கீகரித்து, வகைப்படுத்தி, பதிவு செய்வதுடன், பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக இது போன்ற விளையாட்டுகளின் வளர்ச்சிக்கும் அவை கிடைப்பதையும் எளிதாக்கும்.
ஓர் இணைய விளையாட்டு, 'இணையயில் பணம் வைத்து விளையாடும் விளையாட்டு' என்ற வரையறைக்குள் இடம் பெற்று இருக்குமா என்பதை அந்த அதிகார மையம் தீர்மானிக்கும்; இதன் மூலம், அந்த விளையாட்டைத் தடைசெய்ய வேண்டுமா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்யும்.
இந்திய இணையவழி விளையாட்டு ஆணையம்
1. இந்தியாவில் இணையவழி விளையாட்டுத் துறையை ஒழுங்குபடுத்துவதில் ஒரு முக்கியப் படியாக, இணையவழி விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் விதிகள், மே 1, 2026 அன்று நடைமுறைக்கு வந்தது. இது, இத்துறையின் டிஜிட்டல்-சார்ந்த ஒழுங்குமுறை அமைப்பான இந்திய இணையவழி விளையாட்டு ஆணையத்தை (Online Gaming Authority of India (OGAI)) உருவாக்குவாதற்கு வழிவகுத்தது.
2. இந்திய இணையவழி விளையாட்டு ஆணையம் (Online Gaming Authority of India (OGAI)) என்பது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Electronics and Information Technology (MietY)) கீழ் இயங்கும் ஒரு ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை அமைப்பாகும். இந்த ஆணையம் இணைய விளையாட்டுகளை வகைப்படுத்தும், இணக்கத்தைக் கண்காணிக்கும், பயனர் குறைகளைக் கையாளும், மேலும் நிதி நிறுவனங்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும்.
3. இந்திய இணையவழி விளையாட்டு ஆணையம் (Online Gaming Authority of India (OGAI)) என்பது ஒரு விளையாட்டு எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தீர்மானிக்கும்.
இணையவழி விளையாட்டு என்பது பயனர்கள் கட்டணம் செலுத்தி அல்லது பணத்தைப் பணயமாக வைத்து விளையாடும் விளையாட்டுகள் ஆகும்.
இணையவழி ஆன்லைன் சமூக விளையாட்டு என்பது பணத்தைப் பணயமாக வைக்காமல் பொழுதுபோக்கிற்காக விளையாடப்படும் விளையாட்டுகள் ஆகும்.
மின்னணு விளையாட்டு போட்டிகள் என்பது உடல் திறன், விரைவான செயல்பாடு மற்றும் உத்தி சார்ந்த சிந்தனை போன்ற திறன்களை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட போட்டி விளையாட்டுகள் ஆகும்.
இந்திய இணையவழி விளையாட்டு ஆணையம் இவ்வகைகளில் எதற்குள் ஒரு விளையாட்டு வருகிறது என்பதை நிர்ணயிக்கும்.
4. இணையவழி விளையாட்டு ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கவும், புகார்களை விசாரிக்கவும், அபராதங்களை விதிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளது. ஆணையம் முழுமையாக அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் ஆறு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதன் தலைவராக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் இருப்பார். மற்ற ஐந்து உறுப்பினர்களில் உள்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை ஆகியவற்றின் இணைச் செயலாளர்கள் இடம்பெறுவர்.
Original article : What is Retrospective Taxation? Explained through SC’s Online Gaming GST Verdict. -Roshni Yadav