இது வெறும் கடவுச்சீட்டு பற்றியது அல்ல; குடிமக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக மாற்றப்படுகிறார்கள். -ஜான் பிரிட்டாஸ் மற்றும் அனீஷ் பாபு

தேர்தல் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவது, அது தொடர்பான சட்டப்பூர்வ மேல்முறையீடு பரிசீலனையில் இருக்கும்போதுகூட, கடவுச்சீட்டு (Passport) புதுப்பித்தலை மறுப்பதற்குப் போதுமான காரணமாக மாறினால், தேர்தல் நடவடிக்கையானது கடவுச்சீட்டுச் சட்டத்தில் (Passports Act) ஒருபோதும் கருதப்படாத விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்குகிறது.


ஒரு நாடு தனது சொந்த குடிமக்களில் ஒருவரையே தனக்கு அந்நியமாக்கும்போது, அதை ஏதோ போரினால் செய்வதில்லை; மாறாக, பேனாவின் ஒரு சாதாரண மையெழுத்தின் மூலமாகவே மிகவும் அமைதியாகச் செய்துவிடுகிறது. 'The Telegraph' நாளிதழின் முன்னாள் ஆசிரியரான ஆர். ராஜகோபால், தனது வாழ்நாள் முழுவதையும் இந்தியாவின் வரலாற்றிற்குச் சாட்சியாகக் கழித்தபோதிலும், ஒரு வழக்கமான திருத்தத்தின்போது மேற்குவங்க தேர்தல் பட்டியலில் இருந்து அவரது பெயர் திடீரென மறைந்ததைக் கண்டார். இது அவரது வாக்குரிமையைப் பறித்ததோடு, அவரது கடவுச்சீட்டு புதுப்பிப்பதையும் முடக்கியது.


அவருக்குக் கடவுச்சீட்டு மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட பெரும் சர்ச்சை, மற்றும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான அடிப்படை உரிமையை உறுதிப்படுத்திய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜம்தாரின் கருத்துக்கள் ஆகியவை ஒரு நம்பிக்கையை அளித்துள்ளன. ஜனநாயகப் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாகப் பயன்படுத்தப்படும்போது, அவை இன்னும் அரசாங்க நிர்வாகத்தின் தன்னிச்சையான அதிகார மீறல்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதை இந்தச் சிறிய வெற்றிகள் நமக்கு நினைவூட்டுகின்றன.


இருப்பினும், ஒரு முக்கியமான எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது.



ஒவ்வொரு ஜனநாயக நாடும் தனது வாக்காளர் பட்டியல்களைத் மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு இறையாண்மை கொண்ட நாடும், கடவுச்சீட்டுகளை வழங்குவதற்குமுன் மக்களின் அடையாளம் மற்றும் தகுதிகளைச் சரிபார்க்க வேண்டும். இதில், ஒவ்வொரு சட்டத்திற்கும் அதற்கே உரிய சட்டவரையறையும், ஒவ்வொரு அதிகார அமைப்புக்கும் அதன் சொந்த அதிகார வரம்பும் உண்டு. மேலும், ஒவ்வொரு நிர்வாக நடைமுறைக்கும் அதன் சொந்த சட்டரீதியான விளைவுகள் உண்டு. இக்கோட்பாடுகளில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை.


ஆனால், ஒரு குறிப்பிட்ட சட்டத்தின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கையின் விளைவு, மற்றொரு முற்றிலும் மாறுபட்ட சட்ட எல்லைக்குள் ஊடுருவி, நாடாளுமன்றம் ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத மற்றும் அந்தச் சட்டம் அங்கீகரிக்காத சில தடைகளையும் தகுதியிழப்புகளையும் உருவாக்கத் தொடங்குவதுதான் மிகப் பெரிய சிக்கல் ஆகும். இந்திய நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் அரசியலமைப்புச் சார்ந்த கேள்வி இதுதான்.


பொதுமக்களிடையேயான விவாதம் முற்றிலும் தவறான ஒரு கேள்வியின் மீதே கவனம் செலுத்தி வருகிறது. இந்தியக் கடவுச்சீட்டு என்பது ஒருவரது "குடியுரிமைக்கான சான்றா" இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்கவே பல பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. கடவுச்சீட்டு என்பது குடியுரிமைக்கான இறுதியான சான்று அல்ல என்றே வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அது உண்மையான பிரச்சினை அல்ல.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் (Representation of the People Act) நடத்தப்படும் ஒரு தேர்தல் நடவடிக்கையினால் ஏற்படும் விளைவுகள், கடவுச்சீட்டு நிர்வாகத்தில் தலையிடுவதன் மூலம் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதே உண்மையான கேள்வியாகும்.


நவீன அரசியலமைப்பு ஜனநாயக நாடுகள், மக்களின் சுதந்திரத்தைப் பெரிய சட்ட மாற்றங்கள் மூலமாக நேரடியாக ஒருபோதும் குறைப்பதில்லை. அரசியலமைப்புச் சட்டம் வேண்டுமென்றேதான் அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளது. அந்த அதிகாரப் பகிர்வு என்பது ஏதோ நிர்வாகத் திறமையின்மை அல்ல. மாறாக, அது மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் மிகச் சிறந்த காரணிகளில் ஒன்றாகும்.

கடவுச்சீட்டு ஆணையம், கடவுச்சீட்டுச் சட்டத்தை (Passports Act) நிர்வகிக்கிறது. தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை நிர்வகிக்கிறது. குடியுரிமை, குடியுரிமைச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. வருமான வரி அதிகார அமைப்புகள், நிதிச் சட்டங்களை நிர்வகிக்கின்றன. தொழில்முறை ஒழுங்குபடுத்துபவர்கள், உரிமம் வழங்கும் சட்டங்களை நிர்வகிக்கின்றனர். ஒவ்வொரு அதிகார அமைப்பும் வரையறுக்கப்பட்ட சட்ட எல்லைகளுக்குள் செயல்படுகிறது. இந்தச் சட்டப்பூர்வ அதிகார அமைப்புகளின் சுதந்திரம் தற்செயலாக அமைந்ததல்ல. சட்டத்தின் ஆட்சி (rule of law) என்பது, நீதித்துறை மறுஆய்வைப் போலவே, இத்தகைய நிறுவனரீதியான பிரிவினையையும் சார்ந்துள்ளது. கவனமாக வரையப்பட்ட இந்த எல்லைகள் சீர்குலையத் தொடங்கும்போதுதான் சிக்கல் எழுகிறது.


சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) என்பது வாக்காளர் பட்டியலின் துல்லியத்தன்மையை மேம்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு தேர்தல் சார்ந்த நடவடிக்கையாகும். இந்தச் கொள்கையை ஒருவர் ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ முற்றிலும் மாறுபட்ட அரசியல் விவாதத்திற்குரியது.


அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஒரே ஒரு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுகிறது: அது ஒருவர் வாக்களிக்கத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிப்பதாகும். இது கடவுச்சீட்டு, உரிமங்கள், நலத்திட்ட உதவிகள் அல்லது பிற உரிமைகளை முறைப்படுத்துவதற்கான ஒரு மாற்று அமைப்பாக மாறுவதற்காக ஒருபோதும் உருவாக்கப்படவில்லை.


தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த ஓராண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்கீழ் (SIR) 12 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து 5.8 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், நாட்டின் பிற பகுதிகளிலும் இத்தகைய திருத்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேற்குவங்கத்தில் மட்டும், சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஏறக்குறைய 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், இது பெரிய அளவிலான சட்டப் போராட்டங்களுக்கும் பொது விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.


வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி (SIR) சரியாக நடத்தப்பட்டதா, அல்லது தனிநபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது நியாயமானதுதானா என்ற கேள்விகள் தேர்தல் சட்டத்திற்கும், தேவைப்பட்டால் அரசியலமைப்பு நீதிமன்றத் தீர்ப்புக்கும் உட்பட்டவை ஆகும். ஆனால், இங்கு நாம் பேசும் அரசியலமைப்புரீதியான கவலை வேறு ஒரு புள்ளியில் இருந்து தொடங்குகிறது: ஒரு தேர்தல் நடவடிக்கையின் விளைவுகள், நாடாளுமன்றம் முற்றிலும் மாறுபட்ட சட்டக் கட்டமைப்புகளை வகுத்துள்ள மற்ற சட்டத் துறைகளுக்குள் தலையிடத் தொடங்கும்போதுதான் இந்தச் சிக்கல் எழுகிறது.


வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது கடவுச்சீட்டைப் (passport) புதுப்பிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். நாளடைவில், இது தொழில்முறை உரிமங்களைப் புதுப்பிப்பதையோ அல்லது பெறுவதையோ பாதிக்கலாம். மறுநாள், அது கல்வி உதவித்தொகை, அரசு வேலைவாய்ப்பு, வங்கித்துறை, வரிவிதிப்பு, கல்வி, நலத்திட்ட உரிமைகள் அல்லது உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் (writ) மனு தாக்கல் செய்யும் உரிமையைக் கூட பாதிக்கலாம். இது நாடாளுமன்றம் அத்தகைய சட்டங்களை இயற்றியதால் நடக்கவில்லை; மாறாக, ஒரு நிர்வாக அமைப்பு தான் நிர்வகிக்கும் சட்டத்தைத் தனித்துப் பயன்படுத்தாமல், மற்றொரு நிர்வாக அமைப்பின் முடிவுகளை அப்படியே நம்பிச் செயல்படத் தொடங்குவதால் நடக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இவை ஒரு முறையான குடியுரிமை விசாரணை வழங்கும் தண்டனைகளைவிட மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


நடைமுறையில் குடிமகன் அல்லாதவராகக் கருதப்படும் ஒரு நபர் கூட, அனைவருக்கும் கிடைக்கக்கூடிய சட்டப் பிரிவு 14 (சமத்துவ உரிமை) மற்றும் 21 (உயிர் வாழ்வதற்கும் தனிநபர் சுதந்திரத்திற்குமான உரிமை) போன்ற அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 32-ன்கீழ் உச்சநீதிமன்றத்தை அணுக முடியும். இருப்பினும், நமது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19-ன்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சுதந்திரங்கள் மற்றும் சில அரசியலமைப்புப் பாதுகாப்புகள் உள்ளிட்ட பல முக்கியமான அடிப்படை உரிமைகளை, குடிமக்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கியுள்ளது.

குடியுரிமைச் சட்டத்தின்கீழ் முறையான சட்டபூர்வ விசாரணை அல்லது சட்ட அங்கீகாரம் ஏதுமின்றி, ஒருவரின் குடியுரிமை குறித்த அரசு அதிகாரிகளின் யூகங்கள் ஒரு சட்டத் துறையிலிருந்து மற்றொரு சட்டத்துறைக்குப் பரவத் தொடங்கினால், அதன் நடைமுறை விளைவு என்பது ஒருவருக்குப் கடவுச்சீட்டு அல்லது வாக்குரிமையை மறுப்பதோடு மட்டும் நின்றுவிடாது. அது, அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கியுள்ள உரிமைகளைக் கோரி நிலைநாட்டுவதற்கான திறனைப் படிப்படியாகப் பறித்துவிடும். இதனால்தான், ஒரு சட்டத்தின்கீழ் எடுக்கப்படும் நிர்வாக முடிவுகளின் விளைவுகளை மற்றொரு சட்டத்திற்கு மாற்றுவதை, வெறும் அரசு அதிகாரத்துவத்தின் வசதிக்காகச் செய்யப்படும் விஷயமாகக் கடந்து போய்விடமுடியாது.


நிர்வாகச் சட்டம் இத்தகைய நடைமுறையை எப்போதும் எதிர்த்து வந்துள்ளது. அதன் அடிப்படைத் தத்துவம் எளிமையானது. ஒவ்வொரு சட்டப்பூர்வ அதிகார அமைப்பும், நாடாளுமன்றத்தால் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தையும் விருப்பத்தையும் ஒவ்வொரு சட்டபூர்வ அதிகார அமைப்பும் தனித்தே பயன்படுத்த வேண்டும். கடவுச்சீட்டு வழங்கும் அதிகாரி, தனது சொந்த முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒரு தேர்தல் பதிவு அதிகாரியிடம் ஒப்படைத்துவிடக்கூடாது. இது வெறும் சட்டத்தை விளக்கும் விஷயம் மட்டுமல்ல; இது ஒரு அரசியலமைப்பு சார்ந்த கடமையாகும்.


மேனகா காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தனிநபர் சுதந்திரத்தின் மீதான எந்தவொரு கட்டுப்பாடும் நியாயத்தன்மை, பகுத்தறிவு மற்றும் முறையான சட்ட நடைமுறை ஆகிய தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதன் மூலம் கடவுச்சீட்டு (passport) நிர்வாக முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தத் தீர்ப்பின் நீடித்த பங்களிப்பு கடவுச்சீட்டுகளுக்கானது என்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது நிர்வாக அதிகாரங்களின் செயல்பாட்டையே அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக மாற்றியது. அரசு அதிகாரிகள் இனி இயந்திரத்தனமாகச் செயல்பட முடியாது; அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தைத் தனித்து நின்று, சிந்தித்துச் செயல்படுத்த வேண்டும்.



சட்டரீதியான மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போதுகூட, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டதைக் காரணம் காட்டி கடவுச்சீட்டைப் (passport) புதுப்பிக்க மறுப்பது நிகழ்ந்தால், ஒரு தேர்தல் நடவடிக்கையானது கடவுச்சீட்டுச் சட்டத்தில் (Passports Act) ஒருபோதும் கருதப்படாத விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்குகிறது. அப்போது, ​​இந்தப் பிரச்சினை ஒரு கடவுச்சீட்டு அல்லது ஒரு தனிநபரைப் பற்றியதாக இல்லாமல், அரசியலமைப்புச் சட்ட வழிமுறை குறித்த ஒரு கேள்வியாக மாறுகிறது. நாடாளுமன்றத்தின் கவனமாக வடிவமைக்கப்பட்ட சட்டமியற்றும் பிரிவுகள், நிர்வாகத்தின் வசதிக்கு அடிபணிய வேண்டுமா? சுதந்திரமான சட்டப்பூர்வ அதிகார அமைப்புகள், தங்களின் சுதந்திரமான சட்டரீதியான முடிவெடுக்கும் திறனைப் படிப்படியாக நிறுத்த வேண்டுமா? இவை தொழில்நுட்பக் கேள்விகள் அல்ல. இவை அரசியலமைப்புச் சார்ந்த நிர்வாகத்தின் அடிப்படைக்கே ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது.


இந்திய அரசியலமைப்பு முறையின் மிகப்பெரிய பலம், அது வழங்கும் உரிமைகளில் மட்டுமே இல்லை; மாறாக அது அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கும் முறையில்தான் உள்ளது. ஒவ்வொரு அதிகார அமைப்பும் தனக்கென வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளேயே செயல்படுகிறது. பொது அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும், எந்தச் சட்டத்தின் மூலம் தனக்கு அங்கீகாரம் கிடைத்ததோ அந்தச் சட்டத்திற்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டதாகும். இந்த உன்னதமான கட்டமைப்புதான் தற்போது அமைதியான முறையில் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.


எனவே, இங்கு ஆபத்து என்பது ஒரு பத்திரிகையாளருக்குத் தற்காலிகமாகப் கடவுச்சீட்டு கிடைக்காமல் போவது மட்டுமல்ல. இது 'உரிமை இழப்புகளின் தொடர் விளைவு' (Cascade of civil disabilities) எனப்படும் ஒரு புதிய ஆபத்தான போக்கு உருவாவதைக் காட்டுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட நிர்வாகத் துறையின் நடவடிக்கை அல்லது முடிவு, பிற சட்டத் துறைகளுக்கும் பரவி, இறுதியில் ஒரு குறிப்பிட்ட அதிகாரி எடுக்கும் முடிவு, நாடாளுமன்றம் தனித்தனியாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டு உருவாக்கிய பலதரப்பட்ட சட்ட உரிமைகளையும் பாதிக்கத் தொடங்குகிறது.



அதனால்தான், தற்போது எழுந்துள்ள இந்த சர்ச்சை, இதில் தொடர்புடைய உடனடி உண்மைகளையும் கடந்து மிக விரிவான கவனத்திற்கு உட்படுகிறது.


இது அடிப்படையில் கடவுச்சீட்டு தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல. மாறாக, ஒவ்வொரு பொது அதிகார அமைப்பும் தான் நிர்வகிக்கும் சட்டத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும்; தனிமனித சுதந்திரத்தின் மீது விதிக்கப்படும் எந்தவொரு கட்டுப்பாடும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்; மற்றும் ஒவ்வொரு குடிமகனும் தன் உரிமைகளைச் சட்டத்தின் மூலமாகவே தீர்மானிக்கப்பட தகுதியானவர், வேறு எங்கோ எடுக்கப்பட்ட நிர்வாக முடிவுகளின் எதிர்பாராத பக்கவிளைவுகளால் அல்ல, என்ற இந்த அரசியலமைப்பு ஒழுக்கத்தைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.


பிரிட்டாஸ் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார், மற்றும் பாபு ஒரு ஆராய்ச்சி உதவியாளர் ஆவார்.


Original Link: It’s not just about a passport. Citizens are being turned into strangers in their own land.

Share: