இந்தியா, ஓமன் நாடுகள் புதிய பொருளாதார வழித்தடத்தை ‘உயிர்ப்பூட்டுகின்றன’. — ராஜேஷ் அக்ரவால்

 விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (Comprehensive Economic Partnership Agreement (CEPA))) என்பது இருநாடுகளுக்கு இடையே இன்னும் பலமான, ஒன்றிணைந்த மற்றும் பரந்த அளவிலான பொருளாதாரக் கூட்டாண்மையை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துகிறது.


இந்தியாவிற்கும் ஓமானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றன. பழங்கால பாய்மரக் கப்பல்களின் (Dhows) வழியே உருவான இந்த இருதரப்புப் பகிர்வு வரலாறு, தலைமுறைகளைக் கடந்த கலாச்சாரப் பரிமாற்றங்கள் மூலம் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்திய-ஓமன் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) இந்த நாகரிகப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும். உலகளாவிய வர்த்தகமானது புவிசார் அரசியல் போட்டிகள், விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் மற்றும் வளர்ந்துவரும் பாதுகாப்புவாதம் (Protectionism) போன்ற சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்த ஒப்பந்தம் நம்பகமான கூட்டமைப்பு நாடுகளுடன் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதியைக் காட்டுகிறது. 2022-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தமானது (CEPA) வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதார ஈடுபாட்டை மிக உறுதியாக நிலைநிறுத்துகிறது.


இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் சீராக விரிவடைந்து, 2025-26-ஆம் நிதியாண்டில் 11.18 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. அதே சமயம் 2024-ஆம் ஆண்டீல் சேவைத் துறை வர்த்தகம் 863 மில்லியன் டாலராக இருந்தது. பொருளாதார உறவுகள் பாரம்பரியப் பொருட்களையும் தாண்டி, பொறியியல் பொருட்கள், மருந்துகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் எனப் பல துறைகளில் விரிவடைந்துள்ளன. இருப்பினும், இன்னும் பயன்படுத்தப்படாத பெரும் வாய்ப்புகள் உள்ளன. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வர்த்தகம், முதலீடு, நிபுணர்களின் எளிதான இடப்பெயர்வு மற்றும் ஒழுங்குமுறை ஒத்துழைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதன் மூலம், இந்த விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தமானது (CEPA) மிகவும் நெகிழ்வான, ஒருங்கிணைந்த மற்றும் பரந்த அளவிலான பொருளாதாரக் கூட்டமைப்புக்கான ஒரு முழுமையான கட்டமைப்பை உருவாக்குகிறது.


ஏற்றுமதி வளர்ச்சிக்கான ஒரு நுழைவாயில்


இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையிலான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (CEPA), ஓமனின் 98.08 சதவீத இறக்குமதி வரிப் பிரிவுகளில் இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு வரி இல்லாத சந்தை வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு முன்னால், ‘மிகவும் விரும்பப்படும் நாடு’ (Most Favoured Nation) என்ற விதிமுறையின்கீழ், இந்தியாவின் சுமார் 15 சதவீத ஏற்றுமதிப் பொருட்கள் மட்டுமே வரி இல்லாமல் ஓமனுக்குள் நுழைந்தன. மீதமுள்ள பொருட்களுக்கு 5 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது, இந்த விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின்கீழ் (CEPA) இந்தியாவின் தற்போதைய ஏற்றுமதி அளவுகளில் 99.38 சதவீதப் பொருட்கள் வரி இல்லாத நுழைவு வசதியைப் பெறுகின்றன.


இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இதனால் கிடைக்கும் லாபம் மிக அதிகம். ஓமனின் ‘Vision 2040’ திட்டத்தின்கீழ் உள்கட்டமைப்பு, தளவாடங்கள் மற்றும் தொழில்துறைப் பன்முகத்தன்மை ஆகியவற்றில் ஓமன் செய்யும் முதலீடுகள், இந்தியப் பொருட்களுக்கான தேவையை அதிகரிக்கும். 2024-25-ஆம் நிதியாண்டில் 875.83 மில்லியன் டாலர் (87.58 கோடி டாலர்) மதிப்பில் இருந்த பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி, 2030-ஆம் ஆண்டிற்குள் 1.3 பில்லியன் முதல் 1.6 பில்லியன் டாலர் (130 கோடி முதல் 160 கோடி டாலர்) வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு எவ்வித வரியும் இல்லாத 'வரியில்லா' (Zero-duty) அனுமதி கிடைப்பதால், அண்டை நாட்டுப் போட்டியாளர்களைவிட கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். இது திருப்பூர், சூரத், லூதியானா மற்றும் கோயம்புத்தூர் போன்ற அதிக தொழிலாளர்களைக் கொண்ட ஜவுளி உற்பத்தி மையங்களுக்குப் புத்துயிர் கொடுப்பதோடு, பெருமளவில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வாய்ப்புகள் மிகவும் விரிவானவை மற்றும் பலதரப்பட்டவை ஆகும். இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் ஓமனின் மருத்துவப் பொருட்கள் சந்தை, இந்திய நிறுவனங்களுக்கு ஒரு வலுவான வாய்ப்பை வழங்குகிறது. அங்கு வேகமான அரசு அனுமதிகள், தரச் சான்றிதழ்களுக்கான அங்கீகாரம் மற்றும் முக்கிய மருந்துப் பொருட்களுக்கு வரி இல்லாத அனுமதி ஆகியவை கிடைப்பதால், விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான செலவுகள் குறையும்; சந்தைக்குள் எளிதாக ஊடுருவவும் முடியும். இது தவிர, அரிசி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், நறுமணப் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் உள்ளிட்ட விவசாயம் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் சார்ந்த ஏற்றுமதிகளும் இதன் மூலம் பெரும் பயனடையும் என்கின்றனர்.


பொருளாதார சந்தைகளைத் திறத்தல்


இந்தியாவின் சமீபத்திய வர்த்தக ஒப்பந்தங்களைப் போலவே, இந்த விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தமும் (CEPA) சமநிலையான மற்றும் எச்சரிக்கையான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்தியா தனது சந்தைப் போட்டியை மேம்படுத்தவும், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஒரு அங்கமாக மாறவும் தனது சந்தைகளைத் திறந்துவிட்டாலும், அதேநேரத்தில் முக்கியமான மற்றும் பாதிப்படையக்கூடிய உள்நாட்டுத் துறைகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. பால் பொருட்கள் மற்றும் தானியங்கள் போன்ற முக்கியமான வேளாண் உற்பத்தி பொருட்களும், ரப்பர், ஜவுளி மற்றும் காலணிகள் போன்ற தொழில்துறைகளும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த அணுகுமுறையானது, வெளிநாட்டுச் சந்தைகளுக்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதோடு, உள்நாட்டுத் தொழில்களுக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிரான பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது.


ஓமன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் ஏறக்குறைய 95% பொருட்களை உள்ளடக்கிய, 77%-க்கும் அதிகமான இறக்குமதிப் பொருட்களுக்கான வரிவிதிப்பை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் ஓமனின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான மெத்தனால் (Methanol) மற்றும் நீர்மமற்ற அமோனியா (Anhydrous ammonia) போன்ற தொழில்முறை மூலப்பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் ஒரு சாதகமான போட்டிச் சூழல் உருவாகிறது. மேலும், பல்வேறு வகையான உலோகங்கள் மற்றும் உலோகக் கலவைகளை இந்தியச் சந்தைக்குள் முன்னுரிமையுடன் கொண்டு வருவதற்கான அனுமதியும் ஓமனுக்குக் கிடைக்கும். இது இருநாடுகளுமே குறைந்த உற்பத்திச் செலவின் மூலம் பயனடைய உதவும் என்கின்றனர்.


இந்தியா தனது உள்நாட்டு நலன்களைப் பாதுகாக்க விரும்பும் துறைகளில், ஓமனுக்கு விகிதாச்சார வரி ஒதுக்கீடு (Tariff Rate Quotas (TRQ)) மூலமாகச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முறையின்கீழ், பேரிச்சம்பழம், பளிங்குக்கல் (Marble) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்நிலை பெட்ரோகெமிக்கல் பொருட்கள் (Downstream petrochemicals) போன்றவற்றை, ஒரு குறிப்பிட்ட அளவு வரை குறைந்த வரி விகிதத்தில் ஓமனால் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியும். மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஏற்பாடு, சந்தையில் பொருட்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதோடு, நலிவடைந்த நிலையில் உள்ள உள்நாட்டுத் துறைகள் இந்த நெருக்கடி காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

               

வர்த்தகம், திறமை மற்றும் நம்பிக்கை


இந்திய-ஓமன் இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (CEPA), தகவல் தொழில்நுட்பம், தொழில்முறை சேவைகள் மற்றும் கட்டுமானத்துறை போன்ற இந்தியா வலுவாக இருக்கும் துறைகளில், இந்திய சேவை வழங்குநர்களுக்கு ஓமன் சந்தையில் நுழைவதற்கான உறுதியான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஒப்பந்தம் பல துறைகளில் 100% வரை அந்நிய நேரடி முதலீட்டை (Foreign Direct Investment (FDI)) அனுமதிப்பதால், இந்திய நிறுவனங்கள் ஓமனில் தங்களது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும்.


திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான ஒன்றாகும். நிறுவனங்களுக்குள்ளான பணியாளர் இடமாற்ற (Intra-Corporate Transferee (ICT)) வரம்பை 50%-ஆக உயர்த்துவதன் மூலம், இந்திய நிறுவனங்கள் தங்களது சிறப்புப் பணியாளர்களை எளிதாக ஓமனுக்கு அனுப்பி, அங்குள்ள சந்தையில் தங்களது நிலையை வலுப்படுத்திக்கொள்ள முடியும். மேலும், ஓமன் நாடு தனது வரலாற்றிலேயே முதன்முறையாக எந்தவொரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திலும் (Free Trade Agreement (FTA)) இல்லாதவாறு, தனிப்பட்ட முறையில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு ஒரு தனித்துவமான இயக்கக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. உலக அளவில் மக்கள் தொகை மாற்றங்களால் பல நாடுகளில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் இந்தச் சூழலிலும், உற்பத்தித் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் (Robotics) தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், இந்த ஒப்பந்த விதிமுறை இந்திய நிபுணர்களுக்கு உலக அளவில் ஒரு முக்கியமான முன்மாதிரியாக அமைகிறது.


விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் (CEPA) ஒரு சிறப்பு மருத்துவ இணைப்புச் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பொதுவான முதன்மை மருத்துவக் கட்டமைப்பில் ஒருங்கிணைக்க வழிவகை செய்கிறது. அதோடு, மருத்துவ வல்லுநர்களுக்கான உரிமம் பெறும் நடைமுறைகளையும் எளிதாக்குகிறது. மேலும், இந்த ஒப்பந்தமானது ஒரு சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் (Social Security Agreement (SSA)) குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதைக் கட்டாயமாக்குகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருநாடுகளிலும் சமூக பாதுகாப்புக்கான பங்களிப்புத் தொகையை (வரி போன்ற கட்டணம்) இரட்டை முறையாகச் செலுத்துவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் என்கின்றனர்.


பிராந்திய மதிப்புச் சங்கிலிகள்


இந்தியா – ஓமன் நாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (CEPA) என்பது வெறும் வரிகளை குறைப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், இருநாடுகளின் விதிமுறைகளை ஒன்றிணைத்தல், பொதுவான தரநிலைகளை உருவாக்குதல் மற்றும் தரநிர்ணயச் சோதனை முறைகள் மூலமாக வர்த்தகத்திற்கு இடையூறாக இருக்கும் வரி அல்லாத தடைகளையும் தகர்க்கிறது. இது இந்தியாவின் நவீன வர்த்தக ஒப்பந்தங்களில் காணப்படும் உயர்தர அணுகுமுறையைப் பிரதிபலிப்பதுடன், உள்நாட்டு வர்த்தகத்தை முடக்கும் பல தடைகளுக்கும் தீர்வாக அமைகிறது.


மிகவும் நெருக்கமான ஒரு பிராந்திய வர்த்தகக் கட்டமைப்பிற்கான வலுவான அடித்தளத்தை இந்தியா அமைத்து வருகிறது. இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்த (FTA) கூட்டணி நாடுகளெல்லாம் ஒன்றிணைந்தால், அவை உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏறக்குறைய 67%-யும், உலகளாவிய பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதியில் சுமார் 75%-யும் கொண்டுள்ளன. வளைகுடா நாடுகள், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் பரந்த இந்தியப் பெருங்கடல் பகுதிகளை இணைக்கும் மிக முக்கியப் புவியியல் அமைப்பில் ஓமன் நாடு அமைந்துள்ளது. ஓமனின் 'சோஹர்', 'துக்ம்' மற்றும் 'சலாலா' போன்ற தளவாட மற்றும் தொழிற்துறை மையங்கள், இந்தியாவின் உற்பத்தித் திறனையும் திறமையான மனிதவளத்தையும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் சந்தைகளுடன் இணைக்கும் மதிப்புச் சங்கிலியாக மாற முடியும். இது பிராந்திய இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு வலுவான கூட்டமைப்பை உருவாக்குகிறது.


வணிகங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யவும், தொழிலாளர்கள் புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளவும், நாடுகள் நீண்டகாலப் பொருளாதாரப் பங்களிப்பை உருவாக்கவும் வழிவகுக்கும்போதுதான் வர்த்தக ஒப்பந்தங்கள் வெற்றியடைகின்றன. இந்த விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (CEPA), இருநாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருக்கும் உறவை,           21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ற ஒரு ராஜதந்திரரீதியான பொருளாதாரக் கூட்டணியாக மாற்றி, அதைச் சாத்தியப்படுத்துகிறது.


ராஜேஷ் அகர்வால், மத்திய வர்த்தகச் செயலாளர் ஆவார்.


Original article : India, Oman ‘energise’ new economic corridor. -Rajesh Agrawal

Share: