Showing posts with label hornbill. Show all posts
Showing posts with label hornbill. Show all posts

இந்திய சாம்பல் இருவாட்சி பறவை மீண்டும் கிர் பகுதிக்கு திரும்புகிறது: அது ஏன் தன் துணையை ஒரு மரத்தினுள் அடைத்து வைக்கிறது? -ரோஷ்னி யாதவ்

பத்தாண்டுகளுக்கு முன்பு மறைந்துபோன இந்திய சாம்பல் இருவாட்சிப் பறவை, குஜராத்தின் கிர்  வனப்பகுதிக்கு மீண்டும் வரத்தொடங்கியுள்ளது. ஆனால் அது மீண்டும் வருவதற்க்கு என்ன காரணம்? இது ஏன் இவ்வளவு வசீகரமானதாகத் தெரிகிறது? இது ஏன் “அன்பும் அக்கறையும் கொண்ட கணவர்” (Doting Husband) என்று அழைக்கப்படுகிறது? இது எவ்வாறு வனப்பகுதிகளின் மறுஉருவாக்கத்திற்கு (Forest Regeneration) உதவுகிறது? 


தற்போதைய செய்தி :


குஜராத்தின் கிர் வனப்பகுதிகளில் ஒரு முக்கியமான வனவிலங்கு பாதுகாப்பு வெற்றிக் கதை அமைதியாக உருவாகி வருகிறது. 1950 மற்றும் 60-களில் அப்பகுதியிலிருந்து மறைந்துபோன 'இந்தியச் சாம்பல் நிற இருவாட்சிப் பறவை' (Indian Grey Hornbill), அரசின் முயற்சியின் மூலம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது வெற்றிகரமாகத் தங்கள் வாழிடங்களை அமைத்துக்கொண்டு குஞ்சுகளையும் ஈன்றுள்ளது. இந்தச்சூழலில், இந்தியச் சாம்பல் நிற இருவாட்சிப் பறவை, அதை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் மற்றும் 'பெரிய இருவாட்சிப் பறவை' (Great Hornbill) ஆகியவை குறித்து தெரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தியச் சாம்பல் நிற இருவாட்சி பறவையின் அறிவியல் பெயர் Ocyceros birostris ஆகும். இதன் பெயர், இந்தப் பறவையின் தனித்துவமான கொம்பு போன்ற அலகு (Horn-like Beak) அமைப்பைக் குறிக்கிறது. மேலும், ஆண் பறவையின் மேல் அலகில் குறிப்பிடத்தக்க அளவில் கூர்மையான கருமை நிறக் தலைக்கவசம் (Casque) காணப்படும். பெண் பறவையில் இது குறைவாகவே காணப்படும். இதன் அலகு  (beak) பழுப்பு கலந்த கருப்பு மற்றும் தந்த வெள்ளை நிறத்தில் (Ivory-white) இருக்கும்.


2. இந்திய சாம்பல் இருவாட்சிப் பறவைகள் பழங்கள் மற்றும் பெர்ரி வகை கனிகளை உணவாக உண்ணுகின்றன. இதன் காரணமாக, இவை விதைகளைப் பரப்புவதில் (Seed Dispersal) முக்கியப் பங்கு வகித்து, வனப்பகுதிகள் விரிவடைவதற்க்கு உதவி செய்கின்றன. குறிப்பாக, அத்தி மரத்தின் (Fig Tree) விதைகளைப் பரப்புவதில் இருவாட்சிப் பறவைகள் முக்கியமானவை. மேலும், இவை பூச்சிகள், பல்லிகள், நத்தைகள், எலிகள் மற்றும் பிற பறவைகளின் குஞ்சுகள் ஆகியவற்றையும் உணவாக உட்கொள்கின்றன.


3. பெயருக்கு ஏற்றவாறு, இந்திய சாம்பல் இருவாச்சி பறவைகள் சாம்பல் நிறம் கொண்ட உடல் அமைப்புடன், கருப்பு அடிப்பகுதியுடன் கூடிய மஞ்சள் நிற அலகு, கருப்பு மற்றும் வெள்ளை முனைப்பகுதி கொண்ட வால், அலகின் மேல் தலைக்கவசம் (Casque) அமைப்பைக் கொண்டுள்ளது. இது 50 செ.மீ நீளம் கொண்டது. இதன் எடை  370 முதல் 400 கிராம் வரை இருக்கும். இது 10 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஒரு முறை இனப்பெருக்கத்தில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடும்.


4. இவை மரங்களின் மிக உயர்ந்த கிளைகளில் அமர்வதால், மரத்தின் அடியில் நின்றுகொண்டு இவற்றைக் காண்பது கடினம். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (International Union for Conservation of Nature) சிவப்புப் பட்டியலில் இவை 'குறைந்தபட்சக் கவலைக்குரியவை' (Least Concern) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தியச் சாம்பல் இருவாட்சிப் பறவை சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் மாநிலப் பறவை என்ற பெருமையையும் பெற்றுள்ளது.


5. உலகளவில் உள்ள 54 இருவாட்சி இனங்களில், 9 இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் 9 இருவாட்சி இனங்கள் உள்ளன. மேலும், நாட்டின் வடகிழக்குப் பகுதி இந்த இனங்களின் அதிகபட்ச பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது.


குஜராத்தில், ஏன் ஆண் இந்திய சாம்பல் இருவாச்சி பறவையை “அன்பான கணவர்” (Doting Husband) என்று அழைக்கிறார்கள்?


6. இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவைகள் ஜோடியாகவோ அல்லது ஒரு சிறிய குழுவாகவோ இருக்கும். இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவைகள் காணப்படும் உறுதியான பாசத்திற்காக அனைவராலும் அறியப்படுகின்றன. இவற்றின் நம்பிக்கையும் பிணைப்பும் மிகவும் ஆச்சரியமானதாகும். குஜராத்தியில், ஆண் இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவை அன்புடன் 'vahughelo' என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், பாசமுள்ள கணவன் என்பதாகும். ஏனெனில், ஒரு ஜோடி மரத்தின் பொந்தில் (Tree Hollow) கூடு அமைக்கும் இடத்தைக் கண்டுபிடித்த பிறகு, பெண் பறவை தனது பறக்கும் இறகுகளை உதிர்த்துவிட்டு, முட்டைகளை அடைகாப்பதற்காகக் கூட்டுக்குள்ளேயே தங்கிவிடுகிறது.


7. பிறகு, ஆண் பறவை சேற்று உருண்டைகளைப் (Mud Pellets) பெண் பறவையிடம் கொண்டு வருகிறது. பின்னர், பெண் பறவை தனது கழிவுப் பொருட்களுடன் சேர்த்து அந்தச் சேற்றைப் பயன்படுத்தி, கூட்டின் நுழைவாயிலை முழுமையாக மூடிவிடுகிறது. உணவு பெறுவதற்காக தனது அலகை வெளியே நீட்டுவதற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் ஒரு சிறிய செங்குத்தான இடைவெளியை (Vertical Slit) மட்டும் திறந்து வைக்கிறது. இவ்வாறு, இரண்டு மாதங்களுக்கு, தனது உணவுத் தேவைகளுக்காக முழுமையாக தனது துணையை நம்பி வாழ்கிறது. மேலும், உதிர்ந்த இறகுகளைப் பயன்படுத்தி கூட்டின் உள்ளே மென்மையான அடுக்கை உருவாக்குகிறது.


8. தினமும் ஆண் இந்திய சாம்பல் இருவாச்சி பறவை நீண்ட தூரம் பயணம் செய்து, உணவைச் சேகரித்து, அதை மீண்டும் கொண்டு வந்து பெண் பறவைக்கு வாய்வழியாகக் (Regurgitated Food) ஊட்டுகிறது. இவை ஒரே நேரத்தில் ஒரு துணையுடன் மட்டுமே இணைந்து வாழும் (Monogamous) தன்மை கொண்டவை. குஞ்சுகள் வளர்ந்து பெரியதாகும் நேரத்தில், தாய் பறவையின் பறக்கும் இறகுகள் மீண்டும் வளர்ந்துவிடுகின்றன. பின்னர், அது தனது அலகால் கூட்டின் நுழைவுப் பகுதியை உடைத்து வெளியே வருகிறது. அதன் பிறகு, ஆண் மற்றும் பெண் இருவாச்சிகள் இருவரும் இணைந்து குஞ்சுகளுக்கு உணவளிக்கின்றன.


கிர் வனப்பகுதியில் இந்திய சாம்பல் இருவாட்சிப் பறவைகளை மீண்டும் அறிமுகப்படுத்துதல்


1. மாநில அரசின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, ‘இந்தியாவின் கிர் பகுதியில் இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவைகளை மீண்டும் அறிமுகப்படுத்துதல்: அவற்றின் நடமாட்டம், வாழ்விடத் தேர்வு, கூடு அமைக்கும் முறை மற்றும் நடத்தை குறித்த ஆய்வுகள்’ என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை, ‘Birds’ என்ற சர்வதேச ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. குஜராத் வனத்துறையால் செயல்படுத்தப்பட்ட இந்திய சாம்பல் இருவாட்சிப் பறவைகளை மீண்டும் அறிமுகத் திட்டம் குறித்த முதல் விரிவான மதிப்பீட்டை இந்த ஆய்வு வழங்கியுள்ளது.


2. இந்தத்திட்டத்தில், 40 இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவைகள் இரண்டு கட்டங்களாக விடுவிக்கப்பட்டன. 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் 28 பறவைகளும், 2023-ஆம் ஆண்டில் 12 பறவைகளும் விடப்பட்டன. இதில் 11 ஆண் பறவைகளுக்கு செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவிகள் (Satellite Transmitters) பொருத்தப்பட்டன. இதன் மூலம், விஞ்ஞானிகள் அவற்றின் இயக்கம், வாழ்விடப் பயன்பாடு மற்றும் இனப்பெருக்க நடத்தை ஆகியவற்றை பல ஆண்டுகளாகக் கண்காணிக்க முடிந்தது என்று இந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரும், ஜுனாகத் வட்டார வனப் பாதுகாவலருமான  மோகன் ராம் தெரிவித்தார்.


3. விரிவான வாழ்விட மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, கிர் காடுகள் இந்திய சாம்பல் இருவாச்சி பறவைகளுக்கு ஏற்ற சூழலியல் நிலைமைகளை  கொண்டுள்ளனவா என்பது உறுதிசெய்த பின்னர், இந்தப் பறவைகள் குஜராத்தின் ஆரவல்லி காடுகளில் காணப்பட்ட ஆரோக்கியமான இருவாச்சி பறவைகள் இனக்குழுக்களில் இருந்து மாற்றி கொண்டு வரப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


4. இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவையானது, நீண்டதூரத்திற்கு விதைகளைப் பரப்பும் சூழலியல் முக்கியத்துவம் கொண்டதாக இருந்து வருகிறது. இது, பழம் தரும் மரங்களின் விதைகளை பரந்த நிலப்பரப்புகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம் வனப்பகுதிகளை மீண்டும் உருவாக்க உதவுகிறது என்று வன மற்றும் சுற்றுச்சூழல் முதன்மைச் செயலாளர் வினோத் ராவ் கூறினார்


5. இந்தப் பகுதியில் இருந்து இருவாச்சி பறவைகள் மறைந்ததற்கான வரலாற்றுப் பின்னணியை விளக்கிய வனவிலங்கு முதன்மை தலைமைப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் ஜெய்பால் சிங், வரலாற்று பதிவுகளின்படி, வாழ்விடச் சீரழிவை (Habitat Degradation) விட வேட்டையாடுதலே இவை மறைந்ததற்கான முக்கிய காரணமாக இருந்தது என்று தெரிவித்தார்.


6. மேலும், இருவாச்சி பறவைகள் கூடு அமைப்பதற்கு, பெரிய தண்டு சுற்றளவு (Large Trunk Girth) கொண்ட முதிர்ந்த மரங்களை (Mature Trees) தேர்ந்தெடுப்பது கவனிக்கப்பட்டது. குறிப்பாக, இலையுதிர் மர வகை (Sterculia urens) மற்றும் தான்றிக்காய் மரம் (Terminalia bellirica) போன்ற மரங்களில் இவை கூடு அமைத்தன. இது, இயற்கை நிலப்பரப்பில் உள்ள பழமையான மற்றும் முதிர்ந்த மரங்களை   பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.


பெரிய இருவாச்சி பறவை (Great Hornbill)


1. பெரிய இருவாச்சி பறவை, பொதுவாக முதன்மை பசுமைமாறா காடுகள்  மற்றும் ஈரமான இலையுதிர் காடுகளில்  காணப்படுகிறது. குறிப்பாக, இது உயரமான மரங்களின் மேல் பகுதிகளில் (Canopy) வாழ்கிறது.


2. இது இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின், சிவப்பு பட்டியலில் “பாதிக்கப்படக்கூடிய இனம்” (Vulnerable) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது 1972-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (Wildlife Protection Act, 1972) அட்டவணை I-ன்  கீழ் பாதுகாக்கப்படுகிறது.


இருவாச்சி திருவிழா (Hornbill Festival) என்றால் என்ன?


பொதுவாக “திருவிழாக்களின் திருவிழா (Festival of Festivals)” என்று அழைக்கப்படும் இருவாச்சி திருவிழா (Hornbill Festival), நாகாலாந்தின் மிகவும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. மக்களால் மதிக்கப்படும் இருவாச்சி பறவையின் பெயரில் இந்தத் திருவிழா அழைக்கப்படுகிறது.  நாகா பழங்குடியின மக்கள் ஒன்றுகூடி, தங்களது பாரம்பரியங்களை வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மூலம் கொண்டாடுகின்றனர்.


கிர் பகுதிக்கு இந்திய சாம்பல் இருவாட்சி மீண்டும் வருகிறது: தனது துணையை இரண்டு மாதங்களுக்கு மரத்திற்குள் அடைத்து வைக்கும் இந்தப் பறவையைச் சந்தியுங்கள். நாகாலாந்தில் நடைபெறும் வருடாந்திர இருவாட்சித் திருவிழாவில் நாகா பழங்குடியினர் தங்கள் ஆயுதங்களுடன் அமர்ந்திருக்கின்றனர். நாள் முழுவதும் இந்தத் திருவிழா துடிப்பாகவும் ஆற்றல் நிறைந்ததாகவும் இருக்கிறது. முழுமையான விழாக்கோலம் பூண்ட வீரர்கள் பாரம்பரிய நடனங்களையும் போர்க்குரல்களையும் எழுப்புகின்றனர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் வெற்றிகள், அறுவடைகள், காதல் மற்றும் பழங்குடிப் புராணங்கள் என ஒரு கதையைச் சொல்கிறது. இருவாட்சி இறகுகள், பன்றிக் கோரப்பற்கள் மற்றும் வண்ணமயமான பின்னப்பட்ட சால்வைகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான தலைக்கவசங்களை அணிந்திருக்கும் வீரர்கள், ஒரு மறக்க முடியாத காட்சியை உருவாக்குகின்றனர்.


3. இந்தியாவில் பெரிய இருவாச்சிகள் முக்கியமாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இமயமலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இது அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கேரளாவின் மாநிலப்பறவை ஆகும்.


Original Link: Indian Grey Hornbill returns to Gir: Why it seals its mate inside a tree.

Share: