எல்-நினோ (El Niño) எப்போது பொருளாதார நெருக்கடியாக மாறுகிறது? -சுஷாந்தா மஹாபத்ரா, மதன் மெஹர்

 எல்-நினோ (El Niño) என்பது வெறும் வானிலை மாற்றம் (weather disturbance) மட்டுமல்ல. அது வெப்ப அழுத்தம், விவசாயத்தில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை மற்றும் உணவுப் பணவீக்கம் ஆகியவற்றின் மூலம் காலநிலை சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தி, இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு வளர்ச்சி சார்ந்த சவாலாகும். காலநிலை சார்ந்த அபாயங்கள் பொருளாதார அபாயங்களாக மாறிவரும் சூழலில், வெப்பத்தைத் தாங்கக்கூடிய நகரங்கள், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சிறந்த நீர் மேலாண்மை ஆகியவற்றின் மூலம் வலுவான தழுவல் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.


தீவிர வெப்பம் மற்றும் சீரற்ற மழையை இந்தியா பெரும்பாலும் ஒரு இயல்பான நிகழ்வாகவே கடந்து செல்கிறது. இதனால், வானிலை கடுமையாக இருக்கிறது, பருவமழை நிச்சயமற்றது, ஆனாலும் வாழ்க்கை தொடரத்தான் வேண்டும் என்ற மனப்பான்மையே நிலவுகிறது. ஆனால், இந்த அணுகுமுறை ஒரு முக்கிய விஷயத்தைத் தவறவிடுகிறது. முன்னறிவிப்பின்படி எல்-நினோ (El Niño) மீண்டும் ஏற்பட்டால், இந்தியா வெறும் வானிலை மாற்றத்தை மட்டும் எதிர்கொள்ளாது. மாறாக, வெப்ப அழுத்தம், தண்ணீர் பற்றாக்குறை, பயிர் இழப்பு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் மூலம் முறைசாரா பொருளாதாரத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தும் ஒரு வளர்ச்சி சார்ந்த நெருக்கடியை அது எதிர்கொள்ள நேரிடும்.


அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration’s (NOAA)) எல் நினோ-தெற்கு அலைவு (El Niño–Southern Oscillation(ENSO)) ஆய்வு கலந்துரையாடல் அறிக்கை-2026-ல், எல்-நினோ விரைவில் உருவாக வாய்ப்புள்ளது என்றும், 2026 மே-ஜூலை மாதங்களில் 82% வாய்ப்பும், 2026-27 குளிர்காலம் முழுவதும் தொடர 96% வாய்ப்பும் உள்ளது என்றும் குறிப்பிடுகிறது. இந்தியாவின் வானிலை ஆய்வு மையமான, இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD), தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கான (2026) நீண்டகால முன்னறிவிப்பில், பருவமழையானது சராசரியாக நீண்டகாலம் அதாவது, 92%-ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. மேலும், எதிர்பார்க்கப்படும் மழைப்பொழிவை "இயல்புக்குக் குறைவான" (below normal) நிலையில் வைக்கிறது.


இந்த காலநிலை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவில், காலநிலை பாதிப்புகள் வளிமண்டலத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை தொழிலாளர் சந்தை, விவசாயச் சந்தைகள், வீட்டுச் சமையலறைகள் மற்றும் நகர வீதிகள் என எல்லா இடங்களுக்கும் விரைவாகப் பரவுகின்றன. பலவீனமான பருவமழை என்பது வானிலை ஆய்வாளர்களுக்கு மட்டுமேயான கவலைக்குரிய விஷயம் அல்ல அது கிராமப்புற வருமானம் குறையக்கூடும், உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும் மற்றும் வேலை நேரம் குறையக்கூடும் என்பதற்கான ஓர் எச்சரிக்கையாகும். வேலைவாய்ப்பின் பெரும்பகுதி முறைசாராததாகவும், காலநிலையால் பாதிக்கப்படக்கூடியதாகவும் இருக்கும் ஒரு நாட்டைப் பொறுத்தவரை, எல்-நினோவை ஒரு பொருளாதாரப் பரவல் செயல்முறையாகவே சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும்.

வெப்பப் பொருளாதாரம்


இதன் முதல் காரணி வெப்பம் (heat) ஆகும். நீண்ட மற்றும் கடுமையான கோடைக்காலங்கள், வெளிப்புறச் சூழலிலிருந்து தப்பிக்க முடியாத கட்டுமானத் தொழிலாளர்கள், விநியோகப் பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் போன்றோரின் உற்பத்தித்திறனைக் குறைக்கின்றன. காலநிலை மாற்றம் அவர்களை மிகவும் பாதிக்கிறது. ஏனெனில், அவர்களுக்கு மிகக் குறைந்த பாதுகாப்பும் பொருளாதாரப் பாதுகாப்பும் உள்ளது. வெப்பமான இந்தியா என்பது வெறும் மிதமான வெப்பம் கொண்ட இந்தியா மட்டுமல்ல. அது, வாழ்வாதாரம் ஈட்டுவது பெருகிய முறையில் கடினமாகி வரும் ஒரு இந்தியாவாகும். வெப்ப அழுத்தம் உற்பத்தித்திறனைக் குறைக்கிறது, வேலை நேரத்தைக் குறைக்கிறது மற்றும் தினக்கூலியை நம்பி வாழும் லட்சக்கணக்கானோரின் வருமானப் பாதுகாப்பின்மையை வலுப்படுத்துகிறது.


இரண்டாவது காரணி விவசாயம் (agriculture) ஆகும். இந்தியாவின் பருவமழைக் கண்ணோட்டம் குறித்த 2026-ம் ஆண்டின் ராய்ட்டர்ஸ் அறிக்கை, பயிர்களுக்கு நீர் பாய்ச்சவும், நீர்த்தேக்கங்கள் மற்றும் நிலத்தடி நீர்நிலைகளை நிரப்பவும் தேவையான மழையில் கிட்டத்தட்ட 70% தென்மேற்குப் பருவமழையே வழங்குகிறது என்று குறிப்பிட்டது. மழைப்பொழிவு நிச்சயமற்றதாக மாறும்போது, ​​விதைப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பதில் விவசாயிகள் பெரும் இடர்களை எதிர்கொள்கின்றனர். நீர்ப்பாசனச் செலவுகள் அதிகரிக்கின்றன, மேலும் நிலத்தடி நீர் எடுப்பதும் அதிகரிக்கிறது. நிலையற்ற விலைகள் மற்றும் அதிகரித்துவரும் உள்ளீட்டுச் செலவுகளால் ஏற்கனவே போராடி வரும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, காலநிலை நிச்சயமற்ற தன்மை பொருளாதார உறுதியற்ற தன்மையை மேலும் அதிகரிக்கிறது. அந்த வகையில், எல்-நினோ என்பது வெறும் ஒரு காலநிலை நிகழ்வு மட்டுமல்ல. அது கிராமப்புறப் பொருளாதாரத்தின் உற்பத்தி அடித்தளத்தின் மீதான ஒரு பெரும் தாக்கமாகவும் அமைகிறது.


விலையின் மீதான அதிர்ச்சி


மூன்றாவது காரணி பணவீக்கம் (inflation) ஆகும். சாதாரண குடும்பங்களுக்கு காலநிலை அழுத்தத்தின் தாக்கம் பெரும்பாலும் உணவுப் பொருட்களின் விலைகளில்தான் முதலில் புலப்படுகிறது. இதன் தாக்கம் விவசாய சமூகங்களால் மட்டுமல்ல, அனைவராலும் உணரப்படுகிறது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் நுகர்வோர் விலைக் குறியீட்டு செய்திக் குறிப்பு-2026-ன் படி, ஏப்ரல் 2026-ல் உணவுப் பணவீக்கம் 4.2%-ஆக உயர்ந்தது. இது, பலவீனமான பருவமழை விலை அழுத்தங்களை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற கவலைகளை இது எழுப்பியுள்ளது. மழைப்பொழிவு குறைந்து, பயிர் பாதிப்பு மோசமடைந்தால், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வேகமாக உயரக்கூடும். இதன் விளைவாக, குடும்பங்கள் அதிக வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். கொள்கை வகுப்பாளர்களுக்கு, இது ஒரு கடினமான சவாலை உருவாக்குகிறது. அதே காலநிலைப் பாதிப்பானது பொருளாதார வளர்ச்சியை பலவீனப்படுத்துவதோடு, பணவீக்கத்தையும் அதிகரிக்கக்கூடும். ஒரே நேரத்தில் இரண்டு சிக்கல்களையும் கையாள்வது ஒரு நுட்பமான சமநிலைப்படுத்தும் செயலாகிறது.


விரைவான கான்கிரீட்மயமாக்கல் (Rapid concretisation) மற்றும் சுருங்கிவரும் பசுமைப் பரப்பு (loss of green cover) காரணமாக, இந்தியாவின் நகர்ப்புறங்கள் அதிகரித்துவரும் வெப்ப நிலைகளாக மாறி வருகின்றன. இருப்பினும், இந்தச் சுமை சமமாகப் பகிரப்படவில்லை. வசதியான குடும்பங்கள் சிறந்த வீட்டு வசதிகள் மற்றும் குளிரூட்டும் வசதிகள் மூலம் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில், ஏழைக் குடும்பங்கள் நெரிசல், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் நீண்டகால வெப்பத் தாக்கம் ஆகியவற்றை எதிர்கொள்கின்றன. இதன் விளைவாக, காலநிலை மாற்றம் நகரங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை விரிவுபடுத்துகிறது.


எல்-நினோ என்பது வெறும் வானிலை நிகழ்வு மட்டுமல்ல, அது ஒரு வளர்ச்சிக்கான சவாலும் ஆகும். வெப்பத்தைத் தாங்கக்கூடிய நகரங்கள், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சிறந்த நீர் மேலாண்மை ஆகியவற்றின் மூலம் இந்தியாவுக்கு வலுவான காலநிலை தழுவல் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. காலநிலை அபாயம் இப்போது ஒரு பொருளாதார அபாயமாக மாறியுள்ளது. மேலும், இதன் சுமை ஏழை மக்கள் மீதே மிகக் கடுமையாக விழுகிறது.


சுஷாந்த மகாபத்ரா, ஹைதராபாத்தில் உள்ள ICFAI உயர்கல்வி அறக்கட்டளையில் (ICFAI Foundation for Higher Education) பொருளாதாரம் கற்பிக்கிறார். மதன் மெஹர், சத்தீஸ்கரில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் அமிட்டி வணிகப் பள்ளியில் (Amity Business School) பொருளாதாரம் கற்பிக்கிறார்.


Original article : When El Niño becomes an economic crisis?. -Sushanta Mahapatra, Madan Meher

Share: