‘கேரளா’, இனி ‘கேரளம்’ : ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான வழிமுறை என்ன?

 கேரளா மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, ஜூன் மாதம் 24-ஆம் தேதி, 2024-ஆம் ஆண்டு, மாநிலத்தின் பெயரை மாற்றக்கோரி கேரள சட்டமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியிருந்தது.


இந்தியாவில் ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான செயல்முறை என்ன?


அரசியலமைப்பின் பிரிவு 3


இந்திய அரசியலமைப்பின் 3-வது பிரிவின்கீழ், நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் எந்தவொரு மாநிலத்தின் பெயரையும் மாற்ற முடியும் என்கின்றனர். இருப்பினும், அத்தகைய மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை முன்மொழியப்பட்ட மாற்றம் ஒரு மாநிலத்தின் பரப்பு, எல்லைகள் அல்லது பெயரைப் பாதிக்கும் பட்சத்தில், குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை முதலில் சம்பந்தப்பட்ட மாநிலச் சட்டமன்றத்திற்கு அனுப்பி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அதன் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்றும் நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.


இதன் பொருள் என்னவென்றால், ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு அந்த மாநிலச் சட்டமன்றம் முதலில் ஒரு தீர்மானத்தைத் தயாரித்து நிறைவேற்ற வேண்டும். பின்னர் அந்தத் தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) அனுப்பி வைக்கப்படும், அங்கிருந்து அது குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும் குடியரசுத் தலைவர் முறைப்படி பரிந்துரை செய்த பிறகுதான், இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. 


இந்த மசோதாவை சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்திற்கு அனுப்பி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களின் கருத்துகளைப் பெற வேண்டும். இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், மாநிலத்தின் கருத்து இந்திய நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தாது என்கின்றனர். அதாவது, மாநில அரசு ஒருவேளை அந்த மசோதாவை எதிர்த்தாலும்கூட, நாடாளுமன்றம் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். 


பின்னர், இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை அல்லது மாநிலங்களவை ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு அவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும்பான்மை (Simple Majority) மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது, அந்த அவையில் வருகை தந்து வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 


நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டபிறகு, அது இறுதி ஒப்புதலுக்காகக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அதில் கையொப்பமிட்டதும் அது சட்டமாக மாறும், அதனைத் தொடர்ந்து இந்திய அரசியலமைப்பின் முதலாவது மற்றும் நான்காவது அட்டவணைகளில் மாநிலத்தின் புதிய பெயர் முறைப்படி மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர், 


மாநிலங்களின் பெயர்களில் முக்கியமான மாற்றங்கள்


இந்தியாவில் மாநிலங்களின் பெயர்களை மாற்றுவதற்கு நீண்டகால வரலாறு உண்டு. அதன்படி, 2011-ஆம் ஆண்டில் 'ஒரிசா (பெயர் மாற்றம்) சட்டத்தின்' மூலம் ஒரிசா மாநிலத்தின் பெயர் ஒடிசா என மாற்றப்பட்டது, அதேபோல் அந்த மாநிலத்தின் மொழியும் ஒரியா என்பதிலிருந்து ஒடியா என மாற்றப்பட்டது. முன்னதாக 2007-ஆம் ஆண்டில், வட மாநிலமான உத்தராஞ்சல் என்பதன் பெயர் உத்தரகாண்ட் என மாற்றப்பட்டது.


இந்தியா இதே செயல்முறையில் ‘பாரதம்’ என்று மாற முடியுமா?


நாட்டின் பெயரை மாற்றுவது என்பது ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதைவிட மிகவும் சிக்கலான செயல்முறையாகும். இந்திய அரசியலமைப்பின் 3-வது பிரிவு (Article 3) மாநிலங்களின் பெயரை மாற்றுவதை மட்டுமே கையாள்வதால், இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டுமானால், 368-வது பிரிவின்கீழ் ஒரு முறையான அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர். 


இந்திய அரசியலமைப்பின் 1-வது சட்டப்பிரிவு, நாட்டை "இந்தியா என்ற பாரதம், மாநிலங்களின் ஒன்றியம்..." என்று வரையறுக்கிறது; இந்த விதியில் மாற்றம் செய்ய வேண்டுமானால், அந்த சட்டப்பிரிவிலும் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்  என்றும் கூறப்படுகிறது. 


நாட்டின் பெயரை மாற்றியமைக்க வேண்டுமெனில், அந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மசோதாவானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் விளக்கமளிக்கின்றனர். 


இதற்கு ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோரின் ஆதரவு தேவைப்படுகிறது.


2016 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'பாரதம்' மற்றும் 'இந்தியா' ஆகிய இரண்டு பெயர்களும் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளதால், மக்கள் இந்த இரண்டு பெயர்களையும் மாற்றி மாற்றியோ அல்லது விருப்பப்படியோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


Original tittle : ‘Kerala’ to ‘Keralam’: What is the process to change the name of a State?

Share: