அரசு விரைவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தேசிய பவளப் பாறை ஆராய்ச்சி நிறுவனத்தை (National Coral Reef Research Institute (NCRRI)) அமைக்கும் என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். ₹120 கோடி செலவில் கட்டப்படும், பவளப் பாறை ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புக்கான இந்தியாவின் பிரதான மையமாகச் செயல்படும் என்றும் தெரிவித்தார். எனவே, பவளங்கள் மற்றும் பவளப் பாறைகள் என்றால் என்ன, அவை ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
முக்கிய அம்சங்கள்:
1. பவளப்பாறைகள் என்பவை அடிப்படையில் நிலையாக ஓரிடத்தில் ஒட்டியிருக்கும் உயிரினங்கள் ஆகும். அவை நீரில் உள்ள உணவைப் பிடிக்கவும், அதை அவற்றின் வாய்க்குள் செலுத்தவும் அவற்றின் சிறிய கூடாரம் போன்ற கரங்களைப் (small tentacle-like hands) பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு பவள உயிரினமும் ‘பாலிப்’ (polyp) என்று அழைக்கப்படுகிறது. மேலும், அது மரபணுரீதியாக ஒரே மாதிரியான நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பாலிப்களின் குழுக்களாக ‘காலனி’ (colony) என்று அறியப்படும் கூட்டமாக வாழ்கிறது.
2. பவளப் பாறைகள் முக்கியமாக இரண்டு வகைப்படும் . அவை கடினமான மற்றும் மென்மையான பவளப்பாறைகள். கடினமான பவளங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரிய, முப்பரிமாண அமைப்புகளை உருவாக்கி பவளப்பாறைகளை உருவாக்குகின்றன.
3. மென்மையான பவளப்பாறைகளுக்கு கல் போன்ற எலும்புக்கூடுகள் (stony skeletons) இல்லை, ஆனால் கடினமான பவளப்பாறைகளுக்கு உண்டு. அவற்றின் சுண்ணாம்புச் சத்துடைய எலும்புக்கூடுகள் பவள வித்திழைகளால் (coral polyps) உருவாக்கப்படுகின்றன. இந்த வித்திழைகள் இறக்கும்போது, இந்த எலும்புக்கூடுகள் அப்படியே நின்று, புதிய வித்திழைகளுக்கான அடித்தளமாக மாறுகின்றன என்று அமெரிக்க தேசிய கடல் மற்றும் வானிலை ஆய்வு நிறுவனம் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) தெரிவிக்கிறது.
4. பவளப் பாறைகள், “கடலின் மழைக்காடுகள்” என்று அழைக்கப்படுகின்றன — ஏறக்குறைய 450 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் உள்ளன. ஆஸ்திரேலியாவின் பெரிய தடுப்புப் பாறை (Great Barrier Reef) உலகின் மிகப் பெரிய பாறை ஆகக் கருதப்படுகிறது. இது சுமார் 2,028 கிலோமீட்டர் நீளம் உள்ளது.
பவளப்பாறைகளின் முக்கியத்துவம்
1. பவளப் பாறைகள் கடல் சூழலியல் அமைப்புகளுக்கு மிகவும் முக்கியமானவை. ஒரு பாறை ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களை ஆதரிக்க முடியும். எடுத்துக்காட்டாக, பெரிய தடுப்புப் பாறையில் (Great Barrier Reef) 400-க்கும் மேற்பட்ட பவள வகைகள், 1,500 வகையான மீன்கள், 4,000 வகையான மெல்லுடலிகள் மற்றும் உலகின் ஏழு கடல் ஆமை இனங்களில் ஆறு இனங்கள் உள்ளன.
2. இந்த பவளப் பாறைகள் ஆண்டுதோறும் சுமார் $375 பில்லியன் மதிப்பிலான பொருட்களையும் சேவைகளையும் உருவாக்குகின்றன. உலகம் முழுவதும் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உணவு, வருமானம், புயல் மற்றும் வெள்ளப் பாதுகாப்பிற்காக இவற்றை நம்பியிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
3. பவளப் பாறைகள் அலைகள், புயல்கள் மற்றும் வெள்ளங்களில் இருந்து வரும் ஆற்றலில் 97 சதவீதம் வரை உறிஞ்சக்கூடியவை. இதன் மூலம் இறப்புகள், சொத்து சேதங்கள் மற்றும் மண் அரிப்பைத் தடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
பவளப்பாறை வெளிறிப் போதல் என்றால் என்ன?
1. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி சர்வதேச பவளப்பாறை முன்னெடுப்பு அமைப்பு ((International Coral Reef Initiative (ICRI)) வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஒரு வருடமாக அதிக கடல் வெப்பநிலை காரணமாக ஏற்பட்ட பெரும் வெளுப்பு நிகழ்வில் உலக பவளப்பாறைகளில் சுமார் 84 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இது 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் நான்காவது உலகளாவிய பவள வெளுப்பு நிகழ்வு ஆகும். முந்தைய மிக மோசமான 2014-2017 நிகழ்வு பவளப்பாறைகளில் மூன்றில் இரண்டு பங்கை (சுமார் 66 சதவீதம்) மட்டுமே பாதித்திருந்தது என்கின்றனர். ஆனால், தற்போதைய நிகழ்வு அதையும் மிஞ்சிவிட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
2. பெரும்பாலான பவளப் பாறைகளின் திசுக்களில் ‘ஸூக்ஸாந்தெல்லே’ (zooxanthellae) எனப்படும் பாசிகள் உள்ளன. இவை தாவரங்களைப் போன்ற உயிரினங்கள் ஆகும். பவளப்பாறைகளுக்கும் சூக்சான்தெலேவுக்கும் இடையில் ஒரு ஓருயிர் இணக்கம் (symbiotic relationship) உள்ளது. பவளப் பாறைகள் ஸூக்ஸாந்தெல்லேவுக்குப் பாதுகாப்பான வாழிடத்தை வழங்குகையில், ஸூக்ஸாந்தெல்லே ஆக்ஸிஜன் மற்றும் ஒளிச்சேர்க்கையின் கரிமப்பொருட்களை வழங்கி, பவளங்கள் வளரவும் செழிக்கவும் உதவுகிறது. சூக்சான்தெலே பவளப் பாறைகளுக்குப் பிரகாசமான மற்றும் தனித்துவமான வண்ணங்களையும் கொடுக்கிறது என்கின்றனர்.
3. சுற்றுச்சூழலில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்கள்கூட பவளப் பாறைகளை (Corals) அழுத்தத்திற்கு உள்ளாக்கும், ஏனெனில் அவை ஒளி மற்றும் வெப்பநிலைக்கு அதிக\
உணர்திறன் கொண்டவை. அவை அழுத்தத்திற்கு உள்ளாகும்போது, அவற்றுக்குள் வாழும் ஸூக்ஸாந்தெல்லே (zooxanthellae) எனும் பாசிகளை வெளியேற்றி, முற்றிலும் வெள்ளையாகிவிடும். இந்தச் செயல்முறை பவள வெளிறல் (Coral Bleaching) என்று அழைக்கப்படுகிறது.
4. குறிப்பிடத்தக்க வகையில், பவள வெளிறல் உடனடியாக பவளங்களின் மரணத்திற்கு வழிவகுக்காது. மாறாக, அவை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாகி, இறப்புக்கு ஆளாகின்றன.
5. பவளப்பாறைகள் வெளுத்துப்போவது அவற்றின் மகப்பேறுத் திறனைக் குறைக்கிறது மற்றும் ஆபத்தான நோய்களுக்கும் ஆளாகின்றன. வெளுத்துப் போவது மிகவும் தீவிரமாக இல்லாவிட்டால், பவளப்பாறைகள் மீண்டு வருவதாக அறியப்படுகிறது.
பவளப் பாறைகளின் உலகளாவிய பெருந்திரள் பவளப்பாறை வெளிறல் என்றால் என்ன?
அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் பவளப்பாறைகள் பெரிய அளவில் வெளிறும்போது (coral bleaching), அதை உலகளாவிய பெருந்திரள் பவள வெளிறல் (Global mass coral bleaching) என்று அழைக்கின்றனர் என்று 'The Conversation' இதழ் தெரிவித்துள்ளது. இது மிகவும் புதிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. முதல் உலகளாவிய வெளிறல், 1998-ஆம் ஆண்டில் நடந்தது (உலக பவளப்பாறைகளில் 20 சதவீத பாதிப்பு), இரண்டாவது முறையாக 2010-ஆம் ஆண்டிலும் (35 சதவீத பாறைகள் பாதிப்பு) மூன்றாவது முறையாக 2014-2017 -ஆம் ஆண்டு தரவுகளின்படி 56 சதவீத பவளப்பாறைகள் பாதிப்படைந்ததாகத் தெரிவிக்கின்றனர். அதாவது, கடந்த 25-30 ஆண்டுகளில் மட்டுமே இப்படிப்பட்ட உலகளாவிய பவள வெளிறல் நிகழ்வுகள் நடந்துள்ளன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
1. இந்தியா ஏறக்குறைய 8000 கி.மீ கடற்கரைப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள பவளப் பாறைகளின் மொத்தப் பரப்பளவு தோராயமாக 2,375 சதுர கி.மீ எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பவளப்பாறை உருவாகும் முக்கியமான பகுதிகள் நான்கு உள்ளன. அவை,
(i) கட்ச் வளைகுடா
(ii) மன்னார் வளைகுடா
(iii) லட்சத்தீவுகள்
(iv) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.
2. பவளப்பாறைகளைப் பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும், அரசாங்கம் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள், தேசிய கடலோர இயக்கம் (National Coastal Mission) மூலம் மத்திய துறை திட்டத்தின்கீழ், பவளப்பாறைகளை மீட்டெடுத்தல், கண்காணித்தல், பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவற்றுக்காக லட்சத்தீவு, கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகிய நான்கு தளங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
3. சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் (Environment (Protection) Act, 1986), 1986-ன் கீழ் கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone (CRZ)) அறிவிப்பு (2019); வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் (Wild Life (Protection) Act, 1972), 1972; இந்திய வனச் சட்டம், (Indian Forest Act, 1927) 1927; உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், (Biological Diversity Act, 2002) 2002; மற்றும் அவ்வப்போது திருத்தப்படும் இந்தச் சட்டங்களின்கீழ் உள்ள விதிகள் மூலம் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.