காசநோயை (Tuberculosis (TB)) ஒழிப்பதற்கு இந்தியாவிற்கு புதுமையான உத்திகள் தேவை -பல்ராம் பார்கவா, சௌம்யா சுவாமிநாதன்

 நுரையீரலுக்கு அப்பாற்பட்ட காசநோய்க்கு எதிராக குறிப்பிடத்தக்க சுகாதாரப் பாதுகாப்பை வழங்கும் புதிய இந்திய தடுப்பூசி சோதனைத் தரவுகள் (New Indian vaccine trial data), வலுவான பொது சுகாதார உத்திகளுடன் இலக்கு வைக்கப்பட்ட தடுப்பூசியின் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


முதல் காசநோய் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகியும், உலகம் அதன் மிகப் பழமையான நோய்களில் ஒன்றைக் கட்டுப்படுத்த இன்னும் போராடிக்கொண்டிருக்கிறது. காசநோய் (Tuberculosis (TB)), மற்ற எந்தவொரு தொற்று நோயையும் விட ஆண்டுதோறும் அதிக மக்களைக் கொன்று வருகிறது. இது கோவிட்-19 பெருந்தொற்றின் உச்சக்கட்டத்தை விடவும் அதிகமாகும். இருப்பினும், இளம் பருவத்தினருக்கும் பெரியவர்களுக்கும் இன்னும் பயனுள்ள தடுப்பூசி எதுவும் இல்லை.


மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் (Mycobacterium tuberculosis) தொற்றுக்கு ஆளானால், தனிநபர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி, பல ஆண்டுகளாக எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம். மற்றவர்களுக்கு, நோய்த்தொற்று உடலில் இருந்தாலும், குறைந்தபட்ச அல்லது எந்த அறிகுறிகளையும் காட்டாத அறிகுறியற்ற நோய் (subclinical disease) உருவாகிறது. இவர்களில் ஒரு பிரிவினருக்கு தீவிர காசநோயாக (active TB) அதிகரிக்கிறது. இது நுரையீரல் காசநோயாக (pulmonary TB (PTB)) வெளிப்படலாம். இதுவே நோய்ப் பரவலைத் தூண்டும் தொற்று வடிவமாகும் அல்லது நுரையீரல் சாராத காசநோயாக (extrapulmonary TB (EPTB)) வெளிப்படலாம். இது நுரையீரலுக்கு அப்பால் உள்ள உறுப்புகளைப் பாதிக்கிறது, கண்டறிவதற்கு கடினமானது, அதிக பலவீனத்தை ஏற்படுத்தக்கூடியது மற்றும் சில சமயங்களில் மரணத்தை விளைவிக்கக்கூடியது.


அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே தடுப்பூசி இல்லை


காசநோய் (TB) பல்வேறு நோய் வழிமுறைகள் மூலம் உருவாவதால், அனைத்து வகையான காசநோயையும் தடுக்கக்கூடிய ஒரே ஒரு தடுப்பூசியை (single “one-shot” vaccine) எதிர்பார்ப்பது யதார்த்தமற்றதாக இருக்கலாம். இந்த எதிர்பார்ப்பே காசநோய் தடுப்பூசி உருவாக்கத்தில் உலகளாவிய ஏமாற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, முந்தைய பெரும்பாலான தடுப்பூசி சோதனைகள் முதன்மையாக நுரையீரல் சார்ந்த காசநோயைத் தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளன.


இதற்கிடையில், காசநோயின் பாதிப்பு இன்னும் மிகப்பெரிய அளவில் உள்ளது. பல குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், ஒரு லட்சம் மக்கள்தொகையில் 200 முதல் 300 பேருக்கு காசநோய் பாதிப்பு உள்ளது. இந்நோயை முற்றிலுமாக ஒழிக்க, இந்த விகிதத்தை ஒரு லட்சம் பேருக்கு 10 முதல் 20 பேர் என்ற அளவிற்கு குறைக்க வேண்டும். இந்த இலக்கை அடைய தொடர்ச்சியான முயற்சிகளும், பொது சுகாதாரத் துறையில் மிகப்பெரிய முதலீடுகளும் தேவைப்படும். உலகின் மிக அதிக காசநோய் பாதிப்புள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த சவால் மிகவும் வலுவான மற்றும் கட்டமைப்பு சார்ந்த ஒன்றாக உள்ளது.


காசநோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் இலக்கு லட்சியமானதும் அவசியமானதும் ஆகும். இருப்பினும், இந்த இலக்கை அடைவதற்கு, ஒரு சரியான தீர்வைக் (perfect solution) கண்டுபிடிப்பதைத் தாண்டி, அனைத்து வகையான நோய்களையும் மற்றும் அனைத்து வயதுடையவர்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறை தேவைப்படும். அதற்குப் பதிலாக, பல நிலைகளைக் கொண்ட மற்றும் நடைமுறைக்கு ஏற்ற உத்தியைக் கையாள வேண்டும். புதிய கருவிகள் கண்டறியப்பட்டு சோதிக்கப்படும்போது, ​​அவற்றை எவ்வாறு, எங்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.


இந்த உத்தியின் முதல் நிலை, நோயை சிறப்பாகக் கண்டறிவதாகும். நோயின் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாத நிலையிலும் (subclinical TB) காசநோயைக் கண்டறியக்கூடிய கருவிகள் உள்ளிட்ட நவீன நோயறிதல் தொழில்நுட்பங்கள், ஆபத்தில் உள்ள நபர்களை முன்கூட்டியே கண்டறிய உதவும். இரண்டாவது நிலை தடுப்பு சிகிச்சையாகும். அதாவது, மறைந்திருக்கும் காசநோய் தொற்று (latent TB infection) உள்ளவர்களுக்கு, அது தீவிர நோயாக மாறுவதற்கு முன்பே சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது இதில் அடங்கும். மூன்றாவது நிலை, சொல்லப்போனால் மிகவும் சிக்கலானது தடுப்பூசி செலுத்துவதாகும். இருப்பினும், நோய் கண்டறிதல் மற்றும் தடுப்புச் சிகிச்சைகளுக்கான அணுகல் சீரற்ற நிலையில் இருப்பதால், தடுப்பூசி என்பது ஒரு மிக முக்கியமான காரணியாகத் திகழ்கிறது.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR)) நடத்தியதும், BMJ இதழில் வெளியிடப்பட்டதுமான 'PreVenTB' மருத்துவப் பரிசோதனையின் சமீபத்திய முடிவுகள் ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன. இந்தியாவின் 18 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரிசோதனையில், காசநோய் நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 12,700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய, அதிக ஆபத்துள்ள மக்கள் பிரிவினரிடையே நிஜ-உலகச் சூழலில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு இணை நோய்கள் (comorbidities) மற்றும் வெவ்வேறு தொற்று நிலைகளைக் கொண்ட நபர்களும் பங்கேற்றனர். எனவே, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் குழுவானது நிஜ வாழ்க்கைச் சூழலைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாக அமைந்தது.


இந்தப் பரிசோதனை பின்வரும் முடிவுகளை வெளியிட்டது. அவை,


  •   VPM1002 தடுப்பூசி, நுரையீரல் சாராத காசநோய்க்கு (extrapulmonaryTB (EPTB)) எதிராக 50.4% செயல்திறனை வெளிப்படுத்தியது. இந்த முடிவு புள்ளிவிவரரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.


  •   6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளிடம், அனைத்து வகையான காசநோய்களுக்கும் (நுரையீரல் மற்றும் நுரையீரல் சாராதவை) எதிராக VPM1002 தடுப்பூசி 64.6% செயல்திறனை வெளிப்படுத்தியது.

  

  •  6 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளிடம், நுரையீரல் சாராத காசநோய்க்கு எதிராக Immuvac தடுப்பூசி 60%-க்கும் அதிகமான செயல்திறனை வெளிப்படுத்தியது.


  •  மேலும், கண்காணிப்புக் காலத்தில் மறைமுகத் தொற்று (latent infection) ஏற்பட்டவர்களிடம், அது தீவிர நோயாக மாறுவதைத் தடுப்பதில் Immuvac தடுப்பூசி 60%-க்கும் அதிகமான செயல்திறனை வெளிப்படுத்தியது.

 

  •  பொதுவாக, அனைத்து வகையான காசநோய்களுக்கும் எதிராக VPM1002 தடுப்பூசி 21.4% செயல்திறனை வெளிப்படுத்தியது.


  • (குறிப்பு: Subho Sarkar, ஆலோசகர் - நுரையீரல் சிகிச்சை நிபுணர் (Intervention Pulmonologist); LinkedIn-லிருந்து பெறப்பட்டது.)


நுரையீரல் சாராத காசநோய் என்பது இத்தொற்றுநோயின் மறைக்கப்பட்ட சுமையாகும். இதைக் கண்டறிவது கடினம். பெரும்பாலும் இது கவனிக்கப்படாமல் போகிறது. மேலும், இது குறிப்பிடத்தக்க உடல்நலப் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளுடன் தொடர்புடையது. இத்தகைய பாதிப்புகளை 50%-க்கும் அதிகமாகக் குறைப்பது, மருத்துவ மற்றும் பொது சுகாதாரரீதியாக ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது சுகாதாரச் செலவுகள் மற்றும் நோயாளிகளின் துயரத்தைக் குறைப்பதையும் உள்ளடக்கியது.


பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடமும் இந்தத் தரவுகள் வலுவான நேர்மறையான முடிவுகளைக் காட்டுகின்றன. இக்குழுவில், தடுப்பூசியின் செயல்திறன் 60%-க்கும் அதிகமாக இருந்தது. இந்த வயதுப் பிரிவினருக்குத் தடுப்பூசி அளிப்பதன் கூடுதல் நன்மையாக இது அமைகிறது. இந்தியாவில் தற்போது குழந்தைப் பருவத்திற்கு அப்பால் காசநோய்க்கான (TB) முறையான தடுப்பூசித் திட்டம் ஏதுமில்லை என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டால், காசநோயைத் தடுப்பதற்கான 'பூஸ்டர் டோஸ்' (கூடுதல் தடுப்பூசி) உத்திக்கு இவை வழிவகுக்கக்கூடும்.


ஊட்டச்சத்து ஆதரவின் தேவை


இவ்வாய்வின் மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு, ஊட்டச்சத்தின் பங்கு குறித்ததாகும். குறைந்த உடல் நிறை குறியீட்டெண் (body mass index (BMI)) கொண்ட நபர்களிடம் இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருப்பதாகக் காணப்பட்டது. இது, ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களிடம் தடுப்பூசிகள் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிசெய்ய, ஊட்டச்சத்து ஆதரவு தேவை என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.


செயல்முறைரீதியாகப் பார்க்கும்போது, ​​ ​​VPM1002 கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இது மாற்றியமைக்கப்பட்ட பேசில்லஸ் கால்மெட்-குயரின் (Bacillus Calmette-Guérin(BCG)) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒற்றை-தடுப்பூசி (single-dose) நிலை ஆகும். இதனால், தற்போது உருவாக்கப்பட்டு வரும் பல-நிலை மற்றும் கூடுதல் பொருட்கள் (adjuvants) சேர்க்கப்பட்ட தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில், இதைக் கையாள்வது எளிமையானது. இந்தியாவைப் போன்ற பெரிய நாட்டில், செயல்பாட்டு எளிமை என்பது ஒரு முக்கியமான நன்மையாகும். இத்தடுப்பூசியை குறைந்த செலவில் பெருமளவில் உற்பத்தி செய்யமுடியும்.


காசநோய் என்பது பெரும்பாலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைப் (low- and middle-income countries (LMICs)) பாதிக்கும் ஒரு நோயாகும். எனவே, இந்நாடுகளின் அரசுகள் முன்முயற்சியுடன் செயல்பட வேண்டும். வேறு நாடுகளில் உருவாக்கப்படும் விரிவான தீர்வுகளுக்காகக் காத்திருப்பது நடைமுறைக்குச் சாத்தியமானதோ அல்லது நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கக்கூடியதோ அல்ல. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஒரு உடனடித் தீர்வுக்காகக் காத்திருக்க முடியாது. ஏனெனில், காசநோய்க்கென்று ஒரேயொரு முழுமையான தீர்வு என்று எதுவும் இல்லை. குறிப்பாக, இந்திய மக்களிடையே அனைத்து வயதுப் பிரிவினரிடமும் (ஆறு வயது மற்றும் அதற்கு மேல்) நுரையீரல் காசநோய் (PTB) மற்றும் நுரையீரல் சாராத காசநோய் (EPTB) உட்பட அனைத்து வகையான காசநோய்களுக்கும் எதிராக நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் இருக்கும்போது இது பொருந்தும். இன்றுவரை வேறு எந்த காசநோய் தடுப்பூசி மருத்துவப் பரிசோதனையும் நுரையீரல் சாராத காசநோய்க்கு (EPTB) எதிரான செயல்திறனை ஆய்வு செய்யவில்லை என்பதும், தற்போது உலகளவில் நடைபெற்றுவரும் எந்த மருத்துவப் பரிசோதனையும் நுரையீரல் சாராத காசநோயை (EPTB) செயல்திறனின் இறுதி இலக்காக உள்ளடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


பொது சுகாதாரம் சார்ந்த இது போன்ற முடிவுகளை இந்தியா இதற்கு முன்பும் கையாண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) முன்-தகுதி ஆய்வு முடிவதற்கு முன்பே, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் 'இந்தியாவில் தயாரிப்போம்' (Make in India) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதல் மூலக்கூறுப் பரிசோதனை ட்ரூநாட் (TrueNat) ஆகும்.


கோவிட்-19 பெருந்தொற்றின்போது, கூடுதல் தரவுகள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், விரைவான அணுகலைச் சாத்தியமாக்குவதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி ஆரம்பத்தில் "மருத்துவப் பரிசோதனை முறையில்" அங்கீகரிக்கப்பட்டது. முழுமையான தரவுக்காகக் காத்திருக்காமல், அவசரத் தேவையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், இது ஒரு இக்கட்டான சூழலில் பாதுகாப்பை விரைவுபடுத்த உதவியது.


மிதமான செயல்திறன் மற்றும் பரந்த நம்பிக்கை இடைவெளிகள் (wide confidence intervals) இருந்தபோதிலும், அறிமுகப்படுத்தப்பட்ட உள்நாட்டு ரோட்டா வைரஸ் (rotavirus) தடுப்பூசிகளிலும் இந்தியா இந்த அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளது. அதன் பின்னர், அவை கடுமையான நோய் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்க உதவியுள்ளன. மேலும், தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன (பண்டாரி மற்றும் பலர், தி லான்செட், 2014).


காசநோய் ஒழிப்பிற்கான ஒரு சிறந்த உத்தி


பல வகைகளில், காசநோய் என்பது மெதுவாகப் பரவும் ஒரு பெருந்தொற்றாகவே உள்ளது. இருப்பினும், கொள்கை ரீதியான நடவடிக்கைகளில் இதற்கு எப்போதும் அதே அளவிலான உடனடி முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எனவே, VPM1002 மற்றும் Immuvac போன்ற மிதமான செயல்திறன் கொண்ட தடுப்பூசிகள் உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளை, காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் எவ்வாறு திறம்பட ஒருங்கிணைக்கலாம் என்பதே முக்கியக் கொள்கை சார்ந்த கேள்வியாகும். நோயாளியுடன் தொடர்பில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடையே குறிப்பிட்ட பயன்பாடு, பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கல் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் தடுப்புச் சிகிச்சைத் திட்டங்களுடன் இவற்றை இணைத்தல் ஆகியவை இணைந்து, காசநோயைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் பயனுள்ள ஒரு கட்டமைப்பை உருவாக்கக்கூடும். குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த, பல்வேறு சூழல்கள் மற்றும் வயதுப் பிரிவுகளில் பயனுள்ள தடுப்பூசிகளின் கலவை தேவைப்படலாம்.


இந்தியாவின் காசநோய் (TB) சவாலானது ஒரே ஒரு முக்கிய கண்டுபிடிப்பின் மூலம் தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல; இதற்குப் பலதரப்பட்ட நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. இதில் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், தடுப்புச் சிகிச்சை, நுரையீரல் காசநோய் (PTB) மற்றும் நுரையீரல் சாராத காசநோய் (EPTB) ஆகிய இரண்டிற்கும் எதிரான இலக்கு வைக்கப்பட்ட தடுப்பூசி பயன்பாடு, நோயாளியின் நிலைக்கு ஏற்ற மருத்துவ மேலாண்மை, ஊட்டச்சத்து ஆதரவு மற்றும் பொது சுகாதாரத்தில் தொடர்ச்சியான முதலீடு ஆகியவை அடங்கும்.



மிகச்சிறந்த தடுப்பூசி ஒன்று வரும் வரை காத்திருப்பது முன்னேற்றத்தை காலவரையின்றி தாமதப்படுத்தக்கூடும். குறிப்பாக, ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடம் நுரையீரல் மற்றும் நுரையீரல் சாராத காசநோய் ஆகிய இரண்டிற்கும் எதிரான தடுப்பூசியின் செயல்திறனை 'PreVenTB' பரிசோதனையைத் தவிர வேறு எந்தப் பரிசோதனையும் மதிப்பீடு செய்யாத நிலையில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மாறாக, கடுமையான நோய்த்தொற்றை, குறிப்பாக நுரையீரல் சாராத காசநோயைக் (EPTB) குறைக்கும் வழிமுறைகளைச் செயல்படுத்துவது உடனடி மற்றும் உறுதியான பலன்களைத் தரக்கூடும்.


'PreVenTB' பரிசோதனையானது விரிவானது, நன்கு வடிவமைக்கப்பட்டது மற்றும் சிறப்பாக நடத்தப்பட்டதாகவும் உள்ளது. இது ஒரு அர்த்தமுள்ள முடிவை வழங்குகிறது மற்றும் காசநோய் தடுப்பூசி உருவாக்கத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய மைல்கல்லாக அமையக்கூடும். இந்தச் சவாலின் அவசரத் தன்மையையும், செயல்படுவதற்கான குறைந்த கால அவகாசத்தையும் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புகள் வரலாம் என்ற நம்பிக்கையில் காலவரையின்றி காத்திருப்பதற்குப் பதிலாக (அத்தகைய வாய்ப்பு உறுதியற்றது), இன்று கிடைக்கக்கூடிய மற்றும் நிஜ உலகச் சூழலில் ஆறு வயதுக்கு மேற்பட்டவர்களிடம் நுரையீரல் (PTB) மற்றும் நுரையீரல் சாராத (EPTB) காசநோய் ஆகிய இரண்டிற்கும் எதிராகச் செயல்படுவதற்கான வலுவான ஆதாரங்களைக் கொண்ட தீர்வுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.


டாக்டர் பல்ராம் பார்கவா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) முன்னாள் தலைமை இயக்குநர் ஆவார். டாக்டர் சௌமியா சுவாமிநாதன், உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்னாள் தலைமை விஞ்ஞானி ஆவார்.


Original article : India needs innovative strategies to eliminate TB -Balram Bhargava, Soumya Swaminathan

Share: