ஶ்ரீநகரின் பாரம்பரிய வாழ்வாதாரங்கள் ஏன் நிலைத்திருக்கப் போராடுகின்றன? -திகேந்தர் சிங் பன்வார்

ஸ்ரீநகரின் சதுப்புநிலங்கள், ஏரிகள் மற்றும் மலைகள் அதன் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றன? 370-வது பிரிவு நீக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரங்கள் எவ்வாறு மாறியுள்ளன? சுற்றுலா, தோட்டக்கலை மற்றும் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் ஏன் சிக்கல்களை எதிர்கொள்கின்றன? எதிர்கால சவால்களைத் தாங்கக்கூடிய ஒரு வலுவான, உள்ளூர் பொருளாதாரத்தை உருவாக்க என்ன செய்யலாம்?


"பூமியில் சொர்க்கம் என்று ஒன்று இருந்தால், அது காஷ்மீர்தான்." இருப்பினும், இன்று காஷ்மீரின் அந்தச் சொர்க்கம் சிதைந்து கொண்டிருக்கிறது மேலும், அழகுக்கும் சீர்குலைவுக்கும் இடையில்; பாரம்பரிய வாழ்வாதாரங்களுக்கும், வெளியிலிருந்து திணிக்கப்பட்ட வளர்ச்சி மாதிரிகளுக்கும் இடையில் ஒரு பிராந்தியப் பொருளாதாரத்தின் பிளவுக்கோடுகளை நாம் காண்கிறோம். ஸ்ரீநகர், அதிகரித்துவரும் சூழலியல் அழுத்தம், பலவீனமடைந்துவரும் பாரம்பரியத் துறைகள், மற்றும் சட்டப்பிரிவு 370-வது நீக்கப்பட்டதிலிருந்து ஏற்பட்ட ஆளுகைச் சீர்குலைவுகளின் பின்விளைவுகளையும் எதிர்கொள்கிறது. சதுப்புநில இழப்பு, விநியோகச் சங்கிலிமுறிவுகள், நகர்ப்புற விரிவாக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவை பொருளாதார பலவீனத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.


ஸ்ரீநகர் ஏன் சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமாக உள்ளது?


ஸ்ரீநகர், ஒரு இமயமலைப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்றும் இயற்கையாகவே சூழலியல் ரீதியாகப் பலவீனமானது. அங்குள்ள சதுப்புநிலங்கள், ஏரிகள் மற்றும் மலைகள் நீண்டகாலமாக நகரின் வேளாண்மை, சுற்றுலா மற்றும் கைவினைப் பொருட்கள் சார்ந்த தொழில்களுக்கு ஆதரவளித்து வருகின்றன. ஆனால், விரைவான மற்றும் திட்டமிடப்படாத வளர்ச்சி, வெள்ள அபாயங்கள், மற்றும் அடிப்படை சேவைகளின் மீதான அழுத்தம் ஆகியவை தற்போது இந்த நுட்பமான அமைப்பைப் பாதிக்கின்றன. ஒரு காலத்தில் நீர்வழித்தடங்களாக இருந்த பகுதிகள் இப்போது கட்டிடங்களால் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், “அபகரிக்கப்பட்ட சதுப்புநிலங்கள் மற்றும் அடைபட்ட வடிகால்கள் வெள்ளச் சேதத்தை அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் கட்டுப்பாடற்ற விரிவாக்கம் வாழ்க்கைத் செலவை உயர்த்துகிறது என்று சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேசமயம், தோட்டக்கலைத் துறை - ஒரு காலத்தில் கிராமப்புற காஷ்மீருக்கும் நகர்ப்புற காஷ்மீருக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாக இருந்தது. ஆனால், தற்போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆய்வு குறிப்பிடுவது என்னவென்றால், இப்பகுதியின் சிறப்பு தகுதிநிலை நீக்கப்பட்ட பின்னர், வளர்ச்சி குறைந்தது, விநியோகச் சங்கிலிகள் (supply chains) தோல்வியடைந்தன. மேலும், பல மக்கள் தங்கள் முக்கிய வாழ்வாதாரத்தை இழந்தனர் என்று குறிப்பிடுகிறது. 


சட்டப்பிரிவு  370 நீக்கப்பட்ட பிறகு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன?


ஆகஸ்ட் மாதம் 2019-ஆம் ஆண்டில் பிரிவு 370 நீக்கப்பட்டதிலிருந்து, இப்பகுதி ஒரு வியத்தகு நிர்வாக மாற்றத்தை சந்தித்துள்ளது. மாநில அந்தஸ்து கலைப்பு, தகவல் தொடர்பு முடக்கம் மற்றும் நீடித்த ஊரடங்கு உத்தரவுகள் அன்றாட வாழ்க்கையை மட்டுமல்ல, பொருளாதார நிறுவனங்களையும் சீர்குலைத்துள்ளன. உதாரணமாக, ஸ்ரீநகர் மற்றும் காண்டர்பாலில் (Ganderbal) உள்ள பெண் தொழில்முனைவோர் பற்றிய ஒரு ஆய்வு, தகவல் தொடர்பு முடக்கம், இணையதளக் கட்டுப்பாடு மற்றும் முடக்கம் எவ்வாறு கைவினைப்பொருட்களை சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர்களுடன் இணைத்தல் மற்றும் ஒரு சிறுவணிகத்தை நிலைநிறுத்துவதற்கான அந்தப் பெண்களின் திறனை எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கியது என்பதைக் காட்டுகிறது.


ஸ்ரீநகரில், தனியார்துறை வளர்ச்சி குறைந்துள்ளது. அதேசமயம், மார்ச் மாதம் 2025-ஆம் ஆண்டின் நிலவரப்படி 32,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நகர்ப்புற வேலையின்மை 11.8 சதவீதமாகவும், இளைஞர்கள் வேலையின்மை 32 சதவீதமாகவும், பெண்கள் வேலையின்மை 53.6 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்பொழுது மூன்று தூண்களின் சரிவு ஏற்பட்டது: சுற்றுலா, தோட்டக்கலை மற்றும் கைவினைஞர் தொழில்கள்.


சுற்றுலாத் துறை என்பது நகரம் புத்துயிர் பெறுவதற்கான ஒரு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், அது மிகவும் பருவகாலத்தன்மை சார்ந்ததாகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும் உள்ளது.


சமீபத்திய அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் நெடுஞ்சாலை மூடல்கள் காரணமாக 800-க்கும் மேற்பட்ட பழங்களை ஏற்றிவரும் சரக்கு வாகனங்கள் சிக்கிக்கொண்டன. இதனால் சில நாட்களிலேயே ₹200 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது. இது உள்ளூர் விநியோகச் சங்கிலி எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.


விநியோகச் சிக்கல்கள், காலநிலை அச்சுறுத்தல்கள், பலவீனமான சந்தை அணுகல் மற்றும் மோசமான கொள்கைகள் ஆகியவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) தோட்டக்கலையின் பங்கைக் குறைத்துள்ளன. மேலும், இது நம்பகமான வளர்ச்சித் துறையாக மாறுவதைத் தடுத்துவிட்டன.


கைவினைஞர் தொழில்களும் இதேபோல் பாதிக்கப்பட்டுள்ளன. கைவினைத் தொழிலில் உள்ள பெண் கைவினைஞர்கள் சுரண்டல், சந்தைகளுக்கான அணுகல் இல்லாமை, மூலப்பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விநியோகச் சங்கிலிகளில் முறிவு ஆகியவற்றை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். முறைசாரா தொழில்களில் பல சாலையோர வியாபாரிகள் மற்றும் பெண் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ₹250–300 வரை மட்டுமே சம்பாதிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது


பொருளாதாரச் சீர்குலைவுகள் காரணமாக, சில விளிம்புநிலைப் பிரிவினரும், திருநங்கை சமூகத்தினரும், மற்ற வருமான ஆதாரங்கள் இல்லாததால், பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுவதாக  வேதனை தெரிவித்துள்ளனர்.


 


பெருநகர மூலதன முதலீட்டு மாதிரி ஏன் தோல்வியடைகிறது?


ஸ்ரீநகருக்கான பல வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டங்கள், அதை ஒரு பெரிய முதலீடுகள் தேவைப்படும் இடமாகக் காண்கின்றன. அதாவது மனை வணிகம், சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அதிக முதலீடு தானாகவே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று கருதுகின்றன. ஆனால், உள்ளூர் நிர்வாகம் பலவீனமாக இருக்கும்போது, பாரம்பரிய வேலைகள் புறக்கணிக்கப்படும்போது, மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்போது இந்த அணுகுமுறை தோல்வியடைகிறது.


உதாரணமாக, ஸ்ரீநகரின் "பொலிவுறு நகரம்" திட்டங்களில், நகரத்தை நவீனமாகக் காட்ட, கைவினைஞர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் வெளியேற்றப்படுகிறார்கள் இதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், மரங்கள் வெட்டப்படுவதும் பசுமையான பகுதிகள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து நிகழும் ஒன்றாக மாறியுள்ளது. 


எனவே, வளர்ச்சி என்பது உள்ளூர் பொருளாதாரத்தை அடிப்படையாகக்  கொண்டதாக இல்லாவிட்டால், ஸ்ரீநகரை ஒரு பெரிய பெருநகர தலைநகராக மாற்ற முயற்சிப்பது உண்மையில் நகரத்திற்கு உதவுவதற்குப் பதிலாக அதை மேலும் பலவீனப்படுத்தலாம்  என்று எச்சரிக்கின்றனர்.


நிலையான வளர்ச்சிக்குச்  சாத்தியமான வழிகள் என்னென்ன?


தோட்டக்கலைக்கு ஒரு நல்ல குளிர்ப்பதனத் தொழில்நுட்ப சங்கிலி அமைப்பு (cold-chain system), சூழலுக்குத் தயாரான பயிர்கள் (climate-ready crops) மற்றும் வலுவான உழவர் குழுக்கள் தேவை. சதுப்புநிலங்கள், வெள்ளச் சமவெளிகள், மற்றும் ஏரிகளை பாதுகாக்க வேண்டும், அவற்றை வளர்ச்சி சார்ந்த நகரத் திட்டமிடலில் சேர்க்க வேண்டும். கட்டுப்பாடு இல்லாமல் நகரங்களை விரிவாக்குவதற்குப் பதிலாக, நாம் பசுமை உள்கட்டமைப்பில் (green infrastructure) கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. 


சமூகத்தால் வழிநடத்தப்படும், பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட (heritage-focused), மற்றும் சுற்றுச்சூழலுடன் இணக்கமான அணுகுமுறைகள் (eco-friendly approaches) மூலம் சுற்றுலாவை வளர்க்க முடியும் என்கின்றனர். இந்த அணுகுமுறைகள் கைவினைஞர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை தர  வேண்டும்.


ஸ்ரீநகரின் கைவினைப் பொருளாதாரத்திற்கு அதன் கலாச்சார மதிப்பைப்  மதிக்கும் வலுவான ஆதரவு தேவை என்கின்றனர். மேலும், நெசவாளர்கள், சால்வை செய்பவர்கள், மரவேலை செய்பவர்கள், காகிதக்கூழ் கலைஞர்கள்  மற்றும் பித்தளைப் பொருட்கள் செய்பவர்கள் ஆகியோரின் பாரம்பரிய குழுக்களுக்கு  வடிவமைப்பு உதவி, எளிதான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விருப்பங்கள் (easy digital marketing options) மற்றும் சுரண்டல் செய்யும் இடைத்தரகர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கும் அமைப்புகள் முக்கியமானவை என்றும் கூறுகின்றனர். கைவினைஞர்கள் வசிக்கும் பகுதிகளை நவீன வளர்ச்சிக்கு "முக்கியத்துவம் குறைந்தவை" என்று கருதுவதற்குப் பதிலாக, அரசு சிறு நிதி (micro-finance), பகிரப்பட்ட மூலப்பொருள் ஆதாரங்கள், ஏற்றுமதி இணைப்புகள், மற்றும் வேலை செய்யும் இடங்களுக்குப் பாதுகாப்பு ஆகியவற்றையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. 


நகர்ப்புற திட்டமிடல் கைவினைஞர்களுக்கான இடங்களை உள்ளடக்க வேண்டும், அவர்கள் வேலை செய்யும் இடங்களைப் பாதுகாக்க வேண்டும், மற்றும் சாலையோர வியாபாரிகளை குற்றவாளிகள்போல் நடத்துவதையோ அல்லது அவர்களை வெளியேற்றுவதையோ தவிர்க்க வேண்டும். ஸ்ரீநகருக்கு இப்போது  தேவை அவர்களை இடம்பெயரச் செய்வதல்ல மாறாக அனைவரையும் உள்ளடக்கிய நிலையான  நிர்வகிக்கப்பட்ட மாற்றம்தான் என்றும் கூறுகின்றனர். 


நீடித்த பொருளாதார மீட்சிக்கு வலுவான  உள்ளூர் அளவில் நிர்வாகத்தை மீண்டும் உருவாக்குவது மிக முக்கியமானது. உள்ளூர் மக்களின் ஆதரவு இல்லாமல், மேலிருந்து வரும் முடிவுகள் மேலும் அந்நியப்படுத்தலை மட்டுமே உருவாக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். 


அரசின் கொள்கையானது, பெண் தொழில்முனைவோருக்கு முறையான இணையதள இணைப்புகள், முறையாகச் சந்தைப்படுத்தல் தளங்கள், திறன் பயிற்சிகள், மற்றும் ஆதரவு உதவி எண்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


வளர்ச்சி மந்தநிலை மற்றும் வேலையின்மை ஆகியவை பாதிக்கப்படக்கூடிய குழுக்களை மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளன. சமூகப் பாதுகாப்பு, தொழிற்பயிற்சி, மற்றும் பல்வகைப்பட்ட வாழ்வாதாரங்களுக்காக ஒருங்கிணைந்த திட்டம் நமக்குத் தேவை.


மிக முக்கியமாக, ஸ்ரீநகரின் எதிர்காலம் சுற்றுலா அல்லது மனை வணிகத்தை மட்டும் நம்பியிருக்காமல், சமநிலையான பொருளாதார அடித்தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.


தோட்டக்கலை, கைவினைப் பொருட்கள், சிறு தொழில்கள், சிறப்புச் சுற்றுலா, மற்றும் சேவைகள் ஆகியவை அபாயத்தைக் குறைக்க சமமாக வளர வேண்டும். எடுத்துக்காட்டாக, தோட்டக்கலை மட்டுமே இப்பகுதியில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோருக்கு வேலை அளிக்கிறது. எனவே, அதைப் புறக்கணிப்பது முழு பொருளாதாரத்தையும் பலவீனப்படுத்துகிறது என்று சமச்சீரான பொருளாதார வளர்ச்சியைக் கோருகிறது. 


சுற்றுலாவை வலுவாகவும் நிலையாகவும் மாற்ற, உள்ளூர் கைவினைஞர்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும். டிஜிட்டல் விளம்பரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும், வீடுகளில் தங்கும் வசதியை (Homestays) ஊக்குவித்தல் மற்றும் விடுமுறை அல்லாத காலங்களில் (Off-season) செயல்பாடுகளை வழங்குவதன் மூலம் சுற்றுலாத் துறையை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.


நகர்ப்புற வேலைவாய்ப்பு உருவாக்கமானது பெரிய திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், முறைசாரா துறையை மேம்படுத்துவதிலும், கிராமம் மற்றும் நகரப் பொருளாதாரங்களை இணைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.


ஸ்ரீநகரின் எதிர்காலத்திற்கு இவை அனைத்தும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?


ஸ்ரீநகர் ஒரு திருப்புமுனையில் உள்ளது. சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுடன் நகரம் போராடி வருகிறது. உண்மையான முன்னேற்றம் என்பது வெறும் அதிக பணம் வருவது அல்லது புதிய “பொலிவுறு நகர” திட்டங்கள் மட்டும் அல்ல. மாறாக, ஸ்ரீநகரின் நிலம், வேலைப்பாட்டுத் தளங்கள், மற்றும் கைவினைப் பாரம்பரியங்களை மீட்டெடுப்பது போன்ற நடவடிக்கைகள் போதுமானது என்றும் அறிவுறுத்தகின்றனர். மேலும், பெண் தொழில்முனைவோர், கைவினைஞர்கள், மற்றும் சிறு வேளாண் தொழிலாளர்களுக்குச் சிறந்த இணைய இணைப்பு, வலுவான நிர்வாகம், சந்தை அணுகல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் அவர்களுக்கு ஆதரவளிப்பது மிகமுக்கியமானது என்று கூறுகின்றனர்.


இதைச் செய்வதன் மூலம், நகரம் பலவீனத்திலிருந்து வலிமைக்கு மாறலாம். அதாவது, வெளியில் இருந்து வரும் பணத்தை மட்டுமே சார்ந்து இருக்கும் ஒரு பொருளாதார மாதிரியில் இருந்து, உள்ளூரிலும் நிலையானதாகவும் வளரும் ஒரு பொருளாதார மாதிரிக்கு நகர முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. 


கொள்கை வகுப்பாளர்கள், குடிமைச் சமூகம், உள்ளூர் பொருளாதாரம் ஆகியோருக்கான கேள்வி இதுதான்: நாம் அந்தப் பாதையில் நடப்போமா — அல்லது ஸ்ரீநகரின் சொர்க்கம் நம் கைகளிலிருந்து நழுவிப் போக விடுவோமா?


திகேந்தர் சிங் பன்வார், சிம்லாவின் முன்னாள் துணை மேயர் ஆவார், தற்போது கேரள நகர்ப்புற ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.


Original Article: Why are Srinagar’s traditional livelihoods struggling to survive? 

Share: