இந்தியா அனைவரையும் உள்ளடக்கிய பதிவு முறையை நோக்கி நகரும் நிலையில், இனி பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல், இன்னும் போதிய அளவில் பதிவுகள் செய்யப்படாமல் விடுபட்டிருக்கக்கூடிய மக்கள் பிரிவினரைக் கண்டறிந்து அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
2026-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி, இந்திய அரசு 2024-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பதிவு அமைப்பு (Civil Registration System (CRS)) அறிக்கையை வெளியிட்டது. இது, நாட்டில் பிறப்புகள், இறப்புகள் மற்றும் கருவில் இறந்த குழந்தை பிறப்புகள் (Stillbirths) ஆகியவற்றைப் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அளவிடுவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகும். குடிமைப் பதிவு (Civil Registration) என்பது பிறப்பு, இறப்பு போன்ற, முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளை தொடர்ந்து, நிரந்தரமாக மற்றும் கட்டாயமாகப் பதிவு செய்யும் ஒரு முக்கிய செயல்முறையாகும். ஐக்கிய நாடுகள் (United Nations (UN)) வகுத்துள்ள கட்டமைப்பில் பிறப்புகள், இறப்புகள், கருவில் இறந்த பிறப்புகள் (Foetal deaths), திருமணங்கள், விவாகரத்துகள் மற்றும் தத்தெடுப்புகள் ஆகியவை இடம்பெறுகின்றன. ஆனால், இந்தியாவின் சட்டக் கட்டமைப்பு இதைவிடக் குறுகியதாக உள்ளது. 1969-ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம் (Registration of Births and Deaths Act) பிறப்புகள், இறப்புகள் மற்றும் இறந்த குழந்தை பிறப்புகளை (Stillbirths) மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அதேநேரத்தில், திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் தனித்தனி சட்டங்களின்கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம் (Registration of Births and Deaths Act)
இந்தியாவின் குடிமக்கள் பதிவு முறையானது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட 1886-ஆம் ஆண்டின் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சட்டத்தில் இருந்து உருவானது. இருப்பினும், 1969-ஆம் ஆண்டின் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சட்டம் ((Registration of Births and Deaths (RBD Act)), பிறப்பு மற்றும் இறப்புகளைக் கட்டாயமாகப் பதிவு செய்வதற்கான ஒரு சீரான தேசியக் கட்டமைப்பு கொண்டுவரப்படும் வரை இந்த முறை ஒழுங்கற்றதாகவே இருந்தது. இந்தச் சட்டம் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் உள்ளூர் பதிவாளர்களையும் தலைமைப் பதிவாளர்களையும் நியமித்ததுடன், ஆண்டுதோறும் புள்ளிவிவர அறிக்கைகளை வெளியிடுவதையும் கட்டாயமாக்கியது. இது 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்துடனும் (Citizenship Act) இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அங்குள்ள இந்தியக் குடிமக்களின் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்கின்றன.
2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான சீர்திருத்தமாகும். இந்தத் திருத்தத்தின் மூலம் டிஜிட்டல் பதிவு முறை, மின்னணு பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான தரவுத்தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ், தற்போது பல்வேறு அரசு சேவைகளுக்காக பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்திற்கான ஒரே அதிகாரப்பூர்வச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும், இந்தத் திருத்தம் தாமதமான பதிவுகளை எளிதாக்கியுள்ளது, ஆதரவற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளது, மருத்துவமனைகள் இறப்பிற்கான காரணத்தைக் குறிப்பிடும் சான்றிதழ்களை வழங்குவதைக் கட்டாயமாக்கியுள்ளது, மற்றும் பேரிடர்கள் அல்லது தொற்றுநோய் காலங்களில் சிறப்புத் துணைப் பதிவாளர்களை நியமிக்கவும் வழிவகை செய்துள்ளது.
2024-ஆம் ஆண்டின் தரவுகள் எதை காட்டுகிறது?
2024-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பதிவு அமைப்பு (CRS) அறிக்கையின்படி, 2.54 கோடி பிறப்புகளும், 89.4 லட்சம் இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிறப்புப் பதிவு முழுமையாக 99.1% என்றும், இறப்புப் பதிவு முழுமை 99.4% என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைகள், அனைவரின் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவை (Universal Civil Registration) உறுதி செய்யும் இலக்கை நோக்கி இந்தியா முன்னேற்றம் அடைந்திருப்பதை காட்டுகிறது. இருப்பினும், இந்த சதவீதங்களை சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும். இவை பதிவு செய்யப்படாமல் விடுபட்ட நிகழ்வுகளின் நேரடி எண்ணிக்கை அல்ல. மாறாக, பதிவுசெய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளை மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System (SRS)) மூலம் கணிக்கப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பெறப்பட்ட தோராயமான மதிப்பீடுகள் ஆகும். எனவே, 99.4% இறப்புப் பதிவு என்பது, நாட்டில் நிகழ்ந்த ஒவ்வொரு இறப்பும் தனித்தனியாக சரிபார்க்கப்பட்டது என்று அர்த்தமல்ல; மாறாக, மக்கள்தொகையியல் மதிப்பீடுகளின்படி எதிர்பார்க்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையோடு, பதிவு செய்யப்பட்ட இறப்பு எண்ணிக்கை மிக நெருக்கமாக பொருந்துகிறது என்பதையே குறிக்கிறது.
பதிவு விகிதம் பின்வருமாறு கணக்கிடப்படுகிறது: பதிவுசெய்யப்பட்ட இறப்புகள் / கணக்கிடப்பட்ட இறப்புகள்) * 100.
பாலினம், புவியியல்ரீதியான இடைவெளிகள்
இறப்புப் பதிவில் தொடர்ந்து நிலவும் பாலின வேறுபாடு ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும். 2024-ஆம் ஆண்டில், பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் 60.4% ஆண்கள் மற்றும் 39.6% பெண்கள் ஆவர். இந்த வேறுபாட்டின் ஒரு பகுதி, வயது அமைப்பு, தொழில் சார்ந்த அபாயங்கள் மற்றும் நோய்ப் பரவல் முறைகள் போன்ற உயிரியல், மக்கள்தொகை மற்றும் நோய்ப்பரவல் காரணிகளை காட்டுவதிலும், இது ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது. வயதான பெண்கள், விதவைகள், வீட்டில் இறக்கும் பெண்கள் மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் இறப்புகள், ஆண்களின் இறப்புகளைப் போலவே முழுமையாக பதிவு செய்யப்படுகின்றனவா? வயது மற்றும் பாலினம் சார்ந்த பகுப்பாய்வுகள் இல்லாமல், இதற்கான பதில் தெளிவற்றதாகவே உள்ளது. இந்தியா அனைவரின் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவை (Universal Registration) முழுமையாக எட்டும் நிலையை நோக்கி முன்னேறி வரும் நிலையில், இனி மொத்தப் பதிவு மீது முழுமையாக கவனம் செலுத்தாமல், இன்னும் போதுமான அளவில் பதிவாகாமல் இருக்கும் மக்கள்குழுக்களை அடையாளம் கண்டு அவர்கள்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு இறப்புச் சான்றிதழ் என்பது வெறும் சட்ட ஆவணம் மட்டுமல்ல. அது சுகாதார புள்ளிவிவரங்கள், நிதிஒதுக்கீடு மற்றும் கொள்கை முடிவுகளை வடிவமைக்கும் ஒரு முக்கிய பொது சுகாதாரப் பதிவேடும் ஆகும்.
இந்த அறிக்கை, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான ஒரு முக்கியமான இடைவெளியையும் காட்டுகிறது. பதிவு அலகுகளில் 96.6% கிராமப்புறங்களில் அமைந்திருந்தாலும், 57.1% பிறப்புகள் நகர்ப்புறங்களில் பதிவு செய்யப்படுகின்றன. பிரசவங்கள் பெரும்பாலும் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளிலேயே நடப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். இதற்கு நேர்மாறாக, பதிவாகும் இறப்புகளில் 57.2% கிராமப்புறங்களில்தான் நிகழ்கின்றன. கிராமப்புற மக்கள் பிரசவம் மற்றும் சிறப்புச் சிகிச்சைகளுக்காக நகர்ப்புற மருத்துவமனைகளை நாடுவதையும், அதேநேரத்தில் அவர்களின் இறுதி நாட்கள் மற்றும் இறப்புகள் பெரும்பாலும் தங்களது சொந்த கிராமங்களிலேயே நிகழ்வதையும் இந்தப் பதிவு காட்டுகிறது. எனவே, சமத்துவமான ஒரு பதிவு முறையை உருவாக்க, உள்ளூர் சமூகம் சார்ந்த பதிவுகளை வலுப்படுத்துவதும், கிராமப்புறங்களில் இதற்கான எளிதான அணுகலை மேம்படுத்துவதும் இன்றியமையாததாகும்.
இதற்கிடையில், பாங்காக்கில் (Bangkok) கூடிய ஆசிய பசிபிக் நாடுகள், தங்கள் பகுதியில் நிகழும் ஒவ்வொரு பிறப்பையும் இறப்பையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை ஏற்றுள்ளன.
இறப்பிற்கான காரணம்
இறப்பைப் பதிவு செய்வது முதல்படி மட்டுமே. ஆனால், அந்த நபர் ஏன் இறந்தார் என்பதை அறிந்துகொள்வதே பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுகிறது. இந்தியா இறப்புப் பதிவில் முக்கிய முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இறப்பு கண்காணிப்பு (Mortality Surveillance) இன்னும் இறப்பிற்கான காரணத்தை மருத்துவ ரீதியாகச் சான்றளிக்கும் முறை (Medical Certification of Cause of Death (MCCD)) எவ்வளவு முழுமையாகவும் தரமாகவும் செயல்படுகிறது என்பதையே சார்ந்துள்ளது.
2024-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பதிவு அமைப்பு (Civil Registration System (CRS)) அறிக்கையின்படி, பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் 24.8% மட்டுமே மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ளன. இதனால், இறப்பிற்கான காரணங்களைத் துல்லியமாகச் சான்றளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதன் விளைவாக, இதய மற்றும் இரத்தநாள நோய்கள், புற்றுநோய்கள், காசநோய், காயங்கள், மகப்பேறு இறப்புகள், வெப்பம் தொடர்பான நோய்கள் மற்றும் புதிதாகத் தோன்றும் தொற்றுநோய்கள் போன்றவற்றின் உண்மையான பாதிப்புகளைக் கண்டறியும் நாட்டின் திறனை இது பலவீனப்படுத்துகிறது. எனவே, அதிக அளவில் இறப்புப் பதிவு செய்யப்படுவதை, உயர்தரமான இறப்புத் தரவுகள் கிடைப்பதாகத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.
குடிமைப் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிவர அமைப்பை (Civil Registration and Vital Statistics System (CRVS)) வலுப்படுத்துவதற்கான அடுத்த கட்டமானது, மருத்துவரீதியாகச் சான்றளிக்கும் முறையின் வரம்பை விரிவுபடுத்துதல், மருத்துவர்களின் சான்றளிப்பு மற்றும் குறியீட்டு முறையை (coding) மேம்படுத்துதல் மற்றும் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு இறப்பும் கொள்கை மற்றும் திட்டமிடலுக்கான நம்பகமான இறப்புத் தரவுகளுக்குப் முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
இறந்து பிறக்கும் குழந்தைகளின் பதிவு
இறந்து பிறக்கும் குழந்தைகளின் பதிவை மேற்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். 2023-ஆம் ஆண்டில் 1,01,000-ஆக இருந்த பதிவுசெய்யப்பட்ட இறந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் 81,000-ஆகக் குறைந்துள்ளதாக 2024-ஆம் ஆண்டு குடிமைப் பதிவு அமைப்பின் (Civil Registration System (CRS)) அறிக்கை தெரிவிக்கிறது. இதில் 69% பதிவுகள் நகர்ப்புறங்களில் நிகழ்ந்துள்ளன. இந்த எண்ணிக்கை குறைவு மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் வெளிக்காட்டுகின்றன. இது கிராமப்புறங்களில் இன்னும் தொடரும் குறைவான பதிவு முறையையோ அல்லது முறையற்ற தகவல் அறிக்கை முறையையோ கூடக் காட்டலாம். ஒவ்வொரு கர்ப்ப இழப்பையும் முறையாக ஆவணப்படுத்துவதற்கும், பிரசவக் காலக் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும், இறந்து பிறக்கும் குழந்தைகளின் பதிவு முறையை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
சீர்திருத்தம் தேவைப்படும் இடங்கள்
2024-ஆம் ஆண்டில், 140 நாடுகளில் உள்ள 216 இந்தியத் தூதரகங்களில் 180 தூதரகங்கள் மட்டுமே வெளிநாடுகளில் உள்ள இந்தியக் குடிமக்களின் 66,413 பிறப்புகள் மற்றும் 11,384 இறப்புகள் குறித்த தகவல்களைப் பதிவு செய்துள்ளன. இருப்பினும், அனைத்துத் தூதரகங்களும் இந்தத் தகவல்களைச் சமர்ப்பிக்கவில்லை. வெளிநாடுகளில் நிகழும் பிறப்புகளைப் பின்னர் இந்தியாவில் பதிவு செய்ய முடிந்தாலும், வெளிநாடுகளில் நிகழும் இந்தியக் குடிமக்களின் இறப்புகளைத் தற்போது பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (Registration of Births and Deaths Act) சட்டத்தின்கீழ் பதிவு செய்ய முடியாது. இது சட்டக் கட்டமைப்பில் ஒரு முக்கிய இடைவெளியை உருவாக்குகிறது.
இதைவிட ஆழமான பிரச்சினை நிறுவனங்களுக்கிடையேயான பொறுப்புப் பிரிவு ஆகும். 17 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களில், தலைமைப் பதிவாளர் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவராக உள்ளார். 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில், திட்டமிடல், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைகளிடம் உள்ளது. கேரளா இதனை உள்ளாட்சித் துறையின்கீழ் வைத்துள்ளது. புதுச்சேரி உள்ளாட்சி நிர்வாகத் துறையைப் பயன்படுத்துகிறது. மாவட்ட அளவில், மாநிலத்தைப் பொறுத்து மாவட்டப் பதிவாளர் என்பவர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதி, தலைமை மருத்துவ அதிகாரி, குடிமை அறுவை சிகிச்சை நிபுணர், மாவட்டப் புள்ளிவிவர அதிகாரி அல்லது திட்டமிடல் அதிகாரியாக இருக்கலாம். இது போன்ற பன்முகத்தன்மைக்கு வரலாற்று ரீதியான காரணங்கள் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்திற்கு ஒரு சீரான தன்மை தேவைப்படுகிறது. பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு என்பது நலத்திட்டங்கள், அடையாள அமைப்புகள், மக்கள்தொகைக் கணிப்புகள், பொது சுகாதாரத் திட்டமிடல் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்புடைய நிர்வாகப் பணிகள் ஆகிய அனைத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நாடாளுமன்றம், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு செயல்முறையை எளிமைப்படுத்தி, ஒருங்கிணைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமைப் பதிவு அமைப்பு (CRS) என்பது தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படும் தரவுத் தொகுப்பாகும். அதன் அறிக்கைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடாது. 2024-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பதிவு அமைப்பு அறிக்கை, சம்பவங்கள் பதிவான காலத்திலிருந்து 18 மாதங்களுக்குப் பிறகே பொதுமக்களுக்கு காட்டப்பட்டது. நவீன டிஜிட்டல் பதிவுமுறை, ஆண்டுதோறும் அறிக்கைகளை விரைவாக வெளியிடுதல், மாநில வாரியான தரவுகளை துல்லியமாகவும் சரியாகவும் வழங்குதல், மாவட்ட அளவில் ஒரே மாதிரியான பொறுப்பு அமைப்பை உருவாக்குதல், இறப்பிற்கான காரணங்களை மருத்துவ ரீதியாகச் சான்றளிக்கும் முறையை வலுப்படுத்துதல் ஆகிய இலக்குகளை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
மக்கள் பிறப்பதையும் இறப்பதையும் பதிவு செய்வதில் இந்தியா இப்போது சிறப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால், அடுத்த கட்டப் பணி இன்னும் கடினமானது: யார் இறந்தார்கள், எங்கு இறந்தார்கள், ஏன் இறந்தார்கள் என்பதை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் கண்டறிவதுதான் அது. இதுதான் ஒரு வெறும் சான்றிதழ் வழங்கும் முறைக்கும், உண்மையான இறப்பு கண்காணிப்பு முறைக்கும் (Mortality surveillance system) உள்ள வேறுபாடாகும்.
டாக்டர் சி. அரவிந்தா அவர்கள் ஒரு கல்வியாளர் மற்றும் பொது சுகாதார மருத்துவர் ஆவார். டாக்டர் ஓம் பிரகாஷ் பேரா அவர்கள் ஒரு மருத்துவ மருத்துவரும், உலகளாவிய சுகாதாரம் மற்றும் பொதுக் கொள்கை நிபுணரும் ஆவார்.