பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் உரை தொடர்பான அரசியலமைப்பு விதிகள் மற்றும் வரலாற்றுப் பின்னணி என்ன?
தற்போதைய செய்தி:
2026-27-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை (ஜனவரி 28) நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். சமூக நீதி, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வை குறித்து விரிவாக பேசினார்.
கடந்த வாரம், தமிழ்நாடு ஆளுநர் R. N. ரவி தனது வழக்கமான தொடக்க உரையை வழங்குவதைத் தவிர்த்துவிட்டு, பல பிரச்சினைகளை மேற்கோள் காட்டி மாநில சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார். கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டும் மாநில அமைச்சரவை தயாரித்த தனது வழக்கமான உரையின் சில வரிகளை மட்டும் படித்துவிட்டு மாநில சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மற்றும் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை தொடர்பான அரசியலமைப்பு விதிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. அரசியலமைப்பு சட்டம், அவையிலோ அல்லது நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திலோ உரையாற்றும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது. அரசியலமைப்புச் சட்டபிரிவு 87, குடியரசுத்தலைவர் கூட்டுக் கூட்டத்தில் (joint sitting) உரையாற்றும் இரண்டு சிறப்பு நிகழ்வுகளை விளக்குகிறது. முதலாவதாக, பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய சட்டமன்றத்தின் தொடக்கக் கூட்டத்தொடரில் உரையாற்றுவது. இரண்டாவதாக, ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றுவது ஆகும்.
2. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 176-ன் கீழ் ஆளுநரின் உரை மாநில அளவில் இதே முறையில் செயல்படுகிறது. பிரிவு 176(1) "சட்டமன்றத்திற்கான ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் முதல் கூட்டத்தொடரின்" தொடக்கத்திலும், ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்திலும் ஆளுநர் அவையில் உரையாற்ற வேண்டும் என்று கூறுகிறது.
3. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 176(2)-ன்படி, மாநில சட்டசபை உரையை விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும். இந்த உரை, மாநில சட்டமன்றம் ஏன் கூட்டப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது. மேலும், முன்மொழியப்பட்ட சட்டங்கள் மற்றும் நிதித் தேவைகள் உட்பட, இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் திட்டங்களையும் இந்த உரை எடுத்துரைக்கிறது.
4. குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து வரும் நாட்களில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு தீர்மானம் இரு அவைகளிலும் கொண்டு வரப்படுகிறது. இரு அவைகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சி குறித்து விவாதம் நடத்துவதற்கான ஒரு வாய்ப்பை இந்த உரை வழங்குகிறது. பிரதமர் இரு அவைகளிலும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிப்பார், மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பிரதமர் பதிலளிப்பார். பின்னர், இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தில் திருத்தங்களை முன்மொழிவதன் மூலம் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம்.
5. குடியரசுத் தலைவரோ அல்லது ஆளுநரோ சட்டமன்றத்தில் உரையாற்றும் அரசியலமைப்புச் சட்டக் கடமையாக சட்டமன்றத்தில் உரையாற்ற வேண்டும். அவர்கள் அதை மறுக்க முடியாது. ஆனால், அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட உரையின் மூலப் படியிலிருந்து அவர்கள் விலகிச் செல்லும் சூழ்நிலைகள் ஏற்படலாம். இதுவரை, குடியரசுத் தலைவர் அவ்வாறு செய்த நிகழ்வுகள் எதுவும் இல்லை.
6. ஆளுநரின் உரை என்பது தனிப்பட்ட விருப்பத்தின் ஒரு பகுதி அல்ல. அது இல்லாமல், சட்டமன்றம் தனது தொடக்க அமர்வை சட்டப்பூர்வமாகத் தொடங்க முடியாது. இந்தத் தேவை பூர்த்தி செய்யப்படும் வரை, புதிய அல்லது தற்போதைய அமர்வுகள் தொடங்கவே முடியாது.
நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பளித்துள்ளன?
7. ஆளுநரின் உரை கட்டாயமானது என்பதை நீதிமன்றங்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், சட்டமன்றங்கள் எப்போதும் அரசியலமைப்பு சட்டத்தை முறையாக பின்பற்றியதில்லை என்பதையும் நீதிமன்றங்கள் அங்கீகரித்துள்ளன. ஆளுநரின் உரை இல்லாததற்கும், அந்த உரை நிகழ்த்தப்படும்போது ஏற்படும் இடையூறுகளுக்கும் இடையே பல்வேறு நீதித்துறைத் தீர்ப்புகளும் ஒரு வேறுபாட்டைக் காட்டியுள்ளன.
8. 1952-ஆம் ஆண்டில், ஒரிசா உயர்நீதிமன்றம் பிரிவு 176-ஐ எதிர்த்து ஒரு ஆரம்பகால சவாலை எதிர்கொண்டது. அதில் உறுப்பினர்கள் பதவியேற்றதால் "அமர்வின் தொடக்கத்தில்" ஆளுநரின் உரை வழங்கப்படவில்லை என்று மனுதாரர் வாதிட்டார். சட்டமன்றம் எதற்காகக் கூட்டப்படுகிறது என்பதை ஆளுநர் விளக்கும் வரை, சட்டமன்றம் தனது பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. இது, எந்தவொரு அலுவல் நடவடிக்கையும் தொடங்குவதற்கு முன்பு, ஆளுநரின் உரையை ஒரு கட்டாய அரசியலமைப்புச் செயல்முறையாக ஆக்குகிறது.
9. 1965-ஆம் ஆண்டு, ஆளுநர் உரையைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து, மேற்கு வங்க சட்டமன்ற நடவடிக்கைகள் செல்லாது என்பதை முடிவு செய்ய கல்கத்தா உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், சபாநாயகர் அங்கீகரிக்கப்பட்ட உரையை சபையில் சமர்ப்பித்தார்.
10. அரசியலமைப்புத் தேவை அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்டதாகக் கூறி, நீதிமன்றம் அந்த அமர்வை உறுதி செய்தது. முழு உரையையும் வாய்மொழியாக வழங்காதது, நடவடிக்கைகளை சட்டவிரோதமாக்காது என்றும், அது ஒரு செயல்முறை குறைபாடே தவிர, ஒரு தீவிர மீறல் அல்ல என்று நீதிமன்றம் விரிவாக விளக்கியது.
வரலாற்று பின்னணி
1. ஐக்கிய ராஜ்ஜியத்தில், 16-ஆம் நூற்றாண்டு முதல் மன்னர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றி வருகின்றனர். அமெரிக்காவில், அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் 1790-ல் முதன்முறையாக காங்கிரசில் உரையாற்றினார்.
2. இந்தியாவில், குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் நடைமுறை, 1919-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தில் (Government of India Act) இருந்து தொடங்குகிறது. இந்தச் சட்டம் கவர்னர் ஜெனரலுக்குச் சட்டமன்றத்திலும் மாநில அவையிலும் உரையாற்றும் உரிமையை வழங்கியது.
3. சட்டத்தில் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்கான ஏற்பாடு இல்லை என்றாலும், கவர்னர் ஜெனரல் பல சூழ்நிலைகளில் சட்டமன்றம் மற்றும் கவுன்சில் ஆகிய இரண்டிலும் ஒன்றாக உரையாற்றினார். 1947 முதல் 1950 வரை நாடாளுமன்றத்தில் அவர் எந்த உரையும் ஆற்றவில்லை. மேலும், அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஜனவரி 31, 1950 அன்று முதன்முறையாக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.
4. முன்னர், சட்டமன்றங்கள் ஆண்டுக்கு பலமுறை கூடி, பெரும்பாலும் நீண்ட காலங்களுக்குச் செயல்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தொடரின் தொடக்கத்திலும் ஒரு உரை நிகழ்த்தப்பட வேண்டும் என்ற விதி இருந்ததால், ஒரு இடைவேளைக்குப் பிறகு அவை மீண்டும் கூடும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய உரை தேவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
5. இது 1951-ஆம் ஆண்டு அரசியலமைப்பு (முதல் திருத்தம்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் முதல் அமர்வுக்கும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு முதல் அமர்வுக்கும் மட்டுமே உரையின் தேவையை குறைத்தது. இந்த மாற்றம் நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்காகவே என்று பி.ஆர். அம்பேத்கர் விளக்கினார்.
2026-27 பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரையிலிருந்து முக்கியப் பகுதிகள்
1. நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர், முக்கிய மாநிலத் தேர்தல்களுக்குச் சில மாதங்களுக்கு முன்பு ஆற்றிய உரையில், வரலாற்றுச் சின்னங்களையும் பிராந்தியப் பெருமையையும் குறிப்பிட்டு, பெரிய அளவிலான பொருளாதாரச் சீர்திருத்தங்கள், கிராமப்புற வேலைவாய்ப்பு, தேசியப் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் போன்றவற்றை மையமாகக் கொண்டு அரசாங்கத்தின் செயல்திட்டத்தை வகுத்தார்.
2. இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் கையெழுத்தான பின்னணியில், அவர் இந்தியாவை ஒரு நிலைப்படுத்தும் சக்தியாக முன்னிறுத்தினார். "இந்தியா உலகில் ஒரு பாலத்தின் பாத்திரத்தை வகிக்கிறது" என்றும், "மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள்கூட முக்கியமான விவகாரங்களில் இந்தியாவின் மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன" என்றும் அவர் கூறினார்.
3. குடியரசுத் தலைவர் தனது உரையை ஒரு தனித்துவமான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பார்வையுடன் தொடங்கினார். பல்வேறு பிராந்தியங்களில் செல்வாக்கு செலுத்தும் ஆளுமைகளை அவர் குறிப்பிட்டார். அவரது உரையில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாய், பிர்சா முண்டா மற்றும் பூபன் ஹசாரிகா போன்றவர்களை பற்றி குறிப்பிட்டார். தமிழ் கவிஞரும் ஞானியுமான திருவள்ளுவரின் மேற்கோளும், கேரள சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவின் செய்தியும் குடியரசுத் தலைவரால் மேற்கோள் காட்டப்பட்டன.
4. தேசியப் பாதுகாப்பு ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை எடுத்துரைக்கும்போது, 'Operation Sindoor' பற்றிய குறிப்புகள் இடம்பெற்றன.
5. பெண்கள் அதிகாரம் பெறுவது வளர்ச்சி மாதிரிக்கு முக்கியமானது என்று விவரிக்கப்பட்டது. 10 கோடி பெண்கள் சுயஉதவிக் குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும், 'லட்ச ரூபாய் வருமானம் ஈட்டும் சகோதரிகளின்’ (Lakhpati Didi) எண்ணிக்கை இரண்டு கோடியைத் தாண்டிவிட்டது என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். வேளாண்மையில் 'நமோ ட்ரோன் தீதி' முன்முயற்சியை எடுத்துரைத்தார். மேலும், 'ஆரோக்கியமான பெண், வலுவான குடும்ப இயக்கம்' (Swasth Nari, Sashakt Parivar) பிரச்சாரத்தின் கீழ் 'ஏழு கோடி பெண்களுக்கு' சுகாதாரப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
Original Article : Ahead of budget session, President addresses Parliament — What does Constitution say? -Khushboo Kumari