Showing posts with label NATO. Show all posts
Showing posts with label NATO. Show all posts

NATO அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், இந்தியாவுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. -சக்தி பிரசாத் ஸ்ரீசந்தன்

இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பான நட்புநாடுகளில் ஒன்றாகவும், முக்கியமான எரிசக்தி வழங்குநராகவும் தொடர்ந்து இருக்கும் ரஷ்யாவே இந்தியாவுக்கு ஒரு சவாலாக உள்ளது. அதே வேளையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான தனது  ராஜதந்திர உறவுகளை இந்தியா வலுப்படுத்தியுள்ளது.


சில நாட்களுக்கு முன்பு அங்காராவில் நடைபெற்ற 2026 நேட்டோ உச்சி மாநாடு (NATO Summit), இந்த அமைப்பு வீழ்ச்சியை நோக்கிச் செல்லவில்லை. மாறாக, இது ஒரு புதிய ராஜதந்திர மாற்றத்தின் காலகட்டத்திற்குள் நுழைகிறது என்பதை உறுதிப்படுத்தியது. உக்ரைன் பிரச்சினை இன்னும் நேட்டோவின் முக்கிய கவனமாக இருந்தாலும், அதன் நோக்கங்கள் தற்போது அதைவிட விரிவடைந்துள்ளன. நீண்டகால போட்டி, தொழில்நுட்பப் போட்டி மற்றும் நிலையற்ற விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றால் உருவாகும் உலகை எதிர்கொள்ள நேட்டோ தயாராகி வருகிறது. இந்த மாற்றம் இந்தியாவுக்கு முக்கியமானது.


அங்காராவிலிருந்து வரும் முதல் செய்தி தெளிவாக உள்ளது: வரும்  ஆண்டுகளுக்கும் ரஷ்யா, நேட்டோவின் முக்கிய பாதுகாப்புச் சவாலாகத் தொடரும் என்பதாகும். உக்ரைன் போர் முடிவடைந்தாலும், தடுப்பு நடவடிக்கை (Deterrence) என்பது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நேட்டோ முடிவு செய்துள்ளது. இரண்டாவது செய்தியும் அதே அளவு முக்கியமானது. ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்புக்காக இன்னும் அதிகமான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அமெரிக்கா தொடர்ந்து தவிர்க்க முடியாத நட்புநாடக இருந்தாலும், அனைத்து பாதுகாப்புச் சுமைகளையும் தனியாகச் சுமக்க அமெரிக்கா   விரும்பவில்லை. ஐரோப்பிய நாடுகளின் அதிகரித்து வரும் பாதுகாப்புச் செலவுகள், அட்லாண்டிக் கூட்டணிக்குள் (Transatlantic Alliance) பொறுப்புகள் மறுபகிர்வு செய்யப்படுவதைக் குறிக்கிறது. மூன்றாவது செய்தி மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். நவீனப்  போர்க்களத்தில் மட்டுமல்ல, தொழிற்சாலைகள் மற்றும் ஆய்வகங்களிலும் வெல்லப்படுகின்றன. உக்ரைன் போர், வெடிமருந்து உற்பத்தி, ஏவுகணைத் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு விநியோகச் சங்கிலிகளில் உள்ள கடுமையான பலவீனங்களை இது வெளிக்காட்டுகிறது. தொழில்நுட்பம் இந்த மாற்றத்தை முழுமையாக செயலப்படுத்தி வருகிறது. செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, குவாண்டம் கணினி, தன்னாட்சி அமைப்புகள் மற்றும் விண்வெளித் திறன்கள் ஆகியவை இனி எதிர்காலக் கவலைகள் அல்ல. அவை இன்றைய ராஜதந்திர முன்னுரிமைகள் ஆகும்.


இந்தியா நேட்டோ உறுப்பினர் அல்ல. அது உறுப்பினராக ஆவதற்கான வாய்ப்பும் இல்லை. ஆனால், இந்தியாவின் பாதுகாப்புச் சூழல், அதன் அண்டை நாடுகளை தாண்டி எடுக்கப்படும் முடிவுகளால் அதிகளவில் வடிவமைக்கப்படுகிறது. ஐரோப்பா பாதுகாப்புத்துறையில் அதிக முதலீடு செய்வது, இந்தியாவின் பாதுகாப்புத் தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. குறிபிட்ட சில நாடுகளை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, பல்வேறு நாடுகளுடன் உருவாக்கப்படும் புதிய விநியோகச் சங்கிலிகளில் இந்திய நிறுவனங்கள் நட்பு நாடுகளாக மாற முடியும். ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியம், நம்பகமான நட்பு நாடுகளுக்கான ஐரோப்பாவின் தேடலுடன் நன்கு பொருந்துகிறது. இந்தியா விரைவாக செயல்பட்டால், பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது ராணுவத் துறையைத் தாண்டி, விரிவான தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை கூட்டாண்மையாக மாறக்கூடும். மேலும், நேட்டோவின் ராஜதந்திர பார்வை இனி அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியுடன் மட்டும் இருக்காது. அது அதிகளவில் இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிகள், கடல்சார்ந்த பாதுகாப்பு, முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றுடன் ஐரோப்பிய பாதுகாப்பை இணைத்து வருகிறது. இது ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது: இன்றைய உலகில் பாதுகாப்பு என்பது ஒன்றோடொன்று தொடர்புடையதாக உள்ளது. ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் பாதிப்பு, விரைவாக மற்றொரு பிராந்தியத்தையும் பாதிக்கக்கூடும். இந்தியாவுக்கு இது வாய்ப்புகளையும் சவால்களையும் உருவாக்குகிறது. வாய்ப்பு என்பது, கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்புத் திறன் (Cyber Resilience), முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு புதுமைகள் ஆகிய துறைகளில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது ஆகும். ஆனால், இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகக் கூட்டாளிகளில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்கும் ரஷ்யா ஒரு சவாலான காரணியாக உள்ளது. அதேவேளையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான தனது ராஜதந்திர உறவுகளையும் இந்தியா வலுப்படுத்தியுள்ளது. நேட்டோவுக்கும் ரஷ்யவுக்கும் இடையிலான மோதல் நிலை தீவிரமடைந்து வருவதால், இரண்டு தரப்பு உறவுகளையும் சமநிலையில் வைதிருப்பது கடினமானதாக மாறக்கூடும்.


இதனால்தான், இந்தியாவின் ராஜதந்திர தன்னாட்சிக் கொள்கை இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ராணுவக் கூட்டணிகளில் (Military Blocs) ஒரு பகுதியாக மாறாமல், தங்களது நலன்கள் ஒத்துப்போகும் இடங்களில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயல்படுவது என்ற அணுகுமுறை முக்கியமானதாக உள்ளது. இந்தியா, நேட்டோவை உக்ரைன் போர் என்ற ஒரே கண்ணோட்டத்தின் மூலம் மட்டும் பார்க்கும் அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும். உண்மையான நிலைமை இதைவிட மிகவும் விரிவானது. நேட்டோ தற்போது பாதுகாப்பு, தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் பொருளாதார உறுதித்தன்மை (Economic Resilience) ஆகியவை ஒன்றோடொன்று அதிகமாக இணைக்கப்பட்ட ஒரு அமைப்பாக மாறி வருகிறது. இந்த மாற்றம், உலகளாவிய தரநிலைகள், பாதுகாப்புத்துறை புதுமைகள் மற்றும் ராஜதந்திர கூட்டாண்மைகளை வடிவமைக்கும். எனவே, “நேட்டோ இந்தியாவுக்கு தொடர்புடையதா?” என்று கேட்பதற்குப் பதிலாக, கொள்கை வகுப்பாளர்கள் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி: இந்தியாவின் ராஜதந்திர சுயாட்சியைப் பாதுகாத்துக்கொண்டு, ஐரோப்பாவின் பாதுகாப்பு மாற்றத்திலிருந்து இந்தியா எவ்வாறு பயன் பெற முடியும்?” சரியாக செயல்பட்டால், இந்தியா அட்லாண்டிக் கூட்டணியின் பாதுகாப்பு மறுசீரமைப்பு அலை (Transatlantic Rearmament Wave) மூலம் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நன்மைகளைப் பெறமுடியும். இதைத் தவறாகக் கையாளப்பட்டால், இதே அலை, புது இந்தியாவை விலை உயர்ந்த சார்பு நிலைகளுக்கும்,  மிகுந்த சிரமத்துடன் பாதுக்காத்து வரும் ராஜதந்திர சுயாட்சியை பலவீனப்படுத்தும் தேர்வுகளை நோக்கி தள்ளக்கூடும்.


எழுத்தாளர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு பள்ளியில் உள்ள ஐரோப்பிய ஆய்வு மையத்தின் உதவிப் பேராசிரியராக உள்ளார்.


Original Link: NATO’s transformation opens possibilities for India.

Share: