ந்தியா தனது சுதந்திரத்திற்குப் பிறகு பிரிட்டிஷ் காலனித்துவ காலப் பட்டங்களை (Colonial titles) ஒழித்தது. ஆனால், பொதுச் சேவையைப் பாராட்டி கௌரவிப்பதைக் கைவிடாமல், அதற்கென ஒரு குடிமக்கள் விருதுகள் முறையை (Civilian awards system) உருவாக்கியது. இந்த விருது வழங்கும் முறை, நம் நாட்டின் ஜனநாயகத்தின் (Democracy) வளர்ச்சிக்கு ஏற்ப இன்றும் தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டே வருகிறது.
"யாராலும் சேவை செய்ய முடியும் என்பதால், ஒவ்வொருவரும் மகத்தானவராக ஆக முடியும்," என்று மார்ட்டின் லூதர் கிங் (Jr) ஒருமுறை கூறினார். மகாத்மா காந்தியும் சேவையைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டதாவது, "பிறருக்குச் சேவை செய்வதில் உங்களை இழப்பதே, உங்களைக் கண்டறிவதற்கான சிறந்த வழி" என்று அவர் வலியுறுத்தினார். ஒரு வெற்றிகரமான ஜனநாயகம், சேவை மனப்பான்மையைப் பொது வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கச் செய்கிறது. பத்ம விருதுகள், பொதுச் சேவையைக் கௌரவிப்பதன் மூலம் இந்த ஜனநாயக இலட்சியத்தை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், உயரிய குடிமகன் விருது (civilian awardees) பெறுபவர்களின் பெயர்கள் பொதுமக்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், சில சமயங்களில் சர்ச்சையையும் ஏற்படுத்தினாலும் இந்த விருதுகளின் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வரலாறு, சட்ட ரீதியான சவால்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் ஆகியவை பொதுமக்களின் மனதில் பெரிய அளவில் இடம்பெறுவதில்லை.
அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதங்கள்
அரசியலமைப்பு நிர்ணய சபை, பத்ம விருதுகள் குறித்து குறிப்பாக விவாதிக்கவில்லை. பிரிட்டிஷாரால் வழங்கப்பட்ட பட்டங்களை ஒழிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையே இந்தச் சபையில் இருந்தது. அடிப்படை உரிமைகள் மீதான துணைக் குழுவின் அறிக்கையின்படி, அத்தகைய காலனித்துவப் பட்டங்கள் — அவை தனிப்பட்டவையாக இருந்தாலும் சரி அல்லது பரம்பரையாக வருபவையாக இருந்தாலும் சரி குடிமக்களிடையே செயற்கையான வேறுபாடுகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், பல்வேறு சமத்துவமின்மைகளையும் ஏற்படுத்தின. பொது வாழ்க்கையைச் சீர்குலைப்பதற்காகப் பட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் சர்தார் வல்லபாய் படேல் வாதிட்டார். இந்த விவாதங்கள், அரசு பட்டங்களை வழங்குவதைத் தடைசெய்யும் அரசியலமைப்பின் 18-வது பிரிவுக்கு வழிவகுத்தன. இதன் மூலம், மற்றவர்களைவிட எந்த ஒரு வர்க்கமும் அதிக சமத்துவம் கொண்டதாக இருக்க முடியாது என்று குடியரசுக்கு மீண்டும் உறுதி அளிக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு முந்தைய பட்டங்களைத் தொடர்வதற்கு கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், சட்டமன்றம் ஓரளவு நெகிழ்வுத்தன்மையைக் காட்டியது. முதலாவதாக, இராணுவ மற்றும் கல்விச் சிறப்புகளுக்கு விலக்கு அளித்து டி. டி. கிருஷ்ணமாச்சாரி கொண்டுவந்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது, இராணுவப் பதவிகள், வீரதீர விருதுகள் மற்றும் மகாமகோபாத்யாயா (இந்து தத்துவத்தில் புகழ்பெற்ற அறிஞர்களுக்கானது) போன்ற கல்விசார் கௌரவப் பட்டங்களை அரசு வழங்குவதற்கு வழிவகுத்தது.
எம். ஆர். மசானி போன்ற உறுப்பினர்கள், பொது வாழ்வில் சிறந்து விளங்கும் மற்றும் சேவை செய்யும் குடிமக்களை அரசு கௌரவிக்கும் ஒரு முறையின் அவசியத்தை வலியுறுத்தினர். எனவே, “பட்டங்களுக்கும்” “கௌரவங்களுக்கும்” இடையே ஒரு வேறுபாடு வரையறுக்கப்பட்டது. ஒரு பட்டம் ஒருவரின் பெயருக்கு முன்னொட்டாகவோ அல்லது பின்னொட்டாகவோ இருக்கும் நிலையில், மற்ற (பிரிட்டிஷ் அல்லாத) நாடுகள் தங்கள் குடிமக்களைத் தகுதியான பணிகளுக்காகக் “கௌரவிக்கின்றன” என்று ஸ்ரீ பிரகாசா வாதிட்டார்.
பத்ம விருதுகளின் தோற்றம்
மேற்கூறிய சமரசமானது, வர்க்கம் மற்றும் செல்வாக்கு சார்ந்த பழைய படிநிலைகளைக் கடந்து, சேவை மற்றும் சாதனைகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் உணர்வைப் பிரதிபலித்தது. இது 1954-ஆம் ஆண்டில் ஒரு நிர்வாக ஆணை மூலம் பத்ம விருதுகள் நிறுவப்படுவதற்கு வழிவகுத்தது. ஆரம்பத்தில் பாரத ரத்னா (உயர்ந்த குடிமை விருது) மற்றும் மூன்று அடுக்கு பத்ம விபூஷன் ஆகிய இரண்டு குடிமை விருதுகளுடன் தொடங்கப்பட்ட இந்த விருதுகள், ஒரு வருடத்திற்குப் பிறகு இன்று அறியப்படும் மூன்று தனித்துவமான விருதுகளாக மறுசீரமைக்கப்பட்டன. அவை,
பத்ம விபூஷண் — மிகச்சிறந்த மற்றும் தனித்துவமான சேவைக்காக
பத்ம பூஷண் — உயரிய வகையிலான தனித்துவமான சேவைக்காக
பத்மஸ்ரீ — தனித்துவமான சேவைக்காக
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கங்களுக்கு இணங்க, இவ்விருதுகளின் பெயரைத் தலைப்பெழுத்துத் தாள்கள் (letterheads), சுவரொட்டிகள் ஆகியவற்றில் பயன்படுத்துவதோ அல்லது ஒரு பட்டமாகச் சூட்டிக்கொள்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் சட்டரீதியான சவால்கள்
ஆனால், பத்ம விருதுகள் தொடங்கப்பட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மீது அதிருப்தி ஏற்பட்டது. குறிப்பாக, 1969-ஆம் ஆண்டில், முன்னர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் அடிப்படை உரிமைகள் மீதான துணைக் குழுவின் தலைவராக இருந்த ஆச்சார்யா ஜே. பி. கிருபாலனி, அந்த விருதுகளை ஒழிப்பதற்காக ஒரு தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார். அந்த விருதுகள் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்று வாதிட்ட அவர், விருதுகள் என்ற போர்வையில் பட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினார். விரிவான விவாதங்களுக்குப் பிறகு அந்த மசோதா தோற்கடிக்கப்பட்ட போதிலும், பிற்காலத்தில் எழுந்த சட்டரீதியான மற்றும் அரசியல் சவால்களுக்கு அதுவே அடித்தளமாக அமைந்தது.
முதலில், கிருபாலனியின் மசோதா முன்வைத்த காரணங்களின் அடிப்படையில், மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசாங்க 1978-79-ஆம் காலகட்டத்தில் இந்த விருதுகளை இடைநிறுத்தியது. பின்னர் 1980-ஆம் ஆண்டில் இந்த விருதுகள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன. இரண்டாவதாக, அவற்றின் அரசியலமைப்புச் செல்லுபடியை எதிர்த்து உயர்நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதால், 1993-97-ஆம் காலகட்டத்தில் இந்த விருதுகள் மீண்டும் தடைபட்டன. இறுதியாக, பாலாஜி ராகவன் vs இந்திய ஒன்றியம்-1996 (Balaji Raghavan vs Union of India) வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தீர்த்து வைத்தது. அதில் இந்த விருதுகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவை என உறுதி செய்யப்பட்டது. இந்த விருதுகள் சட்டரீதியான சவால்களைக் கடந்தபோதிலும், அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்த விருதுகளைத் தகுதியுடன் தொடர்புபடுத்தாமல், செல்வாக்கு மற்றும் வெளிச்சத்துடன் தொடர்புபடுத்த அனுமதித்துவிட்டன என்ற ஒரு கருத்து பரவலாக எழுந்தது.
ஆதரவாளர்களுக்கான விருதிலிருந்து மக்களின் பத்ம விருது வரை
நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் ஒரு தொடர்ச்சியான அம்சம் என்னவென்றால், முந்தைய அரசாங்கங்கள் தோல்வியடைந்த அல்லது செயல்படுவதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லாத பகுதிகளில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அது காட்டும் விருப்பமே ஆகும். பத்ம விருதுகளின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பது இதற்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்தது. அனைவரையும் உள்ளடக்கும் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அதன் நோக்கத்திற்கு உண்மையாக, அந்த விருதுகளை "உயர் பிரிவினருக்கானது" (elite preserve) என்பதிலிருந்து "மக்களுக்கான விருதுகள்" (People’s Awards) என மறுசீரமைப்பதில்தான் முதன்மை சவாலாக இருந்தது.
பொதுமக்கள் நேரடியாகப் பரிந்துரை செய்யக்கூடிய இணையதளப் பக்கத்தை உருவாக்கியதன் மூலம், இந்த விருதுகளில் இருந்த "இடைத்தரகர்கள்" பண்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்கச் சீர்திருத்தமாகும். இதற்கு முன்பு, பரிந்துரைகள் அனைத்தும் அரசாங்கங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வழியாக மட்டுமே அனுப்பப்பட்டன. தகுதி இருந்தும் வெளிச்சத்திற்கு வராமல் இருப்பதே ஒரு வகையானப் புறக்கணிப்பாகக் கருதப்படும் சமூகத்தில், இந்தச் சீர்திருத்தத்தின் தாக்கம் மிகத் தெளிவானது — 2014-ஆம் ஆண்டில் வெறும் 2,200-ஆக இருந்த பரிந்துரைகளின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 50,000-க்கும் மேலாக உயர்ந்தது. இது ஒரு சங்கிலித் தொடர் வினையை (Domino effect) ஏற்படுத்தியது. 2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய 16 ஆண்டுகாலத் தரவுகளைப் பார்த்தால், விருது பெற்றவர்களில் 63 சதவீதத்தினர் வெறும் ஏழு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருந்த ஒரு புவியியல் ரீதியான சமநிலையின்மை இருந்தது. பொதுமக்கள் பங்கேற்கும் இந்தப் பரிந்துரை முறை அந்தப் பாகுபாட்டை நீக்கி, நாடு முழுவதிலும் உள்ள தகுதியான நபர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்துள்ளது.
மோடி அரசாங்கம், தேர்வுக்கான தகுதிகளை வெறும் "சிறப்புத் தகுதி" (excellence) என்பதிலிருந்து "அடிப்படை நிலையை” அங்கீகரிக்கும் வகையில் விரிவுபடுத்தியது. இந்த மாற்றம், குடிமைப் பதவியேற்பு விழாக்களில் இப்போது காணப்படும் நபர்களிடம் பிரதிபலிக்கிறது. இவர்களில், கர்நாடகத்தின் ஹலக்கி (Halakki) பழங்குடியினத்தைச் சேர்ந்த, காலில் செருப்பணியாத 84 வயது சூழலியல் ஆர்வலர் ஒருவர் (இவர் 30,000 மரங்களை நட்டுள்ளார்); நாகாலாந்தைச் சேர்ந்த எளிய பழ விவசாயி ஒருவர் (இவர் விவசாயிகள் வேற்றுப் பயிர் வகைகளை வளர்ப்பது குறித்து வழிகாட்டியவர்); மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பரதநாட்டியக் கலைஞர் (இவர் இவ்விருதைப் பெறும் முதல் திருநங்கை ஆவார்) ஆகியோர் அடங்குவர். தொழில் மற்றும் அறிவியல் போன்ற வெளிப்படையான துறைகளில் சிறந்து விளங்கியவர்களுடன், “பெயர் அறியப்படாத நாயகர்களின்” (unsung heroes) அமைதியான சேவையையும் ராஷ்டிரபதி பவனின் அதே உயர்ந்த குவிமாட மண்டபங்களில் பாராட்டுவது, நமது வேற்றுமையில் ஒற்றுமையின் ஒரு தனித்துவமான கொண்டாட்டமாகும். 2026-ஆம் ஆண்டின் குடிமைப் பதவியேற்பு விழா, போட்டியிடும் வடிவமாக அல்லாமல், ஒன்றுக்கொன்று துணைபுரியும் இந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் வடிவத்தின் மற்றுமொரு வெளிப்பாடாக விளங்குகிறது.
தாரிக் மன்சூர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) முன்னாள் துணைவேந்தரும் மற்றும் உத்தரப் பிரதேச சட்ட மேலவையின் (UPLC) நியமன உறுப்பினரும் ஆவார்.
Original link:
The Padma Awards aren’t just about prestige — they’re about deepening democracy.