நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் நிலவும் நிலையற்ற வாழ்வாதாரச் சூழல் -அமர்ஜீத் சின்ஹா, ​​ஷகுன் சூர்யம்

நகர்ப்புற சமூக உள்கட்டமைப்புகள் மேம்பட்டிருந்தாலும், அவை மக்களுக்குச் சரியாகச் சென்றடைவதில்லை என்பதை களஆய்வுகள் காட்டுகின்றன. நிர்வாகத்தில் குடிமக்கள் ஈடுபடுத்தப்படாததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.


சமீபத்தில் இரண்டு கல்வி நிறுவனங்களில் 'அதிகாரப் பகிர்வு, வளர்ச்சி மற்றும் ஜனநாயகம்' (Devolution, Development and Democracy) என்ற பாடத்தை நடத்தியபோது, சமூகத்தின் கடைசிப் புள்ளியில் உள்ள நிர்வாகம் மற்றும் மனித மேம்பாட்டு சவால்கள் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. வகுப்பறை விவாதங்களுக்குப் பிறகு, நகர்ப்புற நிர்வாகத்தின் உண்மையான நிலையை நேரில் கண்டறிய மாணவர்கள் களஆய்வுக்கு அனுப்பப்பட்டனர். பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சுகாதார மையங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், கழிவுகளிலிருந்து செல்வம் உருவாக்கும் திட்டங்கள் (Waste-to-wealth initiatives) மற்றும் நகர்ப்புற குடிசைப் பகுதிகள் ஆகியவற்றிற்கு சென்றனர். இந்த ஆய்வுகள் சமகால நகர்ப்புற இந்தியாவின் ஒரு முக்கியமான முரண்பாட்டை வெளிப்படுத்தின: உள்கட்டமைப்பு வசதிகள் விரிவடைந்திருந்தாலும், அவற்றின் பலன்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை.


மாணவர்கள் ஒரு பெரிய நகர்ப்புற குடிசைப் பகுதிக்கும், அதேபோல பெரிய தொழில்துறை செயல்பாடுகளுடன் வேகமாக நகரமயமாகி வரும் ஒரு மாவட்டத்திற்கும் நேரில் சென்றனர். நகர்ப்புறத்தின் கடைக்கோடி மக்கள் வாழும் பகுதி எதிர்கொள்ளும் சவாலானது பலவீனமான நிறுவனக் கட்டமைப்பு, பொறுப்புக்கூறலில் தெளிவின்மை மற்றும் அர்த்தமுள்ள சமூகப் பங்களிப்பு இல்லாமை ஆகியவற்றின் ஒட்டுமொத்தக் கலவையாகும்.

குடிநீர் விநியோகம் இல்லாத பின்தங்கிய குடியிருப்புகளுக்கு தண்ணீர் லாரிகள் வந்து சேருகின்றன. ஆனால், அவை வரும் நேரம் நிலையாக இல்லாததாலும், முன்கூட்டியே அறிவிக்கப்படாததாலும், பெண்கள் இப்போதும் பெரிய கொள்கலன்களுடன் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இது அவர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது.


பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் முன்பைவிட மேம்பட்டிருந்தாலும், அவற்றைப் பராமரிப்பது இன்னும் ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. அசுத்தமான கழிப்பறைகள், சரியாகப் பராமரிக்கப்படாத குடிநீர் அமைப்புகள், பயிற்றுநர்கள் இல்லாத மேடு பள்ளமான விளையாட்டு மைதானங்கள் மற்றும் தூய்மையற்ற வகுப்பறைகள் ஆகியவை வெறும் நிதிப் பற்றாக்குறையையும் தாண்டிய பிற சிக்கல்களைச் சுட்டிக்காட்டுகின்றன. இவை, உள்ளூர் சமூகத்தின் பங்களிப்பு மற்றும் நிபந்தனையற்ற நிதியுதவிகள் மூலம் பள்ளிகளின் பொறுப்புக்கூறலை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. பல குடும்பங்கள் போதுமான வசதிகள் இல்லாத வீடுகளில் வசிப்பதால், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் பள்ளி நேரத்திற்குப் பிறகும் பிள்ளைகள் தங்கிப் படிப்பதற்கான ஒரு சமூகக் கற்றல் மையங்களாகச் செயல்பட வேண்டும்.


பல ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள், ஆனால் கற்பித்தல் அல்லாத இதரப் பணிகள் அவர்களது கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் செயல்முறைகளுக்குப் பெரும் தடையாக இருக்கின்றன. அதேநேரத்தில், சில இடங்களில் ஆசிரியர்களின் பொறுப்புக்கூறல் பலவீனமாக உள்ளது. இதனால், பள்ளி முதல்வர்களுக்கு போதிய அதிகாரம் இருப்பதில்லை. அங்கன்வாடிகள் ஒரு முக்கியமான சேவையை வழங்கினாலும், அவை மிகக் குறைந்த நேரமே செயல்படுவதால், முழுநேரக் குழந்தை பராமரிப்பு மையங்களாகச் செயல்படுவதற்கு ஏற்றவையாக இல்லை.






கழிவுகளைச் செல்வமாக மாற்றும் பொது-தனியார் கூட்டுத் திட்டங்கள் தற்போது சிறிய நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், இத்திட்டங்களில் முதலீடு செய்யும் தனியார் பங்களிப்பு நிறுவனங்களுக்கும் லாபம் கிடைக்குமா என்ற நிச்சயமற்றத் தன்மை இருப்பதால், இந்தத் திட்டங்களின் நீண்டகால நிலைத்தன்மை இன்னும் சிக்கலானதாகவே உள்ளது.


வசதிகள் குறைந்த வீடுகள், போதிய சுகாதாரமின்மை மற்றும் நம்பகமற்ற குடிநீர் விநியோகம் கொண்ட குடிசைப் பகுதிகளில், மருத்துவர், மருந்துகள் மற்றும் பரிசோதனை வசதிகளுடன் கூடிய ஒரு பொது மருத்துவமனை அருகிலேயே இருப்பது மிக அத்தியாவசியமான தேவையாகும். இது இல்லாத பட்சத்தில், சிறிய அளவிலான நோய்களுக்குக்கூட அப்பகுதி மக்கள் நீண்டதூரம் பயணம் செய்து மூன்றாம் நிலை மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


அதிகப்படியான புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்ட நகர்ப்புறங்கள், வேலை சார்ந்த உடல்நல அபாயங்கள், மோசமான வாழ்வாதாரச் சூழல் மற்றும் எளிதில் பரவக்கூடிய நோய்களின் அதிகப்படியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. ஒரு நாள் கூலியை இழந்துவிடுவோம் என்ற பயத்தினால் பல தொழிலாளர்கள் தங்களுக்கான சிகிச்சையைத் தள்ளிப்போடுகிறார்கள், இது அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்குகிறது. இந்த நிலைமை, ஆரம்ப சுகாதாரத் துறையில் ஒரு புதிய அணுகுமுறையின் தேவையை உணர்த்துகிறது. பொது சுகாதாரம் என்பது, மக்களுடன் இணைந்த கூட்டு நிர்வாகத்தின் மூலம் நகராட்சி நிர்வாகத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாற வேண்டும்.


நிறுவனரீதியிலான இடைவெளிகளை நிரப்புதல் 


களஆய்வுகள் உள்ளூர் சமூகங்களின் வியக்கத்தக்க மீள்திறனையும் அவர்களது ஆர்வத்தையும் காட்டின. உள்ளூர் மக்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, திட்டமிடுதல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் அவர்களையும் இணைத்துக்கொண்டு, நிபந்தனைகளற்ற தாராள நிதி உதவியும் அளித்தால், கடைக்கோடி மக்களுக்கான பல சவால்களை மிக எளிதாகத் தீர்க்க முடியும் என்பது தெளிவாகப் புரிந்தது. இந்த மக்களுக்குத் துணையாக, அவர்களுடன் நெருங்கிப் பணியாற்றும் நிபுணர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் இருக்கும்போது, இந்தச் செயல்முறை இன்னும் வலுவடையும்.


கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பெண்களின் கூட்டமைப்புகள், இந்த ஆய்வுகளின்போது காணப்பட்ட மிகவும் ஊக்கமளிக்கும் உதாரணங்களில் ஒன்றாகும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் (Self-Help Group (SHGs)), பெண்கள் பணத்தைச் சேமிக்கவும், கடன்களைப் பெறவும், நெருக்கடியான காலங்களில் ஆதரவைப் பெறவும் பெரிதும் உதவியுள்ளன. மேலும், இந்த அமைப்புகள் பெண்கள் இடையே பரஸ்பர நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் சூழலை உருவாக்கியுள்ளன. இதுமட்டுமின்றி, சுய-உதவிக்குழுக்களில் பங்கேற்பது பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தியுள்ளது.


இருப்பினும், சமுதாயத்தில் உள்ள ஆணாதிக்கத்தின் கட்டுப்பாடுகள் இப்போதும் வெளிப்படையாகத் தெரிகின்றன. பெண்களின் முன்னேற்றம், நிதி சுதந்திரம் ஆகியவை இன்றும் பல வீடுகளில் உள்ள ஆண்களின் அனுமதியைச் சார்ந்தே இருப்பதால், அது சுய-உதவிக்குழுக்களின் முழுமையான வளர்ச்சித் திறனைத் தடுக்கிறது. பல பெண்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளவும், வங்கிகளுக்குச் செல்லவும் அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தங்களது கணவர்களின் அனுமதி தேவை என்று கூறினர். இது, முடிவெடுக்கும் விஷயத்தில் அவர்களுக்கான அதிகாரம் இன்னும் முழுமையான சுதந்திரமாக மாறவில்லை, மாறாக சில நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.


சேவைகளை வழங்குவதில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதற்கான பல உதாரணங்களை மாணவர்கள் கவனித்தனர். இது ஒரு வரவேற்கத்தக்க வளர்ச்சி என்றாலும், சமூக அளவில் மக்களுக்குப் போதிய வழிகாட்டுதலும் ஆரம்பக்கட்ட உதவியும் இல்லாதபோது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஒரு சவாலாக மாறுகிறது என்பதை இந்த நேரடிப் புலம்சார் களஆய்வுகள் உணர்த்தின. அதாவது, தொழில்நுட்பத்தை இலக்கை அடைவதற்கான ஒரு கருவியாகப் பார்க்காமல், அதுவே இறுதி இலக்கு என்று நினைக்கும்போது, அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும்கூட, சில மக்கள் திட்டங்களில் இருந்து விடுபட்டுப்போகும் ஆபத்து ஏற்படுகிறது. இந்தச் சவாலுக்குத் தீர்வுகாண வேண்டுமானால், மக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் கூட்டாட்சிமுறை மூலமாகச் சமூகத்தோடு இன்னும் ஆழமான பிணைப்பை உருவாக்குவது அவசியமாகும்.


பொறுப்புக்கூறல் பற்றாக்குறை


இந்தச் செயல்பாட்டு முறைகள் மிகவும் விரிவான ஒரு நிறுவனப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டுகின்றன: அதாவது, நகர நிர்வாக அமைப்புகள் செயல்பாட்டில் இருந்தாலும், அவை பொதுச் சேவைகளை அதிகம் சார்ந்து வாழும் விளிம்புநிலை சமூக மக்களிடமிருந்து மிகவும் விலகியே இருக்கின்றன.


நகர்ப்புற நிர்வாகம் கட்டமைக்கப்பட்டுள்ள முறையில்தான் பெரிய சாவல்கள் உள்ளன. வார்டு அளவில் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விளிம்புநிலை சமூகங்கள் அதிகம் வசிக்கும் குடிசைப் பகுதிகளில் இருந்து மிகவும் விலகியே இருக்கிறார்கள். மேலும், வார்டுகளின் பரப்பளவும் மிக அதிகமாக இருப்பதால், அங்கு பொதுமக்கள் நேரடியாகவும் அர்த்தமுள்ள வகையிலும் நிர்வாகத்தில் பங்கேற்பது கடினமாக உள்ளது. அரசாங்கத்திற்கும் இந்த குடிசைப்பகுதி வாழ் மக்களுக்கும் இடையே உள்ள இந்த இடைவெளி, திட்டங்களைச் சரியாகக் கண்காணிப்பதைக் குறைப்பதோடு, பொதுமக்களின் நம்பிக்கையையும் குறைக்கிறது. சிறந்த நிர்வாகத்திற்குப் குடிசைப்பகுதி அளவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே, நகர்ப்புறப் பொதுச் சேவைகளை அந்தந்தப் பகுதி மக்களே நேரடியாக நிர்வகிக்கும் வகையில் இந்த நிர்வாக முறையை மாற்றி அமைக்க வேண்டும்.


களஆய்வுகள் காட்டியுள்ளபடி, குடிமக்களிடையே இதற்கான விருப்பம் இல்லாதது பிரச்னையல்ல. மாறாக, உள்ளூர் சமூகங்களைச் சமமான பங்காளராக நடத்தும் ஒரு சிறந்த ஆட்சி அமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தோல்வியே இதற்குக் காரணமாகும்.



ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழலைக் களஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, குடிசைப்பகுதி எனப்படும் உள்ளூர் குடியிருப்புகளை மையமாகக் கொண்ட ஒரு புதிய கூட்டாட்சி மாதிரி உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதில், தேவைக்கேற்பப் பயன்படுத்தக்கூடிய உள்ளூர் நிதி, அந்தச் சமூக மக்களுக்கான தொழில்முறை ஆதரவு மற்றும் பெண்களுக்கான கூடுதல் உரிமை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் ஆகியவை உள்ளடங்கியிருக்க வேண்டும்.


குடிமக்கள் இந்த மாற்றத்திற்குத் தயாராகவே இருக்கிறார்கள். அரசாங்கம் தனது பங்கை மறுவரையறை செய்து, இந்த மாற்றத்தை ஏற்கத் தயாராக இருக்கிறதா என்பதுதான் தற்போதைய கேள்வியாகும்.


சின்ஹா மற்றும் சூர்யம் ஆகியோர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தில் பணிபுரிகின்றனர். இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றாலும், மாணவர்களின் பங்களிப்பையும் கருத்துக்களையும் அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.


Original Link: The precarity of living in urban slums.

Share: