இந்தியாவில் முதல்முறையாக இரவு நேர வனச் சுற்றுலா திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது: குக்ரைல் திட்டம் வழங்கப்போகும் வசதிகள் யாவை? - மௌல்ஸ்ரீ சேத்

லக்னோவில் ரூ. 1,510 கோடி மதிப்பிலான 'குக்ரைல் நைட் வனச் சுற்றுலா' (Kukrail Night Safari) திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத்திட்டத்திற்கு ஏன் நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டன என்பதையும், பார்வையாளர்கள் எதை எதிர்பார்க்கலாம் என்பதையும் குறித்து இங்கே.


உத்தரப் பிரதேச அரசின் மிகப்பெரிய திட்டமான குக்ரைல் இரவு நேர வனச் சுற்றுலா மற்றும் பகல் நேர உயிரியல் பூங்கா திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் முதல் இரவு நேர வனச் சுற்றுலா  அமைப்பதற்கான இறுதி தடையும் நீங்கியுள்ளது.


இந்தத் திட்டம், லக்னோ நகரின் புறநகரில் அமைந்துள்ள சுற்றுச்சூழல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 2,027 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட குக்ரைல் காப்புக்  வனப்பகுதியில் அமைக்கப்பட உள்ளதால், பல ஆண்டுகளாக ஆய்வு மற்றும் பரிசீலனை செய்யப்பட்டது. இந்த வனப்பகுதி, 1975-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நீண்ட மூக்குடைய முதலை (gharial) வகையின் இந்தியாவின் முதல் பாதுகாப்பு மையத்தின் தாயகமாகவும்  இருந்து வருகிறது.


இந்தத் திட்டம் எதைப் பற்றியது?


ரூ.1,510 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், குக்ரைல் காப்புக் காட்டில் உள்ள 855 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். இது இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்:


-முதற்கட்டம்: இரவு வனச் சுற்றுலா மற்றும் சூழல் சுற்றுலா மண்டலம்


-இரண்டாம் கட்டம்: பகல்நேர விலங்குக்காட்சி சாலை


திட்டத்தின்படி, இந்த இரவு வனச் சுற்றுலாவில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வனவிலங்கு நிலப்பரப்புகளால் ஈர்க்கப்பட்ட கருப்பொருள் சார்ந்த மண்டலங்கள் (theme-based zones), இரவு நேரப்பாதைகள், இயற்கையான விலங்கு வாழ்விடங்கள் மற்றும் வனப் பாதைகள் இடம்பெறும்.


பார்வையாளர்கள் மின்கலத்தால் இயங்கும் வாகனங்களில் பயணம் செய்வார்கள். திட்டத்திற்கான பாதை தற்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது.


இந்தத்திட்டம் வனவிலங்கு பாதுகாப்பு, ஆராய்ச்சி, கல்வி மற்றும் சுற்றுலா போன்றவற்றை ஒருங்கிணைக்கும் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.


இந்த முதன்மைத் திட்டத்தில், பாதுகாப்பு இனப்பெருக்க வசதிகள், வனவிலங்கு விளக்க மற்றும் கல்வி மையங்கள், சிற்றுண்டிச்சாலைகள், ஒரு 7-D திரையரங்கம் மற்றும் ஒரு கலையரங்கமும் இடம்பெற்றிருக்கும்


பார்வையாளர்கள் எதைக் காண்பார்கள்?


வழக்கமான மிருகக்காட்சிசாலைகளைப் போல் இல்லாமல், இந்த இரவு வனச் சுற்றுலா, இயற்கையான நிலவொளியைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு விளக்கு அமைப்பைப் பயன்படுத்தி, இரவு நேர விலங்குகளை அவற்றின் சுறுசுறுப்பான நேரங்களில் பார்வையாளர்கள் காண அனுமதிக்கும்.


இதுவே இரவு வனச் சுற்றுலாவின் தனித்துவமான அம்சமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்மொழியப்பட்ட சிறப்பு விளக்கு அமைப்பு நில ஒளியைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்படும். விலங்குகளுக்கு இடையூறு செய்யாமலோ அல்லது பாதிப்பை ஏற்படுத்தாமலோ, பார்வையாளர்கள் வனவிலங்குகளைத் தெளிவாகக் காண அனுமதிப்பதே இதன் நோக்கமாகும் என்று ஓர் அதிகாரி விளக்கினார்.


இந்தத் திட்டத்தின் முன்மொழிவில், ஆசிய சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள், கழுதைப்புலிகள், பறக்கும் அணில்கள் மற்றும் முதலைகள் உள்ளிட்ட பல இனங்களுக்கு இயற்கையான வாழ்விடங்களை உருவாக்குவதும் அடங்கும்.


இந்த விலங்குகளின் வாழிடங்கள் இயற்கையான சூழல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும். இதில் புல்வெளிகள், சதுப்புநிலங்கள், பாறை அமைப்புகள் மற்றும் உள்ளூர் தாவரங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு இயற்கையுடன் இணைந்த அனுபவம் வழங்கப்படும்.


இந்த வசதி, வார நாட்களில் 4,000 பார்வையாளர்களையும், வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில்  8,000 பார்வையாளர்களையும் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அனுமதி பெறுவதற்கு ஏன் நான்கு ஆண்டுகள் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது?


இந்தத் திட்டம் முதலில் ஜூலை 2022-ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதமே உத்தரப் பிரதேச அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றது. இருப்பினும், இது 'குக்ரைல்'  பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் முன்மொழியப்பட்டதால், பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் நீதித்துறை சார்ந்த அனுமதிகளைப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.





2023-ல், மாநில வனவிலங்கு வாரியம் மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் (Central Zoo Authority (CZA)) ஆகியவற்றின் ஒப்புதல்களை இந்தத்திட்ட முன்மொழிவு பெற்றது. வன நிலம் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடம் ஆகியவற்றை கொண்டதாக இந்தத்திட்டம் இருந்ததால், வனத்துறை, வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அனுமதிகளும் இந்தத்திட்டதிற்குத் தேவைப்பட்டன.


இத்திட்டம் பின்னர் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட 'மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவால் (Central Empowered Committee (CEC)) ஆய்வு செய்யப்பட்டது. அந்தக்குழு கள ஆய்வுகளை மேற்கொண்டு, திட்ட வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்யுமாறு பரிந்துரை செய்தது.


பல சுற்று விசாரணைகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் இந்த வாரம் இறுதியாக இந்தத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.


லக்னோவின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட பசுமைப் பகுதிகளில் ஒன்றான இந்த பாதுகக்கப்பட்ட காட்டின் (reserve forest) சுற்றுச்சூழல் முக்கியத்துவம் காரணமாகவே இது நீண்டகாலமாக கவனமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 1950-களில் ஒரு தோட்டக் வனப்பகுதியாக உருவாக்கப்பட்ட இந்த வனப்பகுதி, கோமதி ஆற்றின் துணை ஆறான 'குக்ரைல்' (Kukrail) நீரோடையின் பெயரால் அழைக்கப்படுகிறது. மேலும், இது ஒரு முக்கியமான நகர்ப்புறக் வனப்பகுதியாகவும் இருந்து வருகிறது. குக்ரைல் நீரோடையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அழிவின் விளிம்பில் உள்ள நீண்ட மூக்குடைய முதலை (gharial) எனப்படும் ஒரு வகையான முதலை இனத்தைக் காப்பதற்காக 1975-ல் நிறுவப்பட்ட குக்ரைல் கரியல் மறுவாழ்வு மையம் (Kukrail Gharial Rehabilitation Centre (KGRC)) இந்தக் வனப்பகுதியில் தான் அமைந்துள்ளது.


அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த 50 ஆண்டுகளில் இந்த மையம் இந்தியாவின் மிகச் சிறந்த ஊர்வன உயிரின பாதுகாப்பு மையங்களில் (reptile conservation facilities) ஒன்றாக வளர்ந்துள்ளது. இங்கு நீண்ட மூக்குடைய முதலை இனங்கள் (Gharials) இனப்பெருக்கம் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நதிகளில் மீண்டும் விடப்படுகின்றன. மேலும், இந்த மையத்தில் ஆராய்ச்சி ஆய்வகங்கள், கால்நடை மருத்துவ வசதிகள் மற்றும் மூக்குடைய முதலை மற்றும் ஆமைகளுக்கான மீட்பு இருப்பிடங்களும் (rescue enclosures) அமைக்கப்பட்டுள்ளன.


அரசின் கூற்றுப்படி, இரவு நேர வனச் சுற்றுலா திட்டம் (Night Safari Project),  ஒரு சுற்றுலா தலமாக மட்டும் செயல்படாது. இது ஒரு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையமாகவும் செயல்படும். இதன் மூலம் வனவிலங்கு பாதுகாப்பு, இனப்பெருக்க திட்டங்கள், இரவு நேர விலங்குகளின் நடமாட்டம் குறித்த ஆராய்ச்சி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Original Link: India’s first night safari gets SC nod: What the Kukrail project will offer.

Share: