போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்திற்கு பெயரிடப்பட்ட மௌலானா பர்கத்துல்லா போபாலி (Maulana Barkatullah Bhopali), இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பணியாற்றியபோது தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வெளிநாட்டிலேயே கழித்தார். அவர் யார்?, எத்தகைய கொள்கைகளைக் கொண்டிருந்தார்? என்பது குறித்த விவரங்கள் கீழே குறிப்பிட்டுள்ளது.
போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு, அதன் பெயரை வாக்தேவி போஜ்பால் பல்கலைக்கழகம் (Vagdevi Bhojpal University) என மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இப்பல்கலைக்கழகம் 1988-ம் ஆண்டில்தான் தற்போதைய பெயரைப் பெற்றது. அதற்கு முன்பு, இது 'போபால் பல்கலைக்கழகம்' என்று அழைக்கப்பட்டது.
மௌலானா பர்கத்துல்லா போபாலி (Maulana Barkatullah Bhopali) ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் 'சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்' என்றும் அறியப்படுகிறார். 1915-ம் ஆண்டில், அவரும் அவரது சகாக்களும், குறிப்பாக ராஜா மகேந்திர பிரதாப்பும் இணைந்து காபூலில் இந்தியாவின் முதல் "நாடு கடந்த அரசை" (government in exile) நிறுவினர்.
"மௌலானா பர்கத்துல்லா வெளிநாட்டிலிருந்து இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதில் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். அவர் ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, ஆப்கானிஸ்தான் எனப் பல நாடுகளுக்குப் பயணம் செய்து, இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டுவருவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, சர்வதேச நாடுகளின் கூட்டணியையும் உருவாக்கினார். அவர் 1927-ல் அமெரிக்காவில் காலமானார். ஒருவேளை இதனால்தான் இந்தியாவில் அவரது செயல்பாடுகள் பரவலாக அறியப்படாமல் போயிருக்கலாம். 1988-ம் ஆண்டில் அவரது சொந்த ஊரில் ஒரு பல்கலைக்கழகத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்ட முடிவு, அவரது பங்களிப்புகளுக்கு நீண்டகாலத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட அங்கீகாரமாக அமைந்தது," என்று புது தில்லியில் உள்ள பகத் சிங் ஆவணக் காப்பகம் மற்றும் வள மையத்தின் கௌரவ ஆலோசகரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) ஓய்வுபெற்ற பேராசிரியருமான சாமன் லால் கூறினார்.
பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதற்குப் பதிலாக, பர்கத்துல்லாவின் (Barkatullah) பாரம்பரியத்தைப் பிரபலப்படுத்துவதில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சாமன் லால் கூறினார்.
மௌலானா பர்கத்துல்லாவின் நம்பிக்கைகளும் கொள்கைகளும்
மௌலானா பர்கத்துல்லா 1854-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி போபாலில் பிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு சிறந்த மாணவரான திகழ்ந்த அவர், கல்விக்காக பம்பாய்க்கும், பின்னர் லண்டனுக்கும் சென்றார். பின்னர் அவர் லிவர்பூலில் (Liverpool) கற்பிக்கும் பணியைத் தொடங்கினார். அங்கு அவர் இந்தியப் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டார். அவரது கட்டுரைகளும், உரைகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எதிர்மறையான கவனத்தை ஈர்த்தன. அதன் பிறகு, அவர் 1899-ல் அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கு, அவர் சுதந்திரப் போராட்ட வீரரான மௌலானா ஹஸ்ரத் மோஹானியுடன் (இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை உருவாக்கியவர்) கடிதப் போக்குவரத்து மேற்கொண்டார். இந்தக் கடிதங்கள் பர்கத்துல்லாவின் கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்த தெளிவான புரிதலை அளிக்கின்றன.
இந்திய வரலாற்று மாநாட்டு நடவடிக்கைக் குறிப்புகள் (Proceedings of the Indian History Congress, தொகுதி 66 (2005-2006)-ல் வெளியான இக்பால் ஹுசைன் எழுதிய கட்டுரை ஒன்று, இந்தக் கடிதங்களில் ஒன்றை மேற்கோள் காட்டுகிறது. இந்தக் கடிதத்தில், "சுமார் 2 கோடி (20 மில்லியன்) மக்கள் பட்டினியாலும் பசியாலும் உயிரிழந்தனர். வறுமையில் வாடிய இம்மக்கள் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என இரு பிரிவினரும் ஆவர். பசியின் காரணமாக ஒரு நாடே அழிவைச் சந்தித்தது." என்று பர்கத்துல்லா எழுதியிருந்தார்.
இந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று போராடி, பிரித்தாளும் கொள்கையை எதிர்த்தால் மட்டுமே பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க முடியும் என்று பர்கத்துல்லா உறுதியாக நம்பினார்.
"இந்தியாவின் அனைத்து சமூகங்களும் ஒன்றுபட்டால் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடைய முடியும் என்ற அவரது வலுவான நம்பிக்கையே பர்கத்துல்லாவைச் சிறப்புமிக்கவராக ஆக்குகிறது. அவர் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் அனைத்துப் பிராந்திய மக்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றினார்," என்று இந்திய வரலாற்று காங்கிரஸின் செயலாளரும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (Aligarh Muslim University (AMU)) வரலாற்றுப் பேராசிரியருமான அலி நதீம் ரெசாவி கூறினார்.
“இதற்கு சிறந்த உதாரணம், 1915-ல் காபூலில் அமைக்கப்பட்ட இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் (Provisional Government of India) ஆகும். அவர், இந்து இளவரசரான ராஜா மகேந்திர பிரதாப் மற்றும் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளரான மௌலானா உபைதுல்லா சிந்தி ஆகியோருடன் இணைந்து, நாடுகடத்தப்பட்ட நிலையில் ஒரு அரசாங்கத்தை அமைத்தார். ராஜா மகேந்திர பிரதாப் குடியரசுத் தலைவரானார், பர்கத்துல்லா பிரதமரானார். பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்கு வெளியே இந்தியர்கள் தங்களின் சொந்த சுதந்திரமான அரசியல் அமைப்பை (independent political body) நிறுவிய முதல் சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த வரலாறு முக்கியமானது; ஏனெனில் இது பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தது மட்டுமல்லாமல், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒரு பொதுவான இலக்கிற்காகத் தோளோடு தோள் நின்று போராடிய ஒரு இந்தியாவைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையையும் முன்வைத்தது,” என்று அலி நதீம் ரெசாவி மேலும் கூறினார்.
மேலும், ஹத்ராஸின் ராஜாவான மகேந்திர பிரதாப், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) நிறுவுவதற்குப் பெரிதும் பாடுபட்டு, இக்கல்லூரிக்கு நிலத்தையும் நன்கொடையாக வழங்கினார்.
காபூலில் அரசு மற்றும் லெனினுடனான சந்திப்பு
முதலாம் உலகப் போரின்போது, பர்கத்துல்லாவும் அவரது சகாக்களும் ஜெர்மனிக்குச் சென்று, ஜெர்மானியர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய வீரர்களை, பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட ஒரு படையை உருவாக்குமாறு வற்புறுத்த முயன்றனர். மேலும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவின் சுதந்திரத்தை அடைய விரும்பிய, 1913-ல் லாலா ஹர் தயாலால் (Lala Har Dayal) நிறுவப்பட்ட காதர் கட்சிக்காகவும் (Ghadar Party) அவர் முக்கியப் பணியாற்றினார்.
பின்னர், 1915 டிசம்பர் 1 அன்று, காபூலில் ‘இந்தியாவின் தற்காலிக அரசாங்கம்’ (Provisional Government of India) அமைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ‘அரசாங்கத்தின்’ தலைவர்கள் சோவியத் ரஷ்யாவின் அரசாங்கத் தலைவரான விளாடிமிர் லெனினைச் சந்திக்க மாஸ்கோவிற்குப் பயணம் செய்தனர். ரஷ்யாவில், பர்கத்துல்லா பின்வரும் அறிக்கையை வெளியிட்டார். “நான் ஒரு கம்யூனிஸ்டோ அல்லது சோசலிஸ்டோ அல்ல. ஆனால், எனது அரசியல் திட்டம் ஆசியாவிலிருந்து பிரிட்டிஷாரை வெளியேற்றுவதை உள்ளடக்கியது. ஐரோப்பா ஆசியாவை மூலதன ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்; இதில் ஆங்கிலேயர்களே முதன்மையான பிரதிநிதிகளாக உள்ளனர். இக்கருத்தில் நான் கம்யூனிஸ்டுகளுக்கு நெருக்கமாக இருக்கிறேன். மேலும், இந்த விஷயத்தில் நாங்கள் இயற்கையாக அமைந்த கூட்டமைப்புகள்,” என மேலே குறிப்பிடப்பட்ட Indian History Congress இதழில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷாரின் வெற்றிக்குப் பிறகு, இந்தியப் புரட்சியாளர்களின் திட்டங்கள் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தன. இருப்பினும், பர்கத்துல்லா தனது இலட்சியத்திற்காகப் பணியாற்றுவதற்காக, பிரஸ்ஸல்ஸ் (Brussels), சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற இடங்களுக்குத் தொடர்ந்து பயணம் செய்தார்.
"இந்தியாவிற்குள்ளேயே இருந்தபடி செயல்பட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போலல்லாமல், பர்கத்துல்லா தனது வாழ்நாளின் பெரும்பகுதியை நாடுகடத்தப்பட்ட நிலையில் கழித்தார். அவர் உலகெங்கிலும் உள்ள காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு, தன் காலத்தின் மிகவும் அறியப்பட்ட இந்தியப் புரட்சியாளர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். முஸ்லிம் உலகின் எதிர்ப்பு முயற்சிகளால் உத்வேகம் பெற்ற அவர், நீதி என்பது ஒரு உலகளாவிய நோக்கம் என்றும், இந்தியாவின் சுதந்திரம் அந்தப் பெரும் போராட்டத்தின் ஒரு பகுதி என்றும் நம்பினார்," என்று அலி நதீம் ரெசாவி கூறினார்.
1927-ல், தனது உடல்நிலை மோசமடைந்திருந்தபோதிலும், அவர் காதர் கட்சி (Ghadar Party) நிகழ்ச்சி ஒன்றிற்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்குப் பயணம் செய்தார். அங்குதான், 1927 செப்டம்பரில், அவர் தனது இறுதி மூச்சை விட்டார். இறுதிவரை ராஜா மகேந்திர பிரதாப் உடனிருக்க, அவர் சாக்ரமெண்டோவில் (Sacramento) நல்லடக்கம் செய்யப்பட்டார்.
மத்திய அரசு ராஜா மகேந்திர பிரதாப்பை பிரபலப்படுத்த செயல்பட்டு வருவதாகவும், அவரது நெருங்கிய கூட்டணி சகாவான பர்கத்துல்லாவிற்கும் அதே போன்ற அணுகுமுறை கிடைக்க வேண்டும் என்றும் அலி நதீம் ரெசாவியும், சமன் லாலும் சுட்டிக்காட்டினர்.
Original article : Maulana Barkatullah: The ‘first prime minister of India’, whose name Bhopal university wants to drop. -Yashee