நீங்கள் இணையத்தில் வாங்கும் பொருட்கள் உண்மையிலேயே உங்களது சொந்த விருப்பப்படிதான் வாங்கப்படுகிறதா? இணையவழி நுகர்வோர் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் பொதுப் பட்டியலில் உள்ள நிறுவனங்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானவை, நுகர்வோரைத் தூண்டுவதற்காக 'மறைமுக கட்டமைப்புகள்' (Dark patterns) என்ற உத்திகளைப் பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த மறைமுக கட்டமைப்புகள் என்றால் என்ன? மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமும் (CCPA), இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி முகமையும் (IRDAI) இதற்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன?
தற்போதைய நிகழ்வு என்ன?
பல ஆண்டுகளாக ஒழுங்குமுறை ஆய்வுகளுக்கு உட்பட்டிருந்த போதிலும், இணையவழி தளங்களால் பயன்படுத்தப்படும் மறைமுக கட்ட்மைப்புகள் (dark patterns) இந்திய வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்தி, சரியான தேர்வுகளை மேற்கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கின்றன. இருப்பினும், ஒரு புதிய ஆய்வு ஒரு துணிச்சலான பரிந்துரையை முன்வைக்கிறது. இந்தியாவில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும், பட்டியலிடத் திட்டமிடும் நிறுவனங்களும் தங்களின் டிஜிட்டல் நுகர்வோர் பயணத்திலும் பரிவர்த்தனைகளிலும் மறைமுக கட்டமைப்புகளைப் (dark patterns) பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
முக்கிய அம்சங்கள் :
1. ‘LocalCircles’ வெளியிட்டுள்ள ஆய்வின்படி, இணையவழி நுகர்வோர் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட பொதுப் பங்கு நிறுவனங்கள் பல்வேறு மறைமுக கட்டமைப்புகளால் (dark patterns) பாதிக்கப்பட்டுள்ளன. நுகர்வோரின் இணையவழித் தேர்வு, பரிவர்த்தனை, மற்றும் பொருட்களைத் திருப்பியளித்தல் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகிய பயணங்களின்போது இந்த மறைமுக முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
2. மறைமுக கட்டமைப்புகள் (dark patterns) அல்லது ஏமாற்றும் கட்டமைப்புகள் (deceptive patterns) என்பவை, பயனர்களை அழுத்தம் கொடுப்பதன் மூலமோ அல்லது தவறாக வழிநடத்துவதன் மூலமோ, அவர்கள் வழக்கமாகச் செய்யாத தேர்வுகளைச் செய்யவோ அல்லது தரவைப் பகிரவோ அவர்களைக் கையாளுவதற்காக இணையதளங்களில் மறைக்கப்பட்டிருக்கும் நடைமுறைகள் மற்றும் வேண்டுமென்றே பயன்படுத்தப்படும் வழிமுறைகளையும் குறிக்கின்றன.
3. இணையதளங்களில் விற்கப்படும் பொருட்களைப் பார்ப்பதற்கு முன்பாகவே பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் தருமாறு கட்டாயப்படுத்துவது, சந்தாக்களை ரத்து செய்வதை வேண்டுமென்றே கடினமாக்குவது மற்றும் தங்களின் பொருட்களை வற்புறுத்தி விற்பனை செய்வதற்காகத் தொடர்ந்து தேவையில்லாத அழைப்புகளை (Spam calling) மேற்கொள்வது ஆகியவை தீய நோக்கங்களுக்கான சில எடுத்துக்காட்டுகளாகும்.
மறைமுக கட்டமைப்புகள் (dark patterns) என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்வோம்: உங்கள் திரையில் அடிக்கடி தோன்றும் ஒரு எரிச்சலூட்டும் விளம்பரத்தை நினைத்துப் பாருங்கள். அதை மறைக்கச் செய்யும் பெருக்கல் குறி 'X' மிகச் சிறியதாக இருப்பதால், அதை உங்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், அந்தச் சிறிய 'X' குறியை நீங்கள் அழுத்த முயலும்போது, சில நேரங்களில் தவறுதலாக விளம்பரத்தையே அழுத்திவிடுகிறீர்கள்.
4. இந்த ஏமாற்று உத்திகள் முக்கியமாக சந்தாக்களைப் புதுப்பித்தல், கட்டாயமாக ரத்து செய்ய வைக்கும் நடைமுறைகள், தவறான விலை விவரங்கள், பயனரின் சம்மதத்தைப் பெறும் வழிமுறைகள், தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், விளையாட்டைப் போன்ற ஈடுபாடுகள் மற்றும் நுகர்வோர் முடிவுகளை மாற்றியமைக்கும் நடத்தை சார்ந்த தூண்டுதல்கள் ஆகியவற்றின் மூலமாக, மக்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட கணினித் திரையின் வடிவமைப்பு முறைகளையே நம்பியிருக்கின்றன.
5. மறைமுக கட்டமைப்புகள் (dark patterns) என்ற சொல், 2010-ஆம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த பயனர் அனுபவ (UX) வடிவமைப்பாளரான (user experience (UX) designer) ஹாரி பிரிக்னல் என்பவரால் உருவாக்கப்பட்டது.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 (The Consumer Protection Act, 2019) பிரிவு 10(1)-ன்கீழ் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority (CCPA)) அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டம், பழைய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-க்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டது. மேலும், நுகர்வோரின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதில் அதன் வரம்பை இன்னும் விரிவுபடுத்த இந்தச் சட்டம் முயல்கிறது. இது 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், தவறான மற்றும் ஏமாற்றக்கூடிய விளம்பரங்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தால் (CCPA) குறிப்பிடப்பட்ட மறைமுக கட்டமைப்புகள்
6. குறிப்பாக, டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி, 2023-ஆம் ஆண்டு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), மறைமுக கட்டமைப்புகளின் (Dark Patterns) தடுப்பு மற்றும் ஒழுங்குமுறைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதில் 13 வகையான மறைமுக கட்டமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
(i) போலியான அவசரம் (False urgency) : நுகர்வோரை ஒரு பொருளை வாங்க வைக்க அல்லது ஒரு செயலைச் செய்ய வைக்க, ஒருவித அவசரத்தையோ அல்லது பற்றாக்குறையையோ செயற்கையாக உருவாக்குவது. பயனர் முடிவுகளை மாற்றுவதற்காக ஒரு தயாரிப்பு அல்லது சேவைக்கு போலியான வரவேற்பு இருப்பது போல் காட்டுவது அல்லது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு உண்மையில் இருப்பதைவிட மிகக் குறைந்த அளவே இருப்பதாகக் கூறுவது இதில் அடங்கும்.
(ii) கூடைக்குள் இரகசியமாகச் சேர்த்தல் (Basket sneaking) : பயனரின் அனுமதியின்றி, ஷாப்பிங் கூடையில் கூடுதல் பொருட்கள் அல்லது சேவைகளைச் சேர்ப்பதற்கு மறைமுக கட்டமைப்புகள் (Dark patterns) பயன்படுத்தப்படுகின்றன.
(iiii) இணங்க வைப்பதற்கான அவமானப்படுத்தல் (Confirm shaming): நுகர்வோரை ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை அல்லது கண்ணோட்டத்திற்கு இணங்கச் செய்ய குற்ற உணர்வைப் பயன்படுத்துதல்; அவ்வாறு செய்யாதபோது அவர்களை விமர்சிப்பது அல்லது தாக்குவது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகும்..
(iv) கட்டாய நடவடிக்கை (Forced action) : உள்ளடக்கத்தை அணுகுவதற்கு ஒரு சேவையில் பதிவு செய்வது போன்ற, நுகர்வோர் செய்ய விரும்பாத ஒரு செயலைச் செய்ய அவர்களைத் தூண்டுதல்.
(v) இடைவிடாத தொந்தரவு (Nagging) : பயனர் தெளிவாக அனுமதி அளிக்காதபட்சத்தில், அவரிடம் இருந்து ஏதேனும் வணிக ரீதியான லாபத்தைப் பெறுவதற்காகவோ அல்லது ஒரு பரிவர்த்தனையைச் செய்ய வைப்பதற்காகவோ, கோரிக்கைகள், தகவல்கள், தேர்வுகள் அல்லது குறுக்கீடுகள் மூலம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து தொந்தரவு செய்து பயனரின் எரிச்சலூட்டுவது ஆகும்.
(vi) சந்தா தொடர்பான சிக்கல்கள் (Subscription traps) : ஒரு சேவையில் பதிவு செய்வது எளிது, ஆனால் அதிலிருந்து விலகுவது அல்லது ரத்து செய்வது கடினம். ரத்து செய்வதற்கான விருப்பத்தேர்வு மறைக்கப்பட்டிருத்தல் அல்லது பல படிநிலைகளைக் கொண்டிருத்தல், இலவச சந்தாவைப் பெறுவதற்காக, பணம் செலுத்தும் விவரங்களையோ அல்லது தானியங்கி பணப்பரிவர்த்தனைக்கான அங்கீகாரத்தையோ வழங்குமாறு பயனரைக் கட்டாயப்படுத்துவது அல்லது சந்தாவை ரத்து செய்வது தொடர்பான வழிமுறைகளைத் தெளிவற்றதாகவும், மறைமுகமாகவும், குழப்பமானதாகவும், சிரமமானதாகவும் ஆக்குவது.
(vii) கவர்ச்சி மற்றும் ஏமாற்றுதல் (Bait & switch) : ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது சேவையை விளம்பரப்படுத்திவிட்டு, அதற்குப் பதிலாக வேறொன்றை (பெரும்பாலும் குறைந்த தரத்தில் உள்ளதை) வழங்குதல்.
(viii) மோசடி தீம்பொருள்கள் (Rogue Malwares) : பயனர்களின் கணினியில் வைரஸ் இருப்பதாக அவர்களை நம்பவைத்து ஏமாற்றுவதற்காக, ரான்சம்வேர் (Ransomware) அல்லது ஸ்கேர்வேர் (Scareware) போன்ற தீம்பொருள்களைப் பயன்படுத்துவது; மேலும், அவர்களின் கணினியில் உண்மையில் ஒரு வைரஸை நிறுவும் ஒரு போலி 'வைரைஸ் நீக்கும் மென்பொருளுக்காக' அவர்களைப் பணம் செலுத்த வைப்பதே இதன் நோக்கமாகும்.
(ix) போலி விளம்பரங்கள் (Disguised ads) : செய்திக் கட்டுரைகள் அல்லது பயனர்கள் உருவாக்கிய உள்ளடக்கங்களைப் போல, சாதாரணப் பகுதி போன்றே தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விளம்பரங்கள்.
(x) இடைமுகத் தலையீடு (Interface interference) : ஒரு பயனர் விரும்பியபடி ஒரு செயலைச் செய்வதிலிருந்து அவரைத் திசைதிருப்புவதற்காக, சில குறிப்பிட்ட தகவல்களை முன்னிலைப்படுத்தியும், மற்ற தொடர்புடைய தகவல்களை மறைத்தும் பயனர் இடைமுகத்தைக் கையாளுதல்.
(xi) படிப்படியான விலை வெளிப்பாடு (Drip pricing) : இது ஒரு ‘மறைமுக கட்டமைப்பு’ (dark pattern) ஆகும். இதில் விலையின் கூறுகள் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தப்படாமல், பயனர் அனுபவத்தின் போது மறைமுகமாக வெளிப்படுத்தப்படுதல், அல்லது வாங்குதலை உறுதிப்படுத்திய பிறகு விலை தெரியவருதல், அல்லது பயன்பாட்டைத் தொடர கூடுதல் கட்டணம் (in-app purchase) தேவை என்பதைத் தெளிவாகக் குறிப்பிடாமல் ஒரு தயாரிப்பு அல்லது சேவை இலவசம் என்று விளம்பரப்படுத்துதல் போன்றவை அடங்கும்.
(xii) தந்திரமான கேள்விகள் (Trick Question) : ஒரு பயனரை அவர் விரும்பிய செயலைச் செய்வதிலிருந்து திசைதிருப்புவதற்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பதிலையோ செயலையோ எடுக்கத் தூண்டுவதற்காகவோ, குழப்பமான சொற்கள், இரட்டை எதிர்மறைகள் அல்லது அதுபோன்ற பிற தந்திரங்கள் போன்ற குழப்பமான அல்லது தெளிவற்ற மொழியை வேண்டுமென்றே பயன்படுத்துதல்.
(xiii) சாஸ் கட்டண முறை (SaaS billing) : ஒரு சேவையாக மென்பொருள் (Software as a Service (SaaS)) வணிக மாதிரியில், தொடர்ச் சந்தாக்களின் சுழற்சியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பயனர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கணக்கிலிருந்து தொடர்ந்து பணம் வசூலிப்பது.
மறைமுக கட்டமைப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) எடுத்துள்ள நடவடிக்கை
1. காப்பீட்டுத் துறையில் உள்ள மறைமுக கட்டமைப்புகளைக் கட்டுப்படுத்தி, நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) தற்போது பல டிஜிட்டல் காப்பீட்டுச் சந்தைகளில் உள்ள “மறைமுக கட்டமைப்புகள்” தொடர்பான விதிமுறைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
2. இந்த ஒழுங்குமுறை ஆணையம், காப்பீட்டுத் துறை முழுவதும் உள்ள மறைமுகப் போக்குகளை 9 மாத காலத்திற்குக் கண்காணிப்பதற்காக, இந்தியப் பொதுத் தணிக்கையாளர்கள் நிறுவனம் என்ற சட்டப்பூர்வ அமைப்புடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம், காப்பீட்டு நிறுவனங்கள் மறைமுக கட்டமைப்புகள் குறித்து சுயமதிப்பீடு செய்து, தங்களது கருத்துக்களைச் சமர்ப்பிக்குமாறு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.