நாடெங்கிலும் உள்ள ஒன்றிய, மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட 17 திட்டங்களை, மின்-ஆளுகைக்கான தேசிய விருதுகளுக்கு (National Awards for e-Governance (NAeG)) ஒன்றிய அரசு தேர்வு செய்துள்ளது. இந்தத் திட்டங்களில், 10 திட்டங்களுக்கு தங்க விருதும் (Gold Award), 6 திட்டங்களுக்கு வெள்ளி விருதும் (Silver Award), மற்றும் ஒரு திட்டத்திற்கு நடுவர் குழு விருதும் (Jury Award) வழங்கப்படவுள்ளன. இந்த விருதுகள், 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறவிருக்கும் 29-வது மின்-ஆளுகைக்கான தேசிய மாநாட்டில் (National Conference on e-Governance) வழங்கப்படும். "வளர்ச்சியடைந்த இந்தியா 2047: செயற்கை நுண்ணறிவுடன் கூடிய, தரவு அடிப்படையிலான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் ஆளுகை" (Viksit Bharat 2047: AI-Enabled, Data-Driven and Secure Digital Governance) என்பது இந்த ஆண்டின் மாநாட்டிற்கான மையக்கருத்தாகும்.
இந்த விருது குறித்தும், இந்தியாவில் மின்-ஆளுகை எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.
மின்-ஆளுகைக்கான தேசிய விருதுகள் (National Awards for e-Governance (NAeG)) ஏன் வழங்கப்படுகின்றன, மேலும் இந்தியாவின் மின்-ஆளுகைப் பயணம் கணினிமயமாக்கலில் இருந்து டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) நோக்கி எவ்வாறு முன்னேறியுள்ளது?
1. இந்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைதீர்ப்புத் துறை (Department of Administrative Reforms and Public Grievances (DAR&PG)) மூலம், மின்-ஆளுகை (e-Governance) எனப்படும் டிஜிட்டல் தொழில்நுட்ப வழி நிர்வாகத் திட்டங்களில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டவர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய மின்-ஆளுகை விருதுகள் (NAeG Awards) வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் 2003-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
2. 2026-ஆம் ஆண்டிற்கான மின்-ஆளுகைக்கான தேசிய விருதுகள் (NAeG Awards), ஒரு கோப்பை, ஒரு சான்றிதழ் மற்றும் தங்க விருது (Gold award) வெல்பவர்களுக்கு ₹10 லட்சமும், வெள்ளி விருது (Silver award) வெல்பவர்களுக்கு ₹5 லட்சமும் ரொக்க ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகையானது, புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கோ அல்லது பொது நலன் சார்ந்த பணிகளில் உள்ள நிதி மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கோ மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
3. வேளாண்மை அமைச்சகத்தின் விவசாயிகளுக்கான 'அக்ரி ஸ்டாக்' (Agri Stack) தளம், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் 'இ-ஜாக்ரிதி' (e-Jagriti) நுகர்வோர் புகார் பதிவுத் தளம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு (Panchayat Advancement Index (PAI)), மற்றும் 2025-ஆம் ஆண்டு மகா கும்பமேளாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக பிரயாக்ராஜ் மேளா வாரியம் (Prayagraj Mela Authority) ஆகியவை இந்த ஆண்டின் வெற்றிகரமான திட்டங்கள் ஆகும்.
மின்-ஆளுகை முன்னெடுப்புகள்
அக்ரி ஸ்டாக் (Agri Stack): விவசாயத் தரவுகள் அனைத்தையும் ஒரே தளத்திற்குக் கொண்டு வருவதற்காக, ஒன்றிய அரசின் விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) திட்டத்தின்கீழ் 2024-ஆம் ஆண்டில் அக்ரி ஸ்டாக் இணையதளம் தொடங்கப்பட்டது. இதில் விவசாயிகள் பதிவேடு, புவி-குறிப்பு கிராம வரைபடங்கள் (Geo-referenced Village Maps) மற்றும் பயிர் விதைப்பு பதிவேடு ஆகிய மூன்று முக்கிய தரவுத்தளங்கள் அடங்கியுள்ளன. இவை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
இ-ஜாக்ரிதி (e-Justice and Grievance Redressal through Information Technology and Innovation (e-Jagriti)): இ-ஜாக்ரிதி (தகவல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் மின்-நீதி மற்றும் குறைதீர்ப்பு) என்பது இந்தியா முழுவதும் நுகர்வோர் குறைதீர்ப்பை வலுப்படுத்துவதற்காக நுகர்வோர் விவகாரங்கள் துறையின் ஒரு முக்கியத் திட்டமாகும். இது நுகர்வோர் தங்களின் புகார்களை இணையதளங்களில் பதிவு செய்யவும், வழக்கு நிலவரத்தைக் கண்காணிக்கவும் மற்றும் தீர்ப்புகளைப் பெறவும் அனுமதிக்கிறது. இத்தளம் நுகர்வோர், நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்க உதவுகிறது மற்றும் குடிமக்களுக்குச் சட்டப்பூர்வ தீர்வுகளை எளிதாகக் கிடைக்கச் செய்கிறது.
பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீடு (PAI): மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் (Ministry of Panchayati Raj) வெளியிடப்படும் இந்த பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீடானது, ஒன்பது முக்கிய தலைப்புகளின்கீழ் "நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல்" (Localization of Sustainable Development Goals (LSDGs)) திட்டத்தை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுத்துகின்றன என்பதை மதிப்பிடுகிறது.
மின்-ஆளுகை என்றால் என்ன?
1. மின்-ஆளுகை என்பது, அரசாங்கங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கும், தகவல்களைப் பகிர்வதற்கும், தொடர்புகளை எளிதாக்குவதற்கும், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் நிர்வாகத்தில் குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் இணையம் மற்றும் பிற தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவிகள் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் விரைவான செயல்பாட்டை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
2. ஒரு திறமையான, மக்கள் பங்களிப்புள்ள மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்குவதன் மூலம், அரசாங்கத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதே மின்-ஆளுகையின் முதன்மை நோக்கமாகும். அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒற்றைச் சாளர அணுகுமுறை (Single-window access), அரசுத் துறைகளுக்கு இடையே எளிதான தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு, உடனுக்குடன் தகவல்களைப் பகிர்தல், மற்றும் குடிமக்களின் கருத்துக்கள் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்கான தளங்கள் போன்ற வசதிகளின் மூலம் இது சாத்தியமாகிறது.
3. ஸ்மார்ட் ஆளுகை (Simple, Moral, Accountable, Responsive, and Transparent (SMART)) எளிய, ஒழுக்கநெறியான, பொறுப்புள்ள, துரிதமாகச் செயல்படும் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், மின்-ஆளுகையின் வெற்றியானது நான்கு முக்கியத் தூண்களைச் சார்ந்துள்ளது. அவை: மக்கள், செயல்பாட்டு முறை, தொழில்நுட்பம், மற்றும் வளங்கள் ஆகும்.
இந்தியாவில் மின்-ஆளுகை எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது?
1. மின்-ஆளுகை மற்றும் அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் அதன் திறன் பற்றிய யோசனை பிற்காலத்தில் உருவானது என்றாலும், இந்தியாவின் மின்-ஆளுகைக்கான பயணம் 1970-களில் அரசு அலுவலகங்களை கணினிமயமாக்கும் நடவடிக்கைகளில் இருந்தே தொடங்கிவிட்டது.
2. 1976-ஆம் ஆண்டில் தேசிய தகவல் மையம் (National Informatics Centre (NIC)) நிறுவப்பட்டதன் மூலம், பொது நிர்வாகத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டது. 1980-கள் மற்றும் 1990-களில், இந்திய அரசு தனது செயல்பாடுகளைக் கணினிவழிச் செயல்பாடுகளாக மாற்றுவதிலும், நிர்வாக அலுவலகங்களை இணையம் மூலம் இணைப்பதிலும் சீரான முன்னேற்றத்தைக் கண்டது.
3. 2006-ஆம் ஆண்டில் தேசிய மின்-ஆளுகைத் திட்டம் (NeGP) தொடங்கப்பட்டதன் மூலம் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. இந்தத் திட்டத்தின் வெற்றிகரமான அங்கங்களில் ஒன்று பொதுச் சேவை மையங்கள் (Common Service Centers (CSCs)) நிறுவப்பட்டதாகும். இது பொதுமக்கள் அரசு சேவைகளை மிக எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பை மேம்படுத்தியது.
4. டிஜிட்டல் இந்தியா திட்டம் (Digital India Mission) நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும், மக்களுக்கான அதிகாரத்தை டிஜிட்டல் உள்கட்டமைப்பு மூலம் வலுப்படுத்துவதிலும் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட பல முக்கிய முயற்சிகள், இந்தியாவில் மின்-ஆளுகை எனப்படும் டிஜிட்டல் நிர்வாகச் சூழலை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன.
5. உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் (Biometric) அடையாள அமைப்பான ஆதார் அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகள் மக்களைச் சென்றடைவதை மேம்படுத்தியுள்ளதுடன், முறைகேடுகள் மற்றும் தகவல் கசிவுகளையும் குறைத்துள்ளது. அதேபோல, ‘UMANG’ (Unified Mobile Application for New-age Governance) புதிய யுக நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த அலைபேசி செயலி தளம் பல்வேறு அரசாங்க சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கான ஒற்றைச் சாளர அணுகலை வழங்குகிறது.
6. அரசு மின்-சந்தை (Government e-Marketplace (GeM)) அரசுப் பொருட்களை வாங்குவதில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளது. அதேவேளையில், மின்-நீதிமன்றங்கள் (e-Courts) மற்றும் மின்-அலுவலகம் (e-Office) போன்ற திட்டங்கள் வெவ்வேறு துறைகளில் செயல்திறனையும் பொறுப்புணர்வையும் மேம்படுத்தியுள்ளன.
7. இருப்பினும், மின்-ஆளுகை திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன. அதில் ஒரு முக்கிய சிக்கல் , இணையம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன் (Digital literacy) ஆகும். 'இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார நிலை' (State of India’s Digital Economy (SIDE)) 2025-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, தனிநபர் டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா 28-வது இடத்தில் மட்டுமே உள்ளது. மேலும், முக்கியமான தனிப்பட்ட தரவுகள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், இணையப் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு குறித்த சிக்கல்களும் தொடர்கின்றன.
8. மின்-ஆளுகையின் பலன்களை முழுமையாகப் பெற வேண்டுமானால், பலதரப்பட்ட அணுகுமுறை அவசியமாகும். நாட்டின் கடைசி எல்லை வரை இணைய வசதியைக் கொண்டு சேர்ப்பதன் மூலமும், குறைந்த விலையில் இணையம் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலமும், இந்த டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்கான முயற்சிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு
1. ஐக்கிய நாடுகள் சபையின் கருத்துப்படி, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) என்பது நவீன சமூகங்களின் முதுகெலும்பாக விளங்கும் அடிப்படை டிஜிட்டல் அமைப்புகளின் தொகுப்பாகும். இது பொதுமக்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே பாதுகாப்பான மற்றும் தடையற்ற தொடர்புகளை சாத்தியமாக்குகிறது. அடையாளத்தை சரிபார்ப்பது மற்றும் வங்கி கணக்குகளைத் தொடங்குவது முதல், உடனடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வது மற்றும் தரவுகளைப் பாதுகாப்பாகப் பகிர்வது வரை, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) முக்கியப் பங்கு வகிக்கிறது.
2. இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பானது (DPI), அடையாளம், வங்கிச் சேவை மற்றும் திறன்பேசி இணைப்பு ஆகிய மூன்றையும் ஒன்றிணைக்கும் 'JAM' (Jan Dhan, Aadhaar, Mobile) முத்தொலைவுக் கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு (Jan Dhan), ஆதார் (Aadhaar) சேர்க்கை மற்றும் திறன்பேசிகளின் பரவலான பயன்பாடு ஆகியவை இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றத்திற்கான அடித்தளத்தை உருவாக்கின.
3. இந்த முத்தொலைவுக் (JAM) கட்டமைப்பு மக்களை நேரடியாகவும் நம்பகமான முறையிலும் அரசாங்கத்துடன் இணைத்தது. இதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் இடைத்தரகர்கள், காலதாமதம் மற்றும் முறைகேடுகள் ஏதுமின்றி, நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படத் தொடங்கின. இந்த அமைப்புகளின் பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு, ஒட்டுமொத்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிட்டது.
4. இந்த அடித்தளத்தின்மீது, இந்திய அரசாங்கம் திறந்தநிலை பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (Application Programming Interfaces (Open APIs)) மற்றும் பொது டிஜிட்டல் சொத்துகளைப் பயன்படுத்தி 'இந்தியா ஸ்டாக்' (India Stack) என்ற டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கியது. காலப்போக்கில், இது வெறும் டிஜிட்டல் அடையாளம் (ஆதார்) மற்றும் நிதி உள்ளடக்கம் (அனைவருக்கும் வங்கிச் சேவை) என்பதோடு நின்றுவிடாமல், பணப்பரிவர்த்தனைகள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் அரசு நிர்வாகத் தளங்கள் எனப் பல துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
5. இந்தியா டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஒத்துழைப்புக்கான உத்திசார் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, 'இந்தியா ஸ்டாக்' (India Stack) மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) தொடர்பாக 24 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மைகள் முக்கியமாகத் தொழில்நுட்பத் திறன்களைப் பகிர்ந்துகொள்வதிலும், பிற நாடுகள் இதுபோன்ற டிஜிட்டல் நிர்வாகத் தளங்களை உருவாக்க உதவுவதிலும் கவனம் செலுத்துகின்றன.
Original article : E-Governance Awards: How e-governance evolved in India. -Khushboo Kumari