கோடைக்கால காற்று மாசுபாடு, குளிர்கால மாசுபாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? வெப்பமான காலநிலையில் ஓசோனின் அளவு ஏன் அதிகரிக்கிறது? இந்திய நகரங்களில் PM10 துகள்களின் அளவு திடீரென அதிகரிக்கக் காரணம் என்ன? புழுதிப் புயல்கள் காற்றின் தரத்தை எவ்வாறு பாதிக்கின்றன? மனிதச் நடவடிக்கைகள் கோடைக்கால காற்று மாசுபாட்டை எவ்வாறு தீவிரப்படுத்துகின்றன? கோடைக்கால காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராட நகரங்கள் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?
தற்போதைய செய்தி:
மார்ச் மாதத்தில், தேசிய தலைநகரான டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (Capital Region and Adjoining Areas (CAQM)), தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (Graded Response Action Plan (GRAP)) கீழ் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் ரத்து செய்தது. இது டெல்லியில் நிலவிய குளிர்கால காற்று மாசுபாடு முடிவுக்கு வந்ததை அனைவருக்கும் உணர்த்தியது.
ஒரு மாதம் கழித்து, வெப்பநிலை உயர்ந்ததால், கோடைக்கால காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் முதல் கட்டத்தை அது மீண்டும் அமல்படுத்தியது. வட இந்தியா வெப்ப அலைகளால் தத்தளித்துக் கொண்டிருந்த மே மாதத்தில், அது சிறிது காலத்திற்கு ரத்து செய்யப்பட்டு மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
கோடைக்காலத்தில் நகரங்களில் ஏன் மாசுபாடு ஏற்படுகிறது?
குறைவான வெப்பநிலை, குறைந்த காற்று வேகம், மற்றும் ஆற்றுப்படுகை போன்ற நிலப்பரப்பு ஆகியவை காற்றில் உள்ள மாசுகளை பூமிக்கு மிக அருகில் சிக்க வைப்பதால், டெல்லி மற்றும் இந்தோ-கங்கை சமவெளியும் குளிர்கால புகை மூட்டதிற்கு (smog) பெயர் பெற்றவை.
கோடைக்காலத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பது, அவ்வப்போது ஏற்படும் இடியுடன் கூடிய மழை மாசுபடுத்தும் துகள்களை வெளிக்கொண்டு வருவது, மேலும் வெப்பநிலை உயர்வால் மாசுபடுத்திகள் வளிமண்டலத்தின் மேல்பகுதியுடன் ஒன்றாக இணைவது போன்ற வானிலை நிகழவுகள் காணப்படுகின்றன. இது போன்ற சாதகமான வானிலைக் காரணிகள் இருந்தபோதிலும், ஏப்ரல் 1 முதல் மே 31, 2026 வரையிலான காலகட்டத்தில், டெல்லியில் 54 நாட்கள் தினசரி சராசரி PM10 அளவுகள், 24 மணி நேரத்திற்கான தேசிய சுற்றுப்புற காற்றுத் தரத் தரநிலையான (National Ambient Air Quality Standard (NAAQS)) 100 ug/m³ என்ற வரம்பை மீறியுள்ளன. அதே வேளையில், 40 நாட்களில், நகரில் உள்ள குறைந்தது ஒரு 'தொடர் சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு நிலையம்' (Continuous Ambient Air Quality Monitoring Station (CAAQMS)), 1 மணி நேர ஓசோன் தரநிலையான 180 ug/m³ என்ற வரம்பு தாண்டியுள்ளதாக பதிவு செய்துள்ளது.
பெரும்பாலான தலைப்புச் செய்திகளைப் போல் இல்லாமல், இது டெல்லிக்கானது மட்டுமல்ல. மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்ற பிற பெரிய நகரங்களிலும் இந்த கோடையில் இதே காலகட்டத்தில் மாசுபாடு அதிகரித்துள்ளது. PM10 மற்றும் ஓசோன் அளவுகள் பல்வேறு அளவுகளில் தேசிய தரநிலைகளைத் தாண்டியுள்ளன. வாகனப் புகை, சாலைத் தூசி, கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைப் புகை மற்றும் உள்ளூர் புயல்களால் ஏற்படும் தூசி போன்ற உள்ளூர் காரணிகளால் இந்த அதிகரிப்புகள் ஏற்பட்டன. உதாரணமாக, மும்பை கடந்த சில ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள், தூசி மற்றும் வாகனப் போக்குவரத்து காரணமாக அதிக PM10 மற்றும் ஓசோன் அளவுகளை பதிவுசெய்து வருகிறது. சென்னை நகரில் PM10 அளவு வரம்பு மீறுவது அவ்வப்போது மட்டுமே நிகழ்ந்தாலும், அதிக வாகன நெரிசல் மற்றும் வெப்பமான காலநிலை காரணமாக அது ஓசோன் மாசுபாட்டிற்கான முக்கியக் காரணியாகவும் உள்ளது.
கோடைகால காற்று மாசுபாடு குளிர்கால காற்று மாசுபாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
குளிர்கால மாசுபாடு பெரும்பாலும் நுண்ணிய PM 2.5 துகள்கள் அதிகமாக இருக்கும் நிலையில், கோடைக்கால காற்று மாசு சற்றுப் பெரிய PM10 துகள்கள் மற்றும் ஓசோனால் ஏற்படுகிறது.
வாகனங்கள், தொழிற்சாலைகள், கழிவுகளை எரித்தல், வேளாண்க் கழிவுகளை எரித்தல், கட்டுமானத் தளங்கள் மற்றும் சேதமடைந்த சாலைகள் ஆகியவை ஆண்டு முழுவதும் மாசுபாட்டிற்கு முக்கிய காரணிகளாக உள்ளன. குளிர்காலத்தில், வெப்பமூட்டுவதற்காக உயிரி எரிபொருள்கள் எரிக்கப்படுகின்றன. கோடைக்காலத்தில் ஏற்படும் புழுதிப் புயல்கள் PM10 அளவை அதிகரிக்கின்றன. அதே நேரம், வெப்பமும் சூரிய ஒளியும் அதிகமாக இருப்பதால் ஓசோன் வாயு உருவாக்கம் வேகமடைகிறது.
வெப்பமான வானிலையில் ஓசோன் அளவு ஏன் அதிகரிக்கிறது?
நேரடியாக வாகனப் புகை (tailpipe) அல்லது புகைபோக்கி (chimney) வழியாக ஓசோன் வளிமண்டலத்தை அடைவதில்லை. பெரும்பாலும் வாகனங்களிலிருந்து வரும் நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள், வாகனப் புகை, வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற மூலங்களிலிருந்து வரும் ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் (volatile organic compounds (VOCs)) ஆகியவை கடுமையான சூரிய ஒளியுடன் ஒன்று சேரும் போது இது உருவாகிறது. இதனால், வெப்பமான நாட்களில் ஓசோன் உருவாவதற்கான சாதகமான சூழல் ஏற்படுகிறது. இந்த ஓசோன் மற்றும் காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் ஆகியவை சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியவை .
இந்தியாவில் PM10 அளவுகள் திடீரென உயரக் காரணம் என்ன?
இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவும் வெப்பமான சூழல், ஈரான் வரை நீளும் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதியை உருவாக்குகிறது. சுற்றியுள்ள உயர் காற்றழுத்தப் பகுதிகளுடனான அதன் தொடர்பு, வெப்பமான மற்றும் காற்று வீசும் சூழலை உருவாக்குகிறது. இந்தக் காற்றுகள், 'லூ' எனப்படும் வெப்பக் காற்றுகள் உட்பட புழுதிப் புயல்களைக் ஏற்படுத்தக்கூடும். இந்த 'லூ' காற்றுகள், மேற்கு ஆசியா மற்றும் தார் பாலைவனத்திலிருந்து புழுதியை இந்தியா வழியாக வங்காள விரிகுடாவை நோக்கிக் கொண்டு செல்கின்றன. 2018-ஆம் ஆண்டில் வட இந்தியாவில் வீசிய கடுமையான புழுதிப் புயல்களின்போது காணப்பட்டதுபோல, இதுபோன்ற நிகழ்வுகள் PM10 அளவை நாட்கணக்கில் அதிகரிக்க செய்யும்.
இந்திய துணைக்கண்டத்தில், ‘அந்தி’ (Andhi) என்று அழைக்கப்படும் குறுகிய கால, குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே பாதிக்கும் தூசிப் புயல்களும் ஏற்படுகின்றன. இவை பொதுவாக சில மணி நேரங்களுக்குள் குறைந்துவிடும். இதுபோன்ற புயல்கள், இடியுடன் கூடிய மழை மேகங்களுடன் தொடர்புடைய வலுவான கீழ்நோக்கி வீசும் காற்று (downdraft) தரையைத் தாக்கும்போது உருவாகின்றன. இந்த காற்று தரையில் உள்ள தளர்வான தூசிகளை உயர்த்தி, அதிக வேகத்தில் எடுத்துச் செல்கிறது. ‘லூ’ (Loo) போன்ற தூசிப் புயல்கள் வட இந்தியாவில் பொதுவாகக் காணப்படுகின்றன. ஆனால் மும்பை மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில், இடியுடன் கூடிய மழையால் ஏற்படும் காற்றோட்டங்களின் காரணமாக தூசி நிறைந்த வானிலை நிகழ்வுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
மனிதச் செயல்பாடுகள் இயற்கையான தூசியின் அளவை மேலும் மோசமாக்குகின்றன. கடுமையான குளிர்கால தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (Graded Response Action Plan (GRAP)) கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபிறகு, கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகள் பெரும்பாலும் மீண்டும் தொடங்குகின்றன. தள அளவில் போதுமான தூசிக் கட்டுப்பாடு இல்லாத நிலையில், இந்தச் செயல்பாடுகள் PM10 அளவுகளை அதிகரிக்கின்றன. மேலும், வறண்ட கோடை மாதங்களில், சேதமடைந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள், தளர்வான, தூசியை காற்றுடன் மீண்டும் சேர்க்கின்றன.
கோடைக்கால காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராட நகரங்கள் என்ன செய்யமுடியும்?
தூசியின் இயற்கையான மூலங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், அவற்றைக் கணிக்க முடியும். டெல்லியின் காற்றுத் தர முன் எச்சரிக்கை அமைப்பு (Air Quality Early Warning System (AQEWS)), 2018-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான புழுதிப் புயல்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட புகைமூட்ட நிகழ்வுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இதற்போது இது ஆண்டு முழுவதும் செயல்பட்டு வருகிறது. பின்னர் இது ஜெய்ப்பூர் மற்றும் மும்பை போன்ற பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், பல மாசுபடுத்திகள் குறித்த கணிப்புகளைப் பல நாட்களுக்கு முன்பே வழங்குகிறது. அதன் அறிக்கை டெல்லிக்கான விரிவான வானிலை தகவல்களையும், 140 இந்திய நகரங்களுக்கான மூன்று நாள் காற்றுத் தரக் குறியீட்டுக் கணிப்புகளையும் வழங்குகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையமும் (IMD) ஒரு நாளில் பலமுறை தேசிய வானிலை முன்னறிவிப்பு அறிக்கைகளை வெளியிடுகிறது. புழுதிப் புயல்கள், ஓசோன் மற்றும் மோசமான காற்றின் தரம் குறித்து உள்ளூர் எச்சரிக்கைகளை வெளியிட அதிகாரிகள் இந்த அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் குடிமக்கள் அவற்றின் பாதிப்பைக் குறைக்க முடியும்.
கட்டுப்படுத்தக்கூடிய இயற்கை அல்லாத மூலங்களைப் பொறுத்தவரை, நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை. குளிர்காலம் அல்லாத காலங்களிலும் கட்டுமானத் தளங்களுக்குத் தீவிரமான தூசி மேலாண்மை தேவைப்படுகிறது.
ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றம் (Council on Energy, Environment and Water (CEEW)) நடத்திய ஓர் ஆய்வில், கட்டுமானத் தளங்களில் கனரக வாகனங்களின் இயக்கத்தைக் குறைப்பதன் மூலமே உள்ளூர் நுண்துகள்களின் அளவைக் குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றம் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட பிருஹன்மும்பை மாநகராட்சியின் (Brihanmumbai Municipal Corporation (BMC)) காற்றுத் தர முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பு (Air Quality Decision Support System (AQDSS)), கட்டுமானத் தளங்களைக் கண்காணிக்க உதவுகிறது. மும்பையில், 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 1,000-க்கும் மேற்பட்ட தளங்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இது ஏற்கனவே உதவியுள்ளது.
ஓசோனைக் குறைப்பதற்கு, தூய்மையான போக்குவரத்து, சிறந்த ஒருங்கிணைப்பு, கரைப்பான்கள், வண்ணப்பூச்சுகள், எரிபொருள் எரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் (volatile organic compounds (VOCs)) உமிழ்வுகளைக் குறைக்க வேண்டும். சந்திப்புகளில் காத்திருக்கும்போது வாகனங்களை அணைத்து, இயக்குவதால் ஏற்படும் உமிழ்வுகளைக் குறைக்குமாறு ஓட்டுநர்களை வலியுறுத்தும் டெல்லி அரசின் 'சிவப்பு விளக்கு எரியும்போது, வண்டியை அணை' (Red Light On, Gaadi Off) பிரச்சாரம் போன்ற எளிமையான நடவடிக்கைகள்கூட ஓசோன் உருவாவதைக் குறைக்க முடியும். ஆனால், இந்திய நகரங்களுக்கு இன்னும் நீடித்த நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.
2022-ஆம் ஆண்டு முதல் டெல்லியில் ஒரு கோடைக்கால செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற நகரங்களுக்கும், வானிலை முன்னறிவிப்பு, பொது சுகாதார ஆலோசனைகள், கட்டுமானத் தூசிக் கட்டுப்பாடு, சாலைப் புழுதி மேலாண்மை மற்றும் ஓசோனை உருவாக்கும் மாசுகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இது போன்ற திட்டங்கள் தேவைப்படுகிறது. கோடைக்காலத்தில் சில மாசுபடுத்திகள் குளிர்காலத்தைவிட வேகமாக சிதறிச் செல்லலாம். ஆனால், அதிக வெப்பமும் சூரிய ஒளியும் காற்று மாசுபாட்டு இரசாயன மாற்றங்களை உருவாக்குகின்றன. எனவே, இந்திய நகரங்கள் குளிர்காலத்தையும் கோடைக்காலத்தையும் முக்கியமானதாகக் கருதி, இரண்டு பருவங்களுக்கும் ஏற்றவாறு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும்.
முகமது ரஃபியுத்தீன் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றத்தின் திட்டத் தலைவராகவும், சினேகா மரியா இக்னேஷியஸ் திட்ட இணை உறுப்பினராகவும் உள்ளனர்.
Original article : Why do Indian cities get polluted in summer? -Mohammad Rafiuddin, Sneha Maria Ignatious