நிரூபிக்கும் பொறுப்பு: SIR 2.0 மற்றும் வாக்காளர் குறித்து…

தகுதிவாய்ந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டிய சுமையை வாக்காளரின் மீது சுமத்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) அமைப்பின் கணக்கெடுப்பு முறை குறைபாடுடையது.


இந்திய தேர்தல் ஆணையமானது 12 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்” (Special Intensive Revision (SIR)) நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கை குறித்து உடனடியாக நீதிமன்றம் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உச்சநீதிமன்றமே இந்த நடவடிக்கைகள் அரசியலமைப்பு ரீதியாகச் செல்லுபடியாகுமா என்று விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, பீகாரில் மேற்கொள்ளப்பட்ட அதே குறைபாடுள்ள வாக்காளர் பட்டியல் திருத்த முறையை இப்போது மற்ற மாநிலங்களிலும் மேற்கொள்வது மேலும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கின்றனர். வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Block Level Officers (BLO)) கொடுக்கும் படிவத்தை நிரப்பி, 2002-2005-ஆம் ஆண்டின் பழைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட வேண்டும். பீகாரில் இதனால் தேர்தல் முடிவு பெரிதாக மாறவில்லை என்றாலும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை கடுமையாக குறைந்ததாகத் தெரிவிக்கின்றனர். உள்ளூர் வட்டார அளவிலும் வேறு பல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இந்திய தேர்தல் ஆணையமானது பெரும்பாலானோருக்கு படிவம் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், உண்மையில் பல வாக்காளர்கள் இன்னும் படிவம் முறையாக வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். அடுத்த மாதம் வரும் வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் வர வேண்டுமானால் என்னென்ன ஆவணம் கொடுக்கப்பட வேண்டும் என்ற குழப்பமும் தொடர்கிறது. “வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்கிற விதி வெறும் பெயரளவில் மட்டுமே  இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு இருப்பிடத்தில் தொடர்ந்து வசிக்கும் எந்த வயது வந்தவரும் இயல்பாகவே செல்லுபடியான வாக்காளர்களே என்று கவுகாத்தி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


தற்போதைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறையானது வழக்கமான விதியைத் தலைகீழாக மாற்றிவிட்டது. முன்பு வாக்களித்தவர்களாக இருந்தாலும், இப்போது தேர்தல் ஆணையம் பட்டியலிட்ட பழைய ஆவணங்கள் அல்லது பதிவுகள் மூலம் தங்களை சட்டப்பூர்வ வாக்காளர்களாக நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசுகளின் பொறுப்பைப் பொதுமக்கள்மீது திணிக்கும் இந்த மாற்றம், பலரை — குறிப்பாகத் திருமணமான பெண்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் போன்றோரை — வாக்குரிமையிழக்கச் செய்யும் என்று எச்சரிக்கின்றனர். ஏற்கெனவே பீகாரில் தகுதிவாய்ந்த வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். “சாதாரண குடியிருப்பாளர்” என்ற விதியை மிகக்கடுமையாகப் புரிந்துகொள்வது ஜனநாயகத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று நீதிமன்றங்கள் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளன. பீகார் வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றம் முக்கியமாக வாக்காளர் பட்டியல் திருத்தச் செயல்முறை எப்படி நடத்தப்பட்டது என்பதையே விவாதித்தது. உண்மையான வாக்காளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை கட்சிப் பிரதிநிதிகளிடமும் தன்னார்வலர்களிடமும் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், வாக்காளர் பதிவு தகவல் சேகரிக்கும் முறை அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதை ஆராயவில்லை. புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களில் தொடர்ந்து நீடிக்கும் குழப்பங்களையும் (பெரும்பாலும் அதிக வேலைப்பளு கொண்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பட்டியலை திருத்த முடியாமல் போவதால் ஏற்படும் சிக்கல்கள்) குறித்து ஆராயவில்லை என்றும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப உதவியுடன் மெதுவாகவும் கவனமாகவும் வீடு வீடாகச் சென்று போலியான பதிவுகளை நீக்கியிருக்க முடியும். அதற்குப் பதிலாக, வாக்காளர் பட்டியலை “சீரமைப்பதில்” அதிகக் கவனம் செலுத்தி, மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதில் குறைவாகவே அக்கறை காட்டும் ஒரு முறையைத் தேர்ந்தெடுத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டிப்புகளை (duplicates) நீக்க, தேர்தல் ஆணையம் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன், மெதுவான, கவனமான, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் முறையைப் பயன்படுத்தி இருக்கலாம். அதற்குப் பதிலாக, அது மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பதைவிட, வாக்காளர் பட்டியலை “சீரமைப்பதில்” அதிகக் கவனம் செலுத்தும் ஒரு முறையைத் தேர்ந்தெடுத்தது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமானது (SIR) மேலும் பல மாநிலங்களுக்குப் பரவும் நிலையில், நீதிமன்றம் நடைமுறைகளைத் தாண்டிச் சென்று, இந்தச் செயல்முறையே அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதை ஆராய வேண்டும். தேர்தல் ஆணையம், பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் உள்ள குடிமக்கள் தாங்கள் அதில் இருப்பதாக நிரூபிக்கச் சொல்வதற்குப் பதிலாக, சரியான வாக்காளர் பதிவுக்கான பொறுப்பை மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும் ஒரு தெளிவான உத்தரவு தேவைப்படுகிறது.



Share: