நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கான வரைவு விதிமுறைகள் (2026) கூறுவது என்ன? -பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள் :


இந்த வரைவு விதிமுறைகள் தானாகவோ அல்லது அனைத்து நீதிமன்றங்களிலும் ஒரே சீராகவோ நடைமுறைக்கு வராது. மேலும், இவை இந்தியத் தலைமை நீதிபதி அறிவிக்கும் தேதியில் இருந்து உச்சநீதிமன்றத்தில் நடைமுறைக்கு வரும். உயர்நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களுக்கு, அந்தந்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் தனித்தனியாக அறிவிக்கும் தேதிகளில் இவை அமலுக்கு வரும். வெவ்வேறு விதிகள் வெவ்வேறு தேதிகளில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படலாம். அதாவது, நீதிமன்றங்களின் தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் படிப்படியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


நீதி கிடைப்பதை உறுதி செய்தல், தாமதங்களைக் குறைத்தல் அல்லது நிர்வாகத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றைத் தெளிவாக நிரூபிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை நீதிமன்றங்கள் "தீவிரமாகத் தேட வேண்டும்" என்று இந்த வரைவு விதிமுறைகள் முன்மொழிகின்றன.


வழக்கு மேலாண்மை, தட்டச்சு செய்தல், மொழிபெயர்ப்பு, சட்ட ஆராய்ச்சி, ஆவணங்களைச் சுருக்குதல், குறைபாடுகள் உள்ளவர்களுக்கான அணுகல் வசதிகள் மற்றும் நீதிமன்ற நிர்வாகம் உள்ளிட்ட பலதரப்பட்ட நிர்வாக மற்றும் உதவிப் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வெளிப்படையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்திற்கும் உச்சநீதிமன்றத்தின் முதன்மை அமைப்பு (Apex Body) அல்லது அந்தந்த உயர் நீதிமன்றம்/தீர்ப்பாயத்தின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாடு தொடர்பான குழுவிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும். அதோடு, நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகே இது அனுமதிக்கப்படும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.


கணினி வழிமுறை (Algorithm) அடிப்படையிலான கணினி முடிவுகளின் மூலமாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கிய தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டோ எந்தவொரு நீதித்துறைத் தீர்ப்பும் வழங்கப்படக் கூடாது என்பதில் இந்த வரைவு ஒழுங்குமுறைகள் திட்டவட்டமாக உள்ளன. அனைத்து வகையான தீர்ப்புகளிலும் மனிதர்களாகிய நீதிபதிகளின் அதிகாரமே இறுதியானது. எனவே, ஒரு வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கும் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், அது வெறும் ஆலோசனையாக மட்டுமே இருக்கும்; மற்றும் அது ஒரு நீதிபதியின் சுயாதீனமான ஆய்வுக்கு உட்பட்டது.


உங்களுக்குத் தெரியுமா? 


உச்சநீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட 'நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டிற்கான விதிமுறைகள், 2026'-ன் முதற்கட்ட வரைவு, நீதிமன்றச் செயல்முறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு எப்போதும் "மனிதத் தீர்ப்பு மற்றும் நீதித்துறை அதிகாரத்திற்கு முழுமையாகக் கட்டுப்பட்டதாகவே இருக்கும்" என்பதை வலியுறுத்துகிறது.


நீதித்துறை முடிவுகளைத் தீர்மானிக்க செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதற்கு முழுமையான தடை; வழக்குத் தரப்பினர் மற்றும் சாட்சிகளை முன்கூட்டியே கணிக்கும் அல்லது அவர்களின் விவரங்களை வகைப்படுத்தும் (profiling) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவிகள் மீதான கட்டுப்பாடுகள்; மற்றும் நீதிமன்றச் செயல்முறைகளில் வெளிப்படுத்தப்படாத அல்லது விளக்க முடியாத செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளுக்குத் தடை இவை அனைத்தும் நீதிமன்றங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) குழு முன்மொழிந்துள்ள வரைவு விதிமுறைகளில் அடங்கும். 

உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான இந்தக் குழுவில், நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, ராஜா விஜயராகவன் வி, அனுப் சித்காரா மற்றும் சூரஜ் கோவிந்தராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு, தனது பரிந்துரைகளின் வரைவை இறுதி செய்வதற்கு முன்னதாக, அதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கோரியுள்ளது. இந்த ஆலோசனைகளை ஜூன் மாதம் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


இந்த வரைவு அறிக்கையின்படி, நீதிமன்ற நடைமுறைகளில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள், "நீதி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பாகுபாட்டைத் தவிர்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட வேண்டும்". மேலும், "இனம், மதம், சாதி, பாலினம், மாற்றுத்திறன், மொழி, பொருளாதார நிலை அல்லது அரசியலமைப்பு அல்லது நடைமுறையில் உள்ள சட்டங்களால் தடைசெய்யப்பட்ட வேறு ஏதேனும் காரணங்களின் அடிப்படையில் சார்புநிலையை உருவாக்கும், அதிகரிக்கும் அல்லது அறிமுகப்படுத்தும் எந்தவொரு செயற்கை நுண்ணறிவு அமைப்பும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படக்கூடாது" என்றும் குறிப்பிடுகிறது. அத்துடன், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், விளிம்புநிலை மற்றும் சிறுபான்மைச் சமூகத்தினர், மற்றும் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் பின்தங்கிய பின்னணியைக் கொண்டவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Original Link: What exactly the draft of Regulations for Use of Artificial Intelligence (AI) in Courts, 2026 says?

Share: