நாடாளுமன்றத்தின் நிதிநிலை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS) பெயரை விக்சித் பாரத் - கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (Viksit Bharat – Guarantee for Rozgar and Aajeevika Mission (Gramin) (VB-G RAM G)) என மாற்றியதற்காக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
முக்கிய அம்சங்கள்:
— மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின்கீழ் 2005-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS), இந்தியக் கிராமப்புறங்களில் அடிப்படை வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்காக பிப்ரவரி மாதம் 2006-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், இந்தத் திட்டத்தின் பெயருக்கு முன்னால் 'மகாத்மா காந்தி' என்ற பெயர் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி, 2009-ஆம் ஆண்டுதான் சேர்க்கப்பட்டது.
— ஒரு நாட்டின் ஒட்டுமொத்த நலத்திற்கு கிராமப்புறங்களின் தற்சார்பு நிலையே மிக முக்கியம் என்ற காந்தியின் தத்துவத்தை மேற்கோள் காட்டி, அந்தத் திட்டத்திலிருந்து காந்தியின் பெயரை நீக்கியதை காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.
— காந்தியின் கிராம சுயராஜ்ஜியம்: காந்தி தனது எழுத்துக்களில், கிராமங்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் அவற்றின் சுயசார்பு நிலையையே முதன்மையாகக் கொண்டிருந்தார்.
— நகரங்களின் வளர்ச்சியை நான் ஒரு தீய சக்தியாகவும், மனிதகுலத்திற்கே நேர்ந்த துரதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன்... ஆங்கிலேயர்கள் இந்தியாவின் நகரங்களைப் பயன்படுத்தி இந்தியாவைச் சுரண்டினார்கள். அந்த நகரங்களோ இந்தியாவின் கிராமங்களைச் சுரண்டின. கிராமங்களின் ரத்தத்தை சிமெண்டாகக் கொண்டுதான், நகரங்கள் என்னும் பிரம்மாண்டமான கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இன்று நகரங்களின் ரத்த நாளங்களை வீங்கச் செய்துகொண்டிருக்கும் அந்த ரத்தம், மீண்டும் கிராமவாசிகளின் ரத்த நாளங்களில் பாய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று ஜூன் மாதம் 23-ஆம் தேதி, 1946-ஆம் ஆண்டில் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
— அவருடைய பேச்சுக்கேற்ற செயலும் அவரிடம் இருந்தது. அதற்கு உதாரணமாக, 1917-ஆம் ஆண்டில் அவர் தனது முதல் பெரிய சத்தியாகிரகத்தை வழிநடத்திய பீகாரின் சம்பாரண் (Champaran) பகுதியையும், மகாராஷ்டிராவில் அவர் உருவாக்கிய சுயசார்பு கொண்ட சேவாகிராம் ஆசிரமத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
— காந்தி தனது 'ஹரிஜன்' (Harijan) மற்றும் 'யங் இந்தியா' (Young India) ஆகிய இதழ்களில் இது குறித்துத் தொடர்ந்து எழுதி வந்தார். ஜூலை மாதம் 26-ஆம் தேதி, 1942-ஆம் ஆண்டு 'ஹரிஜன்' இதழில் கிராம சுயராஜ்யம் (Gram Swaraj) என்ற கருத்தை முன்வைத்தார். அதில், எனது கிராம சுயராஜ்யக் கனவு என்பது, ஒரு கிராமம் தனக்கேற்ற அடிப்படைத் தேவைகளுக்குத் தன் அண்டை இடங்களைச் சார்ந்து இருக்காமல், ஒரு முழுமையான குடியரசாகத் தன்னிச்சையாகச் செயல்படுவதாகும்; அதேநேரத்தில், மற்ற விஷயங்களுக்காகப் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்து இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
— சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில், அரசாங்கத்தின் கொள்கைகள் நகரங்களை மையப்படுத்திய வளர்ச்சியை நோக்கியே இருந்தன. இதனால் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால், வேலைதேடி பெரும் தொழில் நகரங்களுக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கிராமங்களில் இருந்து வந்த மக்கள், குடிசைப் பகுதிகளில் தரம் குறைந்த சூழலில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதிலும், வேலைக்காக நகரங்களை நோக்கியே சென்றனர்.
— காந்தியின் 'கிராம சுயராஜ்யம்' என்ற கருத்துக்கு என்ன ஆனது? நிதி, அரசியல் மற்றும் நிர்வாகம் என அதிகாரத்தை உண்மையான முறையில் மக்களிடமே ஒப்படைப்பது என்பது இன்னும் எட்டாத கனவாகவே உள்ளது. இது பெரும்பாலும் உயர்மட்டங்களில் உள்ளவர்களின் அரசியல் விருப்பத்தையும், அதிகாரத்தை விட்டுக்கொடுக்க அவர்களுக்கு இருக்கும் தயக்கத்தையுமே சார்ந்துள்ளது. இந்த மனப்போக்கை மாற்றுவதற்கு வெறும் கொள்கை மாற்றங்களோ அல்லது நிதி ஒதுக்கீடுகளோ மட்டும் போதாது, அதையும் தாண்டிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
— இந்தியக் கிராமங்களின் நிர்வாகம் குறித்த சட்டமானது, மகாத்மா காந்தியின் முதன்மையான கொள்கைகளில் ஒன்றின் வெளிப்பாடாகும். கிராம மக்கள் தங்களின் கிராம நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்க வேண்டும் என்ற 'பஞ்சாயத்து ராஜ்' அமைப்பை அவர் எப்போதும் ஆதரித்தார். அதாவது, பள்ளிக்கூடங்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளின் நிலையை மேம்படுத்துவதில் அந்தந்த ஊர் மக்களே பங்குகொள்வதை காந்தியடிகள் வலியுறுத்தினார்.
— உண்மையில், 1947-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, காங்கிரஸ் கட்சி ஒரு தன்னார்வ அமைப்பாக மாற வேண்டும் என்று காந்தி விரும்பினார். இந்த அமைப்பு இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் 'பஞ்சாயத்து' போன்ற அமைப்புகளைக் கொண்டு, கிராம மக்களுடன் இணைந்து 'கிராமங்கள் தற்சார்பு நிலையை' (Gram swaraj) அடையப் பாடுபட வேண்டும் என்பதே அவரது விருப்பம். காந்தி இந்த கருத்தின் மூலம் எதைக் குறிப்பிட்டார் என்பதையும், இந்தச் சட்டம் ஏன் ஒரு மைல்கல்லாக முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.
Original Article : What was the Gandhian idea of rural development? -Khushboo Kumari