நான்கு தொழிலாளர் சட்டங்கள் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் இயக்கவியலை ஆதரிக்கும் ஒரு நவீன தொழிலாளர் ஒழுங்குமுறை அமைப்பை ஏற்படுத்தும்.
2025-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம், இந்தியா தனது 'விக்சித் பாரத்' (மேம்பட்ட இந்தியா) இலக்கை நோக்கி ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்தது. இந்த நவீனமயமாக்கப்பட்ட சட்டங்களான - ஊதியங்கள் மீதான சட்டம் (2019), தொழில்துறை உறவுகள் சட்டம் (2020), சமூகப் பாதுகாப்புச் சட்டம் (2020), மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் (2020) - ஆகியவை நடைமுறைக்கு வந்ததன் மூலம், இந்தியா தொழிலாளர் உரிமைகளில் ஒரு பெரிய பாய்ச்சலை அடைந்துள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள், தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும், வணிகப் போட்டியை மேம்படுத்தும், மேலும் மேம்பட்ட (விக்சித் பாரத்) மற்றும் தற்சார்பு (ஆத்மநிர்பர்) நிலையை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்தும் ஒரு நியாயமான, நவீன மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான தொழிலாளர் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் பல தசாப்தங்களாக மெதுவாக வளர்ந்துள்ளன, வெவ்வேறு காலகட்டங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்காகப் பல தனித்தனி சட்டங்களை உருவாக்கியுள்ளன. இந்தச் சட்டங்கள் வேலைவாய்ப்பிற்கு ஒரு வடிவத்தைக் கொடுத்திருந்தாலும், இந்தியாவின் வளர்ந்துவரும் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட தொழிலாளர் சக்தியைக் கருத்தில் கொண்டு, அவற்றை எளிமைப்படுத்துவது அவசியமாகியது. இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையம் (Second National Commission on Labour), சட்டங்களை மேலும் பரந்த விதிகளாக (Codes) இணைக்கப் பரிந்துரைத்தது. 2015-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை தொழிற்துறை, முதலாளிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகு, நான்கு விரிவான தொழிலாளர் விதிகள் (Labour Codes) உருவாக்கப்பட்டன.
பெரிய அளவிலான மற்றும் இளம்பணியாளர் குழு
இந்தியாவில், உலகின் மிகப்பெரிய மற்றும் இளைஞர் பணியாளர் குழுக்களில் ஒன்று உள்ளது. இதில், 643 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். வரும் ஆண்டுகளில் புதிய உலகளாவிய தொழிலாளர்களில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கினை இந்தியா வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 2017–18-ஆம் ஆண்டு மற்றும் 2023–24-ஆம் ஆண்டுக்கு இடையில், இந்தியா 16.83 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. வேலையின்மை விகிதம் 6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறைந்தது, மற்றும் முறைசார் வேலைவாய்ப்பு (Formal Employment) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பல தொழிலாளர்கள் இன்னும் முறைசாரா துறையில் இருப்பதால், அவர்களைப் பாதுகாக்கவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் ஒரு எளிமையான மற்றும் தெளிவான தொழிலாளர் முறை இருப்பது முக்கியமாகிறது. சமூகப் பாதுகாப்பு குறியீடு இப்போது முறைசாரா துறையையும் உள்ளடக்கியுள்ளது. இந்த மாற்றங்கள் பொருளாதாரம் வளர்ந்து வருவதைக் காட்டுகின்றன. மேலும், இந்த வளர்ச்சியை ஆதரிக்க ஒரு நவீன தொழிலாளர் முறையின் அவசியத்தைக் காட்டுகின்றன.
தொழிலாளர் குறியீடுகள் (Labour Codes) தொழிலாளர்களுக்கு சிறந்த மற்றும் நிலையான பாதுகாப்பை அளிக்கின்றன. அவை குறைந்தபட்ச ஊதியங்களை நிர்ணயிக்கின்றன, நியமனக் கடிதங்களை (appointment letters) கட்டாயப்படுத்துகின்றன, சரியான நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்கின்றன, மேலும் வாரத்திற்கு 48 மணிநேரம் என வேலை நேரத்தை வரம்புக்குள் வைக்கின்றன. தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான குறியீடு (Occupational Safety and Health (OSH Code)) பாதுகாப்புக் குழுக்கள், இலவச சுகாதார பரிசோதனைகள் மற்றும் உயர் பணியிட தரநிலைகளை சேர்ப்பதன் மூலம் நல்வாழ்வு மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது.
சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020 (The Code on Social Security, 2020) அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எங்கு வேண்டுமானாலும் ஊழியர் நிலை காப்பீட்டுக் கழகத்தின் (Employees' State Insurance Corporation (ESIC)) காப்பீட்டை உறுதி செய்கிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான (Employees' Provident Fund (EPF)) செயல்முறைகளை விரைவுபடுத்துகிறது. எளிதான செஸ் (cess) கூடுதல் வரி பணபலன்கள் மூலம் கட்டுமானத் துறைக்கு ஆதரவளிக்கிறது. மேலும், பல்வேறு வகையான தொழிலாளர்களுக்காக ஒரு தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியத்தை (National Social Security Fund) உருவாக்குகிறது.
இந்தக் குறியீடுகளின்கீழ் உள்ள மற்றொரு முக்கிய சீர்திருத்தம் என்னவென்றால், இணக்கத் தேவைகளை எளிதாக்குவதாகும். ஒற்றைப் பதிவு, ஒற்றை உரிமம் மற்றும் ஒற்றைத் தாக்கல் முறைக்கு மாறியது, நிர்வாகச் சுமைகளை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (Micro, Small and Medium Enterprises (MSME)), கணிசமாகக் குறைக்கிறது. ஊதியங்களுக்கான ஒருங்கிணைந்த வரையறை பல சட்டங்களில் தெளிவைக் கொண்டுவருகிறது. இது பிரச்சனைகளைக் குறைக்கவும் மற்றும் ஊதியம் தொடர்பான கணக்கீடுகளில் முன்னறிவிப்புத் தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. சிறிய குற்றங்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கை எடுப்பதைக் கைவிடுதல் மற்றும் வரையறுக்கப்பட்ட வழிமுறை அடிப்படையிலான ஆய்வுகள் போன்ற டிஜிட்டல் செயல்முறைகளை அறிமுகப்படுத்துவது, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான இணக்கத்தை ஊக்குவிக்கிறது.
எதிர்கால வேலைக்குத் தயாராகுதல்
இந்தியாவின் தொழிலாளர் குழுமம் பல்வகைப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம், கிக் தொழில் (தற்காலிகமான, ஒப்பந்த அடிப்படையிலான, பகுதி நேர வேலை) மற்றும் டிஜிட்டல் இயங்குதள தொழில் (ஆன்லைனில் வேலை கொடுப்பவர் – வேலை செய்பவரை இணைக்கும் ஆப் அல்லது இணையதளம்) அடிப்படையிலான வேலைவாய்ப்பு, நெகிழ்வான பணி மாதிரிகள் (flexible working models) மற்றும் டிஜிட்டல் மூலம் இயக்கப்பட்ட வாழ்வாதாரங்களின் விரைவான வளர்ச்சி ஆகும். இந்தச் சூழலில், சமூகப் பாதுகாப்பு குறியீட்டில் கிக் மற்றும் டிஜிட்டல் இயங்குதள தொழிலாளர்களைச் சேர்த்தது மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த தொழிலாளர் குழுமத்தின் அளவு 2024-25-ஆம் ஆண்டில் ஒரு கோடியில் இருந்து 2029-30-ஆம் ஆண்டுக்குள் 2.35 கோடியாக எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சமூகப் பாதுகாப்பிற்கான ஒரு கட்டமைப்பை நிறுவுவது, வேலையின் மாறிவரும் தன்மைக்கு இணங்கக்கூடிய ஒரு தொலைநோக்கு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
நீண்டகால பொருளாதார முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாக இருக்கும் முறைப்படுத்தலையும் இந்த விதிகள் வலியுறுத்துகின்றன. தெளிவான விதிகள், தரப்படுத்தப்பட்ட வரையறைகள் மற்றும் வெளிப்படையான செயல்முறைகள் அதிக நிறுவனங்கள் முறையான பொருளாதாரத்தில் நுழைய ஊக்குவிக்கின்றன மற்றும் பணியாளர்களில் பெரும் பகுதியினருக்கு பாதுகாப்பை விரிவுபடுத்த உதவுகின்றன.
பணியிடத்தில் பெண்களுக்கு ஒரு ஊக்கம்
இந்தியாவில் பெண்களின் பணியாளர் பங்கேற்பு விகிதம் மேம்பட்டுள்ளது, ஆனால், இன்னும் அதன் முழுத் திறனை எட்டவில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization (ILO)) இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024-ன் படி இது 32.8 சதவீதமாக உள்ளது. தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) பெண்களுக்குச் சம ஊதியம், சிறந்த மகப்பேறு சலுகைகள் மற்றும் அமைப்புசாரா, கிக் மற்றும் டிஜிட்டல் இயங்குதள முறை பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்கின்றன. மேலும், தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியச் சட்டம் பெண்களின் சம்மதத்துடனும், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் இரவுநேரங்களில் பணிபுரிய அனுமதிக்கிறது. இது அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த விதிகள் பெண்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவதற்கும் உதவுகின்றன. தொழில்துறை விதிகளைத் தெளிவுபடுத்துதல் மற்றும் விவாதங்களுக்கான தீர்மானத்தை விரைவுபடுத்துதல் மூலம் தொழிலாளர் பாதுகாப்பை வணிகத் தேவைகளுடன் சமநிலைப்படுத்த தொழிலாளர் சட்டங்கள் முயல்கின்றன. அதே நேரத்தில், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றையும் உறுதி செய்கிறது. இந்த அணுகுமுறை முதலீடு, உறுதித்தன்மை மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது.
இந்தக் குறியீடுகளைச் செயல்படுத்தும் செயல்முறை முன்னேறிச் செல்லும்போது அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானதாக உள்ளது. நாடு முழுவதும் ஒருமைப்பாடு மற்றும் தெளிவை உறுதி செய்வதற்காக குறியீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச வரம்புகள் மற்றும் வழிகாட்டும் கொள்கைகளுடன் மாநிலங்கள் இணைந்து செயல்படுவது முக்கியமாகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) சீர்திருத்தங்களுக்குப் பிறகு, இது மிகவும் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இந்தச் சீர்திருத்த உத்வேகம் தொடர வேண்டும், அதிக முதலீடுகளுக்கு ஆதரவளித்து, இதன் மூலம் நாட்டில் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
ஹர்ஷா வர்தன் அகர்வால் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) தலைவராக உள்ளார்.
Original Article: Enabling a modern and future-ready labour ecosystem