வரலாற்றுரீதியாக நெதர்லாந்து சந்தித்ததைப் போன்ற பல சவால்களை குஜராத்தின் கடற்கரையும் சந்தித்தது வருகிறது. அவற்றில் உவர்நீர் ஊடுருவல் (salinity intrusion), வறட்சி மற்றும் கடல் மட்டம் உயர்வு ஆகியவை அடங்கும். லட்சியமிக்க கல்பசார் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, நீர் பொறியியலில் உள்ள டச்சு நிபுணத்துவத்தை இந்தியா எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்து வருகிறது?
வறட்சி தொடர்பான பாதிப்புகளை எதிர்கொள்ளும் மாநிலமான குஜராத், 1900-ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 30 முறை தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது. முன்மொழியப்பட்ட கல்பசார் திட்டமானது, ஆண்டு முழுவதும் பாசனம், தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோகத்திற்குத் தண்ணீர் வழங்கக்கூடிய, நம்பகமான ஒரு பெரிய அளவிலான நன்னீர் நீர்த்தேக்கத்தை உருவாக்குவதன் மூலம், சௌராஷ்டிரா மற்றும் மத்திய குஜராத்தின் நீண்டகால நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய நெதர்லாந்து பயணத்தின் போது, வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் நீர் மேலாண்மை நடவடிக்கைகளில் உலகளாவிய அளவுகோலாகத் இருந்து வரும் நெதர்லாந்து நாட்டின் அஃப்ஸ்லூயிட்ஜிக் அணையையும் பார்வையிட்டார். மேலும், முன்மொழியப்பட்ட கல்பசார் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக இரு நாடுகளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஆனால், இந்தியாவின் மிகவும் லட்சியமான நீர் உள்கட்டமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த, டச்சு நீர் பொறியியலில் இந்தியா காட்டும் இந்த மிகுந்த ஆர்வத்திற்கு என்ன காரணம்? காம்பத் வளைகுடா மேம்பாட்டுத் (Khambhat Development Project) திட்டம் என்றும் அழைக்கப்படும் கல்பசார் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் யாவை? தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதுடன், இந்தத்திட்டத்தை செயலப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பலதரப்பட்ட நன்மைகள் யாவை?
குஜராத்தின் தண்ணீர் பற்றாக்குறையை கல்பசார் திட்டம் எவ்வாறு தீர்க்க முயற்சி செய்கிறது?
குஜராத் இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பளவில் 6 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது மற்றும் இதனை மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம்:
அ) மத்திய மற்றும் தெற்கு குஜராத் போன்ற பகுதிகள் வளமான, தொழில் செய்வதற்கு ஏற்ற முக்கிய பகுதிகளாகும்.
ஆ) சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் மேற்கு தீபகற்பம் மற்றும் உப்பு தன்மை கொண்ட சமவெளிகள் உள்ளன
c) வடக்கு குஜராத் பகுதியில் வடக்கு சமவெளிகள் உள்ளன.
குஜராத் மாநிலம் மழைப்பொழிவிற்கு தென்மேற்குப் பருவமழையையே நம்பியுள்ளது. தென்மேற்குப்பருவமழை குஜராத் குதிகளில் பெரும்பாலும் சீரற்ற முறையில் பரவியுள்ளது.
சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் வடக்கு குஜராத் பகுதிகள் ஒவ்வொரு 3-வது ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. முன்னரே குறிப்பிட்டபடி, குஜராத் ஒரு நாள்பட்ட வறட்சி பாதிப்புக்குள்ளாகும் மாநிலமாகும். குஜராத் அரசின் நீர்வளத் துறை கூற்றின்ப்படி, 1900-ஆம் ஆண்டிலிருந்து குஜராத் மாநிலம் 30 முறை தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது.
கம்பாத் வளைகுடாவில் இது முன்பு கேம்பே என்று அறியப்பட்டது. முன்மொழியப்பட்டுள்ள கல்பசார் திட்டம், சௌராஷ்டிரா மற்றும் மத்திய குஜராத் பகுதிகளின் நீண்டகால நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக, ஆண்டு முழுவதும் பாசனம், தொழில் மற்றும் வீட்டு உபயோகத்திற்குத் தேவையான நீரை வழங்கக்கூடிய, நம்பகமான மற்றும் பெரிய அளவிலான நன்னீர் தேக்கம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
2022-ஆம் ஆண்டு கல்பசார் அறிக்கையின்படி, இந்தத் திட்டம் உள்ளூர் கால்வாய்கள் மற்றும் நிலத்தடி நீரைப் புத்துயிர் (Replenish) பெறச் செய்து, தற்போதுள்ள 60-க்கும் மேற்பட்ட அணைகளுக்கு நன்னீரைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1986-ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் செயல் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்தத் திட்டம், தற்போது நெதர்லாந்தின் ஒத்துழைப்புடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் கம்பத் வளைகுடா கல்பசருக்கு ஏற்றது
மேலும், இந்தத்திட்டத்தின் சாத்தியக்கூறு காம்பத் வளைகுடாவின் புவியியல் அமைப்புடன் நெருக்கமாக தொடர்புடையது. அனைத்து இந்திய மாநிலங்களிலும் குஜராத் மிக நீண்ட கடற்கரையைக் (2,340.62 கி.மீ) கொண்டுள்ளது. காம்பத் வளைகுடாவானது சௌராஷ்டிரா பகுதியை குஜராத்தின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து பிரிக்கிறது. சூரத், பரூச் மற்றும் தஹேஜ் உள்ளிட்ட பல முக்கிய துறைமுகங்கள் அமைந்துள்ளன. மேலும், வரலாற்று ரீதியாகவும் இது இந்தியாவை மேற்கு ஆசிய நாடுகளுடன் இணைக்கும் முக்கிய கடல் வழித்தடமாக உள்ளது.
காம்பத் வளைகுடாவின் புவியியல் அமைப்பு, கல்பசார் அணைக்கு ஏற்றதாக உள்ளது. இந்தப்பகுதியில் 13 மீட்டர் உயரமான அலை ஏற்ற-இறக்க வேறுபாடு (Tidal Range) காணப்படுகிறது. Tidal Range என்பது தொடர்ச்சியாக ஏற்படும் உயர் அலை மற்றும் கீழே உள்ள அலை நிலைகளுக்கிடையேயான உயர வேறுபாட்டைக் குறிக்கிறது. மேலும், இந்தப்பகுதியில் வலுவான அலைநீர் ஓட்டங்கள் (Tidal Currents) காணப்படுகின்றன. அவற்றின் வேகம் பல நேரங்களில் வினாடிக்கு 3 மீட்டருக்கும் அதிகமாக பதிவாகிறது.
மேலும், இந்த வளைகுடாவின் தென்புறத்தில் 180 கி.மீ அகலமும், வடபுறத்தில் ஏறத்தாழ 5 கி.மீ அகலமும் கொண்ட அகன்ற முகத்துவாரம் உள்ளது. இந்த நில அமைப்பு, இதனை அணை கட்டுவதற்கு ஏற்ற இடமாக ஆக்குகிறது.
முக்கிய நோக்கங்கள் மற்றும் நன்மைகள்
கல்பசார் திட்டம் என்பது, குஜராத்தின் தண்ணீர் பற்றாக்குறையுள்ள சௌராஷ்டிரா பகுதியில் பாசனம், தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோகத்திற்காக தண்ணீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய திட்டமாகும்.
அணை மற்றும் நீர்த்தேக்க உள்கட்டமைப்பு
இந்தத் திட்டத்தில், அலதார் (கிழக்குப் பக்கம்) முதல் பவநகர் அருகே (மேற்குப் பக்கம்) வரை வளைகுடாவின் குறுக்கே 60.13 கி.மீ நீளமுள்ள அணை கட்டுவது அடங்கும். இதில் 26.7 கி.மீ நீளம் வளைகுடாவிலும் (கடல் பகுதி), மீதமுள்ள 33.43 கி.மீ நீளம் காம்பத் வளைகுடாவின் குறுக்கே உள்ள அருகிலுள்ள சாலை வரை இரண்டு கரைகளிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நன்னீர் சேமிப்பு மற்றும் நீர்ப்பாசனம்
திட்டத்தின் முன்-சாத்தியக்கூறு அறிக்கையின்படி, இந்த அணை 7800 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவுடன் உலகின் மிகப்பெரிய நன்னீர் நீர்த்தேக்கங்களில் ஒன்றை உருவாக்கும். இது சௌராஷ்டிராவின் 9 மாவட்டங்களுக்கு, மொத்தம் 10.54 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு பாசன நீரை வழங்கும்.
நதி ஒருங்கிணைப்பு மற்றும் நீர் திசைதிருப்பல்
இந்த நீர்த்தேக்கம், சபர்மதி, மாஹி, தாதர் மற்றும் நர்மதா ஆகிய நான்கு பெரிய ஆறுகளிலிருந்தும், வத்வான் போகவோ, லிம்ப்டி போகவோ, சுக்பதர், உதாவ்லி, கேரி, கேலோ மற்றும் கலுபார் ஆகிய ஏழு சிறிய ஆறுகளிலிருந்தும் நீரைப் பெறும். இதற்காக, நர்மதா ஆற்றின் கூடுதல் நீரை நீர்த்தேக்கத்திற்குத் திருப்பிவிடும் வகையில், அதன் மீதுள்ள பத்பூத் தடுப்பணையில் ஒரு மாற்றுக்கால்வாய் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் கடலோர நன்மைகள்
இந்தத்திட்டத்தின் மூலம் சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலத்தடி நீர் நிலை மேம்படும் என்றும், அலைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பாதுகாக்கப்படும் என்றும், கடலோரப் பகுதியில் உப்புத்தன்மை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத்திட்டத்தின் மதிப்பீடுகளின்படி 1.76 லட்சம் ஹெக்டேர் நிலம் மீட்கப்படும் எனத் தெரிகிறது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மீன்வளம், சுற்றுலா
சூரிய ஆற்றல் (1000 மெகாவாட்) மற்றும் காற்றாலை ஆற்றல் (1500 மெகாவாட்) மேம்பாட்டின் மூலம் கல்பசார் திட்டம் மிகப்பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனைக் கொண்டுள்ளது. இந்தத்திட்டத்தின் மூலம் ஆற்றல் தேவையான ஆற்றலை தானாக பூர்த்தி செய்யமுடியும். நன்னீர் தேக்கத்தை உருவாக்குவதன் மூலம் கடல்சார் மீன்பிடி முறைக்கு மாற்றாக நன்னீர் மீன் வளர்ப்பு அமையும். இதன் மூலம் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் மீன்களின் அளவு, ஆரம்பக் கட்டத்தில் 2,000 டன்களாக இருந்து, முழுமையான அளவாக வளர்ச்சி நிலையில் 20,000 டன்களாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப்பகுதியில் மேம்பாடு மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதையும் இந்தத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் இணைப்பு
கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் உள்ள மாவட்டங்களை இணைக்கும் வகையில், உபரி நீரை வெளியேற்றுவதற்கான வெள்ளக் கட்டுப்பாட்டுக் கருவி ஒன்றையும், 16 வழிச் சாலைகளையும், அதனுடன் 4 வழி நிரந்தர இரயில் போக்குவரத்துப் பாதையையும் அமைப்பதற்கும் திட்டங்கள் உள்ளன. இது வளைகுடாவைக் கடந்து செல்லும்போது பயணத் தூரத்தை 240 கி.மீ-லிருந்து 60 கி.மீ-ஆகக் குறைக்கும்.
திட்டத்தின் வரலாற்றுப் பின்னணி
குறிப்பாக, கல்பசார் திட்டம் 1955-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. அப்போது, சௌராஷ்டிரா பகுதியில் நில மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நெதர்லாந்து பொறியியல் ஆலோசகர்கள் (Netherlands Engineering Consultants (NEDECO)) என்ற டச்சு நிறுவனம், இது போன்ற ஒரு யோசனையை முன்வைத்தது. 1962-ல், மாநிலங்களவை உறுப்பினராக (1952-56) இருந்த போகிலால் ஷா, காம்பத் வளைகுடாவின் குறுக்கே அணை கட்டும் யோசனையை முன்மொழிந்து, அந்த நன்னீர் ஏரிக்கு காந்தியின் (Gandhisar) பெயரை பரிந்துரை செய்தார்.
அதைத் தொடர்ந்து, பொறியாளரான டாக்டர் வித்துபாய் படேல் மற்றும் ஐ.நா.வின் அலை ஆற்றல் நிபுணரான பேராசிரியர் ஈ.எம்.வில்சன் போன்ற ஆளுமைகள் இந்த யோசனைக்கு வடிவம் கொடுத்தனர். 1986-ல், குஜராத் அரசு ஒரு நன்னீர் நீர்த்தேக்கத்தையும், வளைகுடா முழுவதும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்கு முறைப்படி முன்மொழிந்தது. இருப்பினும், சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அனுமதி 2003-ஆம் ஆண்டில் தான் வழங்கப்பட்டது.
'அஃப்ஸ்லுய்ட்ஜிக்' ஏன் ஒரு உலகளாவிய அளவுகோலாகத் திகழ்கிறது?
நெதர்லாந்து நாட்டின் மூன்றில் ஒரு பகுதி கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளதால், அந்நாடு ஆரம்ப காலத்திலேயே நீர் மேலாண்மைத் திறன்களை மேம்பத்தியது. மேலும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அணைக்கட்டுகள், கரைகள் மற்றும் புயல் தடுப்பு அரண்கள் போன்ற அதிநவீன அமைப்புகளை உருவாக்கியது.
இவற்றுள், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் நில மீட்பில் அஃப்ஸ்லூயிட்ஜிக் அணை ஒரு உலகளாவிய அளவுகோலாகத் தனித்து நிற்கிறது. 1932-ல் கட்டப்பட்ட, 32 கி.மீ நீளமுள்ள இந்த அணை, நெதர்லாந்தில் உள்ள வாடன் கடலை ஐசெல்மீர் நன்னீர் ஏரியிலிருந்து பிரிக்கிறது. இது நெதர்லாந்தின் பெரும் பகுதிகளை வட கடலிலிருந்து பாதுகாப்பதுடன், நன்னீர் பாதுகாப்பு, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் சாலை வழியாக இணைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.
ஐசெல்மீர் ஏரிக்குத் தேவையான நீரில் 70 சதவீதம், ரைன் நதியின் துணை நதியான ஐசெல் ஆற்றிலிருந்தும், மீதமுள்ள நீர் மழைநீர், பிற ஓடைகள் மற்றும் சிறிய ஆறுகளிலிருந்தும் கிடைக்கிறது. தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 10,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஒரு அதிக வலிமை கொண்ட புயலின் போது ஏற்படும் அலைகளைத் தாங்கும் வகையில் அஃப்ஸ்லூயிட்ஜிக் நவீனமயமாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
உலகளாவிய அனுபவங்களும் கல்பசார் திட்டத்திற்க்கான எதிர்காலப் பாதையும்
குஜராத்தின் கடற்கரையானது, உவர்நீர் ஊடுருவல், வறட்சி மற்றும் கடல் மட்டம் உயர்வு உள்ளிட்ட, வரலாற்று ரீதியாக நெதர்லாந்து சந்தித்ததைப் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. இது போன்ற சூழல்களை கருத்தில் கொண்டுதான், தனது மிக முக்கிய மற்றும் பிரம்மாண்டமான நீர் உள்கட்டமைப்புத் திட்டமான 'கல்பசார் திட்டத்தை' (Kalpasar Project) செயல்படுத்த, டச்சு நீர் மேலாண்மைப் பொறியியல் தொழில்நுட்பத்தில் இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
மற்றொரு முக்கிய உதாரணம் தென் கொரியாவின் சேமங்கியம் திட்டமாகும். 1970-களின் உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் 1980-களின் மோசமான அறுவடைக்குப் பிறகு, 1991-ல் தொடங்கப்பட்டது. வளைந்து நெளிந்த கடற்கரை அமைப்பு, மென்சரிவான கடலடிப் பகுதி மற்றும் 6 மீட்டர் அளவிலான கடல் அலை ஆகியவை, இந்த கடல் அலை மீட்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குச் சாதகமான புவியியல் மற்றும் நீரியல் சூழல்களை வழங்கின.
தற்போது இந்தியாவிடம் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பும், பிற உலகளாவிய முன்னுதாரணங்களும் இருப்பதால், முக்கிய இலக்கை கொண்ட கல்பசார் திட்டத்தின் செயலாக்கம் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்பசார் திட்டம் சௌராஷ்டிரா மற்றும் குஜராத்தின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
Original article : How Kalpasar project seeks to improve socio-economic conditions of Gujarat’s Saurashtra. -Abhinav Rai