மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு இடையில், கடந்த சில வாரங்களாக இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாணய மதிப்பின் இந்தச் சரிவு ஒரு ஆழமான கேள்வியை எழுப்பியுள்ளது: ஒரு நாட்டின் நாணய மதிப்பு பலவீனமடைவது எப்போது ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியாக மாறுகிறது?
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ரூபாயின் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, செவ்வாய்க்கிழமை மே மாதம் 26-ஆம் தேதியன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 0.16 சதவீதம் சரிந்து 95.38 என்ற அளவில் தொடங்கியது.
கடந்த சில வாரங்களாக ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ள நிலையில், அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) தலையிட்டு ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தடுக்க வேண்டுமா, அல்லது சந்தை நிலவரப்படி அதன் உண்மையான மதிப்பை அடைய அப்படியே விட்டுவிட வேண்டுமா என்று பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர்.
எனவே, ரூபாயின் சரிவு ஒரு ஆழமான கேள்வியை எழுப்பியுள்ளது. பலவீனமடையும் ஒரு நாணயம் எப்போது நெருக்கடியாக மாறுகிறது? ஒரு பொருளாதாரம் இறக்குமதிகளுக்கு நிதியளிக்க முடியாமல், அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்க முடியாமல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மற்றும் பொது நம்பிக்கையைத் தக்கவைக்க முடியாமல் போகும்போது ஒரு நெருக்கடி தொடங்குகிறதா? இதை நாம் இன்னும் விரிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு நாணயத்தை உண்மையில் எது வலிமையாக்குகிறது?
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் பரிமாற்ற விகிதம், முக்கியமாக அந்நியச் செலாவணி (forex market) சந்தைகளில் இரு நாணயங்களுக்குமான தேவையைப் பொறுத்து மாறுகிறது. எண்ணெய், தங்கம், உரங்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் பிற இறக்குமதிப் பொருட்களை வாங்குவதற்கு இந்தியாவிற்கு அதிக டாலர்கள் தேவைப்படும்போது, டாலருக்கான தேவை அதிகரிக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது, டாலரின் அளிப்பு பலவீனமடைகிறது. இதன் விளைவாக, ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது.
ரூபாயின் மீதான தற்போதைய அழுத்தம், உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள், மூலதன வெளியேற்றம், அதிகரித்து வரும் தங்க இறக்குமதி மற்றும் விரிவடைந்து வரும் வர்த்தப் பற்றாக்குறை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. ரூபாய் வீழ்ச்சியடைவது மட்டுமல்லாமல், அது ஒரு நெருக்கடியான சூழலையும் உணர்த்துகிறது. ரூபாயைச் சரிசெய்ய அனுமதிக்காவிட்டால், அந்த அழுத்தம் மறைந்துவிடாது. மாறாக, அது அந்நியச் செலாவணிக் கையிருப்பு, பணவீக்கம், வட்டி விகிதங்கள் அல்லது இறக்குமதியைக் குறைத்தல் போன்ற பிற துறைகளுக்கு நகர்கிறது.
இதனால்தான் நாணய வலிமை என்ற கருத்தை மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது. அது அதிக பெயரளவு மதிப்பைப் பற்றியது அல்ல. அது நிலைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் உலகப் பொருளாதார பாதிப்புகளைத் தாங்கும்திறன் ஆகியவற்றைப் பற்றியது. எனவே, உண்மையான கேள்வி என்னவென்றால், நமது பொருளாதாரம் இந்த அதிர்ச்சியைத் தாங்குமா என்பதுதான். ஒரு நாடு தனது நாணய மாற்று விகிதத்தை எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதுதான் இந்த முழு செயல்முறைக்கும் மிக முக்கியமானதாக அமைகிறது.
இந்தியாவின் நாணய மாற்று விகித அமைப்பு
இந்தியாவின் நாணய மாற்று விகித அமைப்பு இரண்டு அதிகபட்ச நிலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இதில் முதலாவது 'தூய்மையான மிதப்பு நிலை' (Pure Float) ஆகும். இந்த முறையில் ஒரு நாட்டின் நாணய மதிப்பு சந்தை சக்திகளுக்கு (தேவை மற்றும் விநியோகம்) ஏற்ப சுதந்திரமாக மாற அனுமதிக்கப்படும். இதற்கு நேர்மாறாக, 'நிலையான மாற்று விகித' (Fixed or Pegged Exchange Rate) முறையில், மத்திய வங்கி தனது நாட்டு நாணயத்தின் மதிப்பை மற்றொரு நாட்டின் நாணயத்திற்கு எதிராகவோ அல்லது பல நாணயங்களின் கூட்டு மதிப்புக்கு எதிராகவோ ஒரு குறிப்பிட்ட அளவில் நிலையாக வைத்திருக்கக் கடமைப்பட்டிருக்கும்.
இந்தியா இந்த இரண்டு மாதிரிகளையும் பின்பற்றுவதில்லை. மார்ச் மாதம் 1993-ஆம் ஆண்டு முதல், இந்தியா சந்தையினால் தீர்மானிக்கப்படும் மாற்று விகித முறையைக் கொண்டு வந்துள்ளது, அதே நேரத்தில் தேவைப்படும்போது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இதில் தலையிடும். நடைமுறையில், இது 'நிர்வகிக்கப்படும் மிதப்பு நிலை' (Managed Float) என்று அழைக்கப்படுகிறது. அதாவது ரூபாய் மதிப்பு மாற அனுமதிக்கப்படும், ஆனால் அது திடீரென வீழ்ச்சியடையாமல் ரிசர்வ் வங்கி பாதுகாக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 96 அல்லது 97 என்ற ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தொடும்போது, எந்த விலை கொடுத்தாவது அதை ரிசர்வ் வங்கி பாதுகாக்கும் என்று சந்தை நம்பத் தொடங்கினால், அவர்கள் மத்திய வங்கியின் திறனைச் சோதிக்க ஆரம்பிக்கலாம். இதனால் இறக்குமதியாளர்கள் டாலர்களை உடனே வாங்க முற்படலாம், ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் கிடைத்த டாலர் வருவாயை இந்திய ரூபாயாக மாற்றுவதைத் தள்ளிப்போடலாம் மற்றும் வர்த்தகர்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படத் தொடங்கலாம். இது, ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்த நினைக்கும் அதே அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும்.
சமீபத்திய புள்ளிவிவரங்கள் இத்தகைய நிர்வாகத்தினால் ஏற்படும் சுமையைக் காட்டுகின்றன. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Foreign Exchange Reserves) கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 728.49 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனை அளவை எட்டியிருந்தது. ஆனால், மே மாதம் 8-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி அது 696.99 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது. இதில் அந்நிய நாட்டு நாணயச் சொத்துக்கள் (Foreign Currency Assets (FCA)) சுமார் 552.39 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
இவை பொருளாதார நெருக்கடிக்கான புள்ளிவிவரங்கள் அல்ல. இந்தியாவிடம் இன்னும் கணிசமான அளவு கையிருப்புப் பாதுகாப்பு உள்ளது. ஆனால், ரூபாய் மீதான அழுத்தம் உண்மையானது என்பதை இது காட்டுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பை, அதன் தற்போதைய சந்தை விலையை மட்டும் பார்த்துப் புரிந்துகொள்ள முடியாது. அதனுடன் சேர்த்து அந்நியச் செலாவணி கையிருப்பு, ரிசர்வ் வங்கியின் முன்கூட்டிய ஒப்பந்தப் புத்தகம், கச்சா எண்ணெய் விலைகள், அந்நிய வெளிநாட்டு முதலீடுகள் (FPI) மற்றும் நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (CAD) ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். இந்தக் குறியீடுகள்தான் அழுத்தம் எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
ரூபாயின் மீது அழுத்தம் கொடுக்கும் பல காரணிகள்
இந்திய ரூபாயின் தற்போதைய மதிப்பு வீழ்ச்சிக்கு ஒரே ஒரு காரணம் மட்டும் அல்ல. பல அழுத்தங்கள் ஒன்றாகச் சேர்ந்து இந்த வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கச்சா எண்ணெய்
முதலாவது காரணம், கச்சா எண்ணெய். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் ஏறக்குறைய 90 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்கீழ் (Ministry of Petroleum and Natural Gas (MoPNG)) இயங்கும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Petroleum Planning & Analysis Cell (PPAC)) தகவல்படி, 2025-26 நிதியாண்டில் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு 144.009 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது, இறக்குமதிச் செலவு அதிகரிக்கிறது, பணவீக்க அபாயங்கள் கூடுகின்றன, மேலும் நடப்புக் கணக்கின் மீதான அழுத்தமும் அதிகரிக்கிறது. உதாரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியா வாங்கிய கச்சா எண்ணெயின் அளவு, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4.3 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்ததன் காரணமாக, இறக்குமதிச் செலவு 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதால், பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
மொத்த இறக்குமதி மதிப்பு மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டில் 14.45 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டில் 17.90 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. நிகர இறக்குமதி மதிப்பு 8.911 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 13.469 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.
மூலதன வெளியேற்றம்
அழுத்தத்திற்கான இரண்டாவது காரணி மூலதன வெளியேற்றமாகும் (capital outflow). உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர். மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டில் 5.08 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வெளிநாட்டு முதலீடு, ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டில் 5.64 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டு வரவுகளும் கடுமையாகக் குறைந்து, வலுவான நிகர வெளியேற்றத்தைக் காட்டுகின்றன. இது, சமீபத்திய மிகப்பெரிய எதிர்மறையான வெளிநாட்டு நிறுவன முதலீட்டு நகர்வுகளில் ஒன்றாகத் தோன்றுகிறது.
டாலர் முறை
மூன்றாவது காரணம், அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கம் ஆகும். உலகளாவிய நிதிச் சந்தையின் மையமாக டாலர் மட்டுமே உள்ளது. கச்சா எண்ணெயின் விலையும் டாலரிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவும்போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான டாலர் சொத்துக்களை நோக்கித் திரும்புகின்றனர். அமெரிக்காவின் மத்திய வங்கியான அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் (US Federal Reserve) தனது வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்கும் போதோ, அல்லது உலக முதலீட்டாளர்கள் அபாயங்களை எதிர்கொள்ளத் தயங்கும் போதோ, வளரும் சந்தைகளால் சந்தைச் சுழற்சியை வழிநடத்த முடியாது. அவர்கள் டாலரின் போக்கைப் பின்தொடர மட்டுமே முடியும்.
இதுதான் உலகப் பொருளாதாரத்தின் கசப்பான உண்மை. இந்தியா பெரிய நாடுதான், ஆனால் அதனால் டாலர் சுழற்சியைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால் அந்தச் சுழற்சியின் தாக்கத்தை நிர்வகிக்க முடியும், ஆனால் போக்கின் நிலையை அதனால் கட்டுப்படுத்த முடியாது.
இந்தியா தற்போது ஒரு கடுமையான நாணய நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை, ஆனால் புறக்கணிக்க முடியாத எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. சமீபத்திய வர்த்தகத் தரவுகள் அதற்கான காரணத்தைக் காட்டுகின்றன. 2025-26-ஆம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்தப் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி, முந்தைய ஆண்டைவிட 4.2 சதவீதம் அதிகரித்து, 860.09 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இறக்குமதி அதைவிட வேகமாக 6.5 சதவீதம் அதிகரித்து, 979.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 2024-25-ஆம் நிதியாண்டில் 94.7 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2025-26-ஆம் நிதியாண்டில் 119.3 பில்லியன் அமெரிக்க டாலராக விரிவடைந்துள்ளது.
தஙகத்தின் இறக்குமதி
தங்க இறக்குமதியும் கவலையை அதிகரிக்கும் மற்றொரு காரணியாக உள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி செலவு 71.98 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இயந்திரங்களை (Machinery) இறக்குமதி செய்வது எதிர்கால உற்பத்தியைப் பெருக்க உதவும். ஆனால், தங்கம் இறக்குமதி செய்யம்போது நாட்டின் டாலர்கள் வெளியேறுகின்றனவே தவிர, நேரடியாக ஏற்றுமதியை உருவாக்கும் எந்தவொரு சொத்தும் இங்கு உருவாவதில்லை.
இதுவே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்த விவாதங்களில் தங்கத்தை மிக முக்கியமான ஒன்றாக மாற்றுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது அத்தியாவசியமானது, ஆனால் தங்க இறக்குமதியை நாம் தவிர்க்க முடியும். ரூபாயின் மதிப்பு பலவீனமடையும் போது, பொதுமக்கள் அல்லது முதலீட்டாளர்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க அதிக தங்கத்தை வாங்குகிறார்கள். ஆனால், இந்தச் செயல் அவர்கள் பயப்படும் அதே ரூபாய் வீழ்ச்சிக்குத் தங்களை அறியாமலேயே மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துவிடுகிறது. அதிக தங்க இறக்குமதி என்பது டாலருக்கான தேவையை அதிகரிக்கும், டாலரின் தேவை அதிகரித்தால் அது ரூபாயின் மதிப்பை மேலும் பலவீனப்படுத்தும். இந்த அழுத்தங்களே அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கின்றன.
மண்டெல்-ஃபிளெமிங் மும்முனைச் சிக்கல்
பொருளாதார வல்லுநர்கள் 'சாத்தியமற்ற மும்மை' (impossible trinity) அல்லது 'மண்டெல்-ஃபிளெமிங் மும்முனைச் சிக்கல்' (Mundell-Fleming trilemma) என்று அழைக்கும் ஒரு நிலையை இந்திய ரிசர்வ் வங்கி கையாண்டு வருகிறது. எந்தவொரு மத்திய வங்கியாலும் ஒரே நேரத்தில் நிலையான நாணய மாற்று விகிதத்தைப் பராமரிப்பது, மூலதனத்தின் தடையற்ற இயக்கத்தை அனுமதிப்பது மற்றும் சுதந்திரமான பணவியல் கொள்கையைத் தக்கவைத்துக் கொள்வது ஆகிய மூன்றையும் செய்ய முடியாது.
இதற்குச் சரியான தீர்வு, மாற்று விகித மாற்றங்களை ஒரு ஒழுங்குமுறைக்குள் நிர்வகிப்பதே தவிர, நமக்குப் பழகிப்போன ஒரு குறிப்பிட்ட மாற்று விகிதத்தை மட்டுமே பாதுகாக்க முயல்வது அல்ல. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை 90 அல்லது 95 என்ற அளவில் தக்கவைக்க, ரிசர்வ் வங்கி தன்வசம் உள்ள அந்நியச் செலாவணி இருப்பை (Forex Reserves) செலவழித்தால், எதிர்காலத்தில் வெளிப்புறப் பொருளாதார அதிர்ச்சிகள் ஏற்படும்போது நம்மைப் பாதுகாக்கும் அந்த முக்கியக் கேடயத்தையே நாம் பலவீனப்படுத்தும் அபாயம் ஏற்படும். அதேபோல, வெளிநாட்டு மூலதன ஈர்ப்பை அதிகரிப்பதற்காக வட்டி விகிதங்களை உயர்த்தினால், அது நாட்டின் உள்நாட்டு முதலீடுகளையும், கடன் வளர்ச்சியையும் முடக்கிவிடும்; இந்த இழப்பை நம் பொருளாதாரத்தால் தாங்கிக்கொள்ள முடியாது.
ஒரு சீரான திட்டமிடப்பட்ட தலையீடே சிறந்த அணுகுமுறையாக இருக்கலாம் என்றாலும், இதற்கான வலுவான தீர்வு கட்டமைப்பு சார்ந்ததே ஆகும். இந்தியா கச்சா எண்ணெய் மீதான தனது சார்பைக் குறைக்க வேண்டும், உள்நாட்டு எரிசக்தி இருப்பை விரிவாக்க வேண்டும், தங்க மறுசுழற்சியை ஊக்குவிக்க வேண்டும், நிதிச் சேமிப்புகளை அதிகரிக்க வேண்டும், வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதித் திறனை உயர்த்த வேண்டும், தவிர்க்கக்கூடிய இறக்குமதிகளைக் குறைக்க வேண்டும் மற்றும் நிலையான நீண்டகால வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். ரூபாயின் மதிப்பை ரிசர்வ் வங்கி மட்டுமே நிலைநிறுத்திவிட முடியாது. அதற்கு நாட்டின் வலுவான உற்பத்தித் தளத்தின் ஆதரவு தேவை.
எனவே, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது என்பது ஒரு தோல்வியும் அல்ல, அதேசமயம் அது முற்றிலும் பாதிப்பில்லாத ஒன்றும் அல்ல. அது ஒரு எச்சரிக்கை, ஒரு சுய-சீரமைப்பு மற்றும் ஒரு சோதனை ஆகும். நெருக்கடியின் போது வளையும் ஒரு நாணயம், அந்தச் சூழ்நிலைக்குத் தேவையானதைத்தான் செய்கிறது. இங்கிருக்கும் சவால், ஒவ்வொரு வீழ்ச்சியையும் தடுப்பது அல்ல; மாறாக அந்த வீழ்ச்சி ஒரு பொருளாதாரப் பேரழிவாக மாறிவிடாமல் தடுப்பதும், அத்தகைய நெருக்கடிகள் அடிக்கடி ஏற்படுவதைக் குறைப்பதற்கான வலுவான பொருளாதார அடித்தளங்களை உருவாக்குவதுமே ஆகும்.
Original link:
Is a weakening rupee always a sign of economic failure?