இந்தத் தரவுகளை ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப் பார்க்கும்போது, அது மக்கள் தொகை ஈவுத்தொகையின் (Demographic Dividend) விளிம்பில் இருக்கும் ஒரே மாதிரியான இந்தியாவை நமக்குக் காட்டவில்லை. மாறாக, வெவ்வேறு வேகங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் இரண்டு விதமான மக்கள்தொகை எதார்த்தங்களை வெளிப்படுத்துகிறது.
சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட 2024-ஆம் ஆண்டுக்கான மாதிரிப் பதிவு முறைமை அறிக்கை, மகிழ்ச்சிக்கும் அதே வேளையில் கவலைக்கும் காரணமான ஒரு மக்கள்தொகை மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. நாட்டின் பிறப்பு விகிதம் அதாவது ஒரு மக்கள்தொகையில் 1,000 பேருக்கு நிகழும் மொத்த பிறப்புகளின் எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டில் 21-ஆக இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில்1,000 பேருக்கு 18.3-ஆகக் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate (IMR)) 2014-2019-ஆம் ஆண்டில் 1,000 பேருக்கு 39-ஆக இருந்த நிலையில் இருந்து, 2024-ஆம் ஆண்டில் 24-ஆகக் குறைந்துள்ளது. இந்த முன்னேற்றங்கள், பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பொது சுகாதார முதலீட்டைப் வெளிக்காட்டுகின்றன. இருப்பினும், இந்தத் தேசிய அளவிலான சராசரி எண்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் உள்ள ஆழமான இடைவெளியை மறைக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் 36 என்ற அளவில் நாட்டின் அதிக உயர்ந்த குழந்தை இறப்பு விகிதம் (IMR) பதிவாகியுள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் குழந்தை இறப்பு விகிதம் தலா 35-ஆக உள்ளது. மறுபுறம், கேரளாவில் 8-ஆகவும்; தமிழ்நாடு, டெல்லி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் 11-ஆகவும் உள்ளது. சிறப்பாகச் செயல்படும் மற்றும் மோசமாகச் செயல்படும் மாநிலங்களுக்கு இடையிலான இந்த இடைவெளி, தொடர்ச்சியான தோல்விகளை கோடிட்டுக் காட்டுகிறது.
தரவுகளில் காணப்படும் இந்த ஒட்டுமொத்த முன்னேற்றங்களுக்கு, தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் (National Health Mission (NHM)) மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான மற்றும் குறிக்கோளுடன் கூடிய திட்டங்களே முக்கியக் காரணமாகும். இத்திட்டங்கள் நோய் எதிர்ப்புத் தடுப்பூசி போடும் பரப்பளவை விரிவுபடுத்தி, தடுக்கக்கூடிய குழந்தை மரணங்களைக் குறைத்துள்ளன. மேலும், மருத்துவமனை பிரசவங்களையும் மேம்படுத்தியுள்ளன. இருப்பினும், கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய நிலை இன்னும் தொடர்வது பொதுச் சுகாதாரக் உள்கட்டமைப்புகள் சீரற்ற முறையில் வளர்ந்துள்ளதையே காட்டுகிறது. இதனால் ஏழை மாநிலங்களும் மாவட்டங்களும் மற்ற பகுதிகளுக்கு இணையாக முன்னேற இன்னும் போராடி வருகின்றன. 2024-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, கிராமப்புறங்களில் குழந்தை இறப்பு விகிதம் (IMR) 1,000-க்கு 27-மரணங்களாக உள்ளது, ஆனால் நகர்ப்புறங்களில் இது 17-ஆக மட்டுமே உள்ளது. இந்த வேறுபாடானது மருத்துவ வசதிகளைப் பெறுதல், விழிப்புணர்வு மற்றும் தாய்ப்பால் ஊட்டச்சத்து ஆகியவற்றில் இன்னும் நீடித்து வரும் சமத்துவமின்மையைப் பிரதிபலிக்கிறது.
குழந்தை பிறப்பு விகிதம் குறித்த தரவுகளும்கூட, இந்தியா இரண்டு வெவ்வேறான நிலைகளில் இருப்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR), மக்கள்தொகை எண்ணிக்கையை நிலையாக வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற மாற்று நிலையைவிடக் குறைவாக, தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 1.9 என்ற அளவிலேயே உள்ளது. நாட்டின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதமாக டெல்லி 1.2 என்ற அளவைப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் 1.3 என்ற அளவில் உள்ளன. ஆனால், பீகார் மாநிலத்தின் கருவுறுதல் விகிதம் இன்னும் நாட்டின் மிக உயர்ந்த அளவாக 2.9-ஆக உள்ளது. இந்தத் தரவுகளைப் புறக்கணிப்பதன் விளைவுகள் மிகக் கடுமையானதாக இருக்கும். ஏனெனில், இந்தியாவின் மக்கள்தொகையில் தற்போது ஏறக்குறைய 10 சதவீதம் பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். இது பொருளாதார ரீதியாக முன்னேறிய பல மாநிலங்கள் மிக வேகமாக முதியவர்கள் வாழும் மாநிலங்களாக மாறி வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தத் தரவுகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும்போது, இந்தியா ஒட்டுமொத்தமாக ஒரே நேர்க்கோட்டில் மக்கள்தொகை ஈவுத்தொகையின் (Demographic Dividend) (அதாவது உழைக்கும் இளைஞர்கள் அதிகம் உள்ள காலம்) விளிம்பில் இருப்பதாகத் தெரியவில்லை; மாறாக, இரு வேறு வேகங்களில் பயணிக்கும் இரண்டு விதமான மக்கள்தொகை எதார்த்தங்களையே காட்டுகிறது. எனவே, கொள்கை வகுப்பாளர்கள் ஒட்டுமொத்த நாட்டின் 'சராசரி' அளவுகளை மட்டும் பார்த்துத் திருப்தியடைந்துவிடாமல், இந்த இரு வேறு எதார்த்தங்களை எதிர்கொள்ள முன்வர வேண்டும்.
Original link: