அறிமுக விழாவின்போது, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தக் கலப்பு எரிபொருள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எரிபொருள்-கலவை வாகனங்களுக்கானது (flex-fuel vehicles (FFV)) என்றும், சாதாரண பெட்ரோல் வாகனங்களுக்கானது அல்ல என்றும் கூறினார். இதுகுறித்த தகவல்கள் கீழே குறிப்பிட்டுள்ளன.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜூன் 5, வெள்ளிக்கிழமை அன்று புது தில்லியில் உள்ள ஒரு சில்லறை எரிபொருள் விற்பனை நிலையத்தில் “E85 எரிபொருளை” அறிமுகப்படுத்தினார். E-85 (எத்தனால்-85) என்பது 80-85% எத்தனால் மற்றும் 14-19% பெட்ரோல் அடங்கிய, அதிக எத்தனால் கலந்த ஒரு எரிபொருளாகும். இது குறிப்பாக எரிபொருள்-கலவை வாகனங்களில் (FFV) பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகரில் இந்தியாவின் முதல் பயணிகள் எரிபொருள்-கலவை வாகனத்தின் (FFV) அறிமுக விழாவில் அமைச்சர் கலந்துகொண்ட ஒரு நாள் கழித்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எரிபொருள்-கலவை வாகனங்கள் (FFV), நுகர்வோர் ஒரே ஒரு குறிப்பிட்ட கலவையை மட்டுமே பயன்படுத்தக் கட்டாயப்படுத்தாமல், E20 (இதில் எத்தனால் கலப்பு எரிபொருளில் 20% ஆகும்) முதல் E100 வரையிலான பல்வேறு எத்தனால்-பெட்ரோல் கலவைகளில் இயங்கக்கூடியவை.
E85 எரிபொருள், இந்திய வாகனங்களில் பயன்படுத்தப்படும் மற்ற வகை எரிபொருள்கள் மற்றும் உங்கள் வாகனத்தின் பெட்ரோல் கொள்கலனை மீண்டும் நிரப்புவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டியவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
E85 : பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம்
பத்திரிக்கை தகவல் பணியகத்தின் (PIB) அறிக்கையின்படி, E85 ஆனது வழக்கமான பெட்ரோலை விட லிட்டருக்கு கிட்டத்தட்ட ரூ.20 குறைவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலின் பொருளாதாரப் பலன்கள் நுகர்வோருக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வழக்கமான பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, E85-ல் இயங்கும் எரிபொருள்-கலவை வாகனங்கள் (FFV) அவற்றின் வாழ்நாள் முழுவதுமான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை சுமார் 61% குறைக்க முடியும். நிதிஆயோக், E85 போன்ற அதிக எத்தனால் கலவைகளில் இயங்கும் வாகனங்கள் உட்பட, எத்தனால் அடிப்படையிலான எரிபொருள்-கலவை வாகனங்கள் (FFV) பூஜ்ஜிய-வெளியேற்ற வாகனங்களாக வகைப்படுத்துகிறது. E85 எரிபொருள் கிட்டத்தட்ட பூஜ்ஜிய அளவிலான துகள் உமிழ்வுகளை உருவாக்குகிறது. இது நாட்டின் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு சவாலை எதிர்கொள்வதற்கு எரிபொருள்-கலவை வாகனங்கள் (FFV) ஒரு நம்பிக்கைக்குரிய தீர்வாக ஆக்குகிறது என்று PIB அறிக்கை தெரிவிக்கிறது.
E85 மற்றும் பிற புதைபடிவ எரிபொருள்கள்
தற்போது, இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் வாகனங்கள் பெட்ரோல், டீசல், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (compressed natural gas (CNG)) அல்லது எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்குகின்றன. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (liquified petroleum gas (LPG)) மற்றும் உயிரி-டீசல் (bio-diesel) ஆகியவை கிடைக்கக்கூடிய அல்லது சாத்தியமானதாகக் கருதப்படும் பிற எரிபொருள்களாகும். இருப்பினும் அவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
பல பத்தாண்டுகளாக அதிக எத்தனால் கலவைகளின் நீண்டகால நிலைத்தன்மையை பிரேசில் நிரூபித்திருப்பதையும், அந்நாட்டின் 80%-க்கும் மேற்பட்ட இலகுரக வாகனங்கள் தற்போது எரிபொருள்-கலப்பு தொழில்நுட்பத்தில் இயங்குவதையும் ஹர்தீப் சிங் பூரி உதாரணமாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா முழுவதும் E20 தரமான எரிபொருளாக மாறியதிலிருந்து, எத்தனால் கலப்பதால் ஏற்படும் இயந்திரக் கோளாறு அல்லது வாகனப் பழுது போன்ற எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார். எரிபொருள்-கலப்பு வாகனங்கள் (FFV) அவற்றின் குறைந்த கொள்முதல் செலவுகள் மற்றும் தற்போதுள்ள எரிபொருள் உள்கட்டமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் திறன் காரணமாக மின்சார வாகனங்களுடன் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவையாகத் திகழ்கின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வாகனங்களின் எரிபொருள் கொள்கலனில் E85 கொண்டு நிரப்ப முடியுமா?
அது ஒரு எரிபொருள்-கலப்பு வாகனங்களாக (FFV) இருந்தால் மட்டுமே இது சாத்தியம். E85 எரிபொருள் என்பது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எரிபொருள்-கலப்பு வாகனங்களுக்காக (FFV) மட்டுமேயானது, சாதாரண பெட்ரோல் வாகனங்களுக்கானது அல்ல என்று அறிமுக விழாவின்போது பூரி கூறினார்.
நாடு தழுவிய அளவில் எர்பொருள்-கலப்பு பயன்பாட்டுச் சூழலை (ecosystem) உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட செயல்திட்டத்தில், எரிபொருள்-கலப்பு வாகனங்களுக்கான ஒற்றை எரிபொருள் தரநிலையாக E85 அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
தற்போது இந்தியச் சாலைகளில் இயங்கிக்கொண்டிருக்கும் பயணிகள் வாகனங்களுக்கு இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பூரி கூறுகையில், “உங்கள் E20 வாகனம் இன்னும் நீண்ட காலத்திற்கு இயங்கும்... E20 மற்றும் E85 ஆகியவை வெவ்வேறு வகையான வாகனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட, இரண்டு வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த எரிபொருள்கள் ஆகும். E85-இன் வருகையால் E20 அல்லது பெட்ரோல் வாகனங்கள் நிறுத்தப்படும் என்று அர்த்தமல்ல. E85 எரிபொருள் நிலையங்களில் 'E85-க்கு ஏற்ற கார்கள் மட்டுமே' (E85-compliant cars only) என்று குறிப்பிடப்பட்ட பெரிய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்," என்று கூறினார்.
E85 அறிமுகம்
இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் 48 சில்லறை விற்பனை நிலையங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று PIB அறிக்கை குறிப்பிட்டது. இது டிசம்பர் 2026-க்குள் 500 விற்பனை நிலையங்களுக்கும், டிசம்பர் 2027-க்குள் சுமார் 5,000 விற்பனை நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், 2030-31-க்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த எத்தனால் கலப்பு அளவை ஏறக்குறைய 26%-ஆக உயர்த்த இது உதவும்.
2014-ல் 1.53% ஆக இருந்த எத்தனால் கலப்பு, இன்று 20%-ஆக அதிகரித்துள்ளது என்றும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டதாகவும் பூரி கூறினார். இதன் மூலம் ₹1.84 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாகவும், ஏறக்குறைய 302 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றாக இது அமைந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
Original article : Can you use E85 fuel in your car? Here’s what to check first.