Showing posts with label muslim. Show all posts
Showing posts with label muslim. Show all posts

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கான சலுகைகளை மறுப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. -ஹரிப்ரியா வெங்கடகிருஷ்ணன்

இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கான அங்கீகாரத்தை மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பு, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கவலைகளையும் சட்ட முரண்பாடுகளையும் எழுப்பியுள்ளது.


மதமாற்றம் மற்றும் இடஒதுக்கீடு - இந்த இரண்டு கருத்துகளையும் சுற்றியுள்ள சட்ட கொள்கைகள் (jurisprudence) மிகவும் விரிவானதும் சிக்கலானதும் ஆகும். ஆனால், இரண்டும் ஒன்றோடொன்று இணையும் இடத்தில் உருவாகும் சட்ட மற்றும் அரசியலமைப்புச் சிக்கல்கள், நிலைமையை சிக்கலானதாகவும், தெளிவற்றதாகவும், கவலையளிப்பதாகவும் மாற்றுகின்றன.


இந்த விவாதத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள முக்கிய அம்சம், நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கிய 'சமீர் அகமது vs மாவட்ட ஆட்சியர்' (Sameer Ahamed v. The District Collector) வழக்கின் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பாகும். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. தமிழ்நாடு அரசு 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை  அரசியலமைப்புக்கு முரணானது என்று அமர்வு தீர்ப்பளித்து அரசாணையை ரத்து செய்தது. அந்த அரசாணையின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பை (Backward Classes) சேர்ந்தவர்கள் அல்லது பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அரசால் அறிவிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களின் ஏழு உட்பிரிவுகளில் (sects) ஏதேனும் ஒன்றிற்கு மதம் மாறினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூகச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று குறிபிடப்பட்டிருந்தது. இறுதியில், இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர் "இஸ்லாமியாராகவே" கருதப்படுவார் என்றும், 'பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்' என்ற அங்கீகாரத்தை பெற முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்த வழக்கின் முக்கிய முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கு முன், இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுபவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்ட நடவடிக்கைகளை தெரிந்து கொள்வது முக்கியம். தற்போது நீண்டகாலமாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளஅரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை, 1950 (Constitution (Scheduled Castes) Order)-ன் படி, இந்துமதம், சீக்கியம் அல்லது புத்தமதம் ஆகியவற்றைத் தவிர வேறு எந்த மதத்தையும் பின்பற்றும் நபரும் பட்டியல் சாதியினராகக் (Scheduled Caste) கருதப்பட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியல் சாதியினர் வேறு மதத்திற்கு மாறினால், இந்த ஆணையின் காரணமாக அவர்கள் பட்டியல் சாதி என்ற அங்கீகாரத்தை இழக்கின்றனர். இருப்பினும், இந்த பொதுவான சட்ட நிலைப்பாட்டிற்கு சில விதிவிலக்குகள் உள்ளன. மேலும், இந்த விதி அரசியலமைப்புச் சோதனையைத் தாங்காது என்பதே கட்டுரையாளரின் கருத்தாகும். ஆனால், தற்போதைய வழக்கைப் பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward Classes) உட்பட மற்ற எந்த இடஒதுக்கீட்டு சமூகங்களுக்கும், மதமாற்றம் செய்தால் அவர்களின் இடஒதுக்கீட்டு அங்கீகாரத்தை நீக்கும் வகையில் இதற்கு அரசியலமைப்பு விதியோ அல்லது தனிச்சட்டமோ இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 




ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணாக 


சமீர் அகமது வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முன்வைத்த வாதங்கள் இரண்டு அம்சங்களை கொண்டுள்ளது: ஒரு பிற்படுத்தப்பட்ட இந்து மற்றொரு மதத்திற்கு மாறும்போது, ​​அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அங்கீகாரத்தை இழந்துவிடுவார் என்று வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் முன்னுதாரணங்கள் உள்ளன. இரண்டாவதாக, அரசாணை நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக இருப்பதால், அது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் கருதியது. இருப்பினும், இந்த இரண்டு காரணங்களுமே சட்டரீதியாக குறைபாடுகளைக் கொண்டவையாகும்.


வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன என்பதை நிரூபிப்பதற்காக, அமர்வு நீதிமன்ற அமர்வு 1951-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜி. மைக்கேல் vs எஸ். வெங்கடேஸ்வரன் வழக்குத் தீர்ப்பையும், 2024-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய சி. செல்வராணி vs சிறப்பு செயலாளர் வழக்குத் தீர்ப்பையும் நீதிமன்றம் மேற்கோள் காட்டியது. ஆனால், இந்த இரண்டு வழக்குகளும் பட்டியல் சாதியினரை (Scheduled Castes) சேர்ந்த மதமாற்றம் செய்தவர்களைப் பற்றியதாகும். அவர்களுக்கே அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை, 1950 பொருந்துகிறது. தற்போதைய வழக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (Backward Classes) சேர்ந்த மதமாற்றம் செய்தவர்களைப் பற்றியது என்பதால், அந்தத் தீர்ப்புகள் இந்தவழக்கிற்கு நேரடியாகப் பொருந்தாது.


மேலும், அமர்வு 2022-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் U. அக்பர் அலி vs  தமிழ்நாடு மாநிலம்  வழக்கின் தீர்ப்பை அதிகமாக நம்பியுள்ளது. இந்தத் தீர்ப்பை, தற்போதைய அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கியிருந்தார். அதில், இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வேறு எந்த மதத்திற்கும் மாறினாலும், அவர் தனது பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்க்கான அங்கீகாரத்தை இழந்து விடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த அக்பர் அலி தீர்ப்பே ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானதாகும். ஏனெனில், இதற்கு முன்பு குறைந்தது இரண்டு முறை, சென்னை உயர்நீதிமன்றம் இந்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) வேறு மதத்திற்கு மாறினாலும், அவர்கள் தங்களின் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்க்கான அங்கீகாரத்தை இழக்க மாட்டார்கள் என்று தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் முக்கிய தீர்ப்புகள்: 2011-ஆம் ஆண்டு எம். ராஜா முகமது vs  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  (M. Raja Mohammed vs Tamil Nadu Public Service Commission)  மற்றும் 2014-ஆம் ஆண்டு எம்.யு. ஆரிஃபா எதிர் அரசாங்கச் செயலாளர் (M.U. Aariffaa v. Secretary to the Government) வழக்குகளின் தீர்ப்புகளாகும்.  


M.ராஜா முகமது வழக்கில் நீதிமன்றம், “ஒருவர் மதம் மாறியிருப்பதை அவருக்குப் எதிரானதாகக் கருத முடியாது” என்றுக் குறிப்பிட்டது. ஏனெனில்,  ஒருவர் விருப்பத்திற்கேற்ப மதம் மாறும் உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 வழங்கும் மதச்சுதந்திரத்தின் கீழ் வருகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் வேறு மதத்திற்கு மாறியுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கான இடஒதுக்கீட்டு சலுகைகளை மறுப்பது, அரசியலமைப்பின் பிரிவு 25 வழங்கும் இந்த அடிப்படை உரிமையை மறைமுகமாக மீறுவதாகும். U. அக்பர் அலி வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, நீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகளை மீறும் வகையிலேயே தமிழ்நாடு அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது என்றும், நீதிமன்ற தீர்ப்புகளை அரசாணை மூலம் மீறுவது சட்டப்படி அனுமதிக்கப்படாதது என்றும் அந்த அரசாணை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலே கூறியபடி U. அக்பர் அலி தீர்ப்பே ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளுடன் ஒத்துப் போகவில்லை. ஏற்கனவே உள்ள நீதிமன்ற தீர்ப்புகளுக்கு U. அக்பர் அலி வழக்கின் தீர்ப்பு முரணாக இருப்பதால், அதனை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்ட இந்த காரணமும் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கட்டுரையாளர் கூறுகிறார்.

தன்னிச்சையானதும் முரண்பாடுகளும்


மேலும், பல்வேறு இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (Denotified Communities (DNC)), பட்டியல் சாதியினர் (SC)) ஒரே பிற்படுத்தப்பட்ட இஸ்லாம் (Backward Class Muslim) பிரிவின்கீழ் கொண்டு வந்திருப்பதால், இந்த அரசாணை தன்னிச்சையானது (arbitrary) என்று நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், நீதிமன்றத்தின் இந்தக் காரணமே இன்னும் அதிகமான விளைவை ஏற்படுத்துகிறது. ஏனெனில், மதம் மாறுவதற்கு முன்பு சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர் என்றும், இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர் என்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர், மதம் மாறிய உடனேயே அனைத்து சலுகைகளையும் முற்றிலும் இழக்க வேண்டும் என்ற நிலையை இது உருவாக்குகிறது. இதுவே உண்மையில் வெளிப்படையான தன்னிச்சையான அணுகுமுறையாகும்.


மேலும், இந்த அரசாணை எந்த ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மற்றும் மண்டல ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இது வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைகள், ஒருவர் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறினாலும், அவரது சமூக மற்றும் பொருளாதார நிலை மாறிவிடாது என்று தெளிவாகக் கூறுகின்றன. எனவே, இந்த அரசாணை அரசியலமைப்புக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்ட சட்டரீதியான ஒரு நடைமுறையை வகுத்துள்ளது என்று ஆசிரியர் வாதிடுகிறார்.


இறுதியாக, நீதிமன்றம், இஸ்லாமில் சமூகப்படிநிலைகள் உள்ளன என்று கூறுவது “நேர்மையற்றது” என்றும், சில இஸ்லாம் உட்பிரிவுகளை பிற்படுத்தப்பட்டவை என்றும் மற்றவற்றை முன்னேறியவை என்றும் வகைப்படுத்துவது குர்ஆனின் போதனைகளுக்கு முரணானது என்றும் கூறுகிறது. ஆனால், அதே பத்தியின் அடுத்த வாக்கியத்திலேயே, “வரலாற்றுக் காரணங்களால் இஸ்லாமிய சமுதாயமும் பல்வேறு சமூகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன” என்றும், “அவை இந்து மதத்தின் சாதி அமைப்பைப் பற்றியும் கூறலாம்” என்றும் நீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது. அதன்பின், “இந்து மதத்தில் சாதி பிறப்பால் தீர்மானிக்கப்படுவது போலவே, ராவுத்தர், மரக்காயர் அல்லது தக்காணி இஸ்லாம் என்ற அடையாளமும் பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது” என்றும் நீதிமன்றம் கூறுகிறது. இது போன்ற முரணான கருத்துக்கள் அனைத்தும் ஒரே பத்தியில் இடம்பெற்றுள்ளதால், அந்தப் பகுதி ஒழுங்கற்றதாகவும் முரண்பாடுகளை கொண்டதாகவும் தோன்றுகிறது.


ஆழமான கவலைக்குரிய விளைவுகள்


எனவே, இந்தத் தீர்ப்பும், அதில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டக் காரணங்களும் மிகவும் கவலைக்குரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன. குறிப்பாக, பெரும்பான்மைவாத (majoritarian) அரசியல் போக்குகள் அதிகரித்து வரும் தற்போதைய அரசியல் சூழலில், இதன் தாக்கம் மேலும் கவலை அளிக்கிறது.

மத நம்பிக்கையும் வழிபாடும் ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட விவகாரமாகும். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25, ஒவ்வொரு குடிமகனுக்கும்  அவர் விரும்பும் மதத்தை சுதந்திரமாக ஏற்கவும் (profess), கடைப்பிடிக்கவும் (practice), பரப்பவும் (propagate) உரிமைகளை வழங்குகிறது. அரசியலமைப்பு அனுமதிக்கும் வரம்புகளைத் தவிர, இந்த உரிமைக்கு விதிக்கப்படும் எந்தக் கட்டுப்பாடும் ஆரம்பத்திலேயே தடுக்கப்பட வேண்டும்.


ஆனால், பட்டியல் சாதியினரின் (SC) மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில் இந்தப் பிரச்சினை ஏற்கனவே உருவாகியுள்ளது. காரணம், பட்டியல் சாதி ஆணை, 1950-ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.


இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது சரியான நடவடிக்கையாகும். மேலும், இது போன்ற சட்டக் காரணங்கள் எதிர்காலத்தில் நீதிமன்ற முன்னுதாரணமாக (precedent) மாறி, ஏற்கனவே உள்ள சிக்கலான சட்டத்தை  மேலும் குழப்பமானதாக மாற்றுவதற்கு முன்னர், உச்சநீதிமன்றம் விரைவாக தலையிட்டு இந்த விவகாரத்தில் தெளிவான தீர்ப்பை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.


 ஆசிரியர் ஒரு வழக்கறிஞர்.


Original Link: Denying Backward Classes benefits to converts to Islam is unconstitutional.

Share: