இந்தியாவில் உள்ள வௌவால்களும் அவற்றின் பாதுகாப்பு நிலையும். -குஷ்பூ குமாரி

2024–25-ஆம் ஆண்டு இந்திய வௌவால்களின் நிலை அறிக்கையானது, ஆராய்ச்சியின் பற்றாக்குறையினால் இந்தியாவில் உள்ள வௌவால் இனங்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதை  காட்டுகிறது. அழிவின் விளிம்பில் உள்ள 16 உயிரி வகையைச் சேர்ந்த வவ்வால் இனங்கள் உள்ள இடங்கள் எவை? இந்த பாலூட்டியுடன் தொடர்புடைய முக்கிய நோய்கள் எவை?


தற்போதைய செய்தி :


இந்தியாவில் 135 வௌவால் இனங்கள் உள்ள நிலையில், நாட்டின் மிகப்பெரிய பாலூட்டி வரிசையாக வௌவால்கள் விளங்கினாலும், ஆராய்ச்சி மையங்களில்   பற்றாக்குறை நிலவுகிறது என்று, இந்தியாவின் வௌவால்களின் நிலை (SoIbats), 2024-25 என்ற முதல் தேசிய மதிப்பீடு கூறுகிறது. இந்த SoIbats மதிப்பீடானது, இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (Nature Conservation Foundation (NCF)) மற்றும் வௌவால் பாதுகாப்பு சர்வதேச அமைப்பு (Bat Conservation International (BCI)) ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது.





முக்கிய அம்சங்கள்:


1. வௌவால்கள் தாவரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்வதிலும், பழங்களின் விதைகளை பரப்புவதிலும், பயிர்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதிலும், தங்கள் எச்சங்கள் மூலம் மண்ணுக்கு பாதுகாப்பை வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பதால், வௌவால்கள் குறித்த தரவுப் பற்றாக்குறை கவலைக்குரியது என்று   அறிக்கை சுட்டிக்காட்டியது.


இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு மன்றத்தின் சிவப்புப் பட்டியல் மதிப்பீடு


இனங்கள்

மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவை 

கோலார் இலைமூக்கு வௌவால் (Hipposideros hypophyllus)




ஆபத்தான நிலையில் உள்ளவை

நிகோபார் இலைமூக்கு வௌவால் (Hipposideros nicobarulae),

போமோனா இலைமூக்கு வௌவால் (Hipposideros pomona),

சலீம் அலியின் பழ வௌவால் (Latidens salimalii),

நிகோபார் பறக்கும் நரி வௌவால் (Pteropus faunulus),

அந்தமான் குதிரைப்பாதை வௌவால் (Rhinolophus cognatus)

பாதிக்கும் நிலையில் உள்ளவை

துர்கா தாஸின் இலை மூக்கு வௌவால் (Hipposideros durgadasi)




2. 135 வவ்வால் இனங்களில், 16 இனங்கள் (மொத்த வவ்வால் இனங்களில் சுமார் 12 சதவீதம்) இந்தியாவின் மட்டுமே காணப்படும் அழிவு நிலையில் உள்ள இனங்களாகும். இவற்றில் 7 இனங்கள், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அச்சறுத்தல்களை எதிர்கொண்டவை என்ற பிரிவின் கீழ் உள்ளன.


3. தரவுகளின் பற்றாக்குறை வௌவால் இனங்களின் நிலை குறித்த உண்மையான  தகவலை வழங்கவில்லை என்று  அறிக்கை கண்டறிந்துள்ளது. மதிப்பீடு செய்யப்படாத அல்லது தரவுகள் பற்றாக்குறையாக உள்ள 35 இனங்கள் உள்ளன.


4. உதாரணமாக, மேகாலயாவில் சுரங்கத் தொழில் மற்றும் துன்புறுத்தல் காரணமாக நடைபெறும் வேட்டையால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள காசியன் இலைமூக்கு வௌவால் (Khasian Leaf-nosed bat), பாதுகாப்பு நிலை பட்டியலை தயாரிக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு மன்றத்தினால் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை.


5. வௌவால் இனங்களின் பரவலில் வேறுபாடுகள் இருப்பதை அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. மேற்குவங்கம்  68 வௌவால் இனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து மேகாலயாவில் 66, உத்தரகாண்டில் 52, கேரளா மற்றும் கர்நாடகாவில் தலா 41, சிக்கிமில் 43 என அடுத்தடுத்த இடங்களில் உள்ள இனங்கள் பன்முகத்தன்மையைக் குறிக்கின்றன.



6. நகரமயமாக்கலின் தாக்கங்கள் இருந்தபோதிலும், டெல்லியில் 15 வௌவால் இனங்கள் காணப்பட்டன. குறைந்த வனப்பகுதி மற்றும் வேளாண் விரிவாக்கம் காரணமாக ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 5 இனங்கள் மட்டுமே காணப்பட்டன.


7. இந்த அறிக்கையில், வௌவால்கள் இயற்கை வாழ்விடங்களிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளிலும் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. குகைகளும் மரங்களும் அவை தங்கும் மிகவும் பொதுவான இரண்டு இடங்களாக இருந்தன. சிறகுகள் கொண்ட பாலூட்டிகள், குகைகளில் நிலவும் நிலையான குறுகிய-காலநிலையின் காரணமாகவும், சுற்றுச்சூழல் மாறுபாடுகளிலிருந்தும் வேட்டையாடும் விலங்குகளிலிருந்தும் அவை அளிக்கும் பாதுகாப்பின் காரணமாகவும் குகைகளிலேயே தங்கி வாழ்கின்றன.


8. மகாராஷ்டிராவின் மகாபலேஷ்வரில் உள்ள ராபர்ஸ் கேவ், பிலிப்ஸ் லாங்-ஃபிங்கர்டு வௌவால்களின் மிகப்பெரிய தங்குமிடமாக இருக்கலாம். இங்கு இனப்பெருக்க காலத்தில்  1 லட்சம் வௌவால்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில், பாதிப்படைந்த கட்டிடங்களின் இடுக்குகள், மரக் கட்டைகள் முதல் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் நினைவுச்சின்னங்கள் வரை வௌவால்கள் தங்குவது கண்டறியப்பட்டுள்ளது.


9. அச்சுறுத்தலுக்கு ஆளான மற்றும் குறிப்பிட்ட இடத்தில் வாழும் பல உயிரினங்கள், ஏறக்குறைய முழுமையாகக் குகைகளிலேயே தங்குவதாக அறியப்படுகின்றன. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கோலார் இலைமூக்கு வௌவால் (IUCN சிவப்பு பட்டியல் வகைப்படுத்தலின்படி) கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிரானைட் மலை அடிவாரத்தில் இருக்கும்  ஒரு குகையில் மட்டுமே வாழ்ந்து வருகிறது.


வௌவால்களைப் பற்றி:


1. வௌவால்கள் உலகின் மிகச்சிறிய பாலூட்டிகள் ஆகும். வௌவால் பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, வௌவால்கள் சிறிய நாயின் அளவிற்கு பெரியதாகவும் அல்லது பெரிய தேனீ (bumblebee) அளவிற்கு மிகவும் சிறியதாகவும் இருக்கலாம்.

2. மிகப்பெரிய வௌவால்கள் பறக்கும் நரிகள் ஆகும். இவற்றின் இறக்கைகளின் நீளம் 2 மீட்டர் வரையிலும், உடல் எடை 1.5 கிலோகிராம் வரையிலும் இருக்கும். மறுமுனையில் தேனீ வௌவால் உள்ளது. இது 2 கிராம் எடை கொண்டது. இதுவே உலகின் மிகச்சிறிய பாலூட்டியாகும்.


3. பெரும்பாலான மைக்ரோபேட்கள், உயிரியல் ஒலித் திசைமாற்று அமைப்பு மிகவும் செம்மைப்படுத்தப்பட்ட வடிவமான எதிரொலி இடமறிதல் முறையைப் பயன்படுத்துகின்றன. வௌவால்கள் தங்கள் குரல்வளை (larynx) மூலம் அதிக அதிர்வெண் கொண்ட அல்ட்ராசோனிக் ஒலிகளை (சாதாரணமாக 20–200 kHz) உருவாக்கி, அவற்றை வாய் அல்லது மூக்கின் வழியாக வெளியிடுகின்றன. இந்த ஒலி அலைகள் பொருட்களில் மோதிப் பின்னெதிரொலியாக (echo) திரும்புகின்றன. இந்தத் துடிப்புகள் பொருட்களின் மீது பட்டு எதிரொலிக்கும்போது, ​​அவற்றின் மூளை உடனடியாகப் புரிந்துகொண்டு தங்கள் சுற்றுப்புறத்தை வரைபடமாக்குகிறது.


4. வௌவால்கள் குருடானவை அல்ல. அவற்றின் கேட்கும் திறனைப் போலவே, பார்க்கும் திறனும் இனத்திற்கு இனம் மாறுபடும். பறக்கும் சிறகுகளின் அசைவு போன்ற காட்சி சைகைகள் வேட்டையாடும் வௌவால்களுக்கு திசையை கண்டறிய உதவுகின்றன. மேலும், வெளிச்சம் போன்ற சைகைகள், இரவில் தங்கும் இடத்திலிருந்து (roost) வெளியே வரவேண்டிய நேரத்தை அறிய வௌவால்களுக்கு உதவுகின்றன என்று வௌவால் பாதுகாப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


5. வௌவால்கள் மட்டுமே பறக்கக்கூடிய பாலூட்டிகள் ஆகும். வௌவால்கள் பெரும்பாலும் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அசையாமல் நின்ற நிலையிலிருந்து மேலே எழும்புவதற்குத் தேவையான சக்தியை அவற்றின் இறக்கைகள் உருவாக்குவதில்லை. மேலும், மேலே எழும்புவதற்குத் தேவையான வேகத்தை அடைவதற்காக அவற்றால் ஓடமுடியாத அளவுக்குப் பின்னங்கால்கள் மிகவும் சிறியதாக இருக்கின்றன. தேவைப்படும்போது மேலே பறப்பதற்கு, தொங்கிக்கொண்டிருப்பது அவற்றுக்கு மிகவும் சாதகமாக உள்ளது.





16  உள்ளூர் வௌவால் இனங்கள்

இடங்கள்

(i) சோம்ப்ரே வௌவால்

(ii) மேகாலயா தடித்த கட்டைவிரல் வௌவால் (கிளிஷ்ரோபஸ் மேகாலயானஸ்)

(iii) மழைக்காடு குழாய் மூக்கு வௌவால் (முரினா ப்ளூவியாலிஸ்) .

(iv) பீட்டரின் குழாய் மூக்கு கொண்ட வெளவால் (ஹார்பியோலா கிரிசியா) .

அழிவு நிலையில் உள்ள 16 இனங்களில், இந்த 4 இனங்கள் இமயமலை மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகளில் காணப்படுகின்றன.



(v) சலீம் அலியின் பழ வெளவால் (Latidens salimalii)

(vi) பொமோனா இலைமூக்கு வௌவால் (Hipposideros pomona)

(vii) பெய்டனின் மீசை மயோடிஸ் (Myotis peytoni)

(viii) ஸ்ரீனியின் நீண்ட விரல் வௌவால் (Miniopterus srinii)

மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.


(ix) நிக்கோபார் பறக்கும் நரி (Pteropus faunulus)

(x) ஹோம்ஃப்ரேயின் குதிரைவாலி வெளவால் (ரைனோலோபஸ் அண்டமனென்சிஸ்)

(xi) அந்தமான் குதிரைவாலி வெளவால் (Rhinolophus cognatus)

(xii) நிக்கோபார் இலை மூக்கு வௌவால் (Hipposideros nicobarulae)

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.


(xiii) கோலார் இலை மூக்கு வௌவால் (ஹிப்போசிடெரோஸ்)

ஹைப்போஃபில்லஸ்)

(xiv) மறைவான கம்பளி வௌவால் (கெரிவூலா கிரிப்டா)

தீபகற்ப இந்திய பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.


(xv) துர்கா தாசரின் இலை மூக்கு வௌவால்துர்கா தாஸ் இலைமூக்கு வௌவால்

கங்கைச் சமவெளி பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.


(xvi) மிட்ரெட் ஹார்ஸ்ஷூ பேட் (ரைனோலோபஸ் மிட்ராடஸ்)

சோட்டாநாக்பூர் பீடபூமி பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.



வௌவால்களும் அவற்றுடன் தொடர்புடைய நோய்களும்


1. வௌவால்கள் மகரந்தச் சேர்க்கை, விதை பரவல், பூச்சிக் கட்டுப்பாடு போன்ற சூழல் மண்டல சேவைகளை வழங்குவதன் மூலம் முக்கிய சூழலியல் பணிகளைச் செய்கின்றன. அதே நேரத்தில், சில வௌவால் இனங்கள் ஹெண்ட்ரா வைரஸ், நிபா வைரஸ் மற்றும் கடுமையான தீவிர சுவாச நோய்க்குறி (Severe acute respiratory syndrome (SARS)) போன்ற கொரோனா வைரஸ்கள் (CoVs) உள்ளிட்ட, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்க்கிருமிகளின் இருப்பிடங்களாகவும்  இனங்கள் அறியப்படுகின்றன.


2. உலக வெப்பநிலையில் ஏற்பட்ட  முக்கிய மாற்றம்  மற்றும் நிபா, ஹென்ட்ரா வைரஸ் போன்ற ஹெனிபா வைரஸ்கள், ரேபிஸ் நோயை உண்டாக்கும் லைசா வைரஸ்கள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்களின் வளர்ச்சி ஆகியவற்றுடன் ஒத்துப்போகும் வகையில், வௌவால்கள் ஏறக்குறைய 52-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இது, ஓம்புயிரிக்கும் வைரஸுக்கும் இடையிலான இணை-சிற்றின உருவாக்கத்தின்  நீண்ட வரலாற்றைச் சுட்டிக்காட்டுகிறது.


3. வௌவால்களின் பருவகால அல்லது பகுதி இடம்பெயர்வு, பல இனங்கள் ஒன்றாக தங்கும் பழக்கம் (mixed-species roosting), பெரிய கூட்டமாக வாழ்தல், சிறிய பாலூட்டிகளுடன் ஒப்பிடும்போது அசாதாரணமாக நீண்ட ஆயுட்காலம் போன்ற சுற்றுச்சூழல் பண்புகள், வைரஸ்கள் மக்கள்தொகைகளின் உள்ளும் இடையிலும் நீடித்து பரவ உதவுகின்றன. மேலும், கருப்பையில் தாயிலிருந்து குட்டிகளுக்கு வைரஸ்கள் பரவுவதால், குட்டிகளும் வைரஸ் தொற்று ஏற்பட வழிவகுக்கிறது.


4. நிபா வைரஸ்: இது ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது முக்கியமாக வௌவால்கள், பன்றிகள், நாய்கள் மற்றும் குதிரைகள் போன்ற விலங்குகளைப் பாதிக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கும் பரவி, கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும். பாதிக்கப்பட்ட வௌவால்களின் உமிழ்நீர் அல்லது சிறுநீரால் அசுத்தமடைந்த பச்சை பேரீச்சைப் பழச்சாறு அல்லது பழத்தை உட்கொள்வதன் மூலம் இந்தத் தொற்று பரவலாம். மலேசியா, வங்கதேசம் மற்றும் இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிற பகுதிகளில் ஆண்டுதோறும் நோய்ப்பரவல்களை ஏற்படுத்தும் நிபா வைரஸின் முக்கியத் தேக்கங்களாக, பறக்கும் நரி (Pteropus) இனத்தைச் சேர்ந்த பழ வௌவால்கள் கண்டறியப்பட்டுள்ளன.

5. மார்பர்க் வைரஸ் (Marburg Virus): வௌவால்கள் ஃபிலோவைரஸ்கள்  எனப்படும் RNA வைரஸ் குழுவின் முக்கிய இனங்களாகக் கருதப்படுகின்றன. இதில் மார்பர்க் வைரஸ் அடங்குகிறது. மார்பர்க் வைரஸ் நோய் (Marburg virus disease (MVD),), முன்பு மார்பர்க் இரத்தக் காய்ச்சல் (Marburg haemorrhagic fever) என்று அழைக்கப்பட்டது. மிகவும் கடுமையான பல சமயங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய இரத்தக் காய்ச்சல் நோயாகும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ரௌசெட்டஸ் பழ வௌவால்கள் மார்பர்க் வைரஸின் இயற்கையான இனங்களாகக் கருதப்படுகின்றன.


6.கொரோனா வைரஸ்கள்: இவை பாலூட்டிகள் மற்றும் பறவைகள் ஆகிய இரண்டிலும் காணப்படும், மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த வைரஸ் குழுக்களில் ஒன்றாகும். இந்த வைரஸ்கள் சுவாச நோய்களை ஏற்படுத்துவதோடு, சுவாசத் துளிகள் மற்றும் அசுத்தமான மேற்பரப்புகள் மூலம் பரவுகின்றன. இது, பெரும்பாலும் வெப்பமண்டல அல்லது மிதமான வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் சில குதிரைக்குளம்பு வௌவால்களில் (ஒரு வகை பூச்சி உண்ணும் வௌவால்கள்) காணப்படும் வைரஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.


Original Link: Bats in India and their conservation status.

Share:

மத்திய அரசு நீதித்துறை வரம்புமீறல் என்று கூறுவது, உண்மையில் நீதிமன்றங்கள் புறக்கணிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் செயலாகும். -அபிக் சிம்னி மற்றும் மோக்ஷா ஷர்மா

ஒரு அடிப்படை உரிமையின் மீதான கட்டுப்பாடாக அறநெறி ‘நெறிமுறை’ (morality) என்றால் என்ன என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க வேண்டியிருக்கும்போது, அவை சமூகம் எதை அங்கீகரிக்கிறது என்பதைப் பார்க்காமல், அரசியலமைப்புச் சட்டம் எதைக் கோருகிறது என்பதையே பார்க்கின்றன. அந்தக் கொள்கை ஒழிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.


சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் வைக்கப்பட்ட வாதங்கள், ஒரு வித்தியாசமான உச்ச நீதிமன்றத்திற்கான வழக்காகவே அமைகின்றன. அந்த வாதம் இதுதான்: பல ஆண்டுகளாக, நீதிமன்றங்கள், மத மற்றும் கலாச்சார நடைமுறைகளை அரசியலமைப்புத் தரங்களுக்கு உட்படுத்தும் கோட்பாடுகளை உருவாக்கியுள்ளன. ஆனால் இது நீதித்துறையின் வரம்புமீறலாகும். அத்தகைய நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் சமூகங்களே அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் விட்டுவிட வேண்டும்.


அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் மையத்தில், இரண்டு முதன்மையான வாதங்கள் அமைந்துள்ளன.


முதலாவது, மத நடைமுறைகளை நீதிமன்றங்களால் மறுஆய்வு செய்ய முடியாது என்று கூறுகிறது. ஒரு மத நடைமுறை சட்டமாக்கப்படும்போது மட்டுமே அதை ஆராய நீதிமன்றங்களுக்கு அதிகார வரம்பு கிடைக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஒரு மத நிறுவனம், சட்டப்பூர்வ விதி ஏதுமின்றி ஒரு நடைமுறையைக் கட்டாயப்படுத்தினால், சட்டம் இல்லாத நிலையில், நீதிமன்றம் ஒரு சட்ட சவாலை ஏற்கக்கூடாது. ஒரு நடைமுறைக்குச் சட்டம் இருந்தாலும் கூட, அந்த விதிமுறை அரசியலமைப்பின் சொந்த விழுமியங்களுடன் ஒத்துப்போகிறதா என்ற பரந்த கேள்வி, அனுமதிக்கப்பட்ட விசாரணைக்கு அப்பாற்பட்டது.


இதன் விளைவாக, நீதிமன்றம், பாராளுமன்றத்திற்குச் செயல்பட அதிகாரம் இருந்ததா என்று மட்டும் கேட்பதோடு தன்னை வரையறுக்கப்படுத்திக் கொள்கிறது. அந்த நடைமுறை, அரசியலமைப்பு கோருவதோடு ஒத்துப்போகிறதா என்றோ, அரசியலமைப்பு எதன் மீது நிலைபெற்றுள்ளதோ அந்த நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களுக்கு அது பதிலளிக்கிறதா என்றோ அதனால் கேட்க முடியாது. அந்தக் கேள்வியைத் தடுப்பதற்காகவே இரண்டாவது வாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இரண்டாவது வாதம், இந்த சிக்கலைத் தீர்க்கக்கூடிய ஒரே நிலையை நீக்கிவிடுகிறது. உதாரணமாக, அரசியலமைப்பு ஒழுக்கநெறிக் கோட்பாடு என்பது, மத நடைமுறைகளை மறுஆய்வு செய்வதில் இடமில்லாத ஒரு தெளிவற்ற நீதித்துறை கண்டுபிடிப்பு என்று கூறுகிறது. அந்தக் கொள்கையே நேரடியானது: ஒரு அடிப்படை உரிமையின் மீதான கட்டுப்பாடாக ஒழுக்கநெறி என்றால் என்ன என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க வேண்டியிருக்கும்போது, சமூகம் எதை அங்கீகரிக்கிறது என்பதைப் பார்க்காமல், அரசியலமைப்பு எதைக் கோருகிறது என்பதையே அவை பார்க்கின்றன.


மத்திய அரசு அந்தக் கொள்கை நீக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. அதற்குப் பதிலாக: ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சமூகத்தின் மேலாதிக்க மனசாட்சியான சமூக ஒழுக்கநெறி இருக்க வேண்டும். அரசியலமைப்பின் 25-வது விதி, மத நடைமுறைக்கான உரிமையை ஒழுக்கநெறிக்கு உட்படுத்துகிறது. மத்திய அரசின் பார்வையில், அந்த ஒழுக்கநெறி என்பது மேலாதிக்க சமூகம் எதை நம்புகிறதோ அதுவே ஆகும். சமூகம் அங்கீகரிக்கும் ஒரு நடைமுறை, அந்தத் தரத்தை தானாகவே பூர்த்தி செய்கிறது.


திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியமும் இதே நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது. மத்திய அரசு இதைச் சட்டமியற்றும் முதன்மை என்று கட்டமைத்த இடத்தில், வாரியம் அதை அரசியலமைப்புச் சட்டத்தில் கட்டமைத்துள்ளது. 25-வது விதியில் உள்ள "ஒழுக்கநெறி" என்ற வார்த்தை, சட்டத்தை உருவாக்கியவர்களால் எந்தவித தகுதியுமின்றி வைக்கப்பட்டது என்றும், அந்தத் தேர்வை நீதிமன்றங்கள் மாற்றியமைக்க முடியாது என்றும் அது வாதிடுகிறது. விளைவு ஒன்றுதான்: ஆதிக்கம் செலுத்தும் அமைப்பு எது அறம் எனத் தீர்மானிக்கிறதோ, அதுவே அறமாகிறது. ஆனால், அதிகாரக் கட்டமைப்புகளுக்குள் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் நீதித்துறை சவாலுக்கு அப்பாற்பட்டது அல்ல. அதனால்தான் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் இருக்கின்றன.


“அரசியலமைப்பு அறநெறி” என்ற சொற்றொடர் சமீபத்திய நீதிபதிகளால் உருவானதல்ல: அம்பேத்கர் அதை 1948-ல் அரசியலமைப்புச் சபையில் பயன்படுத்தினார். ஆனால், நீதித்துறை மறுஆய்வின் ஒரு சாராம்சமான அளவுகோலாக அதன் பயன்பாடு சமீபகாலத்தில்தான் உள்ளது. மேலும் அந்தப் பயன்பாட்டைத்தான் மத்திய அரசும் வாரியமும் எதிர்க்கின்றன. வாரியம் இன்னும் ஒரு படி மேலே சென்றது. அம்பேத்கர் அந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தியது ஒரு நடைமுறை சார்ந்ததே என்றும், அது புதிதாக உருவாகும் குடியரசில் நிறுவனங்களை மதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே அவர் அதைப் பயன்படுத்தினார். வாரியத்தின்படி, மத நடைமுறைகளை மறுஆய்வு செய்வதற்கான ஒரு அடிப்படையாக அதைப் பயன்படுத்த அவர் விரும்பவில்லை.


படிநிலை அமைப்பை மையமாகக் கொண்ட ஒரு சமூகம், ஜனநாயக வழிமுறைகள் மூலம் அந்தப் படிநிலை அமைப்பை காலவரையின்றி மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர முடியும் என்பதை அம்பேத்கர் புரிந்துகொண்டிருந்தார். ஜனநாயகப் பெரும்பான்மையினர் தங்களுக்குப் பயனளிக்கும் படிநிலை அமைப்புகளைக் கலைத்துவிடுவார்கள் என்று அரசியலமைப்பால் சாதாரணமாகக் கருதிக்கொள்ள முடியாது. அதை எதிர்ப்பதற்காகவே அரசியலமைப்பு அறம் கட்டமைக்கப்பட்ட ஒரு சயல்முறையாக இருந்தது. இதற்கு மாறாக, சமூக அறநெறி இந்தப் போக்கை எதிர்ப்பதில்லை. அது பெரும்பாலும் ஏற்கனவே உள்ள சமூகப் பாரபட்சங்களைப் பிரதிபலிக்கிறது.


மத்திய அரசின் கட்டமைப்பின்படி, நீதிமன்றங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்த கோட்பாடுகள் தொடக்கத்திலிருந்தே சட்டப்பூர்வமானவை அல்ல. பொதுநல வழக்குகள், தாங்கள் எதிர்க்கும் நடைமுறைகளில் தனிப்பட்ட அக்கறை இல்லாத தரப்பினரால் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், குரலற்றவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தீர்வை சித்தாந்த வழக்குகளுக்கான கருவியாக மாற்றுகின்றன என்றும் அது வாதிடுகிறது. அரசியலமைப்பு அறநெறியானது, தனிப்பட்ட நீதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் உரையில் எந்த ஆதாரமும் இல்லாத, தன்னிச்சையாக மிதக்கும் ஒரு தரத்தை வழங்குகிறது. இவை நீதித்துறை மறுஆய்வுக்கான கருவிகள் அல்ல என்று மத்திய அரசு கூறுகிறது. அவை சமூகம் மற்றும் சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் நீதித்துறை வரம்பு மீறுவதற்கான கருவிகளாகும்.


மத்திய அரசு நீதித்துறை வரம்பு மீறல் என்று அழைப்பது, நடைமுறையில், , பின்தங்கிய மக்களைப் பாதுகாக்கும் நீதிமன்றங்களின் நீண்டகால வரலாறாகும். பந்துவா முக்தி மோர்ச்சா வழக்கில், கொத்தடிமைகள் ஒரு கடிதத்தின் மூலம் நீதிமன்றத்தை அணுகினர். ஹுசைனாரா கத்தூன் வழக்கில், தங்களுக்கு விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனைக் காலத்தைவிட நீண்டகாலம் ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்த விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். நாடாளுமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது, பணியிடங்களில் நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்த விசாகா வழிகாட்டுதல்கள் (Vishakha Guidelines) வெளியிடப்பட்டன. நவதேஜ் சிங் ஜோஹர் வழக்கில், பரஸ்பர சம்மதத்துடன் கூடிய ஓரினச்சேர்க்கை உறவுகள் குற்றமற்றதாக்கப்படுவதற்கு அரசியலமைப்பு அறநெறியே அடிப்படையாக இருந்தது. மத நடைமுறைகளை மறுஆய்வு செய்வதிலிருந்து இந்தக் கருவிகளை நீக்கினால், பெரும்பான்மையினர் ஒப்புக்கொள்கிறார்களா என்பதைப் பொறுத்தே நீதிமன்றத்தின் வாக்குறுதி அமையும்.

மசூதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் பெண், அக்யாரிக்குள் (நெருப்புக் கோயில்) நுழையத் தடை செய்யப்பட்ட பார்சி பெண், பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்பட்ட தாவூதி போஹ்ரா பெண் தொடர்பானது. இந்த மூன்று வழக்குகளும் தற்போது இந்த அமர்வின் முன் உள்ளன. ஒவ்வொன்றும், ஆதிக்க சமூகம் உண்மையாக நம்பும் ஒரு நடைமுறையை உள்ளடக்கியது. மத்திய அரசின் கட்டமைப்பின்கீழ், இந்த சமூகங்களின் சமூக ஒழுக்கமே இங்கு பொருந்தும் அளவுகோலாகும். இந்த ஒவ்வொரு வழக்கிலும், வரலாற்றுரீதியாகத் தீர்வுகளை உருவாக்கியுள்ள அரசியலமைப்பு வாதங்களைப் பயன்படுத்த முடியாது. அதாவது சமத்துவம், கண்ணியம் மற்றும் பாகுபாடின்மை ஆகியவற்றில் வேரூன்றிய வாதங்கள் இனி முன்வைக்கப்பட முடியாது.


மத நிறுவனங்களும் நிர்வாக முடிவுகளும் தங்களின் சொந்த ஆய்வுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், நீதிமன்றங்கள் ஏன் பெரும்பான்மையினரின் விருப்பப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதற்கான கவனமாக கட்டமைக்கப்பட்ட ஒரு வாதம்தான் இந்த நீதிமன்றத்தின் முன் வாதிடப்படுகிறது. இந்தக் கோரிக்கை நீதித்துறை கட்டுப்பாடாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில், இது குரலற்றவர்களைப் பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டம் பயன்படுத்தும் ஒரே கருவிகளை அகற்றுகிறது.


நீதிமன்ற அமர்வு இறுதி முடிவை எடுக்கும். ஆனால் நீதிமன்றத்தின்முன் இருக்கும் முஸ்லிம் பெண், பார்சி பெண், தாவூதி போஹ்ரா பெண் ஆகியோருக்கு, இந்தப் பிரச்சினை ஒருபோதும் கருத்தியல்ரீதியானதாக இருந்ததில்லை.


கட்டுரையாளர்கள் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்.



Original Link: What Centre calls judicial excess is actually the courts protecting those left behind


Share:

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை இனிமேலும் ஏன் தாமதிக்க முடியாது? -ஷாமிகா ரவி

பெண் வாக்காளர்களின் அதிக வாக்குப்பதிவு ஜனநாயகம் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருபதறகான அறிகுறியாகும். ஆனால், உண்மையான அதிகாரமளித்தல் என்பது வாக்களிப்பது மட்டுமல்ல. முடிவெடுக்கும் பொறுப்புகளிலும் பெண்களுக்கு இடம் இருக்க வேண்டும்.


இந்தியா ஒரு அசாதாரணமான ஜனநாயகச் சந்திப்பில் உள்ளது. இது உலகின் மிகவும் துடிப்பான ஜனநாயக நாடுகளில் ஒன்றாகும். அதிக வாக்காளர் பங்கேற்பு மற்றும் அதிகாரித்துவரும் பெண் வாக்காளர்களால் இது குறிக்கப்படுகிறது. ஆனால், அதன் சட்டமன்ற அமைப்புகளுக்குள், பெண்களின் பிரதிநிதித்துவம் வெளிப்படையாகக் குறைவாகவே உள்ளது. பங்கேற்புக்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையிலான இந்த முரண்பாடு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாகச் செயல்படுத்துவதற்கான ஒரு வலுவான வாதத்தை முன்வைக்கிறது.


இந்த இடைவெளி தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பெண்கள் ஒரு தீர்க்கமான தேர்தல் சக்தியாக உருவெடுத்துள்ள போதிலும், சட்டமியற்றும் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது. மாநில மற்றும் தேசியப் பிரதிநிதித்துவத்திற்கு இடையிலான பெரும் வேறுபாட்டில் இந்த ஏற்றத்தாழ்வு மிகவும் தெளிவாகத் தெரிகிறது.


மாநில சட்டமன்றங்களில், சராசரியாக, சட்டமன்ற உறுப்பினர்களில் பெண்கள் சுமார் 9% மட்டுமே உள்ளனர். அதேசமயம், நாடாளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் சுமார் 14%-15% ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் பெண்களின் பங்கான கிட்டத்தட்ட 50%-ஐப் பிரதிபலிப்பதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.


இந்த ஏற்றத்தாழ்வு வெறும் எண்ணிக்கை சார்ந்தது மட்டுமல்ல, இது கட்டமைப்பு ரீதியானது. கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவில் பெண்கள் செயலற்ற வாக்காளர்களிலிருந்து தீவிர அரசியல் பங்கேற்பாளர்களாக மாறியுள்ளனர். பல மாநிலங்களில், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை இப்போது ஆண்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ உள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க ஜனநாயகச் சாதனையாகும். இது பெண்களிடையே தங்களின் செயல்திறன், விழிப்புணர்வு மற்றும் வளர்ந்துவரும் அரசியல் உரிமையுணர்வை உணர்த்துகிறது. இருப்பினும், பங்கேற்பில் ஏற்பட்ட இந்த எழுச்சி, பிரதிநிதித்துவத்தில் அதற்கு இணையான பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுக்கவில்லை.


கட்டமைப்புரீதியான குறைபாடுகள்


இதற்கான காரணங்கள் இந்தியாவின் அரசியல் அமைப்பின் செயல்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளன. அரசியல் கட்சிகள் வாயில்காப்பாளர்களாகச் செயல்படுகின்றன. மேலும், ஆண்களைவிட மிகக் குறைவான பெண் வேட்பாளர்களையே தொடர்ந்து நியமிக்கின்றன. தேர்தல் அரசியல் என்பது அதிக வளங்கள் தேவைப்படும் ஒரு துறையாகும். இதற்கு நிதி ஆதரவு, வலையமைப்புகள் மற்றும் சமூக மூலதனம் தேவைப்படுகின்றன. இந்தத் துறைகளில் பெண்கள் பெரும்பாலும் அமைப்புரீதியான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். கலாச்சார நெறிமுறைகளும் பாதுகாப்பு குறித்த கவலைகளும் பெண்களை அரசியல் களத்தில் நுழைவதிலிருந்து மேலும் தடுக்கின்றன. இதன் விளைவாக, ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து நிகழும் ஒரு புறக்கணிப்புச் சுழற்சி உருவாகிறது. சரியாக இந்த காரணத்தினால்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரும்பத்தக்கது மட்டுமல்ல, அவசியமானதும் ஆகும். சட்டமன்றங்களில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு இடங்களைக் கட்டாயமாக்குவதன் மூலம், நியாயமான பிரதிநிதித்துவத்தைத் தடுக்கும் கட்டமைப்புத் தடைகளை இது நேரடியாகக் களைகிறது. இத்தகைய ஒதுக்கீடுகள் தகுதியைக் குறைத்து மதிப்பிடுகின்றன அல்லது பெயரளவிலான பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுக்கின்றன என்று விமர்சகர்கள் அடிக்கடி வாதிடுகின்றனர். ஆனால் இந்த வாதம், தற்போதைய அமைப்புரீதியாக தகுதியின் அடிப்படையில் இயங்குகிறது என்று கருதுகிறது. ஆனால் அது தெளிவாக அவ்வாறு இல்லை. இந்தியாவில் அரசியல் அதிகாரத்திற்கான அணுகலானது, திறமையைப் போலவே சலுகைகள் மற்றும் வலையமைப்புகளாலும் வடிவமைக்கப்படுகிறது.



உள்ளாட்சி மட்டத்தில் இட ஒதுக்கீடு குறித்த இந்தியாவின் தனிபட்ட அனுபவத்திலிருந்தே கிடைக்கும் சான்றுகள் ஒரு வலுவான மாற்றுக்கருத்தை அளிக்கின்றன. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில், பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில், அதன் விளைவுகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பெண் தலைவர்கள் திறம்படப் பங்கேற்றது மட்டுமல்லாமல், சுகாதாரம், கல்வி, நீர் மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்சினைகளை நோக்கி கொள்கை முன்னுரிமைகளையும் மாற்றியுள்ளனர். இவை சாதாரணமான பிரச்சினைகள் அல்ல, அவை மனித வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மையமானவை.


மேலும், பிரதிநிதித்துவம் ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்துகிறது. பெண்கள் அதிகாரப் பதவிகளை வகிக்கும்போது, அவர்கள் ஆழமாக வேரூன்றிய சமூக நெறிகளுக்கு சவால் விடுகிறார்கள். இளம் பெண்கள் தலைமைப் பதவியை அடைய முடியும் என்று கருதி வளர்கிறார்கள். குடும்பங்களும் சமூகங்களும் பெண்களின் பொதுப் பங்குகளை மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்ளத் தொடங்குகின்றன. காலப்போக்கில், இது எதிர்காலத் தலைவர்களின் ஒரு தொடர் வரிசையை உருவாக்குகிறது. எனவே, இட ஒதுக்கீடு என்பது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல, மாறாக அது ஒரு வினையூக்கியாகச் செயல்படுகிறது. அது வரலாற்று ரீதியான ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்ய உதவுகிறது மற்றும் மிகவும் சமத்துவமான ஒரு அமைப்புக்கு களம் அமைக்கிறது.


மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் குறித்து


மாநில சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான ஒப்பீடு, இந்த சீர்திருத்தத்தின் அவசரத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


மாநில அளவில் பிரதிநிதித்துவம் 9% ஆகக் குறைவாக இருந்தால், சட்டமியற்றும் அதிகாரத்தின் அடிமட்டத்தில் பிரச்சினை இன்னும் கடுமையாக உள்ளது என்பதையே அது காட்டுகிறது. சுகாதாரம், கல்வி, சட்டம் மற்றும் ஒழுங்கு, மற்றும் உள்ளாட்சி மேம்பாடு தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதில் மாநில அரசுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்றன. இந்த முடிவெடுக்கும் அமைப்புகளில் பெண்கள் ஏறக்குறைய இல்லாததால், மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு அவற்றை வடிவமைப்பதில் குறைந்த அளவே குரல் மட்டுமே உள்ளது என்பதாகும்.


தேசிய அளவில், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் சுமார் 14%–15% என்ற சற்றே உயர்ந்த எண்ணிக்கை பெரும்பாலும் ஒரு முன்னேற்றமாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இதுவும் உலகளாவிய அளவுகோல்கள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு போதுமானதாக இல்லை. ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகம், அதன் மக்களின் பன்முகத்தன்மையை வெறும் கோட்பாட்டில் மட்டுமல்ல, நடைமுறையிலும் பிரதிபலிக்க வேண்டும். பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம், இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களின் சட்டபூர்வத்தன்மையையும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் பலவீனப்படுத்துகிறது.


காலம் மற்றொரு முக்கியக் காரணியாகும். இந்தியா சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வேகமாக மாறி வருகிறது. அதிகமான பெண்கள் உயர்கல்வியில் சேர்கிறார்கள். அதிகமான பெண்கள் பணியிடங்களில் இணைகிறார்கள். அவர்கள் தங்கள் உரிமைகளை மேலும் வலுவாக நிலைநாட்டுகிறார்கள். அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய நிறுவனங்களைவிட அவர்களின் விருப்பங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைச் செயல்படுத்துவதில் தாமதம் செய்வது, இந்த இடைவெளியை மேலும் விரிவுபடுத்தும் அபாயத்தை ஏற்படுத்துவதோடு, விரக்திக்கும் ஈடுபாடின்மைக்கும் வழிவகுக்கும்.


சட்டப்பூர்வ ஆணைகளைச் சார்ந்திருப்பதை விடுத்து, அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இது ஒரு விரும்பத்தக்க இலக்காக இருந்தாலும், தாமாக முன்வந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்பதை கடந்தகால அனுபவங்கள் காட்டுகின்றன. தொடர்ந்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இருந்தபோதிலும், பெண் வேட்பாளர்களின் விகிதம் குறைவாகவே நீடித்து வருகிறது. கட்டமைப்பு சார்ந்த சிக்கல்களுக்குக் கட்டமைப்பு சார்ந்த தீர்வுகளே தேவை; இட ஒதுக்கீடு அத்தகைய தீர்வுகளில் ஒன்றாகும்.



ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்


மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் சாராம்சம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே ஆகும். பெண் வாக்காளர்களிடையே அதிக வாக்குப்பதிவு என்பது ஜனநாயகத்தின் தீவீரத்திற்கான ஓர் அறிகுறியாகும். ஆனால், உண்மையான அதிகாரமளித்தலுக்கு வாக்களிப்பது மட்டும் போதாது. முடிவெடுக்கும் அமைப்புகளிலும் பெண்களுக்கு ஓர் இடம் தேவை. சட்டங்களும் கொள்கைகளும் உருவாக்கப்படும் இடங்களில் அவர்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். பங்கேற்பிலிருந்து பிரதிநிதித்துவத்திற்கு நகர்வதே இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தின் அடுத்த தர்க்கரீதியான படியாகும்.


இதில் ஒரு வலுவான வளர்ச்சி சார்ந்த வாதமும் உள்ளது. பாலின சமத்துவமான ஆளுகை சிறந்த விளைவுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை நாடு தழுவிய ஆய்வுகள் காட்டுகின்றன — அதாவது, அதிக சமத்துவமான கொள்கைகள், மேம்பட்ட சமூகக் குறிகாட்டிகள் மற்றும் நிலையான வளர்ச்சி. இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த மற்றும் சிக்கலான ஒரு நாட்டில், மக்கள்தொகையில் பாதியை அரசியல் தலைமையிலிருந்து விலக்குவது அநீதியானது மட்டுமல்ல, அது திறமையற்றதும் ஆகும்.


நிறுவன சீர்திருத்தத்தால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியா ஏற்கனவே காட்டியுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தில் இட ஒதுக்கீட்டின் வெற்றி, அரசியல் விருப்பம் இருக்கும்போது மாற்றம் சாத்தியம் என்பதை நிரூபிக்கிறது. இந்தக் கொள்கையை மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கும் விரிவுபடுத்துவது ஒரு தீவிரமான நடவடிக்கை அல்ல, அது ஒரு அவசியமான முன்னேற்றமாகும். இறுதியில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு இந்தியா தயாராக இருக்கிறதா என்பது கேள்வியல்ல, மாறாக மகளிர் இட ஒதுக்கீட்டிற்காக அதன் ஜனநாயகம் இன்னும் காத்திருக்க முடியுமா என்பதே கேள்வி. பங்கேற்பிற்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையிலான இடைவெளி புறக்கணிக்க முடியாத அளவுக்குப் பெரியது.


இந்தியாவின் ஜனநாயகப் பயணம் குறிப்பிடத்தக்கது, ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை.


இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத் துணிச்சலான நடவடிக்கை தேவை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாகச் செயல்படுத்துவது என்பது வெறும் நியாயத்தைப் பற்றியது மட்டுமல்ல, அது மேலும் பிரதிநிதித்துவமிக்க, பதிலளிக்கக்கூடிய மற்றும் மீள்திறன் கொண்ட ஒரு ஜனநாயகத்தைக் கட்டமைப்பதாகும்.


ஷாமிகா ரவி, EAC-PM அமைப்பின் உறுப்பினர்.


Original Link : Why women’s reservation cannot wait any longer 


Share:

தக்க தோல்வி : அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, 2026 முறியடிக்கப்பட்டது குறித்து . . .

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்ட அணுகுமுறை தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன.


ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டபடியே, அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, 2026-ஆனது, ஒரு அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறியது. மொத்தம் 298 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில், மசோதா நிறைவேற 352 வாக்குகளே தேவைப்பட்டன. இது அவையில்  வந்திருந்த வாக்களித்த 528 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்காகும். இதைத் தொடர்ந்து, துணை மசோதாக்களான 'தொகுதி மறுவரையறை மசோதா' (Delimitation Bill) மற்றும் 'யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா' (Union Territories Laws (Amendment) Bill) ஆகியவற்றைத் தனித்தனியாகப் பார்க்க இயலாது என்று கூறி, அவற்றை அரசு ஒத்திவைத்தது. விவாதத்திற்குப் பதிலளிக்கும்போது, ​​உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு வாய்மொழி உத்தரவாதத்தை அளித்தார். அதாவது, 816 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அவற்றின் தற்போதைய பங்கிற்குச் சமமான விகிதத்திலேயே அதிகரிக்கும் என்று அவர் கூறினார். மேலும், 50 சதவீத சீரான அதிகரிப்பை அதிகாரப்பூர்வத் திருத்தமாகச் சேர்த்து மசோதாவை மறுவரைவு செய்ய, அவையை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கவும் அவர் முன்வந்தார். எதிர்க்கட்சிகள் இதை நிராகரித்தன. அது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியது. விகிதாசார அதிகரிப்புதான் எப்போதும் நோக்கமாக இருந்ததென்றால், அது ஏன் மசோதாவில் இடம்பெறவில்லை? தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் வாசகங்கள், தொகுதி மறுவரையறையை மிகச் சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் (தற்போது 2011-ம் ஆண்டைய கணக்கெடுப்பு) அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. இது, இந்தி பேசும் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட தென், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவப் பங்கைக் குறைத்திருக்கும். 2026-27-ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இத்தகைய சர்ச்சைக்குரிய அரசியலமைப்புத் திருத்தத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற முயன்றது ஏன்? மேலும், அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தைப் பெற்றுள்ள 'பெண்களுக்கான இடஒதுக்கீடு' மசோதாவை, தொகுதி மறுவரையறை விவகாரத்துடன் இந்த முறையில் இணைக்கவேண்டிய அவசியமே இல்லை. எதிர்க்கட்சிகளைக் குழப்பிப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் கையாளப்பட்ட இந்த விசித்திரமான, கண்துடைப்பு நாடக அணுகுமுறை, நாடாளுமன்ற நடைமுறையையே கேலிக்கூத்தாக்கியது.


இந்தத் திட்டமிட்ட நகர்வுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஒன்றுபட்டு வாக்களித்தது பாராட்டுக்குரியது. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திமுக போன்ற கட்சிகள் தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளைக் கடந்து, அவையில் ஒருங்கிணைப்பை உறுதிசெய்தன. இதற்கு மாறாக, மசோதாவின் வாசகத்தில் முரண்பாடான சொற்கள் இருந்தபோதிலும், உள்துறை அமைச்சரின் வாய்மொழி உறுதிமொழிகளின் அடிப்படையில் மசோதாவிற்கு ஆதரவாகப் பேசிய தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதிமுகவின் அறியாமையைக் கவனிக்க வேண்டும். மசோதாவின் நிபந்தனைகளின்படியே ஆந்திரப் பிரதேசம் ஐந்து இடங்களையும், தமிழ்நாடு 11 இடங்களையும் இழக்க நேரிட்டபோதும், இக்கட்சிகள் அவ்வாறு பேசின. இந்தத் தோல்வி அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும். அது இப்போது அரசியலமைப்புச் சட்டப்படி கட்டாயமாக்கப்பட்ட வழிமுறையின் மூலம் மகளிர் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும். முதலில், அது 2026-27 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நிறைவு செய்து, தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவை விரிவாக்கம் ஆகியவற்றை உண்மையான ஒருமித்த கருத்திற்காக நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும். பரந்த உடன்பாடு இல்லாமல் தொலைநோக்குக் கட்டமைப்பு மாற்றங்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்ற வரம்பு துல்லியமாக உள்ளது. மேலும் அந்தப் பாதுகாப்பு இன்று நிலைநிறுத்தப்பட்டது.


Original Link: Deservedly dead: On the defeat of the Constitution (131st Amendment) Bill, 2026


Share:

சட்ட அமைப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட மந்தநிலை -சஷி தரூர்

ஒரு சாதாரண மனிதருக்கு, சட்டரீதியான செயல்முறை என்பது, தீர்வுக்கான தெளிவான எல்லையின்றி நேரமும், பணமும் காணாமல் போகும் ஒரு கருந்துளை போலத் தோன்றுகிறது.


நமது சட்ட அமைப்பின் சிக்கலான பாதைகளில் பல ஆண்டுகளாகப் பயணித்து வரும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, நீதிமன்றம் என்பது பெரும்பாலும் நம்பிக்கை குறைந்துவரும் ஓர் இடமாகவே உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து, வழக்குப் பட்டியல்களில் வெளிப்படையான வேகத்துடன் முன்னேறும்போது, சராசரி குடிமகனோ, தலைமுறைகள் வரை நீடிக்கக்கூடிய ஒத்திவைப்புகள் மற்றும் நடைமுறைத் தடைகளின் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறார். "நீதி தாமதமானால், அது மறுக்கப்பட்டதற்குச் சமம்" என்ற சொற்றொடர் இனி வெறும் எச்சரிக்கை அல்ல, மாறாக அதுவே ஒரு வழக்கமான செயல்பாட்டு நடைமுறையாகிவிட்ட ஒரு நிலையை நாம் அடைந்துவிட்டோம்.


இப்போது, ​​கவனம் மாறவேண்டும். அது, தீர்ப்பை வழங்கும் நீதிபதியிடமிருந்து கவனத்தை விலக்கி, குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மக்கள் பக்கம் திருப்ப வேண்டிய நேரம் இது. இந்தியாவில் நீதித்துறை சீர்திருத்தத்தின் அவசரம் என்பது வழக்கறிஞர்களுக்கான ஒரு தொழில்முறை அக்கறையோ அல்லது கல்வியாளர்களுக்கான ஒரு கோட்பாட்டுப் பயிற்சியோ அல்ல, இது ஒரு அடிப்படை மனித உரிமையின் நெருக்கடியாகும். இது அரசு தனது நியாய வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதை முழுமையாக மறுபரிசீலனை செய்யக் கோருகிறது.


வேதனை தரும் காத்திருப்பு


சாதாரண மக்களின் முக்கியப் புகார், நிலுவையில் உள்ள வழக்குகளின் பெரும் சுமையாகும். இந்தச் சுமைதாங்க முடியாததாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. தற்போது ஐந்து கோடிக்கும் அதிகமான வழக்குகள் நமது நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக, இந்த அமைப்பு தனக்குத்தானே எதிராகச் செயல்படுகிறது. ஒரு சாமானிய மனிதனுக்கு, சட்ட செயல்முறை என்பது, தீர்வுக்கான தெளிவான எல்லையின்றி நேரமும் பணமும் காணாமல் போகும் ஒரு கருந்துளை போலத் தோன்றுகிறது. இந்த நிலுவை, சட்டத்தை மீறுபவர்களுக்குத் தைரியமூட்டுகிறது மற்றும் சட்டத்தை மதிப்பவர்களைச் சோர்வடையச் செய்கிறது. ஒரு நிலத்தகராறு தீர்க்கப்பட 20 ஆண்டுகள் ஆகும் போது, சொத்தின் மதிப்பைவிட சட்டக் கட்டணங்களுக்காக அதிகமாகச் செலவழித்த வெற்றியாளர், அந்த வெற்றியை பெரும்பாலும் வெற்று வெற்றியாகவே காண்கிறார்.


இந்திய சட்ட அமைப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட மந்தநிலை, நீதிக்கான தேடலை ஒரு சகிப்புத்தன்மைச் சோதனையாக மாற்றியுள்ளது. இது "செயல்முறையே தண்டனை" என்ற கடுமையான கருத்துக்கு வழிவகுக்கிறது. பல தேவையற்ற நடைமுறைத் தடைகளும், அடிக்கடி மற்றும் பெரும்பாலும் அர்த்தமற்ற முறையில் வழக்குகளை ஒத்திவைக்கும் கலாச்சாரமும், ஒரு தீர்ப்பு எட்டப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை திறம்படப் பறித்து, வழக்குகளைப் பல பத்தாண்டுகளுக்குத் தேக்கநிலையில் வைத்திருக்கும் ஒரு நிலையை உருவாக்குகின்றன. இந்த அமைப்புரீதியான தோல்வியானது, கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தனிநபர்கள் இறுதியில் விடுவிக்கப்பட்டு, இழப்பீடு ஏதுமின்றி தங்கள் வாழ்க்கை சிதைந்து, வாழ்வின் பொன்னான ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கக்கூடும்.


சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) போன்ற கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள், விசாரணையின்றியும் பிணை கிடைப்பதற்கான வாய்ப்பின்றியும் நெரிசல் மிகுந்த சிறைகளில் சிக்கித் தவிப்பது குறிப்பாக மனசாட்சியற்ற செயலாகும். ஏனெனில், மேலோட்டமான ஆதாரங்களின் அளவுகோல், சிறைவாசத்தை விதிவிலக்காக அல்லாமல் விதியாகவே ஆக்கிவிடுகிறது. சுதந்திரம் குறித்த அரசியலமைப்பு வாக்குறுதியை நிலைநிறுத்த, நீதித்துறை விரைவாகத் தெளிவான, கட்டாய வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். அந்த வழிகாட்டுதல்கள், அரசு ஒரு அர்த்தமுள்ள விசாரணையைத் தொடங்க வேண்டும் அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்கவேண்டும் என்ற உறுதியான காலக்கெடு ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் நிர்ணயிக்க வேண்டும்.


இந்த மாற்றத்திற்கு 21-ம் நூற்றாண்டை முழுமையாகத் தழுவுவது அவசியமாகிறது. நீண்டகாலமாக, நமது நீதிமன்றங்கள் காலனித்துவ காலத்தில் உறைந்து போனது போல இயங்கி வருகின்றன. மலை போன்ற காகிதக் கோப்புகளையும், விசாரணைக்கான புதிய தேதியைக் கேட்பதற்காகவே நூற்றுக்கணக்கான மைல்கள் பயணிக்க வேண்டிய வழக்காடுகளின் நேரடி வருகையையும் அவை சார்ந்திருந்தன. நாம் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும், பொருட்களை வாங்கும், மற்றும் தொடர்பு கொள்ளும் முறைகளை மாற்றியமைத்துள்ள டிஜிட்டல் புரட்சி, இப்போது நீதித்துறையையும் வெல்ல வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு சார்ந்த வழக்கு மேலாண்மை ஆகியவை ஆடம்பரப் பொருட்கள் அல்ல, மாறாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கலைப்பதற்கு அவசியமான கருவிகளாகும். வழக்கமான நிர்வாகத் தாக்கல் பணிகளை செயற்கை நுண்ணறிவு கையாள்வது, தாமதங்களைக் கண்டறிவது, மற்றும் சட்ட ஆராய்ச்சியில்கூட உதவுவது போன்ற ஒரு அமைப்பை கற்பனை செய்து பாருங்கள். இது, நீதிபதிகள் தங்கள் மன ஆற்றலை வழக்கின் மிக முக்கியமான பகுதிகளில் முழுமையாகச் செலுத்த வழிவகுக்கும்.



அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய தன்மைக்கான தேவை


இருப்பினும், ஒரு விரைவு நீதிமன்றம் என்பது தீர்வின் ஒரு பகுதி மட்டுமே. மேலும் நமக்கு அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நீதிமன்றமும் தேவைப்படுகிறது. சட்டத்தின் மீதான குடிமக்களின் நம்பிக்கை, அதை விளக்கும் நபர்களில் தங்களைப் பிரதிபலிப்பதாக அவர்கள் காண்கிறார்களா என்பதோடு வலுவாகப் பிணைக்கப்பட்டுள்ளது. நீதித்துறை ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட “பழைய சிறுவர்களின் கூடாரம்” (old boys’ club) என்று நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அங்கு, பெண்களுக்கும் விளிம்புநிலை சமூகங்களுக்கும் உள்ள கண்ணுக்குத் தெரியாத தடையானது அப்படியே நீடிக்கிறது. மேலும், பல நீதிபதிகள் முந்தைய தலைமுறை நீதிபதிகளின் உறவினர்களாகவே உள்ளனர். உண்மையான சீர்திருத்தம் என்பது, இந்தத் தடைகளை உடைத்து, நீதித்துறையானது இந்தியாவின் பரந்த மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்வதாகும். இது அடையாள அரசியல் பற்றியது அல்ல, இது நீதித்துறையின் தரம் பற்றியது. ஒரு பன்முக மக்கள்தொகையின் வாழ்வியல் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளும் ஒரு நீதித்துறையால், நுணுக்கமான மற்றும் அனுதாபமான தீர்ப்புகளை வழங்க முடியும். ஒரு பெண்ணோ அல்லது வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரோ தீர்ப்பு வழங்க அமரும்போது, அவர் சட்டத்தை வளப்படுத்தும் ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டு வருகிறார். மேலும், அது இந்திய சமூகத்தின் நுணுக்கங்களுக்கு ஏற்ப சட்டத்தை மேலும் பதிலளிக்கக்கூடியதாக மாற்றுகிறது.


நீதிமன்றத்தின் அமைப்புக்கு அப்பால், செலவு செய்ய முடியாத தன்மை என்ற பெரும் சிக்கலும் உள்ளது. அதன் தற்போதைய வடிவத்தில், நீதி என்பது ஒரு ஆடம்பரப் பொருளாக உள்ளது. திறமையான வழக்கறிஞரை நியமிப்பதற்கான செலவும், நீண்டகால வழக்குகளின் இதர செலவுகளும், மக்களின் கணிசமான பகுதியினரை திறம்பட விலக்கிவிடுகின்றன. இந்தியா தனது சட்ட உதவி அமைப்பை முழுமையாக சீர்திருத்தி, பணக்காரர்களுக்குக் கிடைக்கும் பிரதிநிதித்துவத்திற்கு இணையான தரத்தை ஏழைகளுக்கும் வழங்கும் ஒரு உயர்தர நிறுவனமாக அதை மாற்ற வேண்டும். அரசால் உணவையும் கல்வியையும் வழங்க முடியுமானால், ஒரு குடிமகன் தனது வாழ்வையும் சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளையும் அது வழங்க வேண்டும்.


மேலும், நமது உச்சநீதிமன்றங்கள் புவியியல்ரீதியாக மையப்படுத்தப்பட்டிருப்பது கடந்த காலத்தின் ஒரு எச்சமாகவே உள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு மனுதாரர் இறுதி மேல்முறையீட்டிற்காக தலைநகருக்குப் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு தேவையற்ற சுமையாகும். பிராந்திய அமர்வுகள் அல்லது உச்சநீதிமன்றத்திற்கான மேலும் வலுவான காணொளிக் காட்சி விசாரணை முறை, மிக உயர்ந்த மட்டத்திலான நீதியை ஒரு தொலைதூரக் கனவாக இல்லாமல் உள்ளூர் யதார்த்தமாக மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கும்.


இந்த நடைமுறை மாற்றங்களுக்கு அடிப்படை சீர்திருத்தத்தின் நம்பிக்கை உள்ளது. அரசியலமைப்பு நெறிமுறைகளையும் நீதித்துறை சுதந்திரத்தையும் பாதுகாத்தல், மக்களுக்கு அச்சமற்ற நடுவராகச் செயல்படும், அதிகாரத்தில் இருப்பவர்களைத் தயக்கமின்றிப் பொறுப்பேற்கச் செய்யும் ஒரு நீதித்துறை தேவை. இந்தச் சுதந்திரமே ஒரு செயல்படும் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். இருப்பினும், சுதந்திரத்தைப் பொறுப்புணர்வு பற்றாக்குறையுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. முக்கிய வழக்குகளை நேரலையில் ஒளிபரப்புதல் மற்றும் நீதித்துறை நியமனங்களுக்கான தெளிவான அளவுகோல்கள் போன்றவற்றின் மூலம் இந்தச் செயல்முறையைத் திறப்பதன் மூலம், நீதிமன்றம் மக்களுடன் தனக்கிருக்கும் 'சமூக ஒப்பந்தத்தை' மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.


ஒரு அமைப்புரீதியான முழுமையான சீரமைப்பு


நாடு, நீதித்துறை சீர்திருத்தத்தை சிறிய, படிப்படியான மாற்றங்களின் தொடராகக் கருதுவதை நிறுத்தி, அதை ஒரு தேசிய அவசரநிலையாகக் கருதத் தொடங்க வேண்டும். தற்போதைய நிலைமை, ஒவ்வொரு நாளும் சட்டத்தின் ஆட்சியை சுரண்டிக்கொண்டிருக்கும் ஒரு மெதுவான பேரழிவாகும். மக்கள் பிரம்மாண்டமான பேச்சுகளையோ அல்லது சடங்குரீதியான வாக்குறுதிகளையோ எதிர்பார்க்கவில்லை, அவர்கள் செயல்படக்கூடிய, வேகமான மற்றும் நியாயமான ஒரு அமைப்பையே எதிர்பார்க்கிறார்கள். ஒவ்வொரு சட்டரீதியான கருத்து வேறுபாட்டையும் ஒரு மரணப் போராட்டமாகக் கருதும் பகைமை மனப்பான்மை கொண்ட கலாச்சாரத்திலிருந்து விலகி, தீர்வு காணும் கலாச்சாரத்தை நோக்கி நாம் நகர வேண்டும். சட்டப் புத்தகத்தில் தேர்ச்சி பெறுவது போலவே கணினித் திரையிலும் தேர்ச்சி பெற்ற நீதிபதிகளும், கட்டணத்தை நீட்டிப்பதைவிட ஒரு வழக்கை முடித்து வைப்பதை மதிக்கும் ஒரு சட்டத் தொழிலும் நமக்குத் தேவை.


‘வளர்ந்த இந்தியா’ 2047-ஐ நோக்கி நாம் நகரும்போது, ஒரு தேசமாக நமது வெற்றியின் அளவுகோல் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது நமது தொழில்நுட்பத் திறமை மட்டுமல்ல, நமது நீதிமன்றங்களில் நீதியை நாடும் நபரை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதுதான். நாம் சீர்திருத்தம் செய்யத் தவறினால், சட்டம் என்பது பலவீனர்களுக்கான கேடயமாக இல்லாமல், வலிமை வாய்ந்தவர்களின் கருவியாக மட்டுமே பார்க்கப்படும் ஒரு எதிர்காலத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும்.


ஆனால் நாம் வெற்றி பெற்றால், நீதியின் தராசு இறுதியாக சமநிலைப்படுத்தப்படும் ஒரு அமைப்பை நம்மால் உருவாக்க முடியும். அதன்மூலம், ஒரே நாளில் கிடைத்திருக்க வேண்டிய ஒரு உண்மைக்காக, எந்தவொரு இந்தியரும் மீண்டும் ஒருபோதும் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிசெய்யலாம். விவாதிப்பதற்கான காலம் கடந்துவிட்டது, குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு மாற்றத்திற்கான நேரம் இதுவே.


சசி தரூர், திருவனந்தபுரம் (மக்களவை) தொகுதியின் நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) ஆவார். இவர், சமீபத்தில் வெளியான ‘இந்து மதத்தை மறுவரையறை செய்த ஞானி: ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கை, பாடங்கள் மற்றும் மரபு’ உட்பட 28 புத்தகங்களை எழுதிய, விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவர் ஆவார்.


Oiginal link:

The institutionalised sluggishness of the legal system 


Share:

இந்தியாவின் கிராமப்புற மாதிரிகளானவை வளர்ச்சி சார்ந்த இராஜதந்திரத்தை வடிவமைக்கின்றன. - வேதா வைத்தியநாதன்

 சமீப ஆண்டுகளில், ஆப்பிரிக்க அரசாங்கங்கள் பலவும், இந்திய சுய உதவிக் குழு (Self-Help Group (SHG)) அடிப்படையிலான வாழ்வாதாரக் கட்டமைப்பை ஆராயத் தொடங்கியுள்ளன.


2011-ம் ஆண்டில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்தியா 'தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம்' (National Rural Livelihood Mission (NRLM)) என்ற திட்டத்தைத் தொடங்கியபோது, ​​ஒரு லட்சிய நோக்கத்துடன் அதை முன்னெடுத்தது. அதாவது, கிராமப்புறக் குடும்பங்கள் சுயதொழில், நிதிசார் உள்ளடக்கம் மற்றும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகளையும் நிலையான வாழ்வாதாரங்களையும் பெறுவதற்கு உதவுவதன் வாயிலாக, பன்முகத்தன்மை கொண்ட வறுமையை ஒழிப்பதே இதன் நோக்கமாகும்.


தற்போது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்திட்டத்தின் தீவிரம், நிலைத்தன்மை மற்றும் விளைவுகள் ஆகியவை, இதைத் தொடக்கத்தில் முன்னெடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் விடவும் வெகுவாக வளர்ந்துள்ளது. சுயஉதவிக்குழுக்களில் (SHGs) உறுப்பினர்களாக உள்ள 2 கோடிக்கும் அதிகமான பெண்கள், தலா ₹1,00,000-க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். மேலும், 60 சதவீதத்திற்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளில் பெண் வங்கித் தொடர்பாளர்கள் (banking correspondents) சேவையாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி, 5 கோடிக்கும் அதிகமான பெண்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுள்ளனர். இது 2018-ம் ஆண்டிலிருந்து பெண் தொழிலாளர் பங்கேற்பை கணிசமாக உயர்த்தியுள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) திட்டமானது இந்தியாவின் எல்லைகளைக் கடந்து, 'உலகளாவிய தெற்கு' (Global South) நாடுகளிலும், குறிப்பாக ஆப்பிரிக்காவிலும் கிராமப்புற வாழ்வாதார முயற்சிகளுக்கு வழிகாட்டியாக வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சி சார்ந்த இராஜதந்திரத்தை இது நுட்பமான முறையில் வடிவமைத்து வருகிறது.


இந்தியாவின் அமைதியான மாற்றம்


தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) சாதனைகளின் தீவிரம் பிரமிக்க வைப்பதாக உள்ளது. 2025-ம் ஆண்டின் நடுப்பகுதி நிலவரப்படி, இத்திட்டம் 742 மாவட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறதுடன், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களைச் சென்றடைந்துள்ளது, 90 லட்சத்திற்கும் அதிகமான சுயஉதவிக்குழுக்களை ஒருங்கிணைத்துள்ளது, ₹51,368 கோடி அளவிலான மூலதன உதவியை வழங்கியுள்ளது. மேலும், ₹12 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இத்தகைய விரிவாக்கம், இத்திட்டத்தின் வீச்சிலும் சரி, பெண்களை மையமாகக் கொண்ட அதன் அணுகுமுறையிலும் சரி, இதுவரையில்லாத ஒரு விரிவான வளர்ச்சியை இது எட்டியுள்ளது. 2026-27-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ₹19,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம், இத்திட்டத்தின் வளர்ச்சிப் பாதை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கிராமப்புற வறுமை ஒழிப்புக்கான இந்தியாவின் முதன்மைத் திட்டமாக தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தை (NRLM) மற்ற திட்டங்களிலிருந்து தனித்துக்காட்டுவது அதன் பரந்து விரிந்த செயல்பாடுகள் மட்டுமல்ல, அது உருவாக்கியுள்ள சூழலமைப்பும் (ecosystem) ஒரு முக்கிய காரணம் ஆகும். இது கிராமம், தொகுப்பு மற்றும் வட்டார அளவுகளில் ஒருங்கிணைந்த சமூக நிறுவனங்களை இது உருவாக்கியுள்ளது. கடைக்கோடி மக்களுக்குச் சேவைகளை நேரடியாகக் கொண்டு சேர்க்கும் சமூக அடிப்படையிலான பணியாளர் குழுக்களை இது அமைத்துள்ளது. மேலும், கிராமப்புறப் பெண்களை முறைசார்ந்த நிதி அமைப்புகளுடன் முழுமையாக இணைத்துள்ளது. சமூக ஒருங்கிணைப்பு, நிறுவனக் கட்டமைப்பு, கடன் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உலகளாவிய வளர்ச்சி நடைமுறைகளில் இத்திட்டத்தை ஒரு தனித்துவமான மற்றும் நீடித்த முன்னெடுப்பாக மாற்றியுள்ளது.




எல்லைகளுக்கு அப்பால்


வளர்ச்சித் துறையில் ஏற்படும் புதுமைகள், உள்ளூர் அரசியல் பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புகள் மற்றும் அரசின் திறன்களால் வடிவமைக்கப்படுவதால், அவை அரிதாகவே எல்லைகளை எளிதில் கடந்து செல்கின்றன. இருப்பினும், தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) வடிவமைப்பு வழக்கத்திற்கு மாறாக எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாகத் தோன்றுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பெருகிவரும் எண்ணிக்கையிலான ஆப்பிரிக்க அரசாங்கங்கள், இந்திய சுய உதவிக் குழு அடிப்படையிலான வாழ்வாதாரக் கட்டமைப்பை ஆராயத் தொடங்கியுள்ளன. எத்தியோப்பியா, தான்சானியா, மலாவி, கென்யா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்கள் இந்தியாவிற்கு விரிவான ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டுள்ளன. அவை தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) விளைவுகளை மட்டுமல்லாமல், அது செயல்படுவதற்கான செயல்பாட்டு வழிமுறைகளையும் ஆய்வு செய்தன. இந்தியா எவ்வாறு சுய உதவிக் குழுக்களைப் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வரை விரிவுபடுத்தியது, வங்கிகளுடனான கடன் இணைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன, சமூகங்கள் எவ்வாறு கூட்டமைப்புகளாகத் திரட்டப்பட்டன, பயிற்சி பெற்ற பணியாளர்கள் எவ்வாறு பெருமளவில் பணியமர்த்தப்பட்டனர் மற்றும் பொறுப்புணர்வும் நிதி ஒழுக்கமும் இந்த அமைப்பில் எவ்வாறு நிலைநிறுத்தப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் முயன்றனர். இந்த ஆர்வத்தின் எழுச்சி, உலகளாவிய தெற்கு நாடுகள் வளர்ச்சி சிந்தனையில் ஒரு பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த நாடுகள் இனி மேற்கத்திய மாதிரிகளை மட்டும் சார்ந்திருக்கவில்லை. மாறாக, அவை ஒன்றுக்கொன்று கற்றுக்கொள்கின்றன. அவை தங்களின் சொந்தச் சூழல்களுக்கும் உள்ளூர் யதார்த்தங்களுக்கும் பொருந்தக்கூடிய தீர்வுகளில் கவனம் செலுத்துகின்றன.


ஆப்பிரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல காரணங்களுக்காக தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தால் (NRLM) ஈர்க்கப்படுகிறார்கள். முதலாவதாக, பெண்களின் கூட்டு அதிகாரமளித்தல் (women’s collective empowerment) மீதான அதன் கவனம், ஆப்பிரிக்கா முழுவதும் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளுடன் வலுவாக ஒத்துப்போகிறது. ஒன்றுதிரட்டப்பட்ட சேமிப்புகள், பல கற்றல் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான கடன் ஒழுக்கம் ஆகியவற்றின்மீது கட்டமைக்கப்பட்ட சுய உதவிக் குழு மாதிரியானது, பெண்களின் அமைப்புகளை வலுப்படுத்த ஒரு கட்டமைக்கப்பட்ட அதே சமயம் தளர்வான வழியை வழங்குகிறது. இரண்டாவதாக, தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (NRLM) கட்டமைப்பு செலவு குறைந்ததாகும், இது பெரும் மூலதன முதலீட்டைச் சார்ந்திருக்காமல், சமூகம் சார்ந்த செயல்முறைகள் மற்றும் பணியாளர் அமைப்புகளை நம்பியுள்ளது. இது, வளப் பற்றாக்குறை உள்ள அரசாங்கங்கள்கூட இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அனுமதிக்கிறது. மூன்றாவதாக, வாழ்வாதாரப் பன்முகப்படுத்தலும் குறுந்தொழில் உருவாக்கமும் மிக முக்கியமானதாக இருக்கும் ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள பெரிய முறைசாரா பொருளாதாரங்களின் யதார்த்தங்களுடன் இந்த மாதிரி நன்கு ஒத்துப்போகிறது. இறுதியாக, இந்த மாதிரி வெறும் ஒரு திட்டமாக இல்லாமல், ஒரு நிறுவனத்தை உருவாக்கும் அணுகுமுறையாக இருப்பதால் இந்த நாடுகளை ஈர்க்கிறது. இது உள்ளூர் நிர்வாகத்தை வலுப்படுத்துகிறது, பொறுப்புடைமையை மேம்படுத்துகிறது மற்றும் நீண்டகால சமூகத் திறனை உருவாக்குகிறது.


இந்தியாவின் வளர்ந்துவரும் வளர்ச்சி ராஜதந்திரம்


இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பு, வரலாற்றுரீதியாக திறன் மேம்பாடு, சலுகை நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) பரவலானது ஒரு தெளிவான பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்தியா இப்போது தனது சொந்த வளர்ச்சி அனுபவத்தில் வேரூன்றிய சமூகத் துறை நிறுவனங்களை ஏற்றுமதி செய்கிறது. இத்தகைய நிறுவன மாதிரிகள், அதிகார அமைப்புகள், செயல்படுத்தும் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையே நீடித்த இணைப்புகளை உருவாக்கி, சர்வதேச ஈடுபாட்டிற்கு ஒரு தனித்துவமான வழியை வழங்குகின்றன. டிஜிட்டல் ஆளுகை, வேளாண்மை மற்றும் நிதிக் கட்டமைப்பு ஒத்துழைப்பில் செல்வாக்கு செலுத்துகின்றன. வளங்களை மட்டும் பகிராமல், அறிவையும் நிறுவன நடைமுறைகளையும் பரப்புவதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டுப் புத்தாக்கங்கள் எவ்வாறு தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை வடிவமைக்கின்றன என்பதை தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) ஒரு உதாரணத்தை விளக்குகிறது. இந்த உத்வேகத்தை மேலும் வலுப்படுத்த, மாநில வாழ்வாதாரத் திட்டங்கள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஆப்பிரிக்க அரசாங்கங்களை இணைக்கும் ஒரு பிரத்யேக கிராமப்புற வாழ்வாதார அறிவுப் பரிமாற்றத் தளம் மூலம், இந்தியா தனது கிராமப்புற வாழ்வாதார அறிவைப் பகிர்வதை நிறுவனமயமாக்கலாம். இது விரிவாக்கப்பட்ட பயிற்சி, நீண்டகால ஆய்வு உதவித்தொகைகள், களப்பயணங்கள் மற்றும் கூட்டு முன்னோடித் திட்டங்கள் ஆகியவை சுய உதவிக் குழு அடிப்படையிலான முயற்சிகளை உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க உதவும்.


தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) என்பது இனி இந்தியாவின் கிராமப்புற மாற்றத்திற்கான கதை மட்டுமல்ல. ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்து அதிகரித்துவரும் ஆர்வம், இந்தியா தனது எல்லைகளுக்கு அப்பால் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் தீர்வுகளை உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இந்தியா உலகளாவிய வளர்ச்சிக்கான ஒரு புதிய முன்மாதிரியை வடிவமைக்கிறது.


வேதா வைத்தியநாதன், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின் ஆய்வாளர்.


Original link:


Share: