மறு சரிபார்ப்பு என்ற பெயரில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ளக் கூடாது.
ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சில பணியாளர்கள் சிக்கல்களை எதிர்கொள்வது கவலைக்குரியதாக உள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டமான 'வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு' (Houselisting and Housing Census (HLO)) நடைபெற்றுவரும் இந்த இரண்டு மாநிலங்களில், கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு மீண்டும் சென்று தரவுகளில் உள்ள முரண்பாடுகளைச் சரிசெய்யுமாறும், அதேவேளையில் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு சரிபார்ப்பு (Re-verification) என்பது எந்த ஆய்வு அல்லது கணக்கெடுப்பிலும் சட்டபூர்வமான ஒரு செயல்முறையாகும். ஆனால், அது உண்மையான நிலையைத் துல்லியமாகப் காட்டவே மேற்கொள்ளபட வேண்டும். மக்களின் கருத்தை அல்லது வெளிப்படையான தோற்றத்தை நிர்வகிப்பதற்காக அந்த பணியை செய்யக்கூடாது. ராஜஸ்தானில், களத் தரவுகளின் மூலம் (field data) கண்டறியப்பட்ட முரண்பாடுகள் குறித்து மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளுக்கு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கைக்கு பின்னர் இந்த பிரச்சினை வேகமெடுத்துள்ளது. வெளிப்படையாகப் பார்க்கும்போது, கேள்வித்தாளில் பொருத்தமான விருப்பங்களைப் பயன்படுத்தி தரவுகள் துல்லியமாகப் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதே அதன் நோக்கமாகத் தெரிகிறது. ஆனால், சில சூழல்களின் காரணமாக, கணக்கெடுப்பாளர்களுக்கு (enumerators) உண்மையான தகவல்களின் அடிப்படையில் அல்லாமல், ஊகங்களின் (assumptions) அடிப்படையில் தரவுகளைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, சில வீடுகளில் கழிப்பறைகள் இல்லாத சூழலில், அருகிலேயே கழிப்பறை வசதி உள்ளதா என்று சரிபார்க்குமாறு கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 'திறந்தவெளியில் மலம் கழித்தல்' என்ற பதிவை 'கழிப்பறை வசதி உள்ளது' என்று மாற்றிக்கொள்ள முடியும். உத்தரப் பிரதேசத்திலும், உண்மை நிலைகளை அப்படியே காட்டுவதற்குப் பதிலாக வேறு விதமாகக்காட்ட வேண்டும் என்று வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் தரவுகளின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கவலைகளை எழுப்புகிறது.
தற்போதைய நிகழ்வு, நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவரும் திறந்தவெளியில் மலம் கழித்தலை ஒழிக்கும் இயக்கங்களின் செயல்திறனை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வருகிறது. பல மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இந்தப் பிரச்சினை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவது யதார்த்தமானதாக இருக்காது.
திறந்தவெளியில் மலம் கழித்தலை ஒழிப்பதற்காக நாடு முழுவதும் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் செயல்திறனை தற்போதைய நிகழ்வுகள் வெளிக் கொண்டு வருகின்றன. பல மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருந்தாலும், இந்தப்பிரச்சினை முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று முடிவு செய்வது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கும். நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட நிர்வாகத் தேவைகளுக்காக, நகரங்கள் மற்றும் கிராமங்களை 'திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாதவை' (Open Defecation Free (ODF)), 'மேம்படுத்தப்பட்ட திறந்தவெளி மலம் கழிப்பில்லா நிலை (ODF Plus) மற்றும் 'முன்மாதிரி திறந்தவெளி மலம் கழிப்பில்லா கிராமம்' (ODF Plus Model) போன்றப் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் வகைப்படுத்துவது நியாயமானதாக இருக்கும். ஆனால், இது போன்ற வகைப்பாடு உண்மையான நிலையை காட்டுகிறதா மற்றும் கணக்கெடுப்பாளர்களின் பணியுடன் முரண்படுகிறதா என்பதே முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள் துல்லியமாகவும் நம்பகத்தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்வது கொள்கை வகுப்பாளர்களின் முக்கியப் பணியாகும். மேலும், பொதுக் கொள்கைகள் மற்றும் நலத்திட்டங்கள் இந்தத் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுவதாலும், அவற்றின் பயன் இறுதியில் மக்களுக்கே சென்றடைவதாலும், மக்கள் சரியான தகவல்களை வழங்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். கணக்கெடுப்பாளர்கள் எதிர்கொள்ளும் நியாயமான சிரமங்களை அதிகாரிகள் உணர்ந்து, எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து மீண்டும் கூறவேண்டிய தேவை இல்லை என்பதால், அதை திறம்படவும் காலதாமதமின்றியும் மேற்கொள்ள கணக்கெடுப்பாளர்களுக்கான ஊதியங்கள் மற்றும் படிகளை ஒன்றிய அரசு உயர்த்த வேண்டும். நாடு முழுவதும் இந்தக் கணக்கெடுப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ₹11,718 கோடி செலவினத்தை மட்டும் அரசு கவனத்தில் கொள்ளாமல், இலக்கை நோக்கிய மற்றும் உள்ளடக்கிய கொள்கை வடிவமைப்பிற்குத் தேவையான நம்பகமான தரவுகளை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்வதன் முக்கியதுவத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், "மறுசரிபார்ப்பு" (re-verification) என்ற பெயரில் தரவுகளை மாற்றியமைக்கும் அல்லது தரவை நிரந்தரமாக அழிக்கும் (data sanitisation) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதை அரசு தெளிவான செய்தியாக உணர்த்த வேண்டும்.
Original article : Data hygiene: On the Census and enumerators.