பெரிய தரவு மையங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகவே விலைக்கு வாங்கிக் கொள்ளும் வகையில், அவற்றுக்கு 'திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமத்தை' (Deemed power distributors) அரசு வழங்குகிறது. இதன் மூலம் அந்த மையங்களின் மின்சாரச் செலவு குறைவதோடு, உள்ளூர் மின்சார வாரியங்களின் சுமையையும் குறைக்க முடியும்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இயக்குவதற்குத் தேவையான பெரிய உள்கட்டமைப்பு வசதிகளான இந்தத் தரவு மையங்கள், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மிக அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் துறைகளில் ஒன்றாக உள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், கணினிகளின் செயலாக்கத் திறனுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், இந்த மையங்களுக்கு எவ்வாறு மின்சாரம் வழங்குவது மற்றும் அவற்றை எவ்வாறு கொள்முதல் செய்வது என்பது குறித்து அரசாங்கங்கள் மறுபரிசீலனை செய்து வருகின்றன.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரிய இலக்குகளைக் கொண்டுள்ள ஆந்திரப் பிரதேச அரசு, ஒரு முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கொள்கையின்படி, தரவு மையங்களுக்கு 'திட்டமிடப்பட்ட விநியோக உரிமம்' (Deemed Distribution Licence (DDL)) வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவை தங்களுக்குள்ளேயே ஒரு மின் விநியோக நிறுவனமாகச் செயல்பட அனுமதி கிடைக்கிறது.
இந்தியாவின் மின்சாரத் துறையில் 'திட்டமிடப்பட்ட விநியோக உரிமங்கள்' (DDL) அதாவது, மின்சாரத்தை நேரடியாக விநியோகம் செய்ய அரசு வழங்கும் சிறப்பு அனுமதி என்பது புதிய விஷயம் அல்ல. இவை முக்கியமாக அரசு நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones), துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளன. இந்திய ரயில்வேகூட சமீபகாலம் வரை சுமார் பத்து ஆண்டுகளாக இந்தச் சிறப்பு விநியோக உரிமத்தைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இதுபோன்ற உரிமங்களைத் தனியார் தரவு மைய மேம்பாட்டாளர்களுக்கு வழங்குவது என்பது வழக்கமான நடைமுறையிலிருந்து மாறுபட்ட ஒரு பெரிய மாற்றமாகும்.
ஆனால், உண்மையில் இந்த உரிமங்கள் என்றால் என்ன, இவை தரவு மையங்களுக்கு எவ்வாறு உதவும்? மிக எளிமையாகச் சொன்னால், இந்த உரிமங்கள் தரவு மையங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெறவும், அதை அவர்களின் சொந்த வளாகங்களுக்குள்ளேயே விநியோகம் செய்யவும் அனுமதிக்கும் முறை ஆகும்.
ஆனால், இதில் இதைவிட கூடுதல் விஷயங்கள் உள்ளன. இந்த புதிய கொள்கை எவ்வாறு செயல்படும் என்பது குறித்து அறிந்துகொள்வோம்.
தரவு மையங்களின் மிகப்பெரிய மின்சாரத் தேவைகள்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது நெறிமுறைகள் (Algorithms) மூலம் இயங்குகிறது. ஆனால், இந்த நெறிமுறைகள் செயல்பட, தரவு மையங்களில் இருக்கும் பிரம்மாண்டமான கணினித்திறன் தேவைப்படுகிறது. இந்தத் தரவு மையங்கள் இயங்குவதற்கு மிக அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால்தான், ஒரு தரவு மையம் அங்கு எத்தனை கணினி சேவையாகம் (Servers) இருக்கின்றன என்பதை வைத்து மதிப்பிடப்படுவதில்லை. மாறாக, அதற்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறது என்பதை வைத்தே அடையாளப்படுத்தப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதால், அதற்கான கணினித்திறன் தேவையும் அதிகரித்து, புதிய தரவு மையங்களின் கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. இதனுடன் சேர்ந்து மின்சாரத்திற்கான தேவையும் மிகக் கடுமையாக அதிகரித்து வருகிறது.
உலகில் உள்ள தரவு மையங்களின் எண்ணிக்கை மற்றும் மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றில் பாதிக்கும் மேல் அமெரிக்காவில்தான் (US) உள்ளன. அங்கு 'உலகளாவிய மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள்' (Hyperscalers) மிக வேகமாக விரிவடைந்து வருவது, தற்போது ஒரு அரசியல் மற்றும் ஒழுங்குமுறை விவாதப் பொருளாக மாறியுள்ளது. தரவு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில், அவற்றின் அதிகப்படியான மின்சாரத் தேவையால் பொதுமக்களுக்கான மின்சாரக் கட்டணமும் உயர்கிறதோ என்ற கவலை எழுந்துள்ளது.
இதேபோன்ற கவலைகள் இந்தியாவிலும் உருவாகலாம். இந்தியாவின் தற்போதைய தரவு மையத் திறன் சுமார் 1.2 கிகாவாட் (GW) அளவாக உள்ளது. ஆனால், இது 2030-ஆம் ஆண்டிற்குள் நான்கு மடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலங்களில், ஆந்திரப் பிரதேசம் ஒரு முக்கியத் தரவு மைய மையமாக மாறுவதற்கான போட்டியில் முன்னணியில் உள்ளது.
கூகுள் (Google) நிறுவனம் விசாகப்பட்டினத்தில் 1 கிகாவாட் (GW) திறன் கொண்ட தரவு மைய வளாகத்தை அமைத்து வருகிறது. இது நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். மேலும், ஆந்திர அரசு விசாகப்பட்டினத்தில் மட்டுமே 5 கிகாவாட் (GW) தரவு மையத் திறனை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட விநியோக உரிமங்கள் எவ்வாறு உதவும்?
அமெரிக்கா (US) போன்ற நாடுகள் போலல்லாமல், இந்தியாவில் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம், வீடுகள் மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்கான கட்டணத்தைவிட மிக அதிகம். ஏனெனில், தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் செலுத்தும் கூடுதல் கட்டணமே, வீடுகளுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்படும் மலிவு விலை மற்றும் இலவச மின்சாரத்திற்கான மானியத் தொகையாக மாறுகிறது.
தரவு மையங்களுக்கு திட்டமிடப்பட்ட விநியோக உரிமங்கள் (DDL) ஏன் முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ள, முதலில் மின்சாரக் கட்டணங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.
பொதுவாக ஒரு மின்சாரக் கட்டண ரசீதில் (Electricity bill) இரண்டு பகுதிகள் இருக்கும்: நிலைக்கட்டணம் (Fixed charges) மற்றும் நுகர்வுக் கட்டணம் (Energy charges). நீங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் நிலைக்கட்டணத்தைக் கண்டிப்பாகச் செலுத்த வேண்டும். ஆனால், நுகர்வுக் கட்டணம் என்பது நீங்கள் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவைப் பொறுத்து மட்டுமே மாறுபடுகிறது.
மின்உற்பத்தி நிலையங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகை, மின்சாரத்தைக் கொண்டு சேர்க்கும் உள்கட்டமைப்பு வசதிகள், மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் மற்றும் மின் விநியோகத் தடையற்ற பராமரிப்புப் பணிகள் போன்ற செலவுகளை இந்த நிலைக்கட்டணமே ஈடுகட்டுகிறது. ஒரு மின் விநியோக நிறுவனம் (Distribution Company (Discom)) ஒரு தொழிற்சாலை அல்லது தரவு மையம் போன்ற பெரிய வாடிக்கையாளரைப் பெறும்போது, அவர்களுக்குத் தேவையான கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி நிலையங்களில் இருந்து உறுதி செய்யவேண்டும். தேவைப்பட்டால் மின் பகிர்மானத்திற்கான உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் வேண்டும். இந்த கூடுதல் செலவுகள் அனைத்தும் இறுதியில் நுகர்வோரின் மின்கட்டணத்திலேயே சேர்க்கப்படுகின்றன.
தரவு மையங்களுக்கு இது மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் இவற்றின் மின்சாரத் தேவை நூற்றுக்கணக்கான மெகாவாட் (MW) வரை இருக்கக்கூடும். இது ஒரு நடுத்தர அளவிலான நகரத்தின் மின்சாரத் தேவைக்கு இணையானதாகும். ஆந்திரப் பிரதேச மாநில அரசின் கொள்கைப்படி, குறைந்தபட்சம் 300 மெகாவாட் (MW) மின் இணைப்புச் சுமை கொண்ட தரவு மையங்களுக்குத் 'திட்டமிடப்பட்ட விநியோக உரிமம்' (DDL) அந்தஸ்து வழங்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் இந்தத் தகுதியைப் பெறுவதற்காகத் தங்களின் பல கிளை மையங்களின் மின் தேவைகளை ஒன்றாக இணைத்துக் காட்டவும் இக்கொள்கை அனுமதிக்கிறது.
திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம் (DDL) பெற்றவுடன், இந்த பெரிய மின் நுகர்வோர்கள் தங்களுக்கான மின்சார விநியோகத்தை தாங்களே ஏற்பாடு செய்து கொள்ளவும், தங்களது திட்டப் பகுதிக்குள்ளேயே விநியோக உள்கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். இதன் விளைவாக, அதிக ஆற்றல் தேவைப்படும் இந்த வசதிகளுக்காக பிரத்யேகமாக கூடுதல் மின் உற்பத்தியிலோ அல்லது மின்கட்டமைப்பை விரிவாக்கம் செய்வதிலோ உள்ளூர் மின்விநியோக நிறுவனம் (Discom) முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
இது தரவு மைய நிறுவனர்களுக்கு மிகப்பெரிய பலன்களைத் தரும். திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம் பெற்றவர்கள் திறந்தவெளி அணுகல் (Open-access) ஏற்பாடுகள் உட்பட எந்தவொரு சட்டபூர்வமான மூலத்திலிருந்தும் மின்சாரத்தை வாங்கிக்கொள்ள முடியும். மேலும், திறந்தவெளி அணுகல் நுகர்வோர் மீது வழக்கமாக விதிக்கப்படும் குறுக்கு-மானிய கூடுதல் கட்டணம் (Cross-subsidy surcharge) மற்றும் கூடுதல் கட்டணங்களில் (Additional surcharge) இருந்தும் இவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. குடியிருப்பு மற்றும் விவசாயப் பயனாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்காக, வணிகரீதியான நுகர்வோர் பொதுவாகச் செலுத்த வேண்டிய அதிகப்படியான மின் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு இந்த உரிமம் அவர்களுக்கு உதவுகிறது.
விதிவிலக்கு அல்ல
ஆந்திரப் பிரதேச அரசு தனது ஏப்ரல் மாத உத்தரவில், தரவு மையங்களுக்கு 'திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம்' (DDL) வழங்குவது அவசியம் என்று கூறியுள்ளது. ஏனெனில், இந்த மையங்களுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெறுவதற்கும், அதற்கான மின்விநியோகக் கட்டமைப்புகளை உருவாக்கிப் பராமரிப்பதற்கும் தனித்துவமான தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படுகிறது.
இருப்பினும், இந்த 'திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம்' (DDL) என்பது, சாதாரண பொது மின்விநியோக நிறுவனங்களுக்கு இருக்கும் அதே அதிகாரங்களை இந்தத் தரவு மையங்களுக்கு வழங்குவதில்லை. இந்த உரிமம் மிகவும் கட்டுப்பாடானது; அதாவது, அவர்கள் அந்தத் தரவு மைய வளாகத்திற்குள் மட்டுமே மின்சாரத்தை விநியோகிக்க முடியும். அந்தப் பகுதிக்கு வெளியே இருக்கும் பொதுமக்களுக்கோ அல்லது பிற நுகர்வோருக்கோ அவர்களால் மின்சாரம் வழங்க முடியாது.
மேலும், இந்தத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 'திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம்' (DDL) பெற்ற தரவு மையங்கள், தங்களுக்குத் தேவைப்படும் மொத்த மின்சாரத்தில் குறைந்தபட்சம் 51 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் மூலமாகவே பெற வேண்டும்.
மேலும், மின் கட்டமைப்பு இணைப்பைப் பெறுவதற்கு உரிமம் பெற்றவரே முழுப் பொறுப்பாவார். திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம் (DDL) பெற்ற தரவு மையங்கள், மத்திய மின் பகிர்மான நிறுவனம் (Central Transmission Utility (CTU)) மற்றும் மாநில மின் பகிர்மான நிறுவனம் (State Transmission Utility (STU)) ஆகிய இரண்டிலிருந்தும் இணைப்புகளைப் பெற வேண்டும். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிர்மானக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தும் போதெல்லாம், ஆந்திரப் பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Andhra Pradesh Electricity Regulatory Commission (APERC)) மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Central Electricity Regulatory Commission (CERC)) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மின் பகிர்மானக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.
அதேபோல், உரிமம் பெற்றவர் தங்களுக்குத் தேவையான ஒன்றோடொன்று இணைக்கும் உள்கட்டமைப்பை (Interconnection infrastructure) மேம்படுத்துவதற்கான முழுச் செலவையும் தாங்களே ஏற்க வேண்டும். ஆந்திரப் பிரதேச மின் பகிர்மானக் கழகத்திற்கு (Andhra Pradesh Transmission Corporation) செலுத்த வேண்டிய மின் பகிர்மானக் கட்டணங்கள், ஆந்திரப் பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் (APERC) அங்கீகரிக்கப்பட்ட கட்டண விகிதங்களின்படி வசூலிக்கப்படும். அதே நேரத்தில், மின் பகிர்மான உரிமம் பெற்ற தரவு மையங்கள், தங்களுடைய உள் விநியோகக் கட்டமைப்புகளுக்கு மின் பகிர்மானக் கட்டணம் (Wheeling charges) செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுகின்றன.
இந்தக் கொள்கையானது, தற்போதுள்ள நுகர்வோர் யாரும் புதிய திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம் பெறுவதைத் தடுப்பதன் மூலம், ஏற்கனவே இயங்கி வரும் மின்விநியோக நிறுவனங்களின் (Discoms) நிதி நலன்களைப் பாதுகாக்கிறது. இந்த விதிமுறையானது முற்றிலும் புதிய தரவு மைய (Greenfield data centre) திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால், மின்விநியோக நிறுவனங்கள் தங்களுக்கு அதிக வருவாய் தரும் தற்போதைய வாடிக்கையாளர்களை இழக்காமலும், ஏற்கனவே செய்த முதலீடுகள் வீணாகாமல் இருப்பதும் உறுதி செய்யப்படுகிறது.
மேலும், இந்த நெறிமுறைக் கட்டமைப்பு, தரவு மையங்களுக்கு உள்ளூர் மின்விநியோக நிறுவனங்களிடமிருந்து (Discoms) அவசரகால மாற்று மின்சாரம் தேவைப்படலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், சம்பந்தப்பட்ட மின்விநியோக நிறுவனத்துடன் ஒரு அவசரகால மின்விநியோக ஒப்பந்தத்தில் அந்த திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமதாரர் (DDL) கையெழுத்திட வேண்டும். அதில் தங்களுக்குத் தேவைப்படும் அவசரகால மின்சாரத்தின் அளவைக் குறிப்பிட வேண்டும். மின்விநியோக நிறுவனத்திடமிருந்து பெறப்படும் இத்தகைய மாற்று அல்லது அவசரகால மின்சாரப் பயன்பாட்டிற்கு, ஆந்திரப் பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (APERC) தற்போதைய விதிகளின்படியே கட்டணங்களும் நிபந்தனைகளும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Original article : How Andhra plans to power AI ambitions: Let data centres buy and distribute their own electricity. -Pratyush Deep