தற்போது நடந்து வரும் இந்த வழக்கு, இந்தியாவில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்தின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. இது தனிமனித உரிமைகளுக்கும் குறிப்பாக பிரபலங்களின் அந்தரங்க மற்றும் அடையாள உரிமைகள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலாகப் பார்க்கப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த ஒரு செயற்கை நுண்ணறிவு குரல் உருவாக்கத் தளம் (AI voice generation platform), நடிகர் சல்மான் கானின் ஆளுமை உரிமைகளுக்கு (personality rights) வழங்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பாக, ஜனவரி மாதம் 21-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு அழைப்பாணை அனுப்பியது. இந்த வழக்கின் முக்கிய விசாரணை ஜனவரி மாதம் 23-ஆம் தேதி இணைப் பதிவாளரால் (Joint Registrar) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதேசமயம் சீன செயலியின் மனு மீதான விசாரணை பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஜான் டோ என்பவர் யார்?
இந்த வழக்கில் ஆப்பிள், கூகுள், மெட்டாவின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், X (ட்விட்டர்), அமேசான் இந்தியா மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற இணைய வணிக நிறுவனங்களின் தளங்கள் மற்றும் டெலிகிராம் போன்ற இடைத்தரக நிறுவனங்கள் உட்பட மொத்தம் 28 பிரதிவாதிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராகவும் ('ஜான் டோ' அல்லது 'அசோக் குமார்' எனப் பெயரிடப்பட்ட பிரதிவாதி எண் 1) தடை உத்தரவு கோரி சல்மான் கான் மனு தாக்கல் செய்துள்ளார். பிரதிவாதிகளை அடையாளம் காண முடியாத சூழலில், நீதிமன்றங்கள் ஒருதலைப்பட்சமாக (Ex-parte) உத்தரவு பிறப்பிக்க இந்த நடைமுறை வழிவகை செய்கிறது.
பின்னர், சீன செயற்கை நுண்ணறிவு தளமானது 35-வது பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டது. ஆனால், இணைப் பதிவாளரின் (நீதித்துறை) உத்தரவு இன்னும் வராததால், அது இன்னும் அதிகாரப்பூர்வமாக வழக்கில் இணைக்கப்படவில்லை என்கின்றனர்.
ஆளுமை உரிமைகள் எவ்வாறு செயல்படுகின்றன?
கே.எஸ். புட்டசாமி vs இந்திய ஒன்றியம் (2017) (K.S. Puttaswamy v. Union of India (2017)) வழக்கில், இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் 'ஆளுமை உரிமை' என்பது ஒரு அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதிலிருந்து, ஒரு நபரின் அடையாளத்தை அவருடைய அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவது, அந்த நபரின் வாழ்வுரிமையை மீறுவதாகும் என நீதிமன்றங்கள் கருதுகின்றன. 'ஆளுமை உரிமைகள்' (Personality rights) ஒரு நபரின் அடையாளத்திற்கு இருக்கும் வணிக மதிப்பைப் பாதுகாக்கின்றன. இவை, குறிப்பாகப் பொதுவாழ்வில் உள்ள பிரபலங்களுக்கு மிகவும் அவசியமானவையாகக் கருதப்படுகிறது. மேலும், இவை சட்டப்பூர்வமான அறிவுசார் சொத்துரிமைகளிலிருந்து (Intellectual Property Rights) மாறுபட்டவை என்கின்றனர்.
2025-ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் பச்சன் தொடர்பான ஒரு வழக்கில், ஒரு பிரபலத்தின் அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்துவது வணிகரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. தவறான ஆள்மாறாட்டம் செய்தல், இணையதளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலமாக ஒருவரின் பெயர் அல்லது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துதல், மற்றும் தவறாகத் திருத்தப்பட்ட அல்லது ஆபாசமான உள்ளடக்கங்களை உருவாக்குதல் போன்ற செயல்களை நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்தியுள்ளன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(g), குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான தொழில் அல்லது வணிகத்தைச் செய்ய உரிமை வழங்கினாலும், அந்த உரிமையின் மீது நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். கலை வெளிப்பாடுகள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தாத வரையிலும் அல்லது அது ஒரு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் போலத் தோன்றாத வரையிலும், நீதிமன்றங்கள் அத்தகைய கலை சுதந்திரத்தைப் பாதுகாத்துள்ளன. இருப்பினும், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நீதிமன்றங்களில் சட்டப்பிரிவு 19-ன்கீழ் பாதுகாப்பு கோர முடியாது என்றும் தெளிவுபடுத்துகின்றனர்.
சீன செயலிகள் தொடர்பான விவகாரம் என்ன?
தரவு பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (Information Technology Act (IT Act)) பிரிவு 69A-ன்கீழ் 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளைத் தடை செய்தது. 'டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் 2023' நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அந்தச் சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்கின்றனர். இதனால் விதிகளில் இடைவெளிகள் உள்ளன, குறிப்பாக 'செயற்கை நுண்ணறிவு' தொழில்நுட்பத்திற்கு முறையான விதிகள் இன்னும் வரையறுக்கப்படவில்லை. டிஜிட்டல் சமத்துவத்திற்கு (Digital Equality) குரல் வழியில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு (Voice-based AI) மிகவும் முக்கியமானது என்றும், இது இந்தியாவிற்கு மற்றுமொரு ஒருங்கிணைந்த கட்டண இடைமுக பணப் பரிவர்த்தனை முறை (Unified Payments Interface (UPI)) போன்ற ஒரு புரட்சிகரமான மாற்றமாக இருக்கும் என்றும் நந்தன் நீலேகனி கூறியுள்ளார். மேலும், சீன செயலிகளைப் புறக்கணிப்பது, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தரவுகளை பயன்படுத்தும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர்.
பிரபலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கான கட்டணங்கள் என்ன?
தனிநபர் ஆளுமை உரிமை (Personality Rights) தொடர்பான வழக்குகள் பொதுவாக 'வணிக நீதிமன்றங்கள் சட்டம் 2015'-ன்கீழ் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏனெனில், பிரபலங்கள் தங்கள் அடையாளத்தின் மீது பொதுவாக அறிவுசார் சொத்துரிமைகளை (IP Rights) கொண்டிருப்பதில்லை. நீதிமன்றங்கள் பெரும்பாலும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தத் தேவையில்லாமல் தற்காலிகத் தடைகளை வழங்குகின்றன, மேலும் நடைமுறை விதிகளின்கீழ் கால அவகாசத்தையும் நீட்டிக்கின்றன. இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர்களின் பிராண்ட் (Brand) மதிப்பு மிக அதிகமாக இருப்பதால், நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. இதேபோன்ற ஒழுங்குமுறை கவலைகள் ஐரோப்பிய ஒன்றியத்திலும் எழுந்துள்ளன; குறிப்பாக எலான் மஸ்க்கின் 'Grok' போன்ற செயற்கை நுண்ணறிவு (Generative AI) அமைப்புகள் தொடர்பாக இந்த விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவில், 2021-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT Rules, 2021) தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை நீக்க வழிகாட்டுகின்றன. இருப்பினும், இந்த விதிகளின் மூலம் முழுமையான தீர்வு கிடைக்காததால், பல பிரபலங்கள் நேரடியாக உயர்நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரபலங்கள் முதல் சாமானிய குடிமக்கள் வரை அனைவரையும் இணையதள ஆள்மாறாட்டத்தில் (Digital Impersonation) இருந்து பாதுகாப்பது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
விராக் குப்தா, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.
Original Article : What is the Salman Khan personality rights case? -Virag Gupta