இந்தியாவிற்கு கட்டாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தகவல் வெளிப்பாட்டுத் தரநிலை தேவை. -வருண் அகர்வால், ஆதித்ய சின்ஹா

 ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை முறையாகத் திட்டமிட்டு அறிக்கை சமர்ப்பிப்பதன் மூலம், செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும், கூடுதல் நிதி உதவி கிடைக்கும் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் சிறப்பான முறையில் அமையும் என்கின்றனர். 


ஜார்ஜ் அகர்லோஃப் (George Akerlof) 1970-ஆம் ஆண்டில் வெளியிட்ட 'The Market for Lemons’ என்ற ஆய்வறிக்கை, ஒரு சந்தையில் வாங்குபவர்களால் தரமான பொருட்களையும் தரம் குறைந்த பொருட்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதபோது, அவர்கள் எல்லா பொருட்களுக்கும் குறைவான விலையையே நிர்ணயிப்பார்கள் என்றும், இதனால் தரமான பொருட்கள் சந்தையைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்றும் விளக்குகிறது. இதே வாதம் இன்றைய நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் பொருந்தும்; இந்தியாவில் பெருநிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.23% என்ற அளவிலேயே முடங்கிக்கிடக்கின்றது. இது உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.  நிறுவனங்கள் நஷ்டத்திற்கு அஞ்சுகின்றன என்பதைத் தாண்டி, மூலதனச் சந்தைகள் புதுமைகளை (Innovation) சரியாக மதிப்பீடு செய்வதற்குத் தேவையான போதிய தகவல்கள் இல்லாதது மற்றொரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஒரு புதிய கண்டுபிடிப்பு வெளிப்படையாகத் தெரியாதபோது, அதன் மதிப்பு குறைவாகக் கணக்கிடப்படுகிறது. அவ்வாறு மதிப்பு குறையும்போது அத்தகைய கண்டுபிடிப்புகள் உருவாவதும் குறைகிறது. மேலும், சரியான வெளிப்படைத்தன்மை இல்லாதபோது, தரம் குறைந்த, போலியான அல்லது வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட 'புதுமை' திட்டங்களை அடையாளம் கண்டு நீக்குவதும் கடினமாகிறது.



வளர்ச்சியை ஊக்குவித்தல்


பிரவுன் மற்றும் மார்டின்சன் (2018) மேற்கொண்ட ஆய்வின்படி, ஒரு நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் தரம் மேம்படும்போது, அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) செலவினம் கணிசமாக அதிகரிக்கிறது; இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) நாடுகளின் சராசரியில் 6% முதல் 12% வரையிலும், சர்வதேச அளவிலான பெரிய நிறுவனங்களில் 3% முதல் 14% வரையிலும் உயர்கிறது. இந்த தாக்கம் குறிப்பாகப் பங்குச் சந்தை முதலீடுகளைச் சார்ந்து இயங்கும் மற்றும் கண்டுபிடிப்புகளை முதன்மையாகக் கொண்ட துறைகளில் மிக வலுவாகக் காணப்படுகிறது. மிக முக்கியமாக, இதே காலகட்டத்தில் கட்டிடங்கள் அல்லது இயந்திரங்கள் போன்ற சொத்துக்களின் மீதான முதலீடு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், வெளிப்படைத்தன்மையானது முதலீடுகளைப் பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி  நகர்த்தாமல், அதிக அபாயம் மற்றும் நிச்சயமற்றத் தன்மை கொண்ட புதுமையான கண்டுபிடிப்புகளை நோக்கியே வழிநடத்துகிறது என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது.


சீனாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதற்கு வலுவான சான்றுகளை வழங்குகின்றன. ஷாங்காய் பங்குச் சந்தையில் கட்டாயமாக்கப்பட்ட நிதி வெளிப்படைத்தன்மை, குறிப்பாக அரசு சாரா நிறுவனங்கள், உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனங்களிடையே அதிக அளவிலான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது (Liu, Ye & Liu, 2023). இருப்பினும், மருந்துத் தயாரிப்பு போன்ற துறைகளில் இதில் ஒரு முக்கியமான அம்சம் கவனிக்கப்பட வேண்டும். நிறுவனங்கள் தங்களின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விரிவாக வெளிப்படுத்தும்போது, அவை ஒட்டுமொத்தத் துறைக்குமான சமிக்ஞைகளாக அமைகின்றன. தங்களின் போட்டியாளர்களின் திட்டத்தரம், காலக்கெடு மற்றும் ஒருவருக்கொருவர் சார்ந்திருக்கும் திட்டங்களைக் கவனித்த பிறகு, நிறுவனங்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்துக் கொள்கின்றன. இதன்விளைவாக, நிதி வசதி குறைந்த அல்லது பலவீனமான நிறுவனங்கள் தங்களின் திட்டங்கள் தரம் குறைந்தவை என்பதை உணர்ந்து, அவற்றை நிறுத்திவிடுகிறன அல்லது குறைத்துக் கொள்கின்றன. இது "தொகுப்புத் தூய்மையாக்கலுக்கு" (Portfolio purification) வழிவகுக்கிறது. அதாவது, தரம் குறைந்த அல்லது அதிக ஆபத்துள்ள திட்டங்கள் முன்கூட்டியே கைவிடப்பட்டு, மூலதனமானது வலுவான அறிவியல் திட்டங்களுக்காகச் செலவிடப்படுகிறது. இதனால் பாதுகாப்பு மேம்பட்டாலும், கற்றல் விளைவுகள்  போட்டி அழுத்தத்தைவிட வலுவாக இருப்பதால், அதிக ஆபத்து நிறைந்த நீண்டகாலத் திட்டங்கள் குறைகிறது. இருந்தபோதிலும், இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதன் அவசியத்தைக் குறைத்துவிடாது. ஏனெனில், வெளிப்படைத்தன்மை என்பது கண்டுபிடிப்புகளைச் சிறந்த வாய்ப்புகளை நோக்கி நகர்த்தவும், முதலீட்டுத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.


கொள்கை வரைவு 


இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சூழல் தற்பொழுது வெளிப்படையான தகவல்கள் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் உள்ளது. இந்தத் தகவல் இடைவெளியைச் சரிசெய்ய, இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (Securities and Exchange Board of India (SEBI)) பட்டியலிடல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள் (Listing Obligations and Disclosure Requirements (LODR) Regulations, 2015)) விதிகள் 2015-ன்கீழ், ஒரு 'கட்டாய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வெளிப்படுத்தல் தரநிலையானது முன்மொழியப்படுகிறது. இந்த முன்மொழிவு, நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆராய்ச்சிக்காகச் செலவிட வேண்டும் என்றோ அல்லது குறிப்பிட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும் என்றோ கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஐந்து முக்கிய அம்சங்களில் தங்களின் கண்டுபிடிப்புத் தரவை வெளிப்படுத்த வேண்டும்: முதலீட்டாளர்கள் உண்மையான ஆராய்ச்சிச் செலவுகளைப் புரிந்துகொள்ள ஏதுவாகப் பிரிவு வாரியான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகள்; அறிவுசார் சொத்துரிமையை மதிப்பிட காப்புரிமை (Patent) நடவடிக்கைகள்; தொழில்நுட்பத் திறன் வலிமையைக் காட்ட பணியாளர்களின் விவரம்; திட்டங்களின் முதிர்ச்சியை விளக்கத் தொழில்நுட்பத் தயார்நிலை (Technology Readiness Level (TRL)); மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தயாரிப்புகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் ஆகியவை ஆகும். இத்தகைய வெளிப்படைத்தன்மை பல நாடுகளில் நடைமுறையில் இருந்தாலும் இந்தியாவில் இல்லை, இதனால் முதலீட்டாளர்களுக்குப் போதிய தரவுகள் கிடைப்பதில்லை. முக்கியமாக, இந்த முன்மொழிவு நிறுவனங்களின் ரகசியத் தகவல்களைக் கோரும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்கின்றனர். 

முழுமையாகச் செயல்படுத்துவதற்கு முன்னதாக, வாரியம் இந்தத் தகவல்களை வெளிப்படுத்துமாறு கோர வேண்டும்.


இந்த நடைமுறையை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு முன்பாகவே, இதற்கான விவரங்களைத் தாக்கல் செய்வதை வாரியம் கட்டாயமாக்க வேண்டும். நிறுவனங்கள் இப்புதிய முறைக்குப் பழக்கப்படவும், தரவுகளின் துல்லியத்தை மேம்படுத்தவும் உதவும் வகையில், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தத் தகவல்களை வெளியிடுவதைத் தன்னார்வ அடிப்படையில் அனுமதிக்கலாம். இந்த இடைக்கால மாற்றுக் காலத்திற்குப் பிறகு, இந்த விவரங்களைத் தாக்கல் செய்வது அதிகாரப்பூர்வமாகக் கட்டாயமாக்கப்பட  வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தரநிலையை ஏற்றுக்கொள்வதற்கு ஐந்து முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஒரு கட்டமைக்கப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் முறை, நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையே உள்ள தகவல் இடைவெளியைக் குறைக்கிறது. எளிமையாகச் சொன்னால், உண்மையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும், அவ்வாறு செய்யாத நிறுவனங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை முதலீட்டாளர்களால் அடையாளம் காண முடியாதபோது, அவர்கள் எல்லா நிறுவனங்களையும் ஒரே மாதிரியான சராசரி நிறுவனங்களாகவே கருதுகின்றனர். இத்தகைய தவறான விலை மதிப்பீடு, சந்தை தங்கள் முயற்சியை அங்கீகரிக்காது என்ற எண்ணத்தை நிறுவனங்களுக்குள் ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.


இரண்டாவதாக, நிறுவனங்கள் தங்களைப் பற்றிய தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிப்பது, அவை திரட்டும் மூலதனத்திற்கான செலவைக் குறைக்க உதவுகிறது. ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்போது, பெரிய முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கையைப் பெறுகிறார்கள். இதனால் அந்த நிறுவனப் பங்குகளின் விலை நிலைத்தன்மையுடன் இருப்பதோடு, குறைந்த வட்டியிலோ அல்லது செலவிலோ நிதி திரட்டவும் முடிகிறது. குறிப்பாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு அல்லது காப்புரிமை (Patents) போன்ற கண்ணுக்குத் தெரியாத சொத்துகளை (Intangible assets) அதிகம் நம்பியிருக்கும் நிறுவனங்களுக்கு இந்த வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியமாகிறது. 

சந்தை ஒழுக்க மேம்பாட்டிற்கான ஊக்கம்


மூன்றாவதாக, வெளிப்படைத்தன்மை என்பது சந்தை ஒழுக்கத்தை (Market discipline) மேம்படுத்துகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவுகள், காப்புரிமைகளின் எண்ணிக்கை அல்லது திட்டங்களின் முன்னேற்றம் போன்ற விவரங்கள் முதலீட்டாளர்களுக்குத் தெரியவரும்போது, சாதாரண செயல்பாடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தங்கள் பங்குதாரர்கள், நிர்வாகக் குழுக்கள் மற்றும் போட்டியாளர்களிடமிருந்து சிறப்பாகச் செயல்படவேண்டிய அழுத்தத்தை உணர்கின்றன. தென்கொரியா, சர்வதேச நிதி அறிக்கையிடல் (Korean International Financial Reporting Standard (K-IFRS)) தரநிலைகளின்கீழ் கண்ணுக்குத் தெரியாத சொத்துகள் தொடர்பான விவரங்களை வெளியிடுவதைக் கட்டாயமாக்கிய பிறகு இது தெளிவாகத் தெரிந்தது. தங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் புள்ளிவிவரங்கள் பொதுவெளியில் வெளியாகும் என்பதை அறிந்தவுடன், பல நிறுவனங்கள் தங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்களை அதிகரித்தன.


நான்காவதாக, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக வெளியிடுவது, அந்த கண்டுபிடிப்புச் செயல்பாடுகளை அதிக உற்பத்தித்திறன் கொண்டதாகவும் திறமையாகவும் மாற்றுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் (OECD) 2021-ஆம் ஆண்டு 'கண்ணுக்குத் தெரியாத சொத்துக்கள்' (Intangibles) குறித்த அறிக்கை கூறுவது என்னவென்றால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய் அல்லது டாலருக்கும், கண்டுபிடிப்புகளை முறையாகப் பதிவு செய்யும் நாடுகள் அதிக காப்புரிமைகளையும் சிறந்த வணிகரீதியான பலன்களையும் பெறுகின்றன. இது ஏன் நிகழ்கிறது என்றால், வெளிப்படைத்தன்மை இருக்கும்போது ஆராய்ச்சி நிதியானது மிகவும் திறம்பட சரியான திட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.


ஐந்தாவதாக, கட்டாயத் தகவல் வெளிப்படுத்துதல் (Mandatory disclosure) சந்தையின் இயல்பான போக்கைச் சிதைப்பதில்லை. இது நிறுவனங்களை அதிகப்படியாகச் செலவு செய்ய வற்புறுத்துவதில்லை, அரசாங்கத்திற்கு நிதிச்சுமையை ஏற்படுத்துவதில்லை, மேலும் எந்தவொரு குறிப்பிட்ட துறைக்கும் சாதகமாகச் செயல்படுவதில்லை. நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றங்களை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதில் முழு சுதந்திரத்துடன் செயல்படலாம் என்றும் இந்த முறை, சந்தையில் துல்லியமான தகவல்கள் கிடைப்பதை மட்டுமே உறுதி செய்கிறது. அதன் அடிப்படையில் எந்த நிறுவனத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் அல்லது எதனைத் தவிர்க்க வேண்டும் என்பதை அரசாங்கத்திற்குப் பதிலாக முதலீட்டாளர்களே தீர்மானிக்கின்றனர்.


கண்ணுக்குத் தெரியாத குறைகளை (Invisible lemons) தானாகவே நிறைகளாகவோ அல்லது லாபமாகவோ சந்தைகளால் மாற்றிவிட முடியாது. எனவே, இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் மிகத் தெளிவாகக் கவனம் செலுத்த வேண்டும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் பெரிதும் உதவும் என்கின்றனர். 


வருண் அகர்வால், FAST-India மற்றும் Change Engine ஆகிய அமைப்புகளின் இணை நிறுவனர் ஆவார். ஆதித்யா சின்ஹா, பெருநிதியியல் (Macroeconomics) மற்றும் புவிசார் அரசியல் விவகாரங்கள் குறித்து எழுதுபவர் ஆவார்.


Original article : India’s need for a mandatory R&D disclosure standard -Varun Aggarwal, Aditya Sinha

Share: