முக்கிய அம்சங்கள் :
தேர்தல் ஆணையத்தின் ‘ECINET’ இணையதளம், புதிய வாக்காளர் பதிவு, ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்தல், மற்றும் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்குதல் ஆகியவற்றிற்கான படிவங்களைச் சமர்ப்பிக்க பயனர்களை அனுமதிக்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1950) (Representation of the People Act) மற்றும் வாக்காளர் பதிவு விதிகளின்கீழ் (1960) (Registration of Electors Rules) வாக்காளர் சேர்க்கைக்கான 'படிவம் 6'-ஐ (Form 6) இணையவழியாகச் சமர்ப்பிக்கும்போது, அதில் ஒரு புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி 'உறுதிமொழிப் படிவம்' (declaration form) என்று அழைக்கப்படுகிறது. இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் பெற்றோர் முந்தைய 'சிறப்புத் தீவிர திருத்த' (SIR) நடவடிக்கையில் இடம்பெற்றிருந்தனரா என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்.
ஆம் எனில், முந்தைய சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின்போது தங்கள் தந்தை அல்லது தாயின் பெயர் எந்தச் சட்டமன்றத் தொகுதி எண், வாக்குச்சாவடி எண் (பகுதி எண் அல்லது 'part number' என அறியப்படுவது) மற்றும் வரிசை எண் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்ற விவரங்களை அவர்கள் வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், தேர்தல் ஆணையம் 10 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றியப் பிரதேசங்களில் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை நிறைவு செய்துள்ளது. மீதமுள்ள மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களைப் பொறுத்தவரை, முந்தைய 'தீவிரத் திருத்த' (intensive revision) நடவடிக்கை என்பது 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பணியையே குறிக்கிறது.
தற்போது மற்ற 19 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் இப்பணி நடைபெற்று வருகிறது. அதேவேளையில், இமாச்சலப் பிரதேசம், லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகியவற்றுக்கான சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை.
அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை, அங்கு 'தேசியக் குடிமக்கள் பதிவேடு' (National Register of Citizens (NRC)) தொடர்பான பணிகள் நிறைவடையும் வரை சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பீகார் தவிர, சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகள் நிறைவடைந்த அல்லது நடைபெற்று வரும் அனைத்து மாநிலங்களிலும், 'படிவம் 6'-ஐ இணையவழியில் சமர்ப்பிக்கும்போது, ஏற்கனவே உள்ள பகுதிகளுக்கு இடையே சேர்க்கப்பட்டுள்ள பெற்றோர்கள் குறித்த புதிய 'உறுதிமொழிப் படிவத்தை' விண்ணப்பதாரர் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் பெற்றோர் முந்தைய சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணியில் இடம்பெறவில்லை என்றால், அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தங்கள் பெற்றோரின் பெயர்கள் மற்றும் (கிடைக்குமெனில்) வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Electors Photo Identity Card (EPIC)) எண்களை வழங்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா?
அரசியலமைப்பின் 326-வது பிரிவு, ஒரு குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதியில் வழக்கமாக வசிக்கும் அனைத்து வயது வந்த குடிமக்களுக்கும் வாக்காளராகப் பதிவு செய்வதற்கான உரிமையை அளிக்கிறது. சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் ஒழிய, இந்த உரிமை அவர்களுக்குப் பொருந்தும்.
'மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1950)', தேர்தல்களை நடத்துவது மற்றும் வாக்காளர்களைப் பதிவு செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சட்டத்தின் பிரிவு-28, "விதிமுறைகளை வகுப்பதற்கான அதிகாரம்" குறித்துக் குறிப்பிடுவதாவது, "இச்சட்டத்தின் நோக்கங்களைச் செயல்படுத்த, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்த பிறகு, ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கை வெளியிடுவதன் மூலம் விதிமுறைகளை வகுக்கலாம்." மேலும், இச்சட்டத்தின்கீழ் வகுக்கப்படும் ஒவ்வொரு விதிமுறையும், "அவை உருவாக்கப்பட்ட பிறகு கூடிய விரைவில் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்றும் குறிப்பிடுகிறது.
'படிவம் 6' (Form 6) என்பது இச்சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 'வாக்காளர் பதிவு விதிகளின் (1960)' (Registration of Electors Rules) ஒரு பகுதியாகும். எனவே, இப்படிவத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டுமானால், அதற்குச் சட்ட மற்றும் நீதித்துறையின் மூலம் சட்டத் திருத்தமும் அரசிதழ் அறிவிக்கையும் தேவைப்படும்.
புதிய விண்ணப்பதாரர்கள், குறிப்பாக சமீபத்தில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், தங்களது அல்லது தங்கள் பெற்றோரின் விவரங்களை முந்தைய சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையுடன் தொடர்புபடுத்திக் காட்ட வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இம்மாற்றம் குறித்துத் தேர்தல் ஆணையம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதால், விவரங்களை வழங்க இயலாதவர்கள் கூடுதல் ஆய்வுக்கு அல்லது தீவிரச் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுவரை ஆண்டுதோறும் செய்யப்பட்டு வந்த வழக்கமான வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்குப் பதிலாக, இந்தச் சிறப்புத் தகுதி அறிவிப்புப் படிவம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இதுவரை ஆண்டுதோறும் செய்யப்பட்டு வந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்குப் பதிலாக, தற்போது வாக்காளர் பட்டியல் முற்றிலும் புதிதாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது.