போட்டிக்குத் தயாராக உள்ள நாடுகளுக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் பலனளிக்கின்றன
ஒரு வர்த்தக ஒப்பந்தம் பொதுவாக ஒரு நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவுவதால் ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால், அந்த ஒப்பந்தம் ஒரு நாட்டை எத்தகைய பொருட்களை இறக்குமதி செய்யக் கட்டாயப்படுத்துகிறது என்பதில்தான் அதன் உண்மையான மற்றும் ஆழமான மதிப்பு பெரும்பாலும் அடங்கியுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (Comprehensive Economic and Trade Agreement (CETA)), முதல் அம்சத்தில் (ஏற்றுமதி ஊக்குவிப்பு) ஒரு சிறந்த ஒப்பந்தமாக அமைந்துள்ளது. இரண்டாவது அம்சத்திலும் (இறக்குமதி சார்ந்த கடமைகள்) இது மிகச் சிறந்ததாக நிரூபிக்கப்படலாம்.
இதன் முதல் பலன்கள்
உடனடி பலன்கள் ஏற்றுமதியிலிருந்து கிடைக்கிறது. ஏனெனில், உடனடி ஆதாயங்களும் மிக முக்கியமான பலன்களும் அங்கேயே உள்ளன. ஜூலை 15 முதல், இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து ஏற்றுமதிப் பொருட்களும், அதாவது மதிப்பின் அடிப்படையில் சுமார் 99% எந்தவித சுங்க வரியும் இன்றி ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழையவுள்ளன. பூஜ்ஜிய நிலைக்குக் குறைக்கப்பட்ட வரிகள், ஊடகங்களில் அதிகம் பேசப்படும் பொருட்களுக்கானவை அல்ல. மாறாக, இந்தியாவின் தொழிலாளர்களுக்கு முக்கியமான பொருட்களுக்கானவை. இப்பொருட்களில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், கடல்சார் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பொறியியல் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஆகியவை இதில் அடங்கும். இவை அதிக மனிதவளத் தேவை (labour-intensive) கொண்ட துறைகள் ஆகும். உற்பத்தி சார்ந்த மற்றும் முறைசார்ந்த வேலைவாய்ப்புகளுக்குள் இந்தியா யாரை ஈர்க்க வேண்டுமோ, அந்தத் தொழிலாளர்களை இத்துறைகள் பெருமளவில் பணியமர்த்துகின்றன. தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள ஒரு ஆடை உற்பத்தி நிறுவனமோ அல்லது உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள காலணி உற்பத்தி மையமோ மிகக் குறைந்த லாப வரம்பிலேயே போட்டியிடுகின்றன. பிரிட்டிஷ் எல்லையில் விதிக்கப்படும் 12% அல்லது 16% சுங்க வரிதான், ஒரு வர்த்தக ஆர்டரைப் பெறுவதற்கும் அதை இழப்பதற்கும் இடையிலான முக்கிய காரணியாக அமைகிறது.
இதுவரை, இந்த விஷயத்தில் இந்தியா ஒரு பின்னடைவைச் சந்தித்து வந்தது. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தங்கள் ஆடை ஏற்றுமதியை வரி இல்லாமல் இங்கிலாந்துக்கு அனுப்பிவந்த நிலையில், இந்தியாவின் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த இடைவெளி இப்போது நீக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் இந்த அம்சம் குறிப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், இது நேரடியாக வேலைவாய்ப்புடன் தொடர்புடையது. இறுதியில், வர்த்தகக் கொள்கை என்பது வேலைவாய்ப்புகளைச் சார்ந்ததே ஆகும்.
வேறுபட்ட தன்மையிலான மற்றொரு ஆதாயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்தியா உலகின் மிகப்பெரிய 'ஜெனரிக்' (generic) மருந்து விநியோகராக உள்ளது. அதேவேளையில் இங்கிலாந்து ஆண்டுக்கு சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை வாங்குகிறது. சுங்க வரி நீக்கப்படுவதால், இந்திய ஜெனரிக் மருந்துகள் விலையின் அடிப்படையில் போட்டியிட முடிகிறது. இது மனிதவளம் சார்ந்த கதை அல்ல, மாறாக இது 'அளவிலான உற்பத்தி மற்றும் சந்தை ஆதிக்கம்' (scale) சார்ந்த அளவீடாகும். அதாவது, இது, நன்கு நிலைபெற்ற இந்திய மருந்துத் தொழில் துறை தனது மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றில் சமமான நிலையில் போட்டியிட உதவுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மற்றொரு அம்சமும் குறிப்பிடத்தக்கது. இது நீண்டகாலமாக இருந்து வந்த ஒரு நியாயமற்ற நிலையைச் சரிசெய்கிறது. முன்பெல்லாம், சில ஆண்டுகளுக்குப் பணி நிமித்தமாகப் பிரிட்டனுக்குச் செல்லும் இந்திய வல்லுநர்கள், அந்நாட்டின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திலும் பங்களிப்புச் செய்ய வேண்டியிருந்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அந்தப் பணத்தை அவர்களால் திரும்பப் பெறவே முடிவதில்லை. அதே வேளையில், அவர்கள் இந்தியாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திலும் தொடர்ந்து பங்களிப்புச் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. வர்த்தக ஒப்பந்தத்துடன் இணைந்து நடைமுறைக்கு வரும் 'இரட்டைப் பங்களிப்பு உடன்படிக்கை' (Double Contribution Convention), இத்தகைய ஊழியர்களையும் அவர்களது நிறுவனங்களையும் ஐந்து ஆண்டுகள் வரை இந்த ’இரட்டைப் பங்களிப்பு' செய்வதிலிருந்து விடுவிக்கிறது. இதன்மூலம் 75,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் சுமார் 900 நிறுவனங்களும் ஆண்டுக்கு சுமார் 600 மில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும். இது வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் இந்தியர்களுக்குத் திரும்பக் கிடைக்கும் பணமாகும். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுமூகமான உறவில் நீண்டகாலமாக அதிருப்தியை ஏற்படுத்தி வந்த ஒரு உண்மையான குறைபாட்டையும் இது நீக்குகிறது.
சந்தைகளைத் திறத்தல் மற்றும் தரத்தை உயர்த்துதல்
இனி இறக்குமதிகள் குறித்தும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி சிலருக்கு ஏன் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்தும் பார்ப்போம். இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கார்கள் மீதான இறக்குமதி வரியை சுமார் 110%-லிருந்து 10%-ஆகக் குறைக்கவும், ஸ்காட்ச் விஸ்கி (Scotch whisky) மீதான இறக்குமதி வரியைக் குறைக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வரி படிப்படியாக 150%-லிருந்து 40%-ஆகக் குறைக்கப்படும். இந்த வரிக்குறைப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நடைமுறைக்கு வராது. அவை பல ஆண்டுகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். மேலும், இவை இறக்குமதி ஒதுக்கீடுகளுக்கும் (import quotas) உட்பட்டதாக இருக்கும். மேலும் இந்தியாவின் சொந்தப் பயணிகள் வாகனத் துறை தனது போட்டித்தன்மையை மேம்படுத்திக்கொள்ளத் தேவையான கால அவகாசத்தைப் பெறும் வகையிலும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொன்னால், இவை மிகவும் கவனமான நடவடிக்கைகளே. ஆனால் அவை சரியான திசையைச் சுட்டிக்காட்டுகின்றன. அந்தத் திசையே மிக முக்கியமானது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் (protectionism) முடிவில்லாமல் தொடரும்போது என்ன நடக்கும் என்பதை இங்கே குறிப்பிடுவது அவசியம். அது வலுவான தொழில்துறைகளை உருவாக்குவதில்லை. மாறாக, பலவீனமானவற்றையே தக்கவைக்கிறது. ஒரு சிறந்த தயாரிப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாத ஒரு துறை, ஒருபோதும் சிறந்த தயாரிப்பை உருவாக்க முற்படுவதில்லை. இந்தியாவின் சொந்த அனுபவமே இதை இரு வகையிலும் நிரூபிக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறிய மற்றும் நடுத்தர ரக வாகனத் துறையில் இந்திய கார் தயாரிப்பாளர்கள் போட்டியிட வேண்டியிருந்தபோது, அவர்கள் உண்மையிலேயே சிறந்தவர்களாக மாறினர். அதேசமயம், மிக உயர்ந்த பாதுகாப்புச் சுவர்களுக்குப் பின்னால் அவர்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களில், தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை. குறைந்த வரிவிதிப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரிட்டிஷ் கார்களை அனுமதிப்பது யாரையும் நிலைகுலையச் செய்யாது. அது மிகவும் பயனுள்ள ஒன்றைச் செய்யும். அதாவது, வரிவிதிப்பு விகிதப் பட்டியலை அல்ல, மாறாக வாடிக்கையாளரையே திருப்திப்படுத்த வேண்டும் என்பதை அது இந்திய உற்பத்தியாளர்களுக்கு நினைவூட்டும். போட்டியை எதிர்கொள்வது என்பது வர்த்தக நாடுகளுக்காக மட்டும் செய்யப்படும் ஒரு சலுகை அல்ல. அது இந்தியர்களாகிய நாம் நமக்கே செய்துகொள்ளும் ஒரு நன்மையாகும். தனது செயல்பாட்டுத் தரத்தை உயர்த்தத் தூண்டப்படும் ஒரு உள்நாட்டுத் துறை, காலப்போக்கில் குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை அளிக்கிறது.
திறந்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்
இறுதியில், வர்த்தக ஒப்பந்தங்கள் என்பவை மாற்றங்களுக்கு உட்பட்ட செயல்முறை ஏற்பாடுகள் தானே தவிர, நிரந்தரமான நினைவுச் சின்னங்கள் அல்ல. அவை பலனளிக்கத் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படுகின்றன. ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும், அதைச் செயல்படுத்தி வெற்றிபெறச் செய்வதும் இருவேறு பணிகள் இதில் இரண்டாவது பணியே மிகவும் கடினமானதும் நீண்ட காலத்தைக் கோருவதும் ஆகும். இன்று வாக்குறுதி அளிக்கப்படும் பலன்கள் உண்மையாக வேண்டுமானால், இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் தயாராக இருக்க வேண்டும், நடைமுறைகள் வெளிப்படையானவையாக இருக்க வேண்டும். மேலும், வர்த்தக ஒப்பந்தங்கள் உருவாக்கும் வாய்ப்புகள் குறித்து தொழில் நிறுவனங்களுக்குத் தெளிவான தகவல்களும் விழிப்புணர்வும் இருக்க வேண்டும். இந்தியாவில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் விகிதத்தை மேம்படுத்துவதற்குப் பெரும் வாய்ப்புகள் உள்ளன. அரசும் முன்னணித் தொழில் அமைப்புகளும் சிறு தொழில் மற்றும் நிறுவனங்களின் சங்கங்களுடன் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்த பத்தாண்டு காலத்தின் இறுதிக்குள், சுமார் 56 பில்லியன் டாலராக உள்ள தங்கள் வர்த்தக அளவை இருமடங்காக உயர்த்த இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தற்போது திட்டமிட்டுள்ளன. இந்த இலக்கை அவை எட்டுமா என்பது, கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களைச் சார்ந்திருப்பதைவிட, இந்தியா அந்த ஒப்பந்தத்தை எத்தகைய நம்பிக்கையுடன் பயன்படுத்துகிறது என்பதையே அதிகம் சார்ந்திருக்கும். இறுதியில், இது போன்ற ஒரு ஒப்பந்தம் ஒரு நாட்டிடம் எதிர்பார்ப்பது இதுதான்: உலகச் சந்தைகளில் அந்த நாடு திறம்படப் போட்டியிட வேண்டும் என்பதே அது. எந்தவொரு அரசாங்கத்தாலும் கூற முடியாத அளவுக்குச் சுருக்கமாகவும் ஆழமாகவும் திருவள்ளுவர் இதைக் கூறியுள்ளார். தளராத உறுதியுடன் தொடர்ந்து முயற்சி செய்பவர்களின் உழைப்புக்கு முன்னால், 'விதி' கூட வழிவிட்டு விலகிச் செல்லும் என்று அவர் எழுதியுள்ளார். 'திறந்திருக்கும் ஒரு கதவு' என்பது அத்தகைய உறுதியான நம்பிக்கையைச் சோதித்துப் பார்க்கும் ஒரு வாய்ப்பாகும். அந்தச் சோதனையை இந்தியா மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும்.
வி. அனந்த நாகேஸ்வரன் இந்திய அரசின் 18-வது தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆவார்.