மாநிலங்களவை கட்சித் தாவல்கள், அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கேள்விகள்.

ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரசியலமைப்பின் 10-ஆவது அட்டவணையின் விதிகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான சமீபத்திய நிகழ்வு, இது குறித்து நீதிமன்றத்தின் தெளிவான விளக்கம் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறது.


ஆம் ஆத்மி கட்சியில் சில நாட்களுக்கு முன்னர் நிகழந்த சம்பவங்கள், மாநிலங்களவையில் அதன் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி, 2026 அன்று, பதவியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 7 பேர், அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின் விதிகளைப் பயன்படுத்தி, கட்சியின் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில்  இணைய முடிவு செய்துள்ளதாக வெளிப்படையாக  அறிவித்தனர்.



இந்த நிகழ்வு அனைவரின் அரசியல் கவனத்தை ஈர்த்திருந்தாலும், அதன் தாக்கங்கள்  கட்சி சார்ந்த அரசியலைத் தாண்டி செல்கின்றன. இது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் விளக்கம் குறித்தும், குறிப்பாக 10-வது அட்டவணையின்கீழ் உள்ள 'கட்சி இணைப்பு' (merger) விதிவிலக்கின் வரம்பு குறித்தும் முக்கியமான அரசியலமைப்பு சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது. மேலும், இந்த நிகழ்வு முற்றிலும் முன்னெப்போதும் நடக்காத ஒன்றும் அல்ல. இதற்கு முன்பும் மாநில அளவில் சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் காட்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிர சட்டமன்றத்திற்குள் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியின் கட்சி தாவல்கள்  முக்கியத்துவம் பெற்றன. இருப்பினும், தற்போதைய சூழல் தேசிய அளவில் நடைபெற்றதாலும், மாநிலங்களவை  உறுப்பினர்கள் கட்சி தாவலில் ஈடுபட்டிருப்பதாலும், அரசியலமைப்பு மற்றும் அரசியல் விளைவுகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


கட்சித் தாவல் தடைச் சட்டம் மற்றும் 'பிளவு' கோட்பாடு


1950-ஆம் ஆண்டில் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு,  103-வது பிரிவின்கீழ்,  குறிப்பிட்ட சில காரணங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்வதற்கு வழிவகை செய்கிறது. தகுதி நீக்கம் செய்வது குறித்த முடிவை, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கருத்தின் அடிப்படையில், குடியரசுத் தலைவர் இறுதி முடிவை அறிவிப்பார்.  1985-ஆம் ஆண்டின் 52-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 10-வது அட்டவணையானது, கட்சித் தாவல்கள் எனும் தொடர்ச்சியான பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்தக் கட்டமைப்பை விரிவுபடுத்தியது. மேலும், மாநிலங்களவைத் தலைவரால் தீர்மானிக்கப்பட வேண்டிய, உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கான மற்றொரு காரணத்தையும் 10-வது அட்டவணை சேர்த்தது. அரசியல் ஆதாயத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கட்சியை விட்டு வேறு கட்சிக்கு தாவுவதைத் தடுத்து, அவர்களுக்குத் தகுதி நீக்கத்தை தண்டனையாக வழங்குவதே கட்சித் தாவல் சட்டத்தின்   முக்கிய நோக்கமாகும்.



அதேநேரத்தில், அட்டவணையானது தொடக்கத்தில், பிரிவு 3-ன்கீழ் "கட்சிப் பிளவு" (split) மற்றும் பிரிவு 4-ன்கீழ் "கட்சி இணைப்பு" (merger) என்ற இரண்டு விதிவிலக்குகளை கொண்டுள்ளது. ஒரு சட்டமன்றக் கட்சியில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒரு தனிக்குழுவை  உருவாக்கும்போது ஏற்படும் பிளவை அங்கீகரித்த முதல் விதியானது, மே மாதம் 1990-ஆம் ஆண்டில் தேர்தல் சீர்திருத்தக் குழுவின் (Dinesh Goswami Committee) பரிந்துரைகள் மற்றும் 1999-ஆம் ஆண்டின் 170-வது இந்தியச் சட்ட ஆணையத்தின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், 2003-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 91-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் இந்த "பிளவு" விதிவிலக்கு நீக்கப்பட்டது. இந்த நீக்கமானது, கட்சிகளுக்குள் ஏற்படும் பிளவுகளைக் கட்சித் தாவல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு நியாயமான காரணமாக இனி ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தெளிவான மாற்றத்தைக் காட்டியது.


பத்தி 3 நீக்கப்பட்டதன் பின்னணியில் மிக ஆழமான அர்த்தம் உள்ளது. "பிளவு" என்ற கருத்து, அதுவரை மூல அரசியல் கட்சியைவிட, அவைக்குள் இருக்கும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓரளவிற்குத் தன்னாட்சியை மறைமுகமாக வழங்கியிருந்தது. அது நீக்கப்பட்டதன் மூலம், ஜனநாயகப் பொறுப்புக்கூறலின் மையப் புள்ளியாக விளங்கும் அரசியல் கட்சிக்குத் தான் முதன்மை அதிகாரம் உண்டு என்பதை நாடாளுமன்றம் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது.


2023-ஆம் ஆண்டு சுபாஷ் தேசாய் vs மகாராஷ்டிர ஆளுநரின் முதன்மைச் செயலாளர் (Subhash Desai vs Principal Secretary, Governor of Maharashtra) வழக்கில் உச்சநீதிமன்றமும் இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது.  வழக்கில், ஒரு சட்டமன்ற  உறுப்பினர்களுக்கும் அவர்களின் சொந்த அரசியல் கட்சிக்கும் இடையிலான உறவை துண்டிக்கும் வகையில் 10-வது அட்டவணையை விளக்குவதற்கு அரசியலமைப்பு அமர்வு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தேர்தல் வெற்றிக்குப் பிறகும், அரசியல் கட்சியானது தனது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து வழிநடத்தி கட்டுப்படுத்துகிறது என்பதை நீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் அழுத்தமாகக் கூறியுள்ளது.





கேள்விக்குரிய ‘இணைப்பு விதிவிலக்கு’ 


தற்போதைய சர்ச்சை, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையின் 4-ஆவது பத்தியை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதைப் பொறுத்தே அமைந்துள்ளது. இந்த விதி, அரசியல் கட்சிகள் தங்களை மற்றொரு கட்சியுடன் இணைத்துக் கொள்ளும்போது, சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கிறது. இங்கு எழும் முக்கியக் கேள்வி என்னவென்றால்: இத்தகைய இணைப்பை ஒரு சட்டமன்றக் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் மட்டுமே தன்னிச்சையாகத் தீர்மானித்து நடத்திவிட முடியுமா, அல்லது அதற்கு முன்னதாக அந்தப் பிரதான அரசியல் கட்சியின் தலைமை அல்லது பொதுக்குழு அத்தகையதொரு முடிவை எடுத்திருப்பது அவசியமா? என்பதாகும்.


4-ஆவது பத்தியை  மேலோட்டமாகப் படிக்கும்போது, ​​"பிரதான அரசியல் கட்சி" மற்றொரு அரசியல் கட்சியுடன் இணையும்போது இந்த விலக்கு பொருந்தும் என்று தெரிகிறது. எனவே, முக்கியத்துவம் என்பது ஒட்டுமொத்த அரசியல் கட்சியின் இணைப்பிற்குத்தான் கொடுக்கப்பட வேண்டுமே தவிர, வெறும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பலத்திற்கு மட்டும் அல்ல. அதன்படி, சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதலை ஒரு சட்டப்பூர்வமான அனுமானமாகக் கருதும் 4(2) விதியைத் தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடாது.  அப்படிப் பார்த்தால் அது ஒட்டுமொத்த அரசியல் அமைப்பின் முதன்மைத் தன்மையையே மாற்றி அமைத்துவிடும். அவ்வாறு செய்வது, அரசியல் சாசனத்தின் அடிப்படை வடிவமைப்பையே தலைகீழாக மாற்றி, ஒட்டுமொத்த அரசியல் கட்சியின் விதியை ஒரு சட்டமன்றக் குழுவே தீர்மானிக்க வழிவகுத்துவிடும்.


இந்த விளக்கம், முன்னதாக இருந்த "கட்சிப் பிளவு" (Split) என்ற விதிவிலக்கை நீக்குவதற்காக நாடாளுமன்றம் தனது அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுத்த முடிவோடு ஒத்துப்போவதாக அமையும். முன்பு அமலில் இருந்த அந்தப் பிளவு விதியின்படி, வெறும் மூன்றில் ஒரு பங்கு (1/3) உறுப்பினர்கள் பிரிந்தால் கூட அது சட்டபூர்வமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறியிருக்கலாம், ஆனால் கொள்கை ஒன்றுதான், சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் ஏற்படும் உட்கட்சி ரீதியான கருத்து வேறுபாடுகள், ஒட்டுமொத்த அரசியல் கட்சியின் தனித்துவத்தையும் தொடர்ச்சியையும் மீறிச் செயல்பட முடியாது.


தொழில்நுட்ப நுணுக்கங்களை  தாண்டி


கட்சித் தாவல் தடைச் சட்டம், தனிநபர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்துவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, கட்சி அமைப்பின் ஒருமைப்பாட்டையும், அதன் வெளிப்படாக ஜனநாயகத்தில் 'எதிர்க்கட்சி' என்ற அமைப்பையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இது அரசியல் ரீதியாகக் கட்சிகள் மாறுவதை முற்றிலும் தடை செய்யவில்லை என்றாலும், அத்தகைய மாற்றங்களை அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்குக் கட்டுப்படுத்துகிறது.


சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள கட்சிகள், தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியின் அடையாளத்தை நடைமுறையில் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முடியுமா என்பது குறித்து நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை ஆம் ஆத்மி கட்சியின் சமீபத்திய நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த பதிலானது நாடாளுமன்ற ஜனநாயகத்தில்   மிக ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும்.


பாடலாசிரியரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜாவேத் அக்தர் ஒருமுறை மாநிலங்களவையில் குறிப்பிட்டது போல, ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான முக்கிய வேறுபாடு எதிர்க்கட்சியின் இருப்பில்தான் உள்ளது. இந்த எதிர்க்கட்சியைத்தான் 10-வது அட்டவணை பாதுகாக்க முயல்கிறது. ஆம் ஆத்மி கட்சி, தனது ஏழு "இணைக்கப்பட்ட" நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையை எதிர்த்து, 10-வது அட்டவணையின் 6-வது பத்தியின் கீழ்மாநிலங்களவைத் தலைவரை அணுகியுள்ளது.


கட்சிகள் இணைவதற்கான விதிவிலக்குகள் எவ்வாறு விளக்கப்படப் போகின்றன என்பது, குறிப்பாக எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான உயிர்ச்சக்திக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு இல்லாத நிலையில், இந்த விவகாரம் மிக விரைவில் இந்திய உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான இறுதித் தீர்மானத்தை நாட வேண்டியிருக்கும். இறுதியாக, இந்த அரசியலமைப்புச் சட்ட ரீதியிலான தீர்ப்பு, இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டமைப்பிற்குள் அரசியல் கட்சிகளின் முதன்மைப் பங்கினைப் பாதுகாக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


வன்ஷஜ் ஆசாத், வழக்கறிஞர், தற்போது உச்சநீதிமன்றத்தில் சட்ட எழுத்தர்-மற்றும்-ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

Original link:

Rajya Sabha defections, constitutional questions.


Share: