6-வது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மூலம் ஏற்பட்டுள்ள சுகாதார மேம்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இருப்பினும், தீர்க்கப்படாத சுகாதாரத் தேவைகளும் உள்ளன.
வெற்றியும் தோல்வியும் நேரத்தில் வந்தால், அந்த வெற்றிகளைக் கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே சமயம், நிலைமையை ஆராய்ந்து, குறைபாடுகளை மதிப்பீடு செய்து, அவற்றை சரிசெய்யும் வகையில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம். சமீபத்தில் வெளியிடப்பட்ட 6-வது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தரவுகள் இதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. 2023-24-ஆம் ஆண்டிற்கான இந்தத்தரவுகள், இந்தியா அடைந்துள்ள சில முக்கிய முன்னேற்றங்களை வெளிக் காட்டுவதோடு, உரியவகையில் கவனிக்கப்படாமல் விட்டால் எதிர்காலத்தில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய சில பலவீனங்களையும் சுட்டிக்காட்டுகின்றன. மிக முக்கியமான முன்னேற்றங்கள் குழந்தைகள் சுகாதாரத் துறையில் காணப்பட்டன: குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு (Stunting) 17% குறைந்துள்ளது. கடுமையான உடல் மெலிவு (severe wasting) 32% குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் விகிதம் 90%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும், 12-23 மாத வயதுடைய குழந்தைகளுக்கான முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு (Full Immunisation Coverage) 87%-க்கும் மேல் உயர்ந்துள்ளது. கூடுதலாக, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) 2.0 என்ற அளவில் நிலைபெற்றுள்ளதாகவும், இது 2.1 என்ற 'மாற்று நிலைக்கு' (replacement level) கீழே உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது போன்ற மிகவும் முக்கியமான துறைகளில், இறுதியாக ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது நம்பிக்கை அளிக்கும் ஒரு அறிகுறியாகும். பொதுத்துறையில் சேவைகளுக்கான அணுகல் அல்லது தரத்தின்மீது எந்தவிதமான சமரசத்தையும் செய்துகொள்ளாமல், அதேவேளையில் சேவை வழங்கலில் எந்தவிதமான தொய்வும் ஏற்படாமல், தற்போது அடைந்துள்ள இந்த முன்னேற்றங்களை வலுப்படுத்த வேண்டும். ஆனால், சுகாதார நிர்வாகிகள் இந்த நிலைமையின் மற்றொரு பக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 6-வது தேசிய குடும்ப நல ஆய்வின்படி, இந்தியா தற்போது “இரட்டை பொது சுகாதாரச் சுமை” (Dual Public Health Burden) என்ற நிலையை எதிர்கொள்கிறது. ஒருபுறம், உடல் பருமன் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்களிடம் உடல் பருமன் விகிதம் 22.9%-லிருந்து 27.3%-ஆகவும், பெண்களிடம் 24%-லிருந்து 30.7-ஆகவும் உயர்ந்துள்ளது. மறுபுறம், ஊட்டச்சத்து குறைபாடு (Malnutrition) இன்னும் ஒரு பிரச்சினையாகவே தொடர்கிறது. இதனுடன், வாழ்க்கைமுறை நோய்கள் அதிகரிப்பதும் கவலைக்குரியதாக உள்ளது. மேலும், 6-வது தேசிய குடும்ப நல ஆய்வு, ஆறு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்கு வழங்கப்படும் முழுமையான தாய்ப்பாலூட்டல் (Breastfeeding) விகிதம் 5-வது தேசிய குடும்ப நல ஆய்வில் இருந்த 63.7%-லிருந்து 55.8%-ஆகக் குறைந்திருப்பதை காட்டுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கவும், ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யவும் தாய்ப்பால் மிகவும் முக்கியமானது.
உலகின் மிகப் பெரிய ஒரே காலகட்ட ஆய்வு (cross-sectional) குடும்பக் கணக்கெடுப்புகளில் ஒன்றான தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS), பொதுக் கொள்கைகளை வடிவமைப்பதற்கும், ஆதாரங்களின் அடிப்படையிலான நிர்வாக முறையை (evidence-based governance) முன்னெடுக்கவும் முக்கியமான கருவியாகக் கருதப்படுகிறது. மேலும், இது வளர்ச்சி குறியீடுகளை கண்காணிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய குடும்ப நல ஆய்வு மூலம் உருவாக்கப்படும் தரவுகள் மிகவும் முக்கியமானவை. இதே காலகட்டத்தில் இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட பிற ஆய்வுகளின் தரவுகளும் இதே போன்ற போக்குகளை வெளிப்படுத்துகின்றன. மாதிரி பதிவேட்டு அமைப்பு (Sample Registration System (SRS)) மற்றும் தேசிய சுகாதார கணக்குகள் ஆய்வு (National Health Accounts Survey) ஆகியவை, வாழ்க்கைமுறை நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் மீது போதிய கவனமும் நிதி ஒதுக்கீடும் இல்லாததை காட்டுகின்றன. இந்த நிலையை தொடர அனுமதிப்பதன் ஆபத்து, இந்தியா மக்கள் தொகை மாற்றத்தின் மூலம் வயதானோர் அதிகம் கொண்ட நாடாக மாறும் நிலை விரைவில் ஏற்பட்டடு விடும். தற்போது மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. இந்த கட்டத்தில் இன்னும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். தொற்றாத நோய்களுக்கு (Non-Communicable Diseases (NCDs)) விரிவான பரிசோதனைத் திட்டங்களை அமைத்தல், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியததுவம் குறித்து நாடு முழுவதும் நடத்தை மாற்றத் தகவல் பரப்புதலை வலுப்படுத்தல், மேலும் அதிக சர்க்கரை கொண்ட பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அதிக வரி விதித்தல் ஆகியவை தொற்றாத நோய்களின் சுமையை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும். மேலும், இந்த தொற்றாத நோய்கள் (NCDs) ஒருமுறை ஏற்பட்டுவிட்டால், அவற்றை திறம்பட கையாளுவதற்காக கிராமம், நகரம் மற்றும் மாநகரம் என அனைத்து மட்டங்களிலும் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும்.
Original article : Joy and pain: On the NFHS-6 data.