அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு இடையில், கடல்சார்-பாதுகாப்பு, எரிசக்தி சார்ந்த கவலைகள், முக்கிய கனிமங்கள் மற்றும் இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்க, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் டெல்லியில் ஒரு கூட்டமைப்பின்கீழ் சந்திக்கின்றனர். இது குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை பின்வருமாறு.
குவாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை அன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ராஜதந்திர சந்திப்பு நடைபெறுவது இது 11-ஆவது முறையாகும்.
ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் தொகுத்து வழங்குவார். இதில் ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வாங், ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தச் சந்திப்பில் முக்கியமான கனிமங்கள், கடல்சார் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, கடல்சார் மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இந்த சந்திப்பின் போது முக்கியமாகக் விவாதிக்கப்படக் கூடிய முதன்மையான பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
குவாட் (Quad) என்றால் என்ன?
2004-ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து, பேரிடர் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு முறைசாரா அமைப்பாக ஒன்றிணைந்தன. 2007-ஆம் ஆண்டில், அப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quadrilateral Security Dialogue) என்ற அமைப்பின் மூலம் இந்தக் கூட்டணிக்கு ஒரு அரசியல் வடிவத்தைக் கொடுத்தார். இது பொதுவாக ‘குவாட்’ (Quad) என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாததாலும், ‘Quad’ என்பது சீனாவுக்கு எதிரான ஒரு அணி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற குற்றச்சாட்டுகளாலும் இந்த கூட்டமைப்பிற்கு ஆரம்பகாலக் குழு தடைபட்டது. உறுப்பு நாடுகளிடையே உத்தி சார்ந்த முன்னுரிமைகள் வேறுபட்டதால், ஆரம்பக் கட்டத்திற்குப் பிறகு இந்தக் குழு படிப்படியாகத் தனது வேகத்தை இழந்தது. பின்னர் 2017-ஆம் ஆண்டில், சீனாவின் வளர்ந்து வரும் சவால்களை மீண்டும் எதிர்கொள்ளும் நோக்கில், இந்த நான்கு நாடுகளும் 'குவாட்' அமைப்பிற்கு மறுவடிவம் கொடுத்து, அதன் இலக்குகளையும் பரவலாக்கின.
இது பாரம்பரிய கூட்டணிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
குவாட் ஒரு பல நாடுகளை கொண்ட ஒரு வழக்கமான அமைப்பைப் போல கட்டமைக்கப்படவில்லை. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.நா.வைப் போல இதற்கு ஒரு செயலகமோ அல்லது நிரந்தரமான முடிவெடுக்கும் அமைப்போ இல்லை. மாறாக, இது உறுப்பு நாடுகளுக்கு இடையேயான தற்போதைய ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவதிலும், அவற்றின் பகிரப்பட்ட கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளது. மேலும், நேட்டோவைப் (North Atlantic Treaty Organization (NATO)) போல் இல்லாமல், குவாட் அமைப்பில் கூட்டுப் பாதுகாப்புக்கான விதிகள் இல்லை. அதற்குப் பதிலாக, உறுப்பு நாடுகள் தங்களின் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்த, உத்திசார் உரையாடல் மற்றும் கூட்டு இராணுவப் பயிற்சிகளைச் சார்ந்துள்ளன.
உறுப்பு நாடுகள் சீனாவுடனான பொருளாதார உறவுகளையும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் வெளிப்படுத்தி வரும் நிலையில், ஆய்வாளர்கள் அதன் நீண்டகால உத்திசார் ஒருங்கிணைப்பு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். 2017-ஆம் ஆண்டில் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் குவாட் அமைப்பு புத்துயிர் பெற்றபோதிலும், உறுப்பு நாடுகள் முழுவதும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், சுமைப் பகிர்வு குறித்த விவாதங்களும், இந்த அமைப்பின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை அவ்வப்போது தூண்டி வருகின்றன. இது, இந்த அமைப்பின் வேகத்தைத் தக்கவைப்பதில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.
Quad- அமைப்பின் நோக்கங்கள் யாவை?
2020-ஆம் ஆண்டில், இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் மலபார் கடற்படைப் பயிற்சிகள் ஆஸ்திரேலியாவையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட்டன. இது, 2017-ஆம் ஆண்டில் குவாட் அமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் முதல் அதிகாரப்பூர்வக் கூட்டமைப்பாகவும், 10-ஆண்டுகளுக்கு மேலாக இந்த நான்கு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் கூட்டு இராணுவப் பயிற்சியாகவும் அமைந்தது. மார்ச் மாதம் 2021-ஆம் ஆண்டில், குவாட் (Quad) அமைப்பு நாடுகளின் தலைவர்கள் காணொளி வாயிலாகச் சந்தித்து, பின்னர் 'The Spirit of the Quad' என்ற தலைப்பில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். அது, அந்த அமைப்பின் அணுகுமுறையையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டியது. முதல் நேரடிக் கூட்டம் அதே ஆண்டின் பிற்பகுதியில் வாஷிங்டனில் நடைபெற்றது.
அதன் பின்னர், குவாட் அமைப்பின் செயல்திட்டம் கடல்சார் பாதுகாப்பைத் தாண்டி, முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகள், இணையப் பாதுகாப்பு, குறைமின்கடத்தி ஒத்துழைப்பு, முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டு விரிவடைந்துள்ளது. உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்த போர்கள் உள்ளிட்ட சமீபத்திய புவிசார் அரசியல் சூழல்களும், கொரோனா பெருந்தொற்றின்போது வெளிப்பட்ட விநியோகச் சங்கிலி பாதிப்புகளும், பொருளாதார மீள்திறன் மற்றும் ராஜதந்திர ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மீது இந்த அமைப்பின் கவனத்தை கூர்மைப்படுத்தியுள்ளன.
இருப்பினும், குவாட் அமைப்பின் கண்ணோட்டத்தில் கடல்சார் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்தோ-பசிபிக் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்கள், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் குறித்த கவலைகள் மற்றும் அப்பகுதியில் சீனாவின் விரிவடைந்து வரும் இராணுவ மற்றும் கடல்சார் இருப்பு குறித்து உறுப்பு நாடுகளிடையே நிலவும் பாதிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது இவை முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த நான்கு நாடுகளும் பேரிடர் நிவாரணம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகள் ஆகியவற்றிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன.
சீனா குறித்த பாதுகாப்பு கவலைகள் அதிகரித்த போதிலும், குவாட் உறுப்பு நாடுகள் இந்த அமைப்பை நேட்டோவைப் (NATO) போன்ற ஒரு முறையான இராணுவக் கூட்டணியாக மாற்றுவதைத் தவிர்த்துள்ளன. இந்த நெகிழ்வுத்தன்மை, டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றது உட்பட உறுப்பு நாடுகளுக்குள் ஏற்படும் அரசியல் மாற்றங்களை இந்தக் கூட்டமைப்பு சுமுகமாகக் கையாளுவதற்கும் உதவியாக இருந்தது.
மேலும், தென்கொரியா, நியூசிலாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பிற நாடுகளையும் உள்ளடக்கிய 'குவாட் பிளஸ்' (Quad Plus) என்ற அமைப்பின் மூலம் தங்களது கூட்டாண்மையை விரிவுபடுத்த குவாட் (Quad) உறுப்பு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
Original link:
Quad foreign ministers meet in Delhi today: What is the Quad and what are its objectives?